புதன், 3 நவம்பர், 2010

இமாம்களின் மத்ஹப் எது?

இமாம்களின் மத்ஹப் எது?
மத்ஹப் கிதாபில் உள்ள அறிவுரை

நாம் வஹியை மட்டும்தான் பின்பற்ற வேண்டும். வஹி என்பது அல்குர்ஆனும் நபி வழியும் மட்டுமே. ஸஹாபாக்கள் எந்த மத்ஹபையும் பினபற்றவில்லை. இமாம்களும் எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. அவர்கள் அனைவரும் அல்குர்ஆனையும் ஹதீஸையும்தான் பின்பற்றச் சொல்லியுள்ளனர். அதனால்தான், இமாம் அபூ யூஸூஃப், இமாம் முஹம்மத் ஆகிய இரு மாணவர்களும் மூன்றில் இரு பங்கு சட்டங்களுக்கும் அதிகமாகத் தமது ஆசிரியரான அபூ ஹனீபா (ரஹ்) அவர்களுக்கு முரண்படுகின்றனர். (துர்ருல் முக்தார் பாகம்: 1 பக்கம்: 64)

இமாம்களின் பிறப்பு – இறப்புக் காலக் குறிப்பைப் பாருங்கள்.

இமாம்கள் பிறப்பு (ஹிஜ்ரி) இறப்பு (ஹிஜ்ரி)
இமாம் அபூஹனீஃபா 80 150
இமாம் மாலிக் 93 179
இமாம் ஷாஃபியீ 150 204
இமாம் ஹன்பல் 164 241

இமாம் ஷாஃபியீ அவர்கள், மாலிக் இமாமின் மாணவர் ஆவார். அதுபோலவே, ஷாஃபியீ இமாமின் மாணவரே ஹன்பல் இமாம் அவர்கள்.இவர்களுள் யாரும் தமது ஆசிரியர்களைப் பின்பற்றவுமில்லை;, எந்த ஆசிரியரும் தமது மாணவர்களை தங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தவுமில்லை. அவற்றிற்கான ஆதாரங்களை நோக்குவோம்.
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல், எங்கள் சொல்லை எடுத்து நடப்பது ஹலால் இல்லை. (ரஸ்முல் முஃப்தீ)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (சில நேரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன்;. எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! அவற்றில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.
(உஸுலுல் அஹ்காம் ப:294 பா:6)

இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) அவர்களின் வழி முறையையே (மக்களிடம்) கூறுங்கள்;, என் கூற்றை விட்டு விடுங்கள்.
(அல்மஜ்மூஃ பாகம் – 1 பக்கம் – 63)

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இமாம் அபூஹனீஃபா, இமாம் மாலிக், இமாம் அவ்ஸாயீ ஆகியோரின் கருத்துக்கள் அவர்களின் அபிப்பிரயாமே. என்னிடத்தில் அவையனைத்தும் சமமே! உண்மையான ஆதாரமோ நபித்தோழர்களிடம் (உள்ள ஹதீஸ்களில்) தான் உள்ளது. (ஜாமிஉ இப்னு அப்தில்பர் ப 149 பா 2)
நாற்பெரும் இமாம்களில் யாரும் தங்களைப் பின்பற்றுமாறு கூறவில்லை என்பதுடன,; தங்களைப் பின்பற்ற கூடாது என்று சொல்லவும் தவறவில்லை. எனவே, குர்ஆனும் – ஹதீஸும் தான் பின்பற்றப்பட வேண்டும் என்ற அசைக்க முடியாத கொள்கையுறுதியையே அவர்களின் இக் கூற்றுக்கள் புலப்படுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக