புதன், 3 நவம்பர், 2010

காபிர்களிடம் ஸலாம் சொல்லலாம்

சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்..
திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வாசித்துக்கொண்டிருக்கும் போது எனது கவனத்தில் வந்த இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முஸ்லிம் அல்லாதவர்களிடம் (காபிர்களிடம்) ஸலாம் கூறலாமா என்ற விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

தவ்ஹீத்வாதிகள் கூறலாம் என்ற நிலையிலும் சுன்னத் (?) ஜமாத்தினர் கூடாது என்ற நிலையிலும் இருந்து வருகின்றனர்.

கூறலாம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று அவர்கள் கேட்கும் போது, நாம் , "தெரிந்தவர், தெரியாதவர்களுக்கும் ஸலாம் சொல்லுங்கள்", என்று கூறப்படும் ஹதீஸில், தெரியாதவர் என்பது எந்த மார்க்கத்தை உடையவர் என்று தெரியாதவர் என்பதும் அடங்கும் தானே, ஆகவே, யார் என்று அறியப்படாத காபிர்களுக்கும் ஸலாம் சொல்லலாம் என்பது இதன் மூலம் புலப்படுவதாக பதில் கூறி வருகிறோம்.

அதே போல், காபிர்கள் "அஸ்ஸாமு அலைக்கும்", என்று கூறி, அதற்கு ரசூல் (ஸல்) அவர்கள் "அலைக்கும்" என்று மட்டும் பதில் கூறிய சம்பவத்தை வைத்து, இதன் மூலம், காபிர்களின் ஸலாத்திற்கு பதில் சொல்லலாம் என்பதும், அவர்கள் அர்த்தத்தை திரித்து கூறியதாலேயே ரசூல் (ஸல்) அவர்கள் சலாத்தை முழுமையாக கூறவில்லை என்றும் விளக்கம் கொடுக்கிறோம்.

இவையிரண்டு அல்லாத மற்றொரு ஆதாரம் திருக்குர்ஆன் 19 : 47 இல் இருக்கிறது என்பது என கவனத்தில் வந்ததால் , உங்களில் பலருக்கு முன்னரே தெரிந்திருந்தாலும், இதுவரை கேட்கப்படாத புதிய ஆதாரமாக எனக்கு தோன்றியதால் உடனே இது குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பி இதை எழுதுகிறேன்.

""உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடத்தில் நான் பாவமன்னிப்பு தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்."" (19 : 47)


இந்த வசனம், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இறை மறுப்பாளரான தனது தந்தையிடம் கூறுவதாக அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

இதில், தனது தந்தை காபிர் என்று தெரிந்தும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸலாம் கூறியிருக்கிறார்களே !

வேறு இடங்களில் அல்லாஹ் இப்ராஹீம் நபியை கண்டித்து சில வசனங்களை இறக்குகிறானே, அதில் கூட, அவர்கள் காபிரான தன் தந்தைக்காக பாவ மன்னிப்பு கேட்டதை தான் கண்டிக்கிறானே தவிர, "காபிரான உன் தந்தையிடம் எப்படி நீ ஸலாம் சொல்லலாம்?, என்று அல்லாஹ் கேட்கவே இல்லையே!!

காபிர்களிடம் ஸலாம் சொல்லலாம் என்பதற்கு இது உறுதியான ஒரு ஆதாரமல்லவா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக