புதன், 10 நவம்பர், 2010

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் - 2

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .

  • ஷரீஅத் – (மார்க்கம் .)
  • தரீக்கத் — ( ஆன்மீகப் பயிற்சி பெறல்)
  • ஹக்கீக்கத் — ( யதார்த்தத்தை அறிதல் )
  • மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )

தரீக்கத் الطريقة

அன்றைய புராதன ஸூபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன ஸூபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விடயம்தான் இந்ததரீக்காவாகும் .இதிலே பல படித்தரங்கள் உள்ளன . சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புபவர் முதலில் ஒரு ஷைக்கிடத்தில் பைஅத்செய்து அவர்சொல்லும் வழியில் நடை பயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர் . அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள் , புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு தன்னைச் சிரமத்துக்குள்ளாக்கி தன்னைத்தானே வருத்தி ‘அதஹ்’ எனும் பைத்தியம் போன்ற சுய நினைவிழந்த நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும் . இதற்கான பயிற்சிகளை அந்த தரீக்காவின் ஷைக்கே முன்னின்று சொல்லிக் கொடுப்பார் .

இது பற்றி கஸ்ஸாலி இவ்வாறு கூறுகின்றார்
‘தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத் (தனித்திருத்தல்) , ஜூஉ (பசித்திருத்தல்), ஸஹர்(விழித்திருத்தல்), ஸூம்து மௌனமாயிருத்தல்) போன்றன அவசியமாகும் . ( இஹ்யா உலூமுத்தீன் 2-243 )

அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக் கொள்ளவும் வேண்டும் . இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக் காலில் நிற்றல் , தலைகீழாக நிற்றல் , முள்ளின் மீது அமர்தல் ,நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற பயிற்சிகளையும் ஷைக்கானவர் மேற்கொள்வார் .
இவர் கூறும் அனைத்தையும் முரீது (சீடர்) எவ்வித மறுப்போ , வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது ஸூபித் துவத்தின் பொது விதி. சுருங்கக் கூறின் அவர்கள் கூறுவது போல் ‘ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷைக்கின் முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும் . அவனுக்கு எந்தவித விருப்பு வெறுப்போ சுய சிந்தனையோ இருக்கக் கூடாது . அவரின் முன் நின்றால் இவனுக்குப் பேச்சே வரக் கூடாது, அவரது அனுமதியின்றி இவன் (தன்மனைவீயுற்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன்ஓதல், திக்ர் , அறிவைத்தேடல் போன்ற எவற்றிலுமோ ஈடுபடக் கூடாது .(அல் அன்வாருல் குத்ஸிய்யா 1- 187)

அபூ யஸீத் அல் புஸ்தாமி எனும் ஸூபி கூறுகின்றார் …
‘ஒரு ஷைக்கானவர் தனது முரீதை ஒரு வேலையின் நிமித்தம் வெளியே அனுப்பினால் அவன் போகும் வழியிலேயே தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் – இந்த முரீதானவன் இப்போது உடனடியாகத் தொழுது விட்டு அதன்பின் அந்த வேலையை முடிக்கலாம் தானே என்று எண்ணிவிட்டால் கூட அவன் ஆழமறியாத ஒருபாதாளக் கிணற்றினுள் வீழ்ந்தவனைப் போலாவான் என்கின்றார் . ( ஸத்ஹாத்துஸ் ஸூபிய்யா ப 343 )

தொடர்ந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கூறுகையில்…
நிச்சயமாக ஷைக்கின் மூலம் ஒருவனுக்கு நன்மையுமுண்;டு , தீமையுமுண்டு. தனது ஷைக்கை நேசிப்பது மறுமையில் ஒருவன் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளக் காரணமாகி விடும் இது அவரில் மூலம் கிடைக்கும் நன்மையாகும் , அவருடன் முறண்பட்டு வாதம் செய்வது அவனின் நாசத்திற்குக் காரணமாகி விடும் . இது அவரினால் ஏற்படும் தீங்கு . நீ என் கரத்தைப் பிடிப்பதன் மூலமாக வெற்றி பெறவில்லையென்றால் உனக்கு ஒரு போதும் வெற்றியே கிடையாது . ( அல்பத்ஹூர் ரப்பானி )


தொடர்ந்து அவர் கூறுகையில்
னது ஷைக் அல்லாத எவரும் எதைக் கூறினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது செவிடனைப் போல நடந்து கொள்ள வேண்டும் . யார் விமர்சித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது . அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அனைவருமே ஒன்று கூடி முயற்சித்தாலும் அவர்களால் இவனை அந்த ஷைக்கை விட்டும் தடுக்க முடியாதளவுக்கு அவனது குருப்பற்று இருக்க வேண்டும். ஷைக்குடைய மகத்துவத்தை மனதில் நிறுத்தி மனக்கண்ணால் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவனுக்குப் பசி, தாகம் எதுவுமே ஏற்படக் கூடாது ( அன்வாருல் குத்ஸிய்யா 1-168 )

சுருக்கமாகச் சொல்வதாயின் ஸூபிகளின் தரீக்கத் எனும் இந்த மாயையின் பின்னணியில் ஒரு பெரிய சதிவலையே பின்னப்பட்டிருக்கின்றது . அதாவது அப்பாவிப் பாமரர்கள் மத்தியில் தம்மை விலாயத் பெற்ற இறை நேசச் செல்வர்கள் , ஷைக்மார்கள் என அறிமுகப்படுத்தி அப்பாமரர்களை இஸ்லாத்தின் பெயரைக் கூறி ஏமாற்றித் தமது சீடர்களாக்கி ஆத்மீகம் எனும் பெயரில் பொய்களையும் புருடாக்களையும், அதிசயமிக்க கற்பனைச் சம்பவங்களையும் கூறி மூளைச்சலவை செய்து தன்னைப் பின் பற்றாவிட்டால் வழி கேட்டில் வீழ்ந்து நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும் எனும் அளவுக்குப் பயமுறுத்தி தாமும் வழி கெட்டு எதுவுமறியா அப்பாவி மக்களையும் வழிகெடுக்கும் ஒரு ஷைத்தானிய ஊடகம் தான் இந்த தரீக்கத் ஆகும்.

- kadayanalluraqsha


தொடரும்.. இன்ஷா அல்லாஹ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக