புதன், 3 நவம்பர், 2010

கப்ரு ஸியாரத்


ஸியாரத் என்றால் என்ன?

ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளை சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும். அவர்கள் மறுமை வாழ்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கப்ரு ஸியாரத்தின் நோக்கம்

புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது. நூல் : திர்மிதி (974)

இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளை பார்த்து விட்டு மரண பயத்தையும் மறுமை எண்ணத்தையும் வரவழைத்துக்கொள்வதற்குப் பெயர் தான் ஸியாரத் என்பது.


கப்ருகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன.

முதல் வகை - அவர்களுக்காக பிரார்த்தனை செய்தல்

முஸ்லிம்களின் கப்ர்களை ஸியாரத் செய்வது முதல் வகை. மண்ணறைகளுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருதல் ஒரு வகையாகும். இதற்குப் பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) “பகீஉல் ஃகர்கத்’ பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!) முஸ்லிம் (1773)

இரண்டாம் வகை - இணை வைத்தவர்களுக்காக பிரார்த்தனை செய்ய கூடாது

மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இறை மறுப்பாளர்களாகவும், இணை வைப்பாளர்களாகவும் இருந்தால் அவர்களின் மண்ணறைகளைப் பார்த்துவிட்டு மட்டும் வருவதற்கு அனுமதியுள்ளது. ஆனால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யக் கூடாது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள்.முஸ்லிம் (1777)

ஸியாரத் என்ற பெயரில் இன்று நடக்கும் கூத்து

ஆனால் தர்ஹாக்களுக்குச் சென்று இணைவைப்புக் காரியங்களில் ஈடுபடுவதற்கும் பரவலாக ஸியாரத் என்ற பெயர் கூறப்படுகிறது. கப்ரை பூசுவது அந்த கப்ரைச் சுற்றி கட்டடங்களை எழுப்புவது, அந்த கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட மனிதரிடம் தன்னுடைய கோரிக்கைகளை வைப்பது, அவருக்காக நேர்ச்சை செய்து கப்ரை முத்தமிடுவது, அங்கே விளக்கேற்றுவது, கப்ர் மீது சந்தனம் தெளிப்பது, பூ போடுவது இன்னும் ஏராளமான இணைவைப்புக் காரியங்கள் நடக்கும் இடம் தான் தர்ஹாவாகும்.

கப்ருகளை தரைமட்டமாக்க வேண்டும்

தரைமட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள கப்ர்களை உடைக்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும்

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.
(முஸ்லிம்: 1764)

தர்ஹாக்களுக்கு சியாரத் செல்வது கூடாது !

மார்க்கம் தடை செய்த பல அம்சங்களை கொண்ட இடமாக தர்ஹாக்கள் விளங்குவதால் ஸியாரத் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு அங்கு செல்வதும் ஹராமாகும். ஏனென்றால் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது என குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான். அல்குர்ஆன் (4 : 140)

- onlinepj.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக