வியாழன், 15 ஜனவரி, 2015

முஃதஸிலாக்கள் யார்?


முஃதஸிலாக்கள் யார்?
நன்றி : அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (தீன்குலப்பெண்மணி, ஜனவரி 2015)
குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றும் சத்தியவாதிகள் உண்மைக்குப் புறம்பான விமர்சனங்களைச் சந்திப்பது சகஜமான ஒன்று.
சத்தியத்தில் இருப்பவர்களை உயிர், பொருளாதார இழப்பைக் கொண்டு இறைவன் சோதிப்பதைப் போன்று எதிராளிகளின் விமர்சனத்தைக் கொண்டும் இறைவன் சோதிக்கின்றான்.
உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் இது உறுதி மிக்க காரியங்களில் அடங்கும்.                            திருக்குர்ஆன் 3:186
இறைத்தூதர்கள் தங்கள் பிரச்சார பயணத்தின்போது பைத்தியக்காரன், சூனியக்காரன் என்றெல்லாம் பல விமர்சனங்களை எதிர்கொண்டனர்.
சத்தியவாதிகள் சத்தியத்தில் இருக்கும்வரை தொடர்ந்து பொய்யான பல விமர்சனத்திற்கு ஆளாகுவார்கள். அது இறைவன் ஏற்படுத்தியுள்ள மரபாகும்.
தவ்ஹீத் ஜமாஅத்தும் அதன் பிரச்சாரப் பயணங்களில் பல விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. அவற்றைக் கடந்துதான் இன்றைய வளர்ச்சியை அடைந்துள்ளது.
கடந்த காலங்களில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகச் சொல்லப்பட்ட எந்த விமர்சனத்திலும் உண்மை இருந்தது கிடையாது. மக்களைத் திசை திருப்பும் நோக்கில் தவ்ஹீத் ஜமாஅத் சொல்லாததைச் சொல்வதாக, அல்லது இல்லாததை இருப்பதாகச் சொல்லும் விதத்தில்தான் அவர்களது விமர்சனங்கள் அமைந்திருந்தன.
தற்போதும் அதே பாணியில்தான் இந்த ஜமாஅத்தின்மீது விமர்சனங்களை அள்ளித்தெளிக்கின்றார்கள். அதில் ஒன்று தவ்ஹீத் ஜமாஅத் முஃதஸிலாக்களின் கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறது என்பதாகும்.
தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தினரும் நவீன முஃதஸிலாக்கள். இவர்கள் முஃதஸிலாக்களின் கொள்கையைப் பின்பற்றுகின்றனர் என்றெல்லாம் எதிர்க்கூடாரத்தில் உள்ளவர்கள் இந்த ஜமாஅத்தை நோக்கி சேற்றை வாரி இறைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
முஃதஸிலாக்கள் வழிகெட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் என்று கூறும் தவ்ஹீத் ஜமாஅத்தையே இவர்கள் நவீன முஃதஸிலாக்கள் என்று கூறுவார்களேயானால் இவர்களுக்கும் மனித மூளைக்கும் சற்றேனும் தொடர்பு உள்ளதா என்று நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.
உண்மையில் முஃதஸிலாக்கள் என்போர் யார்? அவர்களது கொள்கைகள் என்ன? தவ்ஹீத் ஜமாஅத் முஃதஸிலாக்களின் கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறதா? இதை விளக்குவதே இக்கட்டுரையாகும்.
பெயர்ப்பொருளும் - காரணமும்
முஃதஸிலா என்றால் விலகியவர் என்று பொருள். அதன் வேர்ச்சொல் இஃதிஸால் (விலகுதல்) என்பதாகும்.
குர்ஆனிலும் இந்த வார்த்தை இதே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாதவிடாய்க் காலத்தில் மனைவியை விட்டு விலகியிருங்கள் என்று சொல்லும் 2:222 வசனத்தில்  இஃதஸிலூ என்ற வார்த்தையும்,
ஒப்பந்ததாரர்கள் உங்களிடம் போர் புரிவதை விட்டு விலகினால் என்று சொல்லும் 4:90 வசனத்தில் இஃதஸலூகும் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஹதீஸ்களிலும் அதிக உதாரணங்கள் உள்ளன. (புகாரி 3606 7084)
விலகியவர்கள் என்ற அர்த்தம் தரும் வார்த்தை (முஃதஸிலாக்கள்) ஒரு வழிகெட்ட பிரிவினருக்குப் பெயராக சூட்டப்பட்டு அவ்வாறு குறிப்பிடப்பட்டும் வருகிறார்கள்.
எதனால் இப்பெயர் ஏற்பட்டது என்பதைச் சற்று விரிவாக அறிவோம்.
வாஸில் பின் அதாஃ
வரலாற்றில் முஃதஸிலாக்கள் என்றழைக்கப்படும் பிரிவினரின் தலைவர் வாஸில் பின் அதாஃ என்பவர் ஆவார். இவர் முற்கால அறிஞரும், ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவருமான ஹஸன் அல்பஸரீ என்பவரின் மாணவர் ஆவார். ஆதலால் ஹஸன் அல்பஸரீ என்பவரின் சபையில் எப்போதும் உடனிருப்பார்.
(ஹஸன் அல்பஸரீ அவர்களின் ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம், திர்மிதி போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
ஹஸன் அல்பஸரீ அவர்களின் காலத்தில் ஒரு குழப்பம் தோன்றுகிறது. பெரும்பாவங்கள் செய்தவன் முஃமினா? அல்லது காஃபிரா? அவனை எந்த பட்டியலில் இணைப்பது என்பதுதான் அந்தக் குழப்பம்.
இது காரிஜியாக்கள் விட்டுச் சென்ற சிந்தனையாகும். அது ஹஸன் பஸரீ அவர்களது காலத்தில் உள்ள சிலரது சிந்தனைகளை ஆக்கிரமிக்கின்றது.
பள்ளிவாசலில் தம் மாணாக்களுடன் ஹஸன் பஸரீ அவர்கள் இருக்கும் போது இது பற்றி ஒருவர் பஸரீ அவர்களிடம்
“இமாம் அவர்களே நம் காலத்தில் பெரும்பாவம் செய்பவர்களை காஃபிர்கள் என்று சொல்லும் கூட்டம் தோன்றிவிட்டது. அது போல இன்னொரு புறம் பெரும்பாவம் செய்வது ஈமானில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் இது பற்றி என்ன தீர்ப்பளிக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றார்.
அப்போது ஹஸன் பஸரீ அவர்கள் இது தொடர்பாக பதிலளிக்க யோசிக்கும்போதே அவரது சபையில் உள்ள வாஸில் பின் அதாஃ தனது மார்க்கத் தீர்ப்பை விரைந்து அளித்து விடுகிறார்.
அதாவது பெரும்பாவங்கள் செய்தவன் முஃமினும் அல்ல. காஃபிரும் அல்ல. இறைநம்பிக்கை மற்றும் இறை நிராகரிப்பு என இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறான் என்று வாஸில் பின் அதாஃ தீர்ப்பளிக்கின்றார். (இதுதான் அல்மன்ஜிலது பைனல் மன்ஜிலதைன் என்று முஃதஸிலாக்களிடம் அழைக்கப்படுகிறது)
இந்தத் தீர்ப்பில் அவரது ஆசிரியர் ஹஸன் அல் பஸரீ அவர்கள் உடன்படாதபோது வாஸில் நம்மை விட்டு விலகி விட்டார் எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். பிறகு வாஸில், ஹஸன் பஸரீ அவர்களிடமிருந்து விலகி அந்தப் பள்ளியிலேயே வேறொரு இடத்தைத் தேர்வு செய்து தன் தரப்பு கருத்தை மக்களுக்கு விளக்க ஆரம்பித்து விடுகிறார். அதில் அவருக்கென்று சில ஆதரவாளர்கள் சேர்கின்றார்கள்.
பெரும்பாவம் செய்தவன் முஃமினும் அல்ல, காஃபிரும் அல்ல இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள ஃபாஸிக் (பாவி) ஆவான் எனும் தன் நிலைப்பாட்டால் வாஸில் பின் அதாஃ, தன் ஆசிரியர் ஹஸன் பஸரீ அவர்களை விட்டும் விலகியதால் அவர்களுக்கு முஃதஸிலா - விலகியவர்கள் என்று பெயர் வரலாயிற்று.
பின்னாளில் வாஸிலும் அவரைச் சார்ந்தவர்களும் முஃதஸிலாக்கள் என்றே அடையாளப்படுத்தப்பட்டனர்.
இந்தத் தகவல் பிரபலமான அல்மிலல் வந்நிஹல் பாகம் 1 பக்கம் 45லும், அர்ஃபர்கு பைனல் ஃபிரக் பாகம்1 பக்கம் 98லும் இன்னும் பல கொள்கை விளக்க நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது.
الملل والنحل - (1 / 45) القاعدة الثالثة : القول بالمنزلة بين المنزلتين :
 والسبب فيه أنه دخل واحد على الحسن البصري فقال : يا إمام الدين لقد ظهرت في زماننا جماعة يَكْفُرُوْنَ أصحاب الكبائر والكبيرة عندهم كفر يخرج به عن الملة وهم وعيدية الخوارج
 وجماعة يرجئون أصحاب الكبائر والكبيرة عندهم لا تضر مع الإيمان بل العمل على مذهبهم ليس ركنا من الإيمان ولا يضر مع الإيمان معصية كما لا ينفع مع الكفر طاعة وهم مرجئة الأمة فكيف تحكم لنا في ذلك اعتقادا ؟
 فتفكر الحسن في ذلك وقبل أن يجيب قال واصل بن عطاء : أنا لا أقول إن صاحب الكبيرة مؤمن مطلقا ولا كافر مطلقا بل هو في منزلة بين المنزلتين : لا مؤمن ولا كافر
 ثم قام واعتزل إلى أسطوانة من أسطوانات المسجد يقرر ما أجاب على جماعة من أصحاب الحسن
 فقال الحسن : اعتزل عنا واصل فسمي هو وأصحابه معتزلة
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றும் உள்ளது.
அவர்கள் முஃதஸிலாக்கள் என்று அழைக்கப்படும்போது இதர வழிகேடான கொள்கைகள் அவர்களிடம்  தோன்றவில்லை.
மாறாக பெரும்பாவம் செய்தவனை முஃமின் என்றும் சொல்லக்கூடாது, காஃபிர் என்றும் சொல்லக் கூடாது என்ற இந்தக் கொள்கையே இருந்தது.
இந்த ஒன்றிலேயே சமுதாய அறிஞர்களின் கருத்துக்களை விட்டும் அவர்கள் தனித்து இருந்தார்கள். இதனாலேயே அவர்கள் முஃதஸிலாக்கள் - விலகியவர்கள் என்று அழைக்கப்படவும் செய்தார்கள்.
இது முஃதஸிலா என்ற பெயர் தோன்ற காரணமாக இருந்த நிகழ்வு.
முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் சமாதி வழிபாட்டுக் கொள்கையைவிட இது பயங்கரமானது அல்ல.
இறைச் செய்தி மட்டுமே மார்க்கம் என்ற அடிப்படையைத் தகர்த்து சஹாபாக்களைப் பின்பற்றுவோம், இமாம்களைப் பின்பற்றுவோம் எனக் கூறும் சலபி மத்ஹபினர் மற்றும் நான்கு மத்ஹபினரின் கொள்கையை விட இது பாரதூரமானதல்ல.
ஹஸன் பசரி அல்லாஹ்வின் தூதர் அல்ல. அவருடன் ஒரு கொள்கையில் வாசில் பின் அதா என்பவர் முரண்பட்டால் அவருடன் விவாதித்து அவர் சொல்வது சரியல்ல என்று விளக்கம் சொல்வதுதான் ஹஸன் பசரியின் கடமையாகும். அவ்வாறு கூறி ஆதாரம் காட்டாமல் நான் சொன்னதை எப்படி மறுக்கலாம் என்று ஒருவரை வெளியேற்றியதே இஸ்லாத்தின் அடிப்படையில் ஏற்கத்தக்கதல்ல.
அப்படியே ஹஸன் பசரியின் சபையை விட்டு ஒரு சிறிய கொள்கைப் பிரச்சனைக்காக ஒருவர் விலக்கப்பட்டால் அதை அல்லாஹ்வின் தூதர் விலக்கி வைத்தது போல் எடுத்துக் கொண்ட செயலும் கண்டிக்கத்தக்கதே.
நான் சொல்வதை எவரும் எதிர்க்கக் கூடாது என்று ஹஸன் பசரி நடந்து கொண்டதால் ஒதுக்கி வைக்கப்பட்ட வாசில் பின் அதாவின் வழி வந்தவர்கள் இதன் பின்னர் இன்னும் சில தவறான கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர். இக்கொள்கையை இவர்கள் உருவாக்குவதற்கு முன்னரே இவர்கள் முஃதசிலாக்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டனர்.
முஃதஸிலாக்களின் அந்தக் கொள்கைகள் என்னவென்பதை அறிவோம்.
ஐந்து அடிப்படைகள்
குறிப்பிட்ட சில மார்க்க விஷயங்களில் முஃதஸிலாக்கள் சரிகண்ட நிலையை யாராவது சரிகண்டால் அவர்களையும் பொத்தாம் பொதுவில் முஃதஸிலா என்று சொல்லும் நிலை இன்று உள்ளது.
உதாரணத்திற்கு  சூனியத்திற்கு சக்தி இல்லை என்று முஃதஸிலாக்களும் சொன்னார்கள். அதுபோன்று இன்று சூனியத்திற்கு சக்தி இல்லை என்று யாரும் சொன்னால் அவர்களையும் முஃதஸிலாக்களின் பட்டியலில் இணைத்து விடுவது,
குர்ஆனுக்கு முரண்படுவதாக சில ஹதீஸ்களை முஃதஸிலாக்கள் மறுத்திருக்கிறார்கள். அதேபோன்று அந்த ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி மறுத்தால் அவர்களையும் முஃதஸிலாக்கள் என்று கூறுவது என சில அறிவிலிகள் அறிவற்ற செயலை செய்கிறார்கள்.
இந்த அடிப்படையிலேயே சூனியத்திற்கு சக்தி உண்டு என்பதை மறுத்த அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸ் போன்ற முஃதஸிலா அல்லாத அறிஞர்களை முஃதஸிலாக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். நம்மையும் இவ்வாறே விமர்சிக்கின்றனர்.
சூனியம் பொய் என்று சொன்னாலோ, குர்ஆனுக்கு முரண்படுவதாக சில ஹதீஸ்களை மறுத்தாலோ மாத்திரம் அவர்கள் முஃதஸிலாக்கள் என்றாகி விடுவார்களா? கண்டிப்பாக ஆக மாட்டார்கள்.
ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டதைப் போன்று சூனியம், மற்றும் குர்ஆனுக்கு முரண்படுவதாக சில ஹதீஸ்களை மறுப்பது உள்ளிட்ட செயலுக்காக அவர்கள் முஃதஸிலாக்கள் என்று அழைக்கப்படவில்லை. ஹஸன் பசரியால் இவ்வாறு பட்டம் சூட்டப்பட்டபோது அவர்களிடம் இந்தக் கொள்கைகள் இருக்கவுமில்லை.
அவர்கள் ஹஸன் பஸரீயை விட்டும் விலகிய நேரத்தில் பெரும்பாவம் செய்தவன் முஃமினும் அல்ல, காஃபிரும் அல்ல என்ற நிலைப்பாடே இருந்தது. அதன் பிறகே நாளடைவில் அவர்களது கொள்கைகள் ஒவ்வொன்றாகப் பெருகின. அதில் சூனிய விவாகாரமும் இருந்தது. மற்றும் தவறான கொள்கைகளும் இடம் பெற்றன.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், முஸ்லிம் சமுதாயக் கூட்டமைப்பின் கொள்கையிலிருந்து அவர்கள் விலகி பல மாற்றமான கொள்கை நிலைப்பாடு கண்டபிறகு தங்களுக்கென்று முக்கியமான ஐந்து அடிப்படை திட்டத்தை முஃதஸிலாக்கள் வகுக்கின்றார்கள்.
தப்லீக் ஜமாஅத்திற்கு ஆறு நம்பர் இருப்பதைப் போன்று முஃதஸிலாக்களுக்கு குறிப்பிட்ட அடிப்படையான ஐந்து கொள்கைகள் இருக்கின்றன.
அந்த ஐந்து கொள்கைகளையும் யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே முஃதஸிலாக்கள் ஆவார்கள்.
இந்த ஐந்து கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை முஃதஸிலாக்கள் என்று முஃதஸிலாக்களே ஏற்றுக் கொள்வது கிடையாது என்பது இதில் கவனிக்கத்தக்க அம்சம்.
இது பற்றி முஃதஸிலா அறிஞர்களில் அறியப்பட்ட ஒருவரான அபுல் ஹஸன் அல்கய்யாத் கூறுவதை பாருங்கள்
“فلسنا ندفع أن يكون بشر كثير يوافقونا في التوحيد، ويقولون بالجبر، وبشر كثير يوافقونا في التوحيد والعدل، ويخالفونا في الوعد والأسماء والأحكام، لكن ليس يستحق أحد منهم اسم الاعتزال حتى يجمع القول بالأصول الخمسة: التوحيد، والعدل، والوعد والوعيد، والمنزلة بين المنزلتين، والأمر بالمعروف والنهي عن المنكر، فإذا كملت في الإنسان هذه الخصال الخمس، فهو معتزلي
அதிகமான மனிதர்கள் தவ்ஹீத் எனும் கொள்கையில் நம்முடன் ஒத்துப் போவார்கள். ஆனால் ஜிப்ர் கொள்கையைக் கூறுவார். இன்னும் அதிகமானவர்கள் தவ்ஹீத், அத்ல் இரண்டிலும் நம்முடன் ஒன்றுபட்டு அல்வஃத், அஸ்மா, இதர சட்டங்களில் நம் நிலைப்பாட்டிற்கு வேறுபடுவார்.
எனவே ஐந்து அடிப்படைகளான தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை), அத்ல் (நீதி), அல்வஃத் வல்வயீத் (வாக்கு மற்றும் எச்சரிக்கை), அல்மன்ஜிலது பைனல் மன்ஜிதைனீ (இரண்டுக்கும் மத்தியிலான நிலை) அல்அம்ரு பில்மஃரூப் வன்னஹ்யு அனில் முன்கர் (நன்மையை ஏவுதல் தீமையைத் தடுத்தல்) ஆகிய கொள்கைகள் அனைத்தையும் சொல்லாத ஒருவரை முஃதஸிலா என்று சொல்வது தகுதியாகாது.  ஒரு மனிதரிடம் இந்த ஐந்தும் பூரணமாக இருந்தால் தான் அவர் முஃதஸிலாக் கொள்கையைச் சார்ந்தவர் ஆவார்.
அல் இன்திஸார் பாகம் 1 பக்கம் 126
இதைச் சொன்னவர் முஃதஸிலா அறிஞர்களில் ஒருவரான, முஃதஸிலா கொள்கையை எதிர்ப்பவர்களுக்கு மறுப்பளிக்கும் அபுல் ஹஸன் அல்கய்யாத் அல்முஃதஸிலி ஆவார். இவர் முஃதஸிலா அறிஞர்களில் பிரபல்யமான ஒருவர்.
முஃதஸிலாக்களிடம் இந்த ஐந்து அடிப்படைக் கொள்கைகள் உண்டு என்பதை ஏனைய அறிஞர்களும் மேற்கோள் காட்டியுள்ளனர்.
(பார்க்க அல்மிலல் வந்நிஹல் பாகம் 1 பக்கம் 42,43,44,
எனவே எந்த ஐந்து கொள்கைகளை ஏற்றால் முஃதஸிலாக்கள் என்று முஃதஸிலாக்களே ஒப்புக் கொள்வார்களோ அந்த ஐந்து கொள்கைகளின் விளக்கத்தையும் அதை தவ்ஹீத் ஜமாஅத்  ஏற்றுக் கொண்டுள்ளதா என்பதையும் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்களிடம்தான் இந்த ஐந்து கொள்கைகளோ அதன் சாயலோ குடிகொண்டுள்ளது என்பதையும் காண்போம்.
1. தவ்ஹீத்
முஃதஸிலாக்களின் அடிப்படையான கொள்கைகளில் ஒன்று தவ்ஹீத்.
தவ்ஹீத் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ஓரிறைக் கொள்கை தான். ஆனால் இவர்கள் பரந்து விரிந்த பொருளில் தவ்ஹீத் என்பதைப் பயன்படுத்தியுள்ளனர்.
இறைவன் ஒருவனே. அவனுக்கு இணையாளன் கிடையாது. அவனைப் போன்று எதுவுமில்லை என்பதுவே முஃதஸிலாக்களின் தவ்ஹீத் எனும் கொள்கை. அத்துடன் இறைவனின் பண்புகள் தொடர்பாக பல தேவையற்ற கேள்விகளை எழுப்பி இறைவனின் பல தன்மைகளை மறுத்தும் சில தன்மைகளுக்கு வியாக்கியானமும் கொடுக்கின்றனர்.
உதாரணத்திற்கு இறைவனுக்கு உருவமில்லை என்பது அவர்கள் கூறும் தவ்ஹீத் கொள்கையில் உள்ளதாகும்.
முஃதஸிலாக்களின் தவ்ஹீத் கொள்கையை விளக்கும்போது அபுல் ஹஸன் அல்அஷ்அரீ என்பவர் இதனைக் குறிப்பிடுகிறார். (இவர் முஃதஸிலாக் கொள்கையில் இருந்து பிறகு அதிலிருந்து மீண்டவர் என்ற கருத்துண்டு)
مقالات الإسلاميين - (1 / 155) شرح قول المعتزلة في التوحيد وغيره
 اجمعت المعتزلة على ان الله واحد ليس كمثله شيء وهو السميع البصير وليس بجسم ولا شبح ولا جثة ولا صورة ولا لحم ولا دم ولا شخص ولا جوهر ولا عرض ولا بذى لون ولا طعم ولا رائحة ولا مجسة ولا بذى حرارة ولا برودة ولا رطوبة ولا يبوسة ولا طول ولا عرض ولا عمق ولا اجتماعة ولا افتراق ولا يتحرك ولا يسكن ولا يتبعض وليس بذى ابعاض واجزاء وجوارح واعضاء وليس بذى جهات ولا بدى يمين وشمال وامام وخلف وفوق وتحت ولا يحيط به مكان ولا يجرى عليه زمان
அல்லாஹ் ஒருவனே. அவனை போன்று எதுவுமில்லை. அவன் செவியுறுபவன். பார்ப்பவன். ஆனால் அவனுக்கு உடல் இல்லை. ஒப்பு இல்லை. தோற்றம் இல்லை. சதை இல்லை. இரத்தம் இல்லை. உள்ளம் இல்லை. நீளம் இல்லை. நிறமில்லை. சுவையில்லை. வாடையில்லை. முன்மாதிரி இல்லை. உஷ்ணமோ குளிர்ச்சியோ இல்லை. ஈரமோ காய்தலோ இல்லை. நீளம் அகலம் இல்லை. சேர்தலுமில்லை. பிரிவதுமில்லை. அசைவதும் இல்லை. அசையாதிருப்பதும் இல்லை என்பதில் முஃதஸிலாக்காரர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.
மகாலாதுல் இஸ்லாமிய்யீன் பாகம் 1 பக்கம் 155
இதன் சாராம்சம் இறைவனுக்கு உருவமில்லை என்பதுதான். இது தான் முஃதஸிலாக்களின் அடிப்படை கொள்கை.
இறைவனுக்கு உருவம் இருக்குமானால் அவன் உருவமுள்ள மனிதனுக்கு ஒப்பாகி விடுகிறான். மேலும் ஒரு இடத்தின்பால் தேவையாகிறான் என்பனபோன்ற எண்ணற்ற தேவையற்ற வாதங்களை எழுப்பி இறைவனுக்கு உருவமுண்டு என்பதை மறுக்கின்றனர்.
ஷேக் அப்துல்லா ஜமாலியுடன் இறைவனுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அச்சு அசலாக இதே வாதத்தை அவர் எடுத்து வைத்தார்.
இறைவனைப் போல் எதுவும் இல்லை. இறைவனுக்கு உருவம் உள்ளது என்றால் இந்த அடிப்படைக்கு மாற்றமாக உள்ளது. இறைவனுக்கு உருவம் உள்ளது என்று சொன்னால் அவனைப் போல் எதுவும் இல்லை என்பதற்கு இது மாற்றாமானது என்பது தான் அவரது முக்கிய ஆதாரமாக இருந்தது.
ஷேக் அப்துல்லா ஜமாலியின் இந்த அறியாமையையும் முஃதஸிலாக்களின் அறியாமையையும் உடைக்கும் விதமாக பீஜெ அவர்கள் பினவருமாறு பதிலளித்தார்.
அல்லாஹ்வின் படைப்புகளில் உருவமுள்ளவையும் உள்ளன. உருவமற்றவையும் உள்ளன. காற்று, மின் ஆற்றல் போல் உருவமற்ற பல படைப்புகள் உள்ளன. அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று நீங்கள் சொன்னால் உருவமற்ற காற்றுடன் அவனை நீங்கள் ஒப்பாக்கி விட்டீர்கள் என்று ஆகுமே? உங்கள் வாதப்படி இறைவனுக்கு உருவம் உள்ளது என்று சொல்வது அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை என்பதற்கு முரண் என்றால், அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று சொல்வதும் அதே வசனத்துக்கு மாற்றமாகத் தான் உள்ளது. அவனுக்கு உருவம் உண்டு; ஆனால் படைப்பினங்களின் உருவம் போன்றது அல்ல என்று புரிது கொள்வதுதான் அறிவுடமை.
நீண்ட காலமாக முஃதசிலாக்கள் இக்கேள்வியைக் கேட்டு வந்தும் பதில் சொல்லாமல் சலபிக் கூட்டம் விழி பிதுங்கியது. தவ்ஹீத் ஜமாஅத்தான் இதையும் தர்க்கரீதியாக முறியடித்தது.
இறைவனது உருவம் தொடர்பாக குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் வரக்கூடிய அனைத்திற்கும் கை என்றால் அதிகாரம் கால் என்றால் ஆதிக்கம் என்பன போன்ற மாற்று விளக்கங்களை அளிக்கின்றனர்.
இறைவனின் உருவம் தொடர்பாக வரும் வசனங்கள் அனைத்திற்கும் முஃதஸிலாக்கள் அளிக்கும் விளக்கங்களை முஃதஸிலாக்களின் அறிஞர்களின் ஒருவரான காழி அப்துல் ஜப்பார் என்பார் தனது முதஷாபிஹூல் குர்ஆன் எனும் நூலில் (பாகம் 1 பக்கம்70 லிருந்து) விளக்கியுள்ளார்.
தவ்ஹீத் ஜமாஅத் முஃதஸிலாக்களின் இந்தக் கொள்கையில் ஒன்றுபடுகிறதா? உருவமற்ற இறைவன் என்ற சித்தாந்தத்தை நோக்கி மக்களை தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கின்றதா?
இறைவனுக்கு உருவமுண்டு; ஆனால் அதற்கு உதாரணம் கூறுதலோ ஒப்பீடு காட்டுதலோ கூடாது என்ற சரியான, சத்திய நிலைப்பாட்டை தவ்ஹீத் ஜமாஅத் கொண்டுள்ளது.
அதற்காக திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் எண்ணற்ற ஆதாரங்களை மேற்கோள் காட்டி பல ஆக்கங்களை எழுதியுள்ளது.
சமீப காலமாக காணாமல் போன அப்துல்லா ஜமாளி போன்றோர்களுடன் இது குறித்து தனித் தலைப்பில்   விவாதமும் புரிந்துள்ளது. (வீடியோ இணைப்பு லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஷீஸீறீவீஸீமீஜீழீ.நீஷீனீ/தீணீஹ்ணீஸீ-ஸ்வீபீமீஷீ/ஸ்வீஸ்ணீtலீணீஸீரீணீறீ/மிக்ஷீணீவீஸ்ணீஸீuளீளீu-மிக்ஷீuஸ்ணீனீ-ஹிஸீபீணீ/#.க்ஷியினிsனீsகினி)
அது தொடர்பான விளக்கங்களையும், ஆக்கங்களையும் இங்கே பிரசுரித்தால் பக்கங்கள் போதாது.
முஃதஸிலாக்கள் கூறும் தவ்ஹீத் கொள்கையில் நேர் எதிர்த் திசையில் பயணிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் முஃதஸிலாக்களின் பாதையில் பயணிக்கின்றது என எப்படிக் கூற முடியும்.
இந்த ஒன்றிலேயே முஃதஸிலாக்களும் தவ்ஹீத் ஜமாஅத்தும் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் நேரெதிர் துருவங்கள் என்பதை அறிவுள்ள யாரும் அறிந்து கொள்ள இயலும்.
இன்னொன்றையும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இறைவனுக்கு உருவமில்லை எனும் முஃதஸிலாக்களின் கொள்கையில் சுன்னத்வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் தான் உள்ளார்கள்.
இறைவனின் உருவம் தொடர்பான வசனங்கள் மற்றும் ஹதீஸ் களுக்கு முஃதஸிலாக்கள் என்ன மாற்று விளக்கங்களை அளித்தார்களோ அதை அப்படியே அச்சரம் பிசகாமல் சுன்னத் வல்ஜமாஅத் என்று தங்களை கூறிக் கொள்வோர்தான் கூறிக் கொண்டிருக்கின்றனர். இறைவனுக்கு உருவமுண்டு என்பதை எள்ளி நகையாடவும் செய்தனர். செய்கின்றனர்.
இறைவனுக்கு உருவமுண்டு என்பதையும் நம்ப வேண்டும்; அதே சமயம் அவனுக்கு ஒப்பாக யாரும் இல்லை. அவனுக்கு உதாரணம் இல்லை என்றும் நம்ப வேண்டும் என்ற சத்திய நிலைப்பாட்டிற்கு மாற்றமாக இறைவனுக்கு உருவம் இருந்தால் அவன் ஒரு இடத்தின் பால் தேவையாகிறானே என முஃதஸிலாக்களை போன்று தேவையற்ற கேள்விகளை முன்வைத்தவர்கள் போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர்தான்.
உருவம் இல்லாத காற்று போன்றவற்றுக்கும்கூட இடம் தேவைப்படும் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் உளறினார்கள்.
நம்மைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் குருடர்களுக்கு சிந்தனை என்று ஒன்று இருக்குமேயானால், இந்த போலி சுன்னத் வல்ஜமாஅத்தை அல்லவா முஃதஸிலாக்கள் என்று கூறியிருக்க வேண்டும்.
நம்மை எதிர்ப்பதற்காக முஃதஸிலாக்களின் கொள்கையில் ஒன்றுபடும் போலி சுன்னத் வல்ஜமாஅத்தினரோடும் சேர்ந்து களப்பணியாற்ற(?) தயார் நிலையில் இவர்கள் இருப்பார்களேயானால் இவர்களது நோக்கம் என்ன என்பதை இங்கே சொல்லிப்புரிய வேண்டிய அவசியமில்லை. 
ஆக முஃதஸிலாக்களின் அடிப்படையான ஐந்து கொள்கையில் முதல் கொள்கையான இறைவனுக்கு உருவமில்லை எனும் (முஃதஸிலாக்களின்) தவ்ஹீதில் போலி சுன்னத் வல்ஜமாஅத்தினரே இருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் அந்தக் கொள்கையில் இல்லை.
முஃதசிலாக்களை விட கேடுகெட்ட கொள்கையில் இருக்கும் சலபி எனும் போலி தவ்ஹீத்வாதிகள் தவ்ஹீத் ஜமாஅத் இக்கொள்கையில் உள்ளதாகப் பரப்பி வருகின்றனர்.
இறைவனின் பண்புகள் பற்றிக் கூறும் சில வசனங்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் நேரடிப் பொருள் கொடுக்காமல் மாற்று விளக்கம் கொடுக்கின்றது. இது போன்ற ஒன்றிரண்டு விஷயங்களை எடுத்துக் காட்டி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு முஃதசிலா பட்டம் சூட்டுகின்றனர். இவர்கள் ஏற்றிப் போற்றும் சலபி முன்னோர்களும் இப்படி ஓரிரு வசனங்களுக்கு நேரடிப் பொருள் கொடுக்கவில்லை என்பதைக் கூட சலபிக் கூட்டம் அறியவில்லை.
கேடுகெட்ட சலபிக் கூட்டத்தின் இந்த விமர்சனம் அவர்களது அறியாமையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.
இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையைப் பலவகைகளில் நாம் விளக்கியுள்ளோம்.
பீஜே அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 61 வது குறிப்பில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
இறைவனது பண்புகளையும், செயல்களையும் பேசும் வசனங்களை அதன் நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கை என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் என்று விளக்கம் கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் முகம் என்றால் முகம் என்பதுதான் பொருள்.
“வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்போது...’’ என்ற (89:22) வசனத்திற்குப் பொருள் கொள்ளும் போது, நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களை விசாரிப்பதற்கு இறைவன் வருவான் என்ற நேரடிப் பொருள்தான் கொள்ள வேண்டும்.
ஆயினும் நேரடிப் பொருள் கொள்வது கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்தினாலோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவோ இருந்தாலோ அப்போது நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.
நல்லடியார்களின் கையாக நான் ஆவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. நல்லடியானுக்கு உதவுவேன் என்று அல்லாஹ் கூறுவதாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வசனங்கள் (2:210, 6:158, 13:41, 16:26, 24:39, 59:2) நேரடிப் பொருள் கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளன.
உதாரணமாக 2:210, 13:41, 16:26 ஆகிய வசனங்களில் தீயவர்களை அழிக்க இறைவன் வருவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனங்களுக்கு அல்லாஹ் நேரடியாக வருவான் என்று பொருள் கொள்ளாமல் அவனது கட்டளை வரும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஒரு கூட்டத்தையோ, ஒட்டு மொத்த சமுதாயத்தையோ அழிக்க அல்லாஹ் நாடினால் அதற்காக அவன் இறங்கி வருவதில்லை. அவ்வாறு வரவேண்டிய அவசியமும் இல்லை. ஒரேயொரு உத்தரவின் மூலம் காரியத்தை முடித்து விடுவான் என 36:28, 29 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
“மேகக் கூட்டங்களில் அல்லாஹ் வருவான்’’ என்பது, அல்லாஹ்வின் தண்டனை மேகக் கூட்டங்களின் வாயிலாக வரும் என்று பொருள்படும். அதாவது பேரழிவை ஏற்படுத்தும் பெருமழையுடன் மேகக் கூட்டங்களை அனுப்பி அழிப்பான் என்று பொருள்.
இதுபோல் 13:41 வசனத்தில் பூமியை அதன் ஓரங்களில் குறைப்பதற்காக நாம் பூமிக்கு வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. நமது கட்டளைப்படி பூமியைக் குறைக்கிறோம் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் கட்டடங்களின் அடித்தளத்தின் வழியாக நாம் வந்தோம். கட்டடங்கள் வீழ்ந்தன என்று பூகம்பம் குறித்து திருக்குர்ஆன் 16:26 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இதுபோல் 59:2 வசனத்தில் அவர்கள் நினைத்துப் பார்க்காத வகையில் அணுகினான் என்பதும் இது போன்றதுதான்.
கட்டடத்துக்குக் கீழே வந்து அசைக்கிறான் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. கட்டடங்கள் விழுமாறு கட்டளையிட்டான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
அது போல் 24:39 வசனத்தில் காணல் நீரைத் தேடிச் செல்பவன் அங்கே அல்லாஹ்வைக் காண்பான் என்று கூறப்பட்டுள்ளதையும் அதன் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.
இது குறித்து மேலும் அறிய 488வது குறிப்பையும் பார்க்கவும்.
இது முஃதசிலாக்களின் கொள்கையா? அவர்களின் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் விளக்கமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!
2.அத்ல்
அத்ல் என்றால் நீதி என்று பொருள். நீதி என்ற பண்பை இறைவனோடு தொடர்புபடுத்தி அதன் முடிவில் சில விவகாரமான கொள்கை நிலைப்பாடுகளை எடுத்து அவற்றுக்கு முஃதஸிலாக்கள் அத்ல் என்று பெயரிட்டுள்ளனர்.
உதாரணத்திற்கு விதியை மறுப்பது முஃதஸிலாக்களின் அத்ல் கொள்கையில் உள்ளதாகும்.
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு மனிதர்களே பொறுப்பாளர்கள். அவை இறைவனின் புறத்திலிருந்து அல்லாமல் மனிதர்களிடமிருந்தே ஏற்படுகின்றன. மனிதர்களின் செயல்களை அல்லாஹ் நிகழ்த்துகிறான் என்று யார் சொல்வார்களோ, அவர் பெரும் தவறிழைத்து விட்டனர் என்கின்றனர். 
(பார்க்க : முஃதஸிலா அறிஞரான காழி அப்துல் ஜப்பார் அவர்களின் அல்முக்னா பாகம் 8 பக்கம் 3)
அல்லாஹ் அருவருப்பானதைச் செய்யமாட்டான். அதைத் தேர்வு செய்யவும் மாட்டான். தன் மீது கடமையானதைச் செய்யாமல் விடவும் மாட்டான். அவனது செயல்கள் அனைத்தும் அழகானதாகவே இருக்கும்.
காழி அப்துல் ஜப்பாரின் ஷரஹ் உசூலுல் கம்ஸா பக்கம் 301
மனிதர்களின் செயல்கள் இறைவனால் ஏற்கனவே விதியாகியிருந்தால் அதற்காக மனிதனைத் தண்டிப்பது எப்படி நியாயமாகும்?  இறைவன் ஏற்கனவே விதித்த பிரகாரம் ஒருவன் கொலை, கொள்ளை, விபச்சாரம், குஃப்ர் போன்றவற்றைச் செய்யும் போது அதற்காக மனிதனைத் தண்டிப்பது அநியாயம், அநீதி இல்லையா? ஆகவே மனிதர்களின் செயல்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்படவில்லை, அல்லாஹ் வழங்கிய ஆற்றல் மூலம் மனிதர்களே அதை உருவாக்குகிறார்கள் என்பது தான் அவர்களது வாதம்.
ஆக விதியை மறுப்பது முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கை என்பதை இதிலிருந்து அறிகிறோம். 
தவ்ஹீத் ஜமாஅத் விதியை மறுக்கின்றதா?
முஃதஸிலாக்களின் பாதையில் தவ்ஹீத் ஜமாஅத் பயணிக்கிறது என்ற வாதம் உண்மையாக இருந்தால் முஃதஸிலாக்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தவ்ஹீத் ஜமாஅத் விதியை நம்ப மறுத்திருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு மாற்றாக விதியை குர்ஆன், சுன்னா அடிப்படையில் ஆழமாக நம்பும் அமைப்பாக தவ்ஹீத் ஜமாஅத் திகழ்கிறது.
இஸ்லாத்தின் பார்வையில் விதி பற்றிய நம்பிக்கையை மிகத் தெளிவாக, தர்க்கரீதியான வாதங்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துரைக்கின்றது.
தவ்ஹீத் மத்ரஸாக்களில் பயிலும் மக்தப் மாணவர்களுக்கு கூட தவறாமல் நன்மை தீமை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே ஏற்படுகிறது என்ற விதி நம்பிக்கை மிகத் தெளிவாக போதிக்கப்படுகின்றது
இஸ்லாத்தின் விதி நம்பிக்கை மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கக் கூடியது, அறிவியல் ரீதியாகவும் சாத்தியமானது என்பதை எல்லாம் தக்க ஆதாரங்களுடன் எடுத்தெழுதி மக்களுக்கு பிரச்சாரம் செய்கிறது.
விதியை நம்ப வேண்டியதன் அவசியத்தை விளக்கி தனி நூலையும் தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் அளித்த விளக்கத்தை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
289. விதியை நம்புதல் மூட நம்பிக்கையா?
இவ்வசனத்தில் (57:23) விதியை ஏன் நம்ப வேண்டும் என்பதற்கான காரணமும் அதனால் கிடைக்கும் நன்மையும் சொல்லப்படுகிறது.
விதியை நம்புவது இஸ்லாமிய நம்பிக்கையில் முக்கியமான ஒரு அம்சம். இஸ்லாம் மார்க்கத்தில் எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுப்பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும் என்றாலும், விதியைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சர்ச்சை செய்யக்கூடாது என்று சொல்லி விட்டார்கள்.
ஏனென்றால் ஒரு கோணத்தில் பார்க்கும் போது விதி இருப்பது போலவும், இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது விதி இல்லாதது போலவும் ஒரு மயக்கம் மனிதனுக்கு ஏற்படும்.
விதி என்று ஒன்று இருந்தால் “நான் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? எனது கெட்ட செயலுக்காக எனக்கு ஏன் நரகத்தைத் தரவேண்டும்?” என்பன போன்ற பல கேள்விகள் இதில் எழும்.
விதி என்று ஒன்று இல்லாவிட்டால் “நான் என்ன செய்யப் போகிறேன்’’ என்பது இறைவனுக்குத் தெரியாது என்று ஆகி விடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்ற கேள்வி வரும்.
விதி இல்லை என்று சொன்னாலும் விபரீதம்!
விதி இருக்கிறது என்று சொன்னாலும் விபரீதம்!
எனவேதான் விதியை நம்ப வேண்டும்; அதே நேரத்தில் நம் செயல்பாட்டை விதியின் மீது பழி போட்டு விடாமல் அமைத்துக் கொள்ள வேண்டும். இதை விளங்கிக் கொள்ளும் அறிவை அல்லாஹ் நமக்குத் தரவில்லை என்று தோல்வியையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மை சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களில் உள்ள நம்பிக்கையைப் போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை.
“எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே!’’ என்று சில மதங்களில் கூறப்படுவது போல் இஸ்லாம் கூறவில்லை.
மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.
எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.
எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.
அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவதுதான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.
ஒரு மனிதன் தனது முழுச் சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கை கூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
விதியை நம்புகின்றவன் “நாம் என்னதான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?’’ எனக் கூறி மறுநாளே இயல்பு நிலைக்கு வந்து விடுவான்.
விதியை நம்பாதவன் இதை எப்படி எடுத்துக் கொள்வான்?
இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே அவன் மனநோயாளியாவான். அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் அவன் இயல்பு நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.
கேரளாவில் தற்கொலை செய்பவர்கள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஆண், பெண் என்ற பாலின அடிப்படையிலும், மதங்களின் அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், படித்தவன் படிக்காதவன் என்ற அடிப்படையிலும் தற்கொலை செய்வோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் முஸ்லிம்கள் மட்டுமே மிகக் குறைந்த விகிதத்தில் இருந்தனர்.
இதற்கான காரணத்தை அந்த ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்த போது, எந்தத் துன்பம் ஏற்பட்டாலும், “இறைவனின் நாட்டம்“ என்று கூறி சாதாரணமாக முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வதால் தற்கொலைக்கு அவர்கள் தூண்டப்படுவதில்லை என்று கண்டறிந்தனர்.
விதியை நம்புவதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் (57:23) அல்லாஹ் கூறுகிறான்.
நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.
விதியை நம்புவதன் மூலம் இந்த மனநோயிலிருந்து விடுபடலாம்.
“இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல’’ என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
அதுபோல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம்.
இந்த மனநோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.
“நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவுதான்’’ என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் இயல்பு நிலையை அடைவான்.
இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
நடந்து விட்ட விஷயத்திற்குத்தான் விதியை நினைக்க வேண்டும்; நடக்காத விஷயங்களில் எது விதி என்று நமக்குத் தெரியாத காரணத்தால், விதி என்று ஒன்று இல்லாததுபோல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய நவீன கண்டுபிடிப்புகள்கூட விதியைப் பற்றி பேசும்போது முரண்பட்ட நிலைபாட்டை எடுக்கும் வகையில்தான் அமைந்துள்ளன.
மனிதனின் பெரும்பாலான செயல்களுக்கு அவனிடம் உள்ள செல்களும், மரபணுக்களும்தான் காரணம் என்று இப்போது ஆய்வு செய்து சொல்கிறார்கள். அந்த அணுக்கள் காரணமாகவே மனிதர்களின் நடத்தைகளும் குணநலன்களும் மாறுபட்டதாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.
அதாவது ஒருவனிடம் திருட்டுப் புத்தி உள்ளது என்றால் அதற்கேற்ற வகையில் அவனது செல்கள் அமைந்துள்ளன என்கிறார்கள்.
அவனது கெட்ட செயலுக்கு அவனிடம் உள்ள செல்கள்தான் காரணம் என்றால் அவனது குற்றங்களுக்காக அவனைத் தண்டிப்பது நியாயமில்லை என்று கூற வேண்டுமல்லவா?
ஆனால் அவ்வாறு கூறாமல் திருடனைத் தண்டிக்க வேண்டும் என்பதையும் நியாயப்படுத்துகிறார்கள்.
அதாவது விதி விஷயத்தில் இதுவரை இவர்கள் கேட்டுவந்த கேள்விக்கு இவர்களே இலக்காகி விடுகிறார்கள். இதில் இருந்து விதி என்பது மனித அறிவின் மூலம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்பதும், விதி என ஒன்று உள்ளது என்பதும் உறுதியாகிறது.
இந்த விளக்கம் முஃதசிலாக்களின் கொள்கையா? அவர்களுக்கு மரண அடி கொடுக்கும் விளக்கமா? சிந்தித்துப் பாருங்கள்!
இப்படியாக முஃதஸிலாக்களின் அத்ல் கொள்கையிலும் தவ்ஹீத் ஜமாஅத் வேறுபட்டே நிற்கின்றது.
இதற்கு மாற்றமாக முஸ்லிம்களிலேயே விதியை மறுத்து முஃதஸிலாக்களின் கருத்தை எவர்கள் பிரதிபலிக்கின்றார்களோ அவர்களை இவர்கள் ஒருக்காலும் முஃதஸிலா என்று விமர்சித்தது கிடையாது.
தவ்ஹீத் ஜமாஅத் எதைச் சொன்னாலும் முஃதஸிலா, ஏனையோர் முஃதஸிலாக்களின் கொள்கையையே பிரச்சாரம் செய்தாலும் அவர்கள் முஃதஸிலா அல்ல என்னவொரு தெளிந்த பார்வை? பரந்த மனம் இவர்களுக்கு?
இவர்களின் விருப்பு வெறுப்பற்ற இத்தகைய பார்வை உண்மையிலேயே நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.?
3. அல்வஃது வல்வயீத்
இது முஃதசிலாக்களின் மற்றுமொரு அடிப்படைக் கொள்கை.
இதன் பொருள் வாக்கும் எச்சரிக்கையும் என்பதாகும். அதாவது இறைவன் ஒரு வாக்குறுதியை அளித்தால் அதை எப்படி நிறைவேற்றுவானோ அது போன்றே எச்சரிக்கையையும் நிறைவேற்றுவான். ஏனெனில் எச்சரிக்கையும் இறைவனது வாக்குறுதியில் அடங்கும் என்பது இவர்களது இந்தக் கொள்கையின் சுருக்கம்.
இன்ன நன்மை புரிந்தால் ஒருவன் சொர்க்கம் செல்வான் என்று இறைவன் வாக்குறுதி அளித்தால் அவனை சொர்க்கத்திற்கே அல்லாஹ் அனுப்புவான். அது போன்றே இன்ன தீமை செய்தால் நரகம் செல்வான் என்று இறைவன் கூறியிருந்தால் அவன் கண்டிப்பாக நரகம் சென்றே தீருவான்.
நன்மைக்கு கூலி உறுதி என்பதை போன்று தீமைக்கு தண்டனையும் உறுதி. பாவம் செய்தோருக்கு பாவமன்னிப்பு கேட்காமல் மன்னிப்பு வழங்கப்படாது.
இதனடிப்படையில் பெரும்பாவம் செய்தவர்கள் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை எனில் நிரந்தர நரகில் இருப்பார்கள் என்பது முஃதஸிலாக்களின் நிலைப்பாடாகும்.  இதற்குப் பெயர்தான் அல்வஃது வல்வயீத் எனப்படுகிறது.
இவர்களது இக்கொள்கை பற்றி அல்மிலல் வந்நிஹலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
الملل والنحل - (1 / 44) واتفقوا على أن المؤمن إذا خرج من الدنيا على طاعة وتوبة استحق الثواب والعوض . والتفضل معنى آخر وراء الثواب
 وإذا خرج من غير توبة عن كبيرة ارتكبها استحق الخلود في النار لكن يكون عقابه أخف من عقاب الكفار وسموا هذا النمط : وعدا ووعيدا
ஒரு முஃமின் இறைவனுக்கு கட்டுப்பட்டு பாவமன்னிப்பு கோரியவனாக இவ்வுலகை விட்டும் பிரிந்தால் அவன் நற்கூலி வழங்கப்படுவதற்கு தகுதி பெற்றவன் ஆவான்.
அவன் பெரும் பாவம் செய்து பாவமன்னிப்பு கோராமல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தால் நிரந்தரமாக நரகில் இருக்க தகுதி பெறுகிறான். எனினும் இறைமறுப்பாளர்களின் தண்டனையை விட இவர்களது தண்டனை லேசானதாக அமையும் எனும் விஷயத்தில் அவர்கள் (முஃதஸிலாக்கள்) ஒன்றுபடுகின்றனர். இவ்வகைக்கு வஃது வயீத் என்று பெயரிட்டுள்ளனர்.
அல்மிலல் வந்நிஹல் பா 1 பக் 44
காழி அப்துல் ஜப்பார் அவர்களின் ஷரஹ் உமூசூலுல் கம்சாவில் இது பற்றி
நன்மை செய்வோருக்கு நற்கூலி வழங்குவதாகவும், தீமை செய்வோருக்கு தண்டனை வழங்குவதாகவும் இறைவன் வாக்களித்ததை அறிவதும்,
கூலியாக தண்டனையாக அல்லாஹ் எதை வாக்களித்தானோ அதை சந்தேகமின்றி அவன் செய்வான், அதற்கு மாற்றமாக நடப்பதும் பொய் சொல்வதும் அவனுக்கு தகுதியாகாது என்பதையும் அறிவதே அல்வஃத் வல்வயீத் என்பதாகும்.
பார்க்க பக்கம் 611 லிருந்து
ஒருவன் சொர்க்கத்திற்குச் செல்வான் என்று அல்லாஹ் சொன்ன பிறகு அவனை நரகிற்கு அனுப்புவது எப்படி வாக்குமீறலோ அது போன்றே பெரும்பாவம் செய்தவன் நிரந்தர நரகில் இருப்பான் என்ற பிறகு அவனை மன்னித்து சொர்க்கம் அனுப்புவதும் இறைவனின் வாக்குமீறலாக பார்க்கப்படும். எனவே இறைவனது வாக்கும் மாறு செய்யப்படாது. எச்சரிக்கையும் மாறு செய்யப்படாது. வாக்கு, எச்சரிக்கை இரண்டும் இறைவனால் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்ற அடிப்படையில் பெரும்பாவம் செய்தவர்களுக்கு (திருந்தாமல்) மன்னிப்பு கிடையாது என்கிறார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் முஃதஸிலாக்களின் இந்தக் கொள்கையில் இருக்கின்றதா?
யாருக்கு தண்டனை வழங்குவதாக அல்லாஹ் சொல்லி விட்டானோ அவர் பாவமன்னிப்பு கோராமல் இறந்து விட்டால் அவருக்கு மன்னிப்பு கிடையாது. அவரை மன்னிப்பது தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதாக அமைந்து விடும் என்ற முஃதஸிலாக்களின் தவறான புரிதலில் தவ்ஹீத் ஜமாஅத் இல்லை.
தவறான புரிதல் என்று நாம் எழுதியலிருந்தே இந்த நிலைப்பாடு தவறு என்பதே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இணைவைப்பைத் தவிர உள்ள அனைத்தையும் பெரும்பாவங்கள் உட்பட அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். அவன் நாடினால் தண்டிப்பான். அவ்வாறு மன்னிப்பது அவனது வாக்குறுதிக்கு மாற்றமானது அல்ல. இதுவே குர்ஆன் மற்றும் நபிவழி சொல்லும் நிலையாகும். இந்த நிலைப்பாட்டிலேயே தவ்ஹீத் ஜமாஅத்தும் உள்ளது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
திருக்குர்ஆன் 4 48
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்துவிட்டார்.
திருக்குர்ஆன் 4 116
“நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்‘’ என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். “(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?’’ என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள், பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.
திருக்குர்ஆன் 5 18
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக்குர்ஆன் 5 40
உண்மையாளர்களுக்கு அவர்களது உண்மையின் காரணமாக அல்லாஹ் பரிசளிப்பான். நாடினால் நயவஞ்சகரைத் தண்டிப்பான். அல்லது அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 33 24
பெரும்பாவங்களுக்கு இறைவன் நாடினால் மன்னிப்பு உண்டு என்று நபிமொழிகளும் சான்றளிக்கின்றது.
அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:  ‘’எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது ‘எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்’  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், ‘’அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?’’ எனக் கேட்டேன். அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான்’’  என்று பதிலளித்தார்கள்.’
அறிவிப்பவர் அபூதர் (ரலி ), நூல் புகாரி 1237
(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புணைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின்மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்’’ என்று சொன்னார்கள்.
உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி), நூல் : புகாரி 18
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் “லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் “லாயிலாஹ இல்லல்லாஹ்’ சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் “லாயிலாஹ இல்லல்லாஹ்’ சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.
நபி (ஸல்) அவர்கள் “நன்மை’ என்று கூறியதாக மேற்கண்ட நபிமொழியில் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் இறைநம்பிக்கை (“ஈமான்’) என்று குறிப்பிட்டதாக அனஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.
அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல் : புகாரி 44
தனக்கு இணைவைப்பதை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று கூறி விட்டு ஏனைய பாவங்களை தான் நாடினால் மன்னிப்பதாக அல்லாஹ் கூறியதிலிருந்து இதுவும் (ஷிர்க் அல்லாத பாவங்களை மன்னிப்பது) அல்லாஹ்வின் வாக்குறுதிகளில் ஒன்று என்பதை அறிகிறோம். ஆகவே இணைவைப்பு அல்லாத பாவங்களை அல்லாஹ் நாடி மன்னித்தால் அது அவன் வாக்குறுதிக்கு மாறு செய்ததாக ஆகாது.
ஆகவே இணைவைப்பு அல்லாத இதர பாவங்களை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்பதே சரியான நிலைப்பாடு.
இதை பல சூழ்நிலைகளில் எழுத்து, பேச்சு மூலமாக மக்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் விளக்கியுள்ளது.
திருக்குர்ஆனில் 6 128 வசனத்திற்கான விளக்கவுரையில் (173) முன்பே பின்வருமாறு அறிஞர் பி.ஜே விளக்கம் அளித்திருந்தார். அந்த விளக்கத்தை இங்கே அறியத்தருகிறோம்.
173. அல்லாஹ் நாடியதைத் தவிர
நிரந்தரமான நரகம் என்று கூறிவிட்டு அல்லாஹ் நாடியதைத் தவிர என்று இங்கே (6:128, 11:107, 11:108) கூறப்பட்டதற்கு பலரும் பலவிதமாக விளக்கம் கூறுகின்றனர்.
அல்லாஹ்வுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது என்ற நம்பிக்கையுடையவர்களுக்கு இதில் குழப்பம் ஏற்படத் தேவையில்லை. நிரந்தரமான நரகம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அவனுக்கு இருப்பதுபோல சிலருக்கு அதில் விதிவிலக்கு அளிக்கவும் அதிகாரம் இருக்கிறது. அவனது விதி விலக்கைப் பெறுவோர் யார் என்று மறுமையில் தான் தெரியும் என்று நம்பினால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.
இந்த விளக்கம் தெரிவிப்பதென்ன?
பெரும்பாவங்கள் புரிந்தவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்ய நாடி மறுமையில் அவர்களை மன்னித்தால் அது அவனது அதிகாரத்திற்குட்பட்ட விஷயமாகும். இதில் யாரும் தலையிட முடியாது. அது அவன் வாக்குறுதிக்கு மாறு செய்துவிட்டதாகவும் ஆகாது.
அதே வேளை அல்லாஹ் யாரை மன்னிப்பான், யாரை தண்டிப்பான் என்று அறிய முடியாததால் நம்மைப் பொறுத்தவரை நமக்குச் சொல்லப்பட்ட சட்டப் பிரகாரம் நடந்து கொள்ள வேண்டும்.
இப்படி தெளிவாக, முஃதஸிலாக்களின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை பிரச்சாரம் செய்யும் ஒரு அமைப்பை நவீன முஃதஸிலாக்கள் என்று விமர்சனம் செய்வது அறிவுக்கு பொருத்தமானதுதானா? என்பதை அறிவுடையோர் சிந்திக்க வேண்டும்.
இத்துடன் முஃதஸிலாக்களின் கொள்கை விளக்கம் முடிந்து விடவில்லை. இன்னும் அவர்களது அடிப்படை கொள்கைகளில் இரண்டு மீதமுள்ளது. அதையும் பார்த்து விடுவோம்.
4 அல்மன்ஜிலது பைனல் மன்ஜிலைதன்
இது பற்றி முன்னரே எழுதியிருந்தோம். இதுவும் ஏறத்தாழ அல்வஃது வல்வயீத் கொள்கைக்கு நெருக்கமானதே.
பெரும்பாவங்கள் செய்தவன் முஃமினும் அல்ல, காஃபிரும் அல்ல. இறை நம்பிக்கை மற்றும் இறை நிராகரிப்பு என இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் பாவியாக இருக்கிறான் என்பது முஃதஸிலாக்களின் நிலைப்பாடு. இதுதான் அல்மன்ஜிலது பைனல் மன்ஜிலதைன் - இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை - என்று முஃதஸிலாக்களிடம் அழைக்கப்படுகிறது. (பெரும்பாவங்கள் செய்தவர்கள் மன்னிப்பு கோராத நிலையில் மரணித்தால் நிரந்தர நரகம் என்பது அவர்களது நிலை.)
இது  ஷரஹ் உசூலுல் கம்ஸா பக்கம் 697 ல் சொல்லப்பட்டுள்ளது.
இதுவே  முஃதஸிலாக்களின் ஆரம்ப, அடிப்படைக் கொள்கையாகும். முஃதஸிலா என்ற பெயர் தோன்ற இதுவே காரணமும் ஆகும் என்பதை எல்லாம் நாம் முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.
இனி இது பற்றி அலசுவோம்.
பெரும்பாவங்கள் செய்தவனை முஃமின் என்றும் சொல்ல முடியாது, காஃபிர் என்றும் சொல்ல முடியாது. மாறாக அவன் பாவி ஆவான் என்று அவர்கள் முடிவெடுத்ததற்கு சில குர்ஆன் வசனங்களைத் தவறாக அணுகியமைதான் காரணமாகும்.
பெரும் பாவம் செய்தவனை காஃபிர் என்று ஏன் சொல்லக் கூடாது என்பதற்கு அவர்கள் முன் வைக்கும் விளக்கம் என்னவென்றால்
குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காஃபிர்களின் சட்டம் பற்றி பல சொல்லப்பட்டுள்ளது.
இறை மறுப்பாளர்களுடன் போரிடுதல், ஜிஸ்யா வரி வசூலித்தல், இறை மறுப்பாளர்களுக்கு மறுமையில் கடும் தண்டனை, திருமண பந்தம் கூடாது, வாரிசுரிமை மறுப்பு போன்று அவற்றில் எதுவும் இவர்களுக்கு பொருந்தாது. அவைகள் இவர்களிடம் நடைமுறைப்படுத்தப்படாது. எனவே பெரும்பாவம் செய்தவர்களை காஃபிர் என்று சொல்லக் கூடாது என்கின்றனர்.
அதே வேளை முஃமின்களுக்கென்று தனித்துவமான சில தகுதிகள் உள்ளன. பெரும்பாவம் செய்ததன் மூலம் அதனை இவர்கள் இழந்து, பழிப்பிற்கும் சாபத்திற்கும் உரியவர்களாகி விட்டனர். ஆகவே இவர்களை முஃமின் என்றும் சொல்ல இயலாது. இவர்கள் இரண்டுக்கும் இடையில் பாவி என்று அழைக்கப்படுவார்கள் என்கிறார்கள்.
(பார்க்க : ஷரஹ் உசூலுல் கம்ஸா பக் 702லிருந்து)
இதிலும் தவ்ஹீத் ஜமாஅத் இல்லை.
இவர்களின் தவறான அணுகுமுறையையும் இந்த நிலைப்பாட்டையும் ஒருசேர தவ்ஹீத் ஜமாஅத் மறுக்கின்றது.
ஒரு முஸ்லிம் பெரும்பாவம் செய்தாலும் அவன் முஃமினாகவே இருக்கிறான்.
பெரும்பாவம் செய்வதால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டான் என்றாகாது. அது அவனது ஈமானில் குறை ஏற்படுத்துமே தவிர மொத்த ஈமானையும் பாதித்து விடாது, பறித்து விடாது. இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும். (முஃதஸிலா அல்லாதவர்களின் - அஹ்லுஸ் சுன்னா - நிலைப்பாடும் இதுதான்)
ஆதலால்தான் இதுபோன்ற தீமைகள் செய்பவர்களை ஒரு முஃமின் இதுபோன்று செய்யமாட்டான் என்ற தொனியில் அத்தீமைகளை புரியும் போது முஃமினாக இல்லை என்று நபிகள் நாயகம் கூறினார்கள். ஒட்டு மொத்தமாக அவர்களது ஈமானை நபிகள் நாயகம் மறுக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரி, விபச்சாரம் புரியும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும்போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 2475
மேலும் பெரும்பாவம் செய்தவன் காஃபிர் அல்ல என்றாலே அவன் முஸ்லிமாகவே இருக்கிறான் என்று பொருளாகும். ஏனெனில் ஈமான், இறைநிராகரிப்பு எனும் இரண்டு நிலைகள் தான் ஒரு மனிதனுக்கு உள்ளன. ஒன்று முஃமினாக இருக்க வேண்டும். அல்லது முஃமின் அல்லாதவனாக இருக்க வேண்டும்.
பெரும்பாவம் செய்தவன் காஃபிர் அல்ல என்று சில வாதங்களை முன்வைத்து அவர்களே ஒப்புக் கொண்டதால் அவன் முஃமினாகவே இருக்கிறான் என்றாகி விடுகிறது.
மேலும் பெரும்பாவம் செய்தவர்கள் அல்லாஹ்வையும் தூதரையும் நம்பி, இயன்ற அளவு அடிபணிந்து, இணைவைப்பும் அவர்களிடம் வெளிப்படாத நிலையில் அவர்களை முஃமின் அல்ல என்று சொல்வது எந்த வகையிலும் சரியில்லாத, ஆதாரமற்ற செயலாகும்.
அனைவரது ஈமானும் ஒரே சீரான சமநிலையில் இருப்பதில்லை. சிலரது  ஈமான் உறுதியானதாகவும் சிலரது ஈமான் பலவீனமானதாகவும் இருக்கும்.
இணை வைப்பு அல்லாத தீமைகளைப் புரிவது ஒருவரது பலவீனமான ஈமானின் வெளிப்பாடே தவிர அவரிடம் ஈமானே இல்லை என்று அதற்கு அர்த்தமல்ல. பெரும்பாவம் செய்திருந்தாலும் அவர் செய்த நன்மைகளுக்கான கூலியை இறைவனிடம் காண்பார்.
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
திருக்குர்ஆன் 99 7,8
எனவே ஒருவனிடம் நம்பிக்கை சார்ந்தோ, செயலிலோ இணை வைப்பு வெளிப்படாதவரை அவன் எந்தப் பாவத்தைச் செய்தாலும் அவனை முஃமின் அல்ல என்று சொல்லக் கூடாது.
இதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு
இத்தகைய நிலைப்பாட்டில் உள்ளவர்களும் இதற்கு மாற்றமாக பெரும்பாவம் செய்தவன் முஃமினும் அல்ல, காஃபிரும் அல்ல என்று சொல்பவர்களும் எப்படி ஒரு கொள்கையைச் சார்ந்தவர்களாக இருக்க முடியும்?
5. அல்அம்ரு பில்மஃரூப் வந்நஹ்யு அனில் முன்கர்
முஃதஸிலாக்களின் இறுதியான, ஐந்தாவது அடிப்படை கொள்கை இது.
நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் இதன் பொருள் என்பது நாம் அறிந்ததே.
இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள் அவ்வளவுதானே என்று பெயரைப் பார்த்து சுலபமாக எண்ணிவிடாதீர்கள்.
பெயருக்குள் ஒரு பெரும் பூகம்பமே ஒளித்திருக்கின்றது.
எத்தகைய சிரமத்தைச் சந்தித்தேனும் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டும் என்று கூறி ஒரு படி மேலே சென்று ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி, போரிட்டு நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் நிலை வந்தால் அதையும் செய்ய வேண்டும் என்கின்றனர். பூகம்பம் என்று கூற இதுவே காரணம்.
சூழ்நிலை நிர்பந்தித்தால் ஆயுதமேந்தியேனும் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கவேண்டும். இதுதான் உண்மையான பிரச்சாரம் என்ற நிலைப்பாடு கொண்டு இத்தகைய பெயரைச் சூட்டியுள்ளனர்.
இது பற்றி அவர்களது நூலில் (ஷரஹ் உசூலுல் கம்ஸா பக் 741)
 நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்பதன் நோக்கம் நன்மை பாழாகக்கூடாது; தீமை நிகழக் கூடாது என்பதாகும். எளிய வழிமுறை மூலம் இது ஏற்பட்டு விட்டால் அதை விட்டு கடும் வழிமுறையின் பால் திரும்புதல் அனுமதியல்ல. இது அறிவு ரீதியாக உறுதி செய்யப்பட்டது. கீழ்க்காணும் வசனத்தில் அல்லாஹ்வும் இதையே உணர்த்துகிறான்.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின்மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும்வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(திருக்குர்ஆன் 49 9)
முதலில் இருவருக்குமிடையில் இணக்கம் ஏற்படுத்துமாறு கூறுகிறான். (அதன் மூலம் நோக்கம் நிறைவேறாவிட்டால்) சண்டையிடுவதன் மூலம் மாத்திரமே நோக்கம் நிறைவேறும் எனில் சண்டையிட்டு இணக்கம் ஏற்படுத்த வேண்டும். (இதுவே நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்பதன் விளக்கமாகும்.)
இப்னு தைமிய்யா அவர்கள் தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
الفتاوى الكبرى - (5 / 85)
وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْيُ عَنْ الْمُنْكَرِ يَتَضَمَّنُ عِنْدَهُمْ جَوَازَ الْخُرُوجِ عَلَى الْأَئِمَّةِ وَقِتَالِهِمْ بِالسَّيْفِ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்பது அவர்களிடம் (முஃதஸிலாக்களிடம்) ஆட்சியாளர்ளுக்கு எதிராக வெளியேறுதல், ஆயுதத்தால் அவர்களுடன் சண்டையிடுதல் ஆகிய கருத்தை உள்ளடக்கியிருக்கின்றன.
அல்ஃபதாவா அல்குப்ரா பா 5 பக் 85
ஆட்சியாளர்களை ஆயுதத்தால் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் நிலை ஏற்பட்டால், ஆயுதமேந்தி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது முஃதஸிலாக்களின் கொள்கையாக உள்ளது என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
இதிலும் தவ்ஹீத் ஜமாஅத் உடன்படவில்லை என்பது நாடறிந்த, உலகறிந்த விஷயமாகும்.
எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் சாத்வீக முறையில் ஜனநாயக வழியில் அறப்போரட்டங்கள் வழியாக வென்றெடுக்க வேண்டுமே தவிர எக்காரணத்தைக் கொண்டும் ஆயுதம் தரித்து போராடுவதில், பிரச்சாரம் செய்வதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு துளியும் உடன்பாடு இல்லை.
இஸ்லாம் அதை ஆதரிக்கவில்லை என்பதே தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்நிலைப்பாட்டிற்கு காரணம்.
சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ஜிஹாத் கோஷம் ஒலித்த போது அதைக் கடும் பிரச்சாரத்தல் எதிர்த்து, ஜிஹாத் குறித்து இஸ்லாத்தின் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைத்து ஜிஹாத் கோஷத்திலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை இந்த ஜமாஅத்துதான் மீட்டெடுத்துள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் ஜிஹாத் செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஜிஹாத் செய்வதற்கு இஸ்லாமிய அரசாங்கம், அமீர் (ஆட்சியாளர்), படைபலம், அடக்குமுறையை எதிக் கொள்ளல் போன்ற எண்ணற்ற நிபந்தனைகள் உள்ளன எனும் இஸ்லாமிய பார்வையை மிகத் தெளிவாக தவ்ஹீத் ஜமாஅத் போதித்துள்ளது.
இன்றும் கூட ஏதேனும் சில தீவிரவாத, வன்முறைவாதச் செயல்கள் நடைபெற்றால் முதல் ஆளாய் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் அமைப்பாக தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது.
எந்த வகையிலும் வன்முறைப் பாதையை விரும்பாத ஓர் அமைப்பாக தவ்ஹீத் ஜமாஅத் விளங்கி வருகிறது எனும் போது முஃதஸிலாக்களின் ஐந்தாம் அடிப்படையிலும் இந்த ஜமாஅத் இல்லை என்பது தெளிவு.
அதே வேளை வன்முறையை ஆதரித்த, ஆதரிக்கும் பல அமைப்புகள் உள்ளன.
எஸ்.டி.பி.ஐ அமைப்பு முன்பொரு காலத்தில் ஜனநாயகமே இணைவைப்பு என்று வெற்று கோஷமிட்டுக் கொண்டுதான் இருந்தனர். குஜராத், ஆப்கானிஸ்தான் என படம் காட்டி, இளைஞர்களின் உணர்வைத் தூண்டி ஜிஹாத் என பசப்பு வார்த்தை கூறித்தான் தங்கள் இயக்கத்துக்கு ஆள் சேர்த்தனர். இவர்களை நோக்கி முஃதஸிலா என்ற விமர்சன அம்பு பாயவில்லை.
இக்வான்களின் தாக்கம் கொண்ட இன்னும் பல அமைப்புகள் ஜிஹாதை ஆதரித்தன. அவைகளை எல்லாம் முஃதஸிலா என்று எந்த ஆய்வாளரும்? விமர்சிக்கவில்லை.
இதே சலபிக் கூட்டம் முஃதசிலா வழிமுறையில் ஆயுதம் தாங்குவதை ஆதரிக்கும் இக்வானுல் முஸ்லிமீன், ஜமாஅதெ இஸ்லாமி போன்ற அமைப்புகளின் மேடைகளில் சலபுகள் ஏறுவதும் சலபுகள் மேடையில் அவர்கள் ஏறுவதும் நடக்கிறது. நம்மை முஃதசிலா எனச் சொல்வோரிடமும் முஃதசிலா கொள்கையின் சாயல் உள்ளது இதிலிருந்து உறுதியாகின்றது.
முடிவுரை
முஃதஸிலாக்களின் அடிப்படையான ஐந்து கொள்கைகளின் விளக்கத்தையும் அவற்றில் எதையும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்லவில்லை என்பதையும் நாம் கண்டோம்.
இந்த ஐந்தையும் சொல்பவர்களை மட்டுமே முஃதஸிலாக்கள் என்று முஃதஸிலாக்களே அங்கீகரிக்கும் போது சில வெத்து வேட்டுகள் வாய்க்கு வந்தபடி முஃதஸிலாக்களுக்கு ஆள் சேர்க்கும் வேலை பார்க்க வேண்டிய அவசியம் என்ன?
உண்மையாகவே முஃதஸிலாக்களின் கொள்கையில் இருந்த அமைப்புகளை எல்லாம் விமர்சிப்பதை விட்டு விட்டு முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கையில் எந்த ஒன்றிலும் இல்லாத தவ்ஹீத் ஜமாஅத்தை முஃதஸிலாக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் என்று இந்த அரைவேக்காடுகள் விமர்சிப்பதன் நோக்கம் என்ன?
அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் முழுக்க முழுக்க குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் கொள்கைகளை வகுத்து, அதையே பிரச்சாரம் செய்து, அதற்காக பாடுபடும் ஓர் அமைப்பாகும்.
இந்த அமைப்பில் வழிகெட்ட கொள்கைகளுக்கு துளியும் இடமில்லை. அதேவேளை நாங்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல, மனிதர்களே. எங்களிடமும் தவறான முடிவுகள் ஏற்படும். வெறுப்பை உமிழாமல் தகுந்த ஆதாரங்களோடு எங்கள் தவறை சுட்டிக்காட்டினால் அதை மனமுவந்து ஏற்று திருத்திக் கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை சத்தியத்தை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம். அசத்தியத்தில் எவ்வளவு பெரிய அறிஞர் இருந்தாலும் அதை சட்டை செய்ய மாட்டோம்.
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள், சூனியம் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தவறு என்பதை தகுந்த ஆதாரத்தோடு நிரூபிக்கும் வேலையைப் பாருங்கள். அன்றி நவீன முஃதஸிலாக்கள், முஃதஸிலாக்களின் சிந்தனை என்றே காலம் கடத்துவீர்களேயானால் இனி மக்களிடம் அது எடுபடாது என்பதைச் சொல்லி வைக்கின்றோம்.