சூனியம் என்பது ஒரு அற்புத செயல் என்று நம்புகிற சாரார் ஒரு பக்கமும் சூனியம் என்றால் அது அற்புதமில்லை அது ஒரு வித்தை என்று சொல்கிற இன்னொரு சாராரும் சமூகத்தில் இருக்கிறோம். இந்த இரு சாராரில், சூனியத்தை அற்புதம் என நம்ப வேண்டும் என்று கூறுவோர் நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸை நம்புகின்றனர், சூனியம் என்றால் அற்புதமில்லை என்று சொல்பவர்கள் அந்த ஹதீஸை நம்புவதில்லை.
இப்போது, மூன்றாவதாக ஒரு கருத்து கிளம்பியுள்ளது. அதாவது, சூனியம் என்றால் அற்புதமில்லை, அது ஒரு வித்தை தான், ஆனால் நபிக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுக்க கூடாது என்று சொல்கிற கருத்து.
சமீபத்தில் இந்த கருத்துடையவர்கள் நமக்கு அனுப்பிய சில மின்னஞ்சல்களை வாசித்த போது இவர்களது வாதமும் நியாயமாக இல்லை என்பது தெரிய வருகிறது. இவர்களுக்கான சுருக்கமான மறுப்பு இங்கே..
இவர்களது ஒரே இலக்கு அந்த ஹதீஸை (நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்) எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும். அதை நியாயப்படுத்த வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் இவர்கள் செயல்படுவதால், எத்தகைய மார்க்க முரண்களை எல்லாம் இவர்கள் செய்கிறார்கள் என்பது இவர்களது கண்களை மறைத்து விடுகிறது.
மேலும், அந்த ஹதீஸை நியாயப்படுத்த புகுந்தவர்கள் என்னதான் சிஹ்ர் என்றால் அற்புதமில்லை என்று விளக்க முயற்சித்தாலும் தங்களையும் அறியாமல் அது அற்புதம் தான் என்று ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
இவரது மின்னஞ்சலில் ஒரு இடத்தில சிஹ்ர் என்றால் மேஜிக் என்று எழுதியவர், வேறொரு இடத்தில,சிஹ்ர் என்றால் கண் கட்டி வித்தை மட்டுமல்ல, அதற்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன என்று சூசகமாக வேறு பக்கம் தாவவும் செய்கிறார்.
சிஹ்ர் என்றால் கண் கட்டி வித்தை மட்டுமல்ல, அதற்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன என்று இவர் சொல்வாரானால் எந்த சிஹ்ரை பெரும் பாவம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்பதற்கு இவர் விடை சொல்ல வேண்டும்.
மேலும், சிஹ்ர் என்பது அற்புதம் என்று வைத்துக்கொண்டாலும், முன் அந்த கலை இருந்தது, இப்போது அது அழிந்து விட்டது என்று புரிய வேண்டும் என்கிறார்.
சரி, என்ன வகையான சூனியம் இருந்தது?
அது இருந்தது என்பதற்கு என்ன சான்று?
அது அழிந்து விட்டது என்றால் அதற்கு என்ன ஆதாரம்??
அதை அழித்தது யார்?
அழிப்பேன் என்று அல்லாஹ் சொன்னானா??
சரி, அழிந்து விட்டது என்றால் இப்போது அது இல்லை தானே?? இல்லாத ஒன்றை அது பெரும்பாவம் என்று ஏன் அல்லாஹ் சொல்ல வேண்டும்?
அல்லது, இவரே வேறொரு இடத்தில ஒப்புக்கொண்டது போல, சிஹ்ர் என்பது வித்தை, மேஜிக் என்றால் அத்தகைய கலை ஒன்றும் அழியவில்லையே? அப்படியானால் ஒரு வகையான சிஹ்ர் மட்டும் தான் அழிந்ததா?
என்கிற விடையில்லா கேள்விகள் எழும்.
கை கால்களை முடமாக்கும் சக்தியுடைய சிஹ்ர் என்பது இப்போது இருந்தால் அதை வெளிக்கட்டுங்கள் என்று கேட்கும் போது, இப்போது அழிந்து விட்டது என்று கூறுவது தக்க பதிலாகுமா??இப்போது அழிந்து விட்டது என்பது காரண காரியத்துடனும் சான்றுகளுடனும் விளக்கப்படும் போது தான் முன்பு அத்தகைய கலை இருந்தது என்பது மெய்யாகுமேயொழிய, அழிந்து விட்டது என்று வாயளவில் சொல்வது, முன்பு இருந்ததை உறுதி செய்யாது.
குர்ஆனிலும் சூனியம் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது, ஹதீஸிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவை எல்லாம் முன்னரே அழிந்து போன அந்த கலையை பற்றியா?? இல்லை. குர் ஆன் சொல்வதும் ஹதீஸ் சொல்வதும், கண் கட்டி வித்தையை தான்.
இது அழியவுமில்லை, இதை நாம் மறுக்கவுமில்லை. இதை தாண்டி வேறென்ன ஆற்றல் இந்த சூனியத்திற்கு உள்ளது என்றால் கேட்டால் அத்தகைய ஆற்றலுக்கான சான்றுகளை முன் வைப்பதை விட்டு விட்டு, எதை சொன்னால் சான்று தராமல் தப்பித்துக்கொள்ள முடியுமோ அதை சொல்கிறார்கள்.
குர்ஆன் நெடுகிலும் சொல்லப்படும் சூனியம் என்பது கண் கட்டி வித்தை தான் என்றாலும் சில காரணங்களால் அல்லாஹ் அதை பெரும் பாவம் என்கிறான்.
இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள மூஸா நபியின் வரலாற்றை நாம் புரட்டி பார்க்க வேண்டும். தான் இறைவனின் தூதர் என்று சமூக மக்களிடம் நிரூபிப்பதற்காக பல அற்புதங்களை அவர்கள் செய்து காட்டினார்கள். ஆனால் அவற்றை எல்லாம் மறுத்த எதிரிகள், நீ செய்வதை போல எங்களாலும் செய்ய முடியும் என்று சவால் விட்டார்கள்.
கவனிக்க : ""நீ செய்வதை போல எங்களாலும் செய்ய முடியும்"" என்றால், அல்லாஹ்வின் அற்புதமாக எதை நபி அவர்கள் காட்டினார்களோ அதை எங்களாலும் செய்ய முடியும் என்பது பொருள். அல்லாஹ் செய்வது போல எங்களாலும் செய்ய முடியும் என்பது அதன் அர்த்தம் !
இதை தான் சவாலாக வைத்தார்கள், இதற்கு தான் அன்று பெரும் மக்கள் புடை சூழ மூஸா நபி ஒரு பக்கமாகவும் பிர்அவனின் கூட்டம் இன்னொரு பக்கமாகவும் நிற்க,போட்டியும் நடை பெறுகிறது.
மூஸா நபி செய்தது உண்மையான அற்புதமாக காட்சி அளிக்க, அந்த எதிரிகள் செய்ததோ, நம் கண்களுக்கு அற்புதம் போல காட்சி அளித்தது என்று அல்லாஹ் குர்ஆனில் வேறுபடுத்தி சொல்கிறான். அதாவது, மூசா நபி நிஜமாகவே அற்புதத்தை நிகழ்த்தி காட்டினார்கள், அந்த எதிரிகளோ ஏதோ ஒரு வித்தை காட்டி மக்களை ஏமாற்றி நம்ப வைத்தனர்.
இதை உறுதி செய்யும் முகமாக தான் மூஸா நபி அந்த எதிரிகளிடம், "நான் உண்மையை சொல்கிறேன், நீங்கள் அதை சிஹ்ர் என்கிறீர்களா?" என்று கேட்கிறார்கள்.
அதாவது, எந்த உண்மையை மூஸா நபி கொண்டு வந்தார்களோ அதற்கு எதிர் பதம் தான் சூனியம். அற்புதத்திற்கு எதிர் பதம் தான் சூனியம் !
அத்தகைய பொய்யை, அல்லாஹ் காட்டும் அற்புதத்திற்கு நிகராய் காட்டி அதன் மூலம் மக்களை ஏமாற்றி, பார், என்னாலும் இது போன்று செய்ய முடியும் என்று கூறி அல்லாஹ்வின் தன்மைக்கு இந்த சூனியம் செய்கிறவர்கள் உரிமை கொண்டாடுவதால் அது பெரும் பாவம் !!
மேலும், நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புவது வஹீயின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தாது எனவும், நபிக்கு மன நோய் என்பது ஹதீஸில் இல்லாத, நாமாக திணித்து கொண்ட அர்த்தம் என்றும் இவர் கூறியிருக்கிறார்.
மேலும், இந்த வேதத்தை அல்லாஹ் பாதுகாப்பேன் என்று குர்ஆனில் வாக்குறுதி அளித்து விட்டதால் அது பற்றி கவலை கொள்ள கூடாது என்கிறார்கள்.
அது பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை, அல்லாஹ் ஒரு காரியத்திற்கு பொறுப்பெடுக்கிறான் என்றால் அந்த பொறுப்புக்கு பக்கம் எற்படுபவைகளாக மக்கள் கருதுவதற்கு இடம் அளிக்கா வண்ணம் பாதுகாக்கவும் செய்வான். அது தான் அல்லாஹ்வின் தன்மை. இதை நாம் யூகத்தில் சொல்லவில்லை, இதை அல்லாஹ்வே சொல்கிறான்.
29:48 வசனத்தில், நபிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் அதை காரணம் காட்டி மக்கள் இது இறைவனின் வார்த்தையில்லை என்று கூறி இருப்பார்கள், ஆகவே நபியை எழுத படிக்க தெரியாதவராக ஆக்கினேன் என்கிறான்.
வேதத்தை அல்லாஹ் பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றுவதற்கு மக்களிடையே நிலவும் குழப்பங்கள் எதையும் கருத்தில் அவன் கொள்ள தேவையில்லை தான். ஆனால், அல்லாஹ்வின் பார்வை எப்படி இருக்கிறது என்றால், வேதத்தை பாதுகாக்கவும் வேண்டும், அந்த பாதுகாப்பில் சந்தேகம் எழாமலும் இருக்க வேண்டும்.
ஆக, நபிக்கு சூனியம் வைக்கப்பட்டதா நம்பினால் என்ன? அது தான் அல்லாஹ் வேதத்தை பாதுகாப்பேன் என்று சொல்லி விட்டானே, என்று கேட்பதும் தவறான வாதமே..
தனது நிலையை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த ஹதீஸில் நபிக்கு மனக்குழப்பம் ஒன்றுமில்லை, சூனியம் என்பது கணவன் மனைவியை பிரிக்கும் செயல் என்று 2:102 வசனம் சொல்வது போல இங்கும் நபிக்கும் அவர்களது மனைவிக்கும் பிரிவினை உண்டாக்கும் பொருட்டு தான் சூனியம் வைக்கப்பட்டது என்கிறார்.
இவர்கள் சில அடிப்படைகளையே தவறாக புரிந்து, நபிக்கு பைத்தியம் என்று கூறப்படும் பயங்கரத்தையும் தாண்டி நபி வேண்டுமென்றே தவறான வழியில் சென்றார்கள் என்று சொல்ல வருகிறார்கள்.
நபிக்கு சிஹ்ர் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸில் சொல்லப்படக்கூடிய சூனியத்திற்கும், 2:102 வசனத்தில் கணவன் மனைவியை [பிரிப்பதற்கு செய்யப்படும் சூனியத்திற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
2:102 வசனத்தில் சூனியம் என்பது மனதில் தீய எண்ணங்களை இட்டு, உள்ளங்களை வழிகெடுக்கும் காரியத்திற்கு சொல்லப்படுகிறது. உள்ளங்களை வழிகெடுக்கும் வேலையும் அதற்கான ஆற்றலும் ஷைத்தானுக்கு உள்ளது என்பதால் அத்தகைய சூனியத்தை கொண்டு வந்த ஹாரூத் மாரூத் ஆகிய இருவரை ஷைத்தானுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸில், நபியின் மனதில் தீய எண்ணங்களை இட்டதாக சொல்லப்படவில்லை, செய்ததை செய்யவில்லை என்று கருதும் அளவிற்கு குழப்பமான மன நிலையை அடைந்ததாக தான் கூறப்பட்டுள்ளது.
மனதில் கெட்ட எண்ணங்கள் ஏற்படுவதும், மனக்குழப்பம் ஏற்படுவதும் சமமானவையல்ல. மனக்குழப்பம் இல்லாத, தெளிவான மன நிலையில் இருப்பவர்கள் தான் இன்று பல ஷைத்தானிய காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
சூழ்ச்சி செய்து மனதில் தவறான நம்பிக்கையை புகுத்துவது தான் கண் கட்டி வித்தை , ட்ரிக் ஆக இருக்க முடியுமே தவிர, மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவது ட்ரிக் ஆகாது.
அப்படி உள்ளங்களில் குழப்பங்களை ஏற்படுத்தும் வேலையை மூஸா நபியின் எதிரிகள் செய்ததாக அல்லாஹ் சொல்லவில்லை. கண்களை ஏமாற்றினார்கள் என்று தான் சொல்கிறான்.
இவர்கள் வாதப்படி நபி (ஸல்) அவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு கெட்ட எண்ணம் கொண்டார்கள் என்கிற அபாயகரமான கருத்து தான் மிஞ்சும்..
அல்லாமல், செய்ததை உண்மையில் செய்தோமா? என்று உறுதி செய்து கொள்ள கூட இயலாத அளவிற்கு ஒருவர் இருந்தார் என்றால் அவர் பெருத்த மனக்குழப்பத்தில் இருக்கிறார், மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தான் பொருள்.
நபிக்கு மன நோயா இல்லையா? என்கிற வாததிற்கெல்லாம் முன்னோடியாக, நபிக்கு யாருமே சூனியம் வைக்க முடியாது என்று அல்லாஹ் 17:47 வசனத்தில் தெளிவாக கூறுகையில் அதற்கு முரணில்லாத வகையில் தான் எந்த ஹதீசையுமே நாம் விளங்க வேண்டும்.
நபிக்கு சூனியம் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்வது போல நபிமார்களை ஷைத்தானால் தீண்டவே முடியாது எனவும் சொல்லி விட்டான் (பார்க்க 15:40, 26:221).
இவ்வளவு தெளிவாக சூனியம் பற்றி அல்லாஹ் சொல்லியிருக்கும் போது நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக யார் சொன்னாலும் அத்து கட்டுக்கதை தான்.
முரணில்லாமல் ஒரு ஹதீஸை விளங்கவே முடியாது என்றால் அந்த ஹதீஸை மறுத்து அதை குர்ஆனை விட்டும் தூரமாக்கி விட வேண்டுமே அல்லாமல் நாம் குர்ஆனை விட்டும் தூரமாகி சென்று விடக்கூடாது.
ஆக, ஒன்று, சூனியம் என்றால் அது ஒரு மிகப்பெரிய அற்புதம் மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றலை அதை கொண்டும் செய்து காட்ட இயலும் என்று கூறி நபிக்கு சூனியம் செய்யப்பட ஹதீஸை நம்ப வேண்டும் (சூனியம் என்றால் அற்புதம் என்று நம்புவது தவறு என்பது நிரூபணமான உண்மை)
அல்லது, சூனியம் என்றால் வெறும் வித்தை தான், அற்புதமில்லை என்று கூறி அந்த ஹதீஸை மறுக்க வேண்டும்.
இரண்டுக்கும் நடுவே நின்று கொண்டு வாதம் புரிவது போகாத ஊருக்கு வழி சொல்வது போன்றதாகும்.