வெள்ளி, 5 நவம்பர், 2010

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!



மனைவியிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர் !

“இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082


உணவு, உடை

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, “நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)
நூல் : அபூதாவூத் 1830


“அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூ வழங்கப் படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி 56

சுய மரியாதையைப் போற்றுதல்


“நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)
நூல் : புகாரி 4942, 5204


ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ர) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ர) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃ-க்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ர) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ர) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ர), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ர) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள். “பகீஃ-க்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்” என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல் : முஸ்லிம் 1619


நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 1119

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, “நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சத்த போது, “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (950)


மனைவியின் உணவு, உடை, அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை போடுவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக