புதன், 3 நவம்பர், 2010

வஹீ மட்டுமே மார்க்கம் !!

வஹீயை மட்டுமே பின்பற்றுவோம்..!


அல்லாஹ்வுடைய வஹீயான குர் ஆன், ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதும், இந்த இரண்டை தவிர வேறு எவரது சொல்லும் செயலும் மார்க்கமாகாது என்பதும் ஒவ்வொரு ஏகத்துவவாதியின் தாரக மந்திரமாக திகழ வேண்டும்.

வஹீயின் துணையில்லாமல், ரசூல் (ஸல்) அவர்கள் தாமாக, தமது சொந்த கருத்தாக கூறியவை கூட மார்க்கமாகாது என்றிருக்க, வஹீக்கு சம்மந்தமில்லாத, ரசூல் (ஸல்) அவர்களின் சஹாபாக்களது கூற்றை மார்க்க ஆதாரமாக கொள்ளலாம் என்று நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும்?

மனிதர் என்ற முறையில் ரசூல் (ஸல்) அவர்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்களோ, அதே போன்று அல்லது அதை விட அதிகமாக சஹாபாக்களும், அதற்கும் மிஞ்சிய நிலையில் நம்மை போன்ற சாதாரண மக்களும் தவறு இழைக்கக்கூடியவர்கள் எனும்போது, ரசூல் (ஸல்) அவர்களை தவிர வேறு எவரையும் பின்பற்ற நமக்கு அனுமதியில்லை என்பதை உணரலாம்!

ஏனெனில், ரசூல் (ஸல்) தவறிழைக்கும்போது, அடுத்த வஹீயில், அல்லாஹ் அவர்களது தவறை கண்டித்து விடுவான், திருத்தி விடுவான். ஆனால், தவறிழைக்கக்கூடிய சஹாபாக்களை திருத்த புதிதாக வஹீ எதுவும் இறங்கப்போவதில்லை.

அல்லாஹ் தனது வஹீயை, தனது மார்க்கத்தை ரசூல் (ஸல்) அவர்களோடு முழுமைப்படுத்தி விட்டான் என்றிருக்கும்போது , வஹீ கிடைக்கப்பெறாத நபர்களை, அது சஹாபாக்களாகவே இருந்தாலும், பின்பற்ற வேண்டிய எந்த அவசியமும் நமக்கில்லை!

நம்மையெல்லாம் விட ஆயிரம் மடங்கு உயர்ந்த, சொர்கவாசிகள் என்று அறிவிப்பு செய்யப்பட சஹாபாக்களுக்கு கூட, மார்க்கத்தில் மறதி ஏற்பட்டிருக்கிறது, மனிதர் என்ற முறையில், ரசூல் (ஸல்) அவர்களது சட்டத்திற்கு மாற்றமான சட்டத்தை வகுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தோமேயானால் , அவர்கள் செய்யும் எந்த தவறுகளும், அவர்களது தியாகத்திற்கும் ஈமானுக்கும் முன்னே தவிடு பொடியாகி விடும் என்று நாம் நம்பும் அதே வேளையில், மறதியாக அவர்கள் செய்யும் சில காரியங்களை அவர்களே தான் திருத்திக்கொள்ள இயலுமே தவிர, அவர்களுக்கென்று வஹீ எதுவும் வராது என்பதை நாம் யோசிக்கும் போது, அவர்களது சட்டங்களை நாம் பின்பற்றக்கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சில உதாரணங்களை இங்கே பார்ப்போம்..

  • தமத்து ஹஜ்ஜை ரசூல் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்றிருக்கும்போது, அதை அறிந்திருக்காத உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர், அதை மறுத்திருக்கிறார்கள். (புஹாரி 1563 )
  • உடலுறவு கொண்டு, இந்திரியம் வெளியாகா விட்டாலும் குளிப்பு கடமை என்று ரசூல் (ஸல்) கட்டளையிட்டிருக்க, உஸ்மான் (ரலி) அவர்கள் குளிப்பு கடமையில்லை என்று கூறியிருக்கிறார்கள். (புஹாரி 179 )
  • நபி (ஸல்) அவர்களது காலத்தில் மூன்று தலாக்கை ஒரே நேரத்தில் சொன்னாலும், அது ஒரு தலாக்கென்று தான் கருதப்பட்டு வந்தது. ஆனால், உமர் (ரலி) இந்த சட்டத்தை மாற்றுகிறார்கள். (இதில் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் மாற்றுகிறார்கள் என்றே வருகிறது!) - முஸ்லிம் 2689
  • தொழுகையின் போது ருகூவில் கால் முட்டிகளில் கை வைக்க வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது, அதற்க்கு மாற்றமாக, இப்னு மசூத் (ரலி) அவர்களுக்கு தெரியாமல், தமத்து இரு தொடைகளுக்கு நடுவே கை வைத்து தொழுகிறார்கள். (முஸ்லிம் 831 )
  • வாடகை மனைவி என்ற ஒரு வழக்கம், ரசூல் (ஸல்) அவர்களது காலத்தில் முற்பகுதியில் நிலவி வந்தது என்பதும், கைபர் போரின் போது அப்பழக்கம், அல்லாஹ்வால் தடுக்கப்பட்டு விட்டது என்பதும் நாம் அறிந்ததே. ஆனால், இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள், அந்த பழக்கம், ரசூல் (அவர்கள் இறப்பது வரை தடுக்கப்படவில்லை என்று கூறுகிறார். (புஹாரி 4518 )

இது போன்ற ஏராளமான சம்பவங்கள் நமக்கு உணர்த்துவது என்னவெனில், சஹாபாக்கள், நம்மை விடவெல்லாம் சிறந்தவர்களாக, ஈமாந்தாரிகளாக இருந்தாலும், மனிதர்கள் என்ற முறையில் அவர்களும் தவறிழைகக்கூடியவர்களே !

அவ்வாறு, அவர்கள் தவறுதலாக செய்யும் ஒரு செயல், ரசூல் (ஸல்) அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலமாக இருந்தால், அவர்களது கவனத்திற்கு வந்தால், அதை அவர்கள் கண்டித்திருப்பார்கள். ஆனால், ரசூல் (ஸல்) அவர்களது கவனத்திற்கு வராமல், அவர்களது காலத்திற்கு பிறகு வந்த ஏராளமான சட்டங்கள் அனைத்துமே, ரசூல் (ஸல்) அவர்களால் சரி பார்க்கப்படாதவை என்பதால், வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற வகையில், அச்சட்டங்களை நாம் பின்பற்ற எந்த முகாந்திரமும் இல்லை என்பதை அறியலாம்.

இதை புரிந்து செயல்படும் நன்மக்களாக, அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் செய்ய வேண்டுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக