புதன், 3 நவம்பர், 2010

காயிப் ஜனாசா

இந்தியாவில் மரணமாகி ஜனாஸா தொழுகை தொழவைக்கப்படாத ஒருவருக்கு சவூதியில் காயிப் ஜனாசா தொழுகை தொழலாமா?

பிஜே பதில் :

ஜனாஸாத் தொழுகை என்பது இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் கூட்டாக சேர்ந்து ஆற்றும் கடமையாகும். இறந்தவருக்கு ஒரு முறை ஜனாஸாத் தொழுவதைத் தான் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்துள்ளார்கள். ஒரே நபருக்கு இரண்டு மூன்று என்று பல முறைகள் ஜனாஸாத் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தரவில்லை.

எனவே இறந்துவிட்ட ஒருவருக்காக முஸ்லிம்கள் கூட்டாக சேர்ந்து தொழுகை நடத்திவிட்டால் அத்துடன் அவருக்காக ஜனாஸா தொழுவது முற்றுபெற்று விடுகிறது. மற்றவர்களுக்கு அத்தொழுகையில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சரியே. வாய்ப்பு கிடைக்காதவர்கள் இறந்தவருக்காக பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

காயிப் ஜனாஸாவைப் பொறுத்தவரை அதை நபி (ஸல்) அவர்கள் அபிசீனியா நாட்டு மன்னர் நஜ்ஜாஷி இறந்த போது மட்டும் அவருக்காக தொழுதுள்ளார்கள். மன்னர் நஜ்ஜாஷி உயிருடன் இருந்த காலத்தில் நபி (ஸல்) அவர்களை நம்பிக்கைக்கொண்டு இஸ்லாத்தை ஏற்றவர். அவருடைய நாட்டு குடிமக்கள் கிறிஸ்தவர்கள்.

மன்னர் நஜ்ஜாஷி இறந்தபோது அவருக்காக அபிசீனியா நாட்டில் ஜனாஸா தொழுகை தொழ வைக்கப்படவில்லை. எனவே தான் அவருடைய உடல் தனக்கு கிடைக்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டு அவருக்காக தொழுகை நடத்தினார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், “இன்றைய தினம் அபிசீனியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டார். எனவே வாருங்கள்! அவருக்காக பிரேதத்தொழுகை (ஜனாஸாத்) தொழுங்கள்” என கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுவித்தார்கள். அப்போது நான் இரண்டாவது வரிசையில் நின்றிருந்தேன்.புகாரி (1320)

எனவே இறந்துபோனவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழ வைக்கப்படவில்லை என்றால் இறந்தவரின் உடல் நமக்கு கிடைக்காவிட்டாலும் உலகில் எங்கிருந்தும் காயிப் ஜனாஸா தொழவைக்கலாம். ஏற்கனவே ஜனாஸாத் தொழுகை தொழவைக்கப்பட்டிருந்தால் மீண்டும் அவருக்காக ஜனாஸாத் தொழுவது கூடாது. மாறாக அவருக்காக எவ்வளவு வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

இறந்துபோனவர் நிரந்தர நரகத்திற்குரிய காரியங்களை செய்யாத இறைநம்பிக்கையாளராக இருக்கவேண்டும் என்ற பொதுவான விதியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்

thanks

onlinepj.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக