புதன், 3 நவம்பர், 2010

ஜாகிர் நாயக் பற்றி பிஜே..

கேள்வி:

நீங்கள் Dr.சாகிர் நாயக் அவர்களை காபிர் என்று சொன்னதாக ஒரு தமுமுக சார்ந்த சகோதரர் கூறுகிறார் உங்கள் பதில் என்ன? டாக்டர் சாகிர் நாயக் அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன ?
அவர் சார்பில் விவாத அழைப்பு விடப்படும் நீங்கள் போகவில்லையாமே?
பிஜே பதில்:
எந்தத் தனி நபரைப் பற்றியும் குறிப்பாக ஜாகிர் நாயக்கைப் பற்றி காஃபிர் என்று நாம் கூறியதில்லை. மார்க்கம் தொடர்பாக அவரது பல நிலைபாடுகளில் நாம் மாறுபடுகிறோம்முஸ்லிமல்லாத மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று அவர் பேசுகிறார். குர்ஆன் ஹதீஸில் இல்லாமல் பின்னர் உருவாக்கப்பட்டவை குறித்து கேள்வி கேட்டால் அதை நியாயப்படுத்த முடியாது என்பதால் இந்த நிலைபாட்டை எடுக்கிறார்.
ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் மத்ஹப். இஜ்மா கியாஸ் போன்றவற்றை ஆதரிப்பவர்களாக உள்ளதால் முஸ்லிம்களின் சபைகளில் இவற்றை நியாயப்படுத்தி பேசுகிறார். இது போன்ற இரட்டை நிலை மேற்கொள்வோரை நம்பக் கூடாது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நாம் விளக்கியுள்ளோம்.
அது போல் அறிவுப்பூர்வமாக இஸ்லாத்தை விளக்குகிறேன் என்ற பெயரில் பல சந்தர்ப்பங்களில் தவறாகக் கூறி இருக்கிறார்.
உதாரணமாக والأرض بعد ذلك دحاها79:30 வசனத்தில் பூமியை இதன் பின் விரித்தான் என்று கூறப்படுகிறது. இந்த வசனத்தில் தஹாஹா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி இவர் குறிப்பிடும் போது தஹா என்றால் முட்டை என்று பொருள். பூமி முட்டை வடிவில் இருப்பதை அன்றே குர்ஆன் கூறி விட்டது என்று கூறுகிறார்.
அரபு மொழி அறியாதவர்கள் ஆஹா ஓஹோ என்று இதைப் புகழ்வார்கள். இவர் கூறுகிறபடி தஹாஹாவுக்குப் பொருள் செய்தால் அதன் பின் பூமியை அவன் முட்டை என்று வரும். குர்ஆனைக் கேலிக் கூத்தாகுகிறார் என்று தான் அரபு மொழி அறிந்தவர்கள் கூறுவார்கள். தஹா என்பது வினைச் சொல்லாகும். அதன் பொருள் விரித்தான் என்பதாகும். வினைச் சொல்லுக்கு முட்டை என்று பொருள் கொள்வது அறியாமையாகும். இது போல் இவர் தப்பும் தவறுமாக எழுதியதைக் குறித்து சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர் டாக்டர் பக்ருத்தீன் அவர்கள் என்னிடம் கேட்ட போது ஜாகிர் நாயக் தவறுகளைப் பட்டியல் போட்டு அவரிடமே விளக்கம் கேளுங்கள் என்று கூறினேன். ஆங்கிலப்புலமை உடைய அவர் ஆங்கிலத்த்தில் ஜாகிர் நாயக்கின் தவறுகளைச் சுட்டிக்காட்டி நேரடியாகக் கடிதம் எழுதினார். அதன் நகலையும் எனக்கு அனுப்பினார். ஆனால் ஜாகிர் நாயக்கிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் நினைவூட்டல் கடிதம் எழுதியும் பதில் இல்லை என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
(அப்பெரியவர் இதை வாசிக்க நேர்ந்து அந்தக் கடிதம் அவரிடம் இருந்தால் அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.) அந்தப் பெரியவர் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள் உண்மையில் தவறுகள் அல்ல என்றிருந்தால் அதை ஜாகிர் நாயக் விளக்கி இருக்க வேண்டும். அல்லது நீங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை இனிமேல் திருத்திக் கொள்கிறேன் என்று கூறி இருக்க வேண்டும்.
தவறை ஒப்புக் கொண்டால் தன் இமேஜ் பாதிக்கப்படும் என்று நினைப்பவர் மார்க்கத்தில் நம்பகமானவர் அல்ல என்று பல சந்தர்ப்பங்களில் அவரைப் பற்றி நான் விமர்சித்துள்ளேன்.
இதன் பின்னர் அவர் சென்னை வந்த போது அவருடைய முரண்பட்ட கருத்துக்கள் பற்றி அவருடன் விவாதிக்க முயன்ற போது அவர் மறுத்து விட்டார். இப்போதைய தமுமுக தலைவர், பொதுச் செயலாளர், இப்போது தமுமுகவின் மாநில நிர்வாகிகளில் ஒருவராக உள்ள ஜிப்ரீ காசிம் ஆகியோர் இதற்கு முயற்சித்தனர். ஆனால் இம்மூவரும் இப்போது இதை ஒப்புக் கொள்வார்களா மறுப்பார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜாகிர் நாயக் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகப் பேசியுள்ள பல விஷயங்கள் பற்றி நான் அவருடன் விவாதிக்கத் தயார் என்பதால் நீங்களே முயற்சித்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் இயேசு இறை மகனா என்று நான் எழுதிய நூலை ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டேன். அந்த நூலை ஜாகிர் நாயக் சென்னை வந்த போது என் சார்பில் பாக்கர் மூலம் கொடுத்து அனுப்பினேன். இதன் பின்னர் ஆறு மாதம் கழித்து ஜாகிர் நாயக் சகோதரர் அல்லது உறவினர் பெயரில் இயேசு இறை மகனா என்பது குறித்து ஒரு நூல் ஜாகிர் நாயக் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டது. அது அப்படியே எனது நூலின் தழுவலாக இருந்தது. கிறித்தவ பாதிரியாருடன் விவாதிப்பதற்காக நான் ஆறு மாதம் உழைத்து திரட்டிய தகவல்களைத் தான் அந்த நூலில் குறிப்பிட்டிருந்தேன்.
அவர் வெளியிட்ட ஆண்டு என்ன? நான் எத்தனை வருடங்களுக்கு முன் வெளியிட்டேன் என்பதை ஒப்பு நோக்கும் எவரும் இந்த உண்மையை உறுதி செய்து கொள்ளலாம் சென்னையில் ஒருவர் தவ்ஹீத் போர்வையில் நூல் வெளியிடும் ஒருவர் மற்றவர்களின் நூல்களைக் காப்பி அடித்து வெளியிட்டு வருவதை பலரும் அறிவார்கள். அவரைப் போன்று இழிந்தவராக இவரும் இருக்கிறர் என்று நான் பேசியதுண்டு. அவரை காஃபிர் என்று பேசியதில்லை. இது துவக்கமாக உங்களுக்குத் தரப்படும் தகவல். ஜாகிர் நாயக் அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் உள்ள மார்க்க முரணான கருத்துக்களையும் அதுபோல் மக்களால் அறியப்பட்ட மற்றவர்களின் தவறான கருத்துக்களையும் அம்பலப்படுத்தவே என் முழு கவனத்தையும் இணைய தளத்தின் பக்கம் திருப்பியுள்ளேன
ஜாகிர் நாயக்கை விவாதத்துக்கு ஒப்புக் கொண்டு சம்மதம் வாங்கச் சொல்லுங்கள். மொழி பெயர்ப்பாளரை நடுவில் வைத்துக் கொண்டால் மொழி ஒரு பிரச்சனை இல்லை பில்லி சூனியம் இஜ்மா கியாஸ், சஹாபாக்களைப் பின்பற்றுதல், மறைமுக மத்ஹப் ஆதரவு, அவரது இரட்டை நிலை, ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீன்டும் மீன்டும் ஜகாத் கொடுத்தல், குர்ஆன் ஹதீஸ் பற்றி அவருக்கு உள்ள அறியாமை உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் விவாதிக்க பகிரங்கமாகவே அவருக்கு அறைகூவல் விடுகிறேன். மற்றவர்கள் விவாதிப்பதற்கு தயங்கலாம். நேரடிக் கேள்விகளுக்கு பதில் சொல்லி பல மேடைகளைச் சந்தித்தவருக்கு தயக்கம் தேவை இல்லை. அவரோ அவர் சார்பில் யாருமோ என்னை விவாதத்துக்கு அழைக்கவில்லை. நான் தான் அழைத்துக் கொண்டிருக்கிறேன்.
Thanks,
onlinepj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக