புதன், 3 நவம்பர், 2010

அல்லாஹ் சிரித்தான் !!

மனிதனின் பேராசையை சுட்டிக்காட்டும் அல்லாஹ் !!
நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாகச்சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கி கரித்து விடும்.
இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறைவன்) சுபிட்ச மிக்கவன். முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான் என்று கூறுவார்.
அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக. அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன். அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக் கொள்வேன் என்று கூறுவார்.
அதற்கு அல்லாஹ், மனிதா! அதை உனக்கு நான் வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா? என்று கூறுவான்.
அதற்கு அவர், இல்லை, இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் என்று கூறி வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன் அவருக்கு வாய்ப்பளித்து அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு செல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்.
அதன் நீரையும் பருகிக் கொள்வார். பிறகு
அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தை விட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட உடன்)
அவர், என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி, அதன் நிழலை அடைந்து கொள்வேன்.
இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்க மாட்டேன் என்று கூறுவார்.
மனிதா! வேறெதையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டு சென்றால் வேறொன்றை நீ கேட்கக் கூடுமல்லவா? என்பான்.
உடனே அவர், வேறெதையும் கேட்க மாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு வாய்ப்பளித்து அவரை அதன் அருகே கொண்டு செல்வான்.
அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார். பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்யமானதாக இருக்கும்.
உடனே அவர், என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக. நான் அதன் நிழலைப் பெறுவேன். அதன் நீரைப் பருகிக் கொள்வேன் என்று கூறுவார். இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன் என்று கூறுவார்.
அதற்கு இறைவன், மனிதா! வேறெதையும் கேட்க மாட்டேன் என்று (முன்பு) என்னிடம் வாக்குறுதி அளிக்கவில்லையா? என்று கேட்பான்.
ஆம்! என் இறைவா இந்தத் தடவை (மட்டும்). இனி இதன்றி வேறெதையும் கேட்க மாட்டேன் என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து அதன் அருகே அவரைக் கொண்டு செல்வான்.
அவர் அந்த மரத்தை நெருங்கும் போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், என் இறைவா!
சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக! என்று கேட்பார். அதற்கு இறைவன், மனிதா! ஏன் என்னிடம் கேட்பதை நீ நிறுத்திக் கொண்டாய்? (சொர்க்கம் என்ற இந்த) உலகத்தையும் அது போன்று இன்னொன்றையும் நான் உனக்கு வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும் தானே? என்று கேட்பான்.
அதற்கு அவர், என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீ என்னை பரிகாசம் செய்கிறாயா? என்று கேட்பார். (இதை அறிவித்த போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு, நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அப்போது மக்கள், ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இவ்வாறு தான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அதற்கு நபித்தோழர்கள், ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா? என்று அந்த மனிதர் கூறும் போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்). மேலும், நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான் என இறைவன் கூறுவான் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 310

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக