வெள்ளி, 18 ஏப்ரல், 2014

தெய்வம் நின்று கொல்லும்



அநீதி இழைப்பவர்களால் தொடர்ந்து அதை நமக்கு இழைத்துக் கொண்டே இருக்க முடியாது.
நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்களால் காலத்திற்கும் அதை செய்து கொண்டே இருக்க முடியாது.

அதே சமயம், அவர்கள் செய்வது தவறு எனில், அதை தொடர்ந்து செய்வதற்கு அல்லாஹ் விடுவான். அதற்கான எல்லா வசதிகளையும் அல்லாஹ் செய்து கொடுப்பான்.

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். (6:44)

அவ்வாறு செய்வது தான் சரி என ஷைத்தான் அதை அவர்களுக்கு அழகாகவும் காட்டுவான்.

அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.(6:43)

அநீதியிழைக்கப்படுவோர், அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்து அதில் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.
அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது என்பதால் நாம் அவசரம் காட்டி ஒன்றும் ஆகப்போவதில்லை.
நியாயம் என்பது நூல் பிடித்தாற்போல் அல்லாஹ்வின் அரசாங்கத்தில் அளக்கப்படும் என்கிற நம்பிக்கை கூட இல்லையெனில், முஸ்லிம் என்றும் மறுமையை நம்பக்கூடியவர்கள் என்றும் நம்மை நாமே சொல்லிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்' என்றும் கூறுவீராக!(6:57)

நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்கு மிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அநீதி இழைத்தவர்களை அல்லாஹ் அறிந்தவன்' என்றும் கூறுவீராக! (6:58)

அல்லாஹ்விடத்தில் அவசரம் கிடையாது. அநீதிக்காரர்களை அவன் விட்டு தான் பிடிப்பான்.

அவர்கள் அறியாத விதத்தில் விட்டுப் பிடிப்போம். (7:182)

இந்த அவகாசம் என்பது அவர்கள் திருந்துவதற்கு தரப்படும் அவகாசம்.

அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளேன். எனது திட்டம் உறுதியானது. (7:183))

இறுதியில், ஒரு நாள் வரும் !
அந்த நாளில், இத்தனை காலம் தான் செய்தது தவறு என அவர்களுக்கு போதிக்கப்படும்.
அன்றைக்கு அழிவை தவிர வேறெதுவும் அவர்களை அணுகாது. வேறு சந்தர்ப்பங்களும் தரப்படாது.

அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர். (6:44)

எனவே அநீதி இழைத்த கூட்டத்தி னர் வேரறுக்கப்பட்டனர். அகிலத்தின் இறை வனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.(6:44)

அவர்களே அறிந்திராத நிலையில் அல்லாஹ்வின் தண்டனை எதிர்பாரா வண்ணம் அவர்களை அடையும் !

அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களைத் தண்டித்தோம். (7:95)

மனிதர்கள் அவசரப்படுவார்கள். அல்லாஹ் பொறுமையாளனுக்கெல்லாம் மிகப்பெரிய பொறுமையாளன் !!

வியாழன், 17 ஏப்ரல், 2014

மணி சங்கர் ஐயரை ஏன் ஆதரிக்க வேண்டும்?


எனக்கு தெரிந்து மணி சங்கர் ஐயர் 
வக்ஃபு சொத்துக்களை சூறையாடியதில்லை, 
பள்ளிவாசலில் தீவிரவாதி இருப்பதாக கூறியதில்லை , கட்டப்பஞ்சாயத்து செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அபகரித்ததில்லை, 
சுனாமி பணத்தை தின்றதில்லை,
ஃபித்ரா வசூல் நடத்தி முஸ்லிம்கள் வயிற்றில் அடித்ததில்லை,
தவ்ஹீத் கொள்கையை ஏற்றவன் என்பதற்காக அவனது ஜனாசாவை அடக்க விடாமல் அநியாயம் செய்ததில்லை, 

முக்கியமாக, தான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே ஆரத்தி எடுத்தோ சிலையை வணங்கியோ சமாதிக்கு அஞ்சலி செலுத்தியோ இஸ்லாமிய சமூகத்தை இழிவுப்படுத்தியதில்லை.

காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களால் இஸ்லாத்திற்கு நேரும் இழிவை விடவும் இந்த காங்கிரஸ் வேட்பாளர் மணி சங்கர் ஐயரால் இஸ்லாத்திற்கு அதிக பாதிப்பு ஏதும் இல்லை !

தவ்ஹீத் ஜமாஅத்தின் சாதுரியமான‌ அரசியல் !


தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலை மாற்றம் பற்றி விமர்சிப்பவர்களில் இரு வகையினரை காண முடிகிறது.

நாங்கள் தான் அப்பவே சொன்னோமே, அதிமுக ஆதரவு நிலை தவறு என்று..
என கூறுவோர் ஒரு வகை.

நேற்று வரை அதிமுகவை ஆதரிப்பதை நியாயப்படுத்தி விட்டு இன்று அதில் முரண்பட்டு விட்டார்கள் என்று விமர்சிப்பவர்கள் இன்னொரு வகை.

முதல் வகையினர், அதிமுக ஆதரவு என்கிற ததஜவின் முந்தைய நிலைபாடினை எதிர்ப்பவர்கள், இப்போதைய திமுக ஆதரவு நிலையை ஆதரிப்பவர்கள்.

இரண்டாமவர்கள், தங்களுக்கென எந்த கொள்கையையுமே வைத்துக் கொள்ளாதவர்கள், ததஜவின் நிலைபாட்டினை எதிர்ப்பது மட்டும் தான் இவர்களது ஒரே குறிக்கோள்.

எனினும், மேல் கூறப்பட்ட இரு தரப்பாரும் தங்களது இந்த விமர்சனத்தில் தவறிழைக்கத்தான் செய்கின்றனர்.

அதிமுகவை ஆதரிப்பது தவறு என்று அன்றைக்கே நாங்கள் சொன்னோம் என்று கூறுவோர், அரசியல் நுணுக்கங்களையும், திராவிட கட்சிகளின் போங்குகளையும் சரிவர புரியாதவர்கள் ஆவர்.

அன்றைக்கே சொன்னோமே..அன்றைக்கே சொன்னோமே.. என்று எந்த நாளை இவர்கள் சொல்கிறார்களோ அன்றைக்கு அதிமுகவை ஆதரிப்பது தான் சரியான முடிவாக இருந்தது.
அதை துளியளவும் மறுக்க முடியாது.
அவசியமான நேரத்தில் ஆதரிப்பதும், நமக்கு ஆபத்தான நேரத்தில் எதிர்ப்பதும் தான் ஒரு நியாயமான அரசியல் அமைப்பின் கடமையாக இருக்க வேண்டும்.

சமுதாய கண்ணோட்டத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் ஒரு கட்சிக்கு தான் இத்தகைய விரிந்த பார்வையை கொண்டு, சூழ்நிலைக்கேற்றவாறு நிலைபாட்டினை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

ஒரு கட்சியை ஆதரித்து விட்டோம் என்பதற்காக அவர்கள் தரும் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி கூழை கும்பிடு இடுவோரால் இத்தகைய நிலை மாற்றத்தினை ஒரு போதும் எடுத்திருக்க முடியாது.

அரசியலில் நூறு சதவிகிதம் துல்லியமான நிலைபாட்டினை எவராலும் கொள்ள முடியாது. எனினும், இயன்ற அளவிற்கு சமூக கண்ணோட்டத்தில் அதை அமைத்துக் கொள்ளவும், மார்க்கத்திற்கு விரோதமில்லாத வகையில் அதை கொண்டு செல்லவும் இயலும்.

அந்த வரம்புகளில் நின்று கொண்டு துணிச்சலுடன் அரசியலில் விளையாடும் ஆற்றலை தவ்ஹீத் ஜமாஅத் பெற்றுள்ளது.

அதனால் தான், தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழுவிற்கு இத்தனை வரவேற்பு.
அதனால் தான் இந்த ஜமாஅத்தின் தேர்தல் நிலை மாற்றத்திற்கு பிறகு ஜெயாவின் பிரச்சார வியூகமும் மாற்றம் பெற்றது.
அதனால் தான் கலைஞரும் தன் பங்குக்கு பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தை இன்னும் வீரியப்படுத்தினார்.

மற்றபடி, இரு திராவிட கட்சிகளும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பார்வையில் சமமானவை தான் என்பதில் இந்த நொடியிலும் மாற்றமில்லை.

கைவசம் இருந்த வாய்ப்புகளில் அன்றைக்கு அதிமுகவை ஆதரித்தது தான் சரி.
இன்றைக்கு திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தது தான் சரி.

இயன்ற அளவிற்கு ஆதரவோ எதிர்ப்போ காட்டும் ஒப்பீட்டு வழிமுறை தான் அரசியல் என்பது.
குர் ஆன், ஹதீஸ் போல் துல்லியமானதல்ல !

இதை புரிந்து கொண்டு சிந்திப்பவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் சாதுரியமான‌ அரசியல் மதிப்பீட்டினை மெச்சவே செய்வர் !!

வாதத்திற்கு பின்னுள்ள வாழ்க்கை


தான் நபியென வாதிட்ட பிறகுள்ள‌ வாழ்க்கை சமூகத்தில் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகிறது என்கிற அளவுகோல் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் என அடையாளம் காட்டிக் கொள்ள உதவாது.

இதை ஒரு அளவுகோலாக காதியானி மதத்தவர் சொல்வது வேடிக்கையான ஒன்று.

ஒருவர் நபியென தன்னை வாதிடுவாரானால், அதை காரண காரியங்களுடனும், பொய், புரட்டுகள் இல்லாத அப்பழுக்கற்ற சித்தாந்தங்களை முன்வைப்பதின் மூலமும், மெய் சிலிர்க்கும் முன்னறிவிப்புகள் மூலமாகவும் தான் அதை நிலை நாட்டிட முடியுமே அல்லாமல்,
நான் நபியென என்னை அறிவிப்பு செய்த பிறகு, பார்த்தீர்களா, என்னை செருப்பால் அடிக்கிறார்கள், அப்படியானால் நான் நபி தான் என்று சொல்வது அறிவற்ற வாதமாகும்.

இதற்கு பொருந்தாத இறை வசனங்களையும் எடுத்துக் காட்டி சமூகத்தை ஏமாற்றி, இத்தகைய அர்த்தமற்ற வாதங்களை பரப்பி வருகின்றனர் இந்த மதத்தவர்கள்.

ஒருவர் தன்னை சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட வைக்க, எதையாவது புதிதாக செய்ய வேண்டும், அல்லது சொல்ல வேண்டும்.
அதுவரை அவரை எவருமே சீண்டவில்லையென்றால், அவர் பரபரப்பாக எதையும் சொல்லவில்லை என்பது அதற்கான காரணம்.
பரபரப்பையும் சமூகத்தில் அதிர்ச்சியையும் உருவாக்கவல்ல காரியங்களை எப்போது ஒருவர் செய்கிறாரோ அந்த நொடி முதல் தான் அவரை உலகம் உற்று நோக்கும்.

அவர் கூறிய கூற்றினை அந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமேயானால் அவரை போற்றிப் புகழும், அதை மறுக்குமேயானால், எட்டி உதைக்கும்.

அதுவரை சாதாரண பெண்ணாக இருந்த தஸ்லீமா என்பவள் என்றைக்கு பெண்களுக்கும் கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டும் என்று எழுதி சமூகத்தில் பரபரப்பை உருவாக்கினாளோ அன்றைக்கு தான் புகழும் அடைந்தாள்.

அன்றைய நாள் தொட்டு இன்று வரை சமூகத்தின் இழிபிறவியாகவே அவள் பார்க்கப்படுகிறாள்.

வாதத்திற்கு பின்னுள்ள வாழ்க்கை என்றால் இப்படி தான் ஏச்சும் பேச்சும் வரும், ஆகவே தஸ்லீமா சொன்னது சரியான கூற்று தான் என்று எந்த அறிவுள்ளவரும் கூற மாட்டார்.

இன்னும் சொல்லப்போனால், எனக்கு பிறகு முப்பது போலி நபிமார்கள் தோன்றுவார்கள் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கல் முன்னறிவிப்பும் செய்து விட்டு சென்றிருக்கும் நிலையில், அந்த முப்பது நபரும், தான் நபி தான் என்று தன்னை பிரகடனப்படுத்திய நாள் முதல் சமூகத்தால் செருப்படி வாங்கத்தான் செய்வர்.

நபியென்று கூறி விட்ட பிறகு செருப்படி வாங்கியவர், ஆகவே இவர் தன்னை நபியென்று கூறுவது சரி தான் என்று ஒரு வாதம் வைத்தால், இவர்கள் கருத்துப்படி அந்த முப்பது பேருமே நபி தான் ! காரணம், அந்த முப்பது பேருமே சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்களாக தான் இருப்பார்கள்.

இது போன்ற வாதங்களில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை இந்த முரண்பாடே நமக்கு தெளிவாக விளக்கி விடுகிறது !!

முரண்படும் சலஃபிகள்


சஹாபாக்களில் எவருமே எந்த தவறையும் செய்ததே கிடையாது என்றோ, குர்ஆன், நபி மொழி பற்றி சரியான புரிதல் இல்லாமல் ஒருவர் கூட இருக்கவில்லை என்றோ யாருக்காவது உத்திரவாதம் வழங்க முடியுமா ?
என்றால் நிச்சயம் அது முடியாது.

அவர்களும் மனிதர்கள் தான், அவர்களும் தவறு செய்வார்கள், தவறாக புரிவார்கள். இதற்கு பல சான்றுகளும் ஹதீஸ்களில் உள்ளன என்பது ஒரு புறமிருக்க, இதையெல்லாம் ஒப்புக் கொண்டே சஹாபாக்களின் சொல்லும் மார்க்கம் தான் என்று முரண்பட்டுக் கொள்ளும் கூட்டத்தார் இருப்பது தான் ஆச்சர்யம்.

சஹாபி ஒருவர் ஒன்றை தவறாக புரிந்துள்ளார் என்றால் அது தவறான புரிதல் என்று எதை அளவுகோலாக கொண்டு நாம் சொல்கிறோம்?

குர் ஆன், ஹதீஸுக்கு மாற்றம் என்பது தான் அளவுகோல்.

சஹாபி ஒருவர் ஒன்றை சரியாக புரிந்துள்ளார் என்றால் அது சரியான புரிதல் என்று எதை அளவுகோலாக கொண்டு நாம் சொல்கிறோம்?

குர் ஆன், ஹதீஸுக்கு அது ஒத்துப் போகிறது என்பது தான் அளவுகோல்.

ஆக, சஹாபாக்களின் கூற்றும் மார்க்க ஆதாரம் என்று கூறுவோரும் கூட அறிந்தோ அறியாமலோ குர் ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதை சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் தான் உள்ளனர் !

அவர்கள் இதை வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார்கள்,
நாம் அதை தெளிவாக, நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம் !
அது தான் வேறுபாடு !!

நாடு விளங்கிடும் !


நாட்டில் ஊழலை பெருக்கெடுத்து ஓட செய்து பாமரர்களையெல்லாம் ஓட்டாண்டிகளாக ஆக்கிய அரசியல்வாதிகளுக்கு கட் அவுட்டும் மலர் மாலைகளும் இடுவார்களாம்..

தேசிய ஒருமைப்பாடு என்கிற பெயரை சொல்லி மனிதனை மனிதனோடு மோத விட்டு, அதனால் விளையும் சாதி மதக் கலவரங்களில் குளிர் காயும் தலைவர்களுக்கு பின்னால் சென்று விசிலடித்து வாழ்க கோஷமிடுவார்களாம்..

சினிமா என்ற‌ பெயரில் விபச்சாரத்தை பட்டவர்த்தனமான தொழிலாக ஆக்கி பொது மக்களின் மூளையை மழுங்கடிக்க செய்து, அதன் மூலம் வருவாய் ஈட்டும் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பார்களாம்..

தனி மனித ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கும் போலி ஆன்மீகவாதிகளை எதிர்ப்பதை விட்டு விட்டு அவர்கள் பின்னால் இன்றைக்கும் சீடர்களாய் வலம் வருவார்களாம்..

சமூகத்தை சிறிது சிறிதாக சுரண்டி அழிக்கும் இது போன்ற காளான்களுக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க வக்கற்ற இந்த சமூகம்,

கிரிக்கெட் போட்டியில் 21 பந்துகளில் 11 ரன் அடித்து விட்டார் என்பதற்காக யுவ்ராஜ் சிங் வீட்டில் கல்லெறிகிறார்களாம்..

நாடு விளங்கிடும் !

முகனூல் பதிவுகள் : இலங்கைக்கு எதிரான அவதூறு ?


கடந்த முறை நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை இந்தியா வீழ்த்தியது. அந்த கோபத்தில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது.

இதற்கு சான்றுகள் ஏதும் காட்டப்பட்டதா என்று தெரியவில்லை. 

தனி ஈழத்தை வைத்து நடைபெறும் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாகவே இதையும் பார்க்க முடிகிறது.

நேற்று இந்தியா இலங்கையிடம் தோல்வியடைந்ததை. 
அடுத்து, இதே போன்ற செய்தியை இனி அவர்களும் பரப்ப நாம் இடம் கொடுத்தாக வேண்டும் !

அப்படியொரு நிலை ஏற்பட்டால் வெகுண்டெழும் இந்திய ஊடகங்கள், இலங்கை தொடர்பாக செய்திகள் பரப்பப்பட்ட போதும் இதே நடு நிலை போக்கினை கடைபிடித்தார்கள் எனில், அறிந்தவர்கள் அதை சான்றுகளுடன் காட்டுங்கள்..

கொள்கை விற்ற காசு !







முஸ்லிம் கட்சிகளை நாமே விமர்சிப்பதால் அது பாஜகவிற்கு சாதகமாய் முடியும் என்பது பொதுவாய் அனைவரும் வைக்கும் வாதம் தான்.

இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான கொள்கை கொண்டவர்கள் இஸ்லாமிய பெயரை தாங்கியிருக்கிறார்கள் என்கிற காரணத்தை சொல்லி அவர்களை கண்டிக்காமல் ஒற்றுமை பேசுவோம் என்றால், மன்னிக்கவும், அத்தகைய, கொள்கையை விற்ற காசில் கிடைக்கும் ஒற்றுமை இந்த சமூகத்திற்கு தேவையில்லை.

மார்க்கத்திற்கு விரோதமாக செயல்படும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை நாம் விமர்சிப்பதால் முஸ்லிம்களின் ஒற்றுமை குலையும் என சிலர் தப்புக்கணக்கு இடுகின்றனர். அவ்வாறல்ல !
இவர்களை இனம் காணும் போது, அவர்களும் முஸ்லிம்கள் தானே என்று தவறாக நம்பும் ஒரு சில முஸ்லிம்களும் அவர்கள் பக்கத்திலிருந்து மீட்டெடுக்கப்படுகின்றனர்,
அவர்களது முகத்திரையை கிழிப்பதிலும் அவர்களை சரியான முறையில் அடையாளம் கண்டு கொள்வதிலும் ஒன்றுபடுகின்றனர் என்பதே உண்மை.

இந்த உண்மை, அத்தகைய பெயர்தாங்கிகளுக்கு கசப்பானது என்பதால் தான் ஒற்றுமை குலைகிறது என கூப்பாடு இடுகின்றனர்.

ஒரு வாதத்திற்கு, இதனால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒற்றுமை குலைவு ஏற்பட்டு, பாஜக அதை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது என்றாலும் கூட பரவாயில்லை, நாம் கண்டிக்கத் தான் வேண்டும்.

இஸ்லாத்தை குழி தோண்டி புதைக்கிற காரியத்தை முஸ்லிம் பெயராலேயே செய்யும் ஒரு அமைப்பை நாள் விமர்சிப்பதன் விளைவாக நாளை மோடி பிரதமராக ஆனால் கூட பரவாயில்லை , நாம் விமர்சிக்க தான் வேண்டும்.

அவன் ஆட்சிக்கு வந்து முஸ்லிம்களை கறுவறுப்பான் என்றாலும், தவறை தவறு என சொல்வதை எந்த நிலையிலும் நிறுத்த முடியாது.

அதிலும், அத்தகைய மார்க்க வரம்பு மீறல்களை செய்ய அவர்களுக்கு இஸ்லாமிய போர்வை தேவைப்படும் என்றால் அதை கண்டிப்பது என்பது நம் உயிரை விட முக்கியம்.
உயிரை விட முக்கியமானது தான் நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும். ஏனெனில், இதை சொல்வது குர்ஆன்.

குர்ஆனின் கட்டளையை பேணி நடப்பதை விடவும் மோடி பிரதமராவதை தடுப்பது ஒரு முஸ்லிமுக்கு பெரிதல்ல !!

இயக்க விருப்பு வெறுப்புகளின்றியும், மறுமையை உள்ளத்தில் நிறுத்தியும் மேற்கூறியவற்றை சிந்திப்போர் இதை சரி காணத்தான் செய்வர்.

அரசியலுக்குள் காலூன்றி விட்டால் கொள்கையை காற்றில் பறக்க விட்டாக வேண்டும் என்பதற்கு விதிவிலக்குகளே இல்லாமல் அனைவரும் சான்றாய் நிற்பதை பார்க்க முடிகிறது.

மாற்று மதத்தவர் இவ்வாறு செய்கிற போது பலகீனப்படாத இந்த சமூகம், நம் சமூகத்தின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வோரே கொள்கையை விற்று விடும் போது நிச்சயம் பலகீனப்படும்.

அதை கண்டு கொள்ளக் கூடாது, அதை விடவும் ஒற்றுமை தான் முக்கியம் என்று 2014 இலும் பேசுவோம் என்றால், 1980 களில் தவ்ஹீதை பிரச்சாரம் செய்து தமிழக அளவில் நாம் ஏற்படுத்திய புரட்சிக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று தான் ஆகும்.

மார்க்கத்தை விட்டு விடாமல் உன்னால் மோடியை எதிர்க்க முடியும் என்றால் எதிர்க்க நாமும் துணை நிற்போம்.
மார்க்க வரம்பை மீறித்தான் எதிர்க்க முடியும் என்றால், அப்படி என்னால் எதிர்க்க முடியாது, மோடி தாராளமாக பிரதமாரகட்டும் ! இது தான் மறுமையை இலக்காக கொண்ட ஒரு முஸ்லிம் சொல்ல வேண்டியது !!

அடிப்படையில் கை வைப்பதை ஏகத்துவவாதி ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை மீண்டுமொரு முறை பதிய வைக்கிறோம் !!

நாம் எந்த அளவிற்கு இந்த கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்பதை நம்மை விமர்சித்து கருத்து மட்டும் இடுபவர்கள் சற்று சிந்தியுங்கள்.
இவர்களை கண்டித்து இங்கே பதிவுகள் இடுவதால் மறுமை இலாபம் மட்டுமே கிட்டுமே தவிர வேறு எந்த சுய இலாபமும் நமக்கில்லை !!

மயிலாடுதுறையில் TNTJ தேர்தல் பிரச்சாரம் செய்வது சரியா?



இஸ்லாத்தை அழித்தொழிக்க எண்ணுபவர்கள் என்கிற காரணத்தை மையபடுத்தி பாஜகவை எதிர்க்க வேண்டும் என்கிற கொள்கையை எல்லா முஸ்லிம்களுமே கொண்டிருக்கிறோம்.
இஸ்லாத்தை அழித்தொழிக்கும் எந்த சக்தியானாலும் அது களையெடுக்கப்பட வேண்டும், அது பாஜகவாக இருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி. அத்தகைய நிலைபாடு தான் நடுநிலையானது.

ஆனால், இந்த கொள்கையில் நாம் உறுதியானவர்களாக இருப்பவர்களா? என்றால், இல்லை என்பதே நமது நிலைபாடுகள் தெளிவுப்படுத்தும் உண்மை !
இந்த கொள்கையில் உறுதியானவர்களாக நாம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த கொள்கையையே இழிவுப்படுத்தும் வகையில் தான் நாம் நிலைபாட்டினை வகுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு வேதனை !

இஸ்லாத்தை அழித்தொழிக்கும் எந்த சக்தியானாலும் அது களையெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, ஹிந்து பெயரை கொண்ட ஒரு கட்சியென்றால் அதை களையெடுப்போம், அதுவே முஸ்லிம் பெயர் கொண்ட கட்சி என்றால் அதற்கு முட்டுக் கொடுப்போம் என்றால் இது எப்படி?
ராமசாமி என்றால் நாம் வெகுண்டெழுவோம், அப்துல் காதர் என்றால் அவருக்கு சாமரம் வீசுவோம் என்றால் இதென்ன நியாயம்??

பாஜகவை நாம் எதிர்ப்பதற்கு என்ன நியாயங்களும் காரணங்களும் இருக்கின்றனவோ அதை விடவும் அதிகமான அல்லது குறைந்தது அதே அளவிலான காரணங்கள் முஸ்லிம் பெயர் தாங்கி கட்சிகளான முஸ்லிம் லீக், தமுமுக, எஸ்டிபிஐ போன்றோரை எதிர்ப்பதற்கும் இருக்கின்றது.

பாஜக ஒரு இன அழிப்பை நிகழ்த்தினால் அதனால் உயிர் பலி ஏற்படும், ஆம் மிகப்பெரிய இழப்பு தான், தாங்க இயலாத கொடுமை தான்; மறுப்பதற்கில்லை. ஆனால், பாஜகவினால் உயிர்களை தான் கொல்ல இயலுமே தவிர, இந்த சத்தியக் கொள்கையை கொல்ல முடியுமா?
இஸ்லாம் பல்கிப் பெருகுவதை இது போன்ற இன அழிப்பின் மூலம் அவனால் செய்து விட முடியுமா? ஒரு போதும் முடியாது !
அது ஒரு ஷைத்தானிய கட்சி என பிறந்த குழந்தை முதல் கிழவன் வரை அனைவருமே பாஜக குறித்து அறிந்து வைத்திருக்கிறோம். ஆகவே, அத்தகைய எந்த மாற்றமும் அவன் மூலம் இந்த சமூகத்திற்கு நிகழாது.

அதே சமயம், ஜவாஹிருல்லாஹ் என்றும் ஹைதர் அலி என்றும் பாகவி என்றும் பெயர் சொல்லிக் கொண்டு கட்சி நடத்துபவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தவர் முன்னிலையில் தங்களை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாவலர்களாய் அல்லவா காட்சி தருகின்றனர்?

இறந்து போனவர்களை கடவுளாக வணங்கும் சமுதாயத்தின் மத்தியில் அரசியல் செய்பவர்கள் என்றால், தங்களை மார்க்க வரம்புகளை விட்டும் தடம் புரளாதவர்களாய் காட்சி தந்தால் மட்டும் தான், ஏற்கனவே வழி தவறி நிற்கும் முஸ்லிம் சமூகமானது மேலும் வழிதவறாமல் காக்கப்படும்.

ஓஹ், நமது தலைவர்களாக வரக்கூடியவர்கள் இந்த அளவிற்கு மார்க்க வரம்பை பேணக்கூடியவர்களா? என்று ஒரு பாமரன் எண்ணும் போது, தமது செயல்பாடுகளையும் அவன் மறு பரிசீலனை செய்வான்.
சமுதாய தலைவர்களாக வலம் வர விரும்புகிறவர்கள் இத்தகைய நல்விளைவை தான் சமுதாயத்தில் விதைக்க வேண்டும்.
அல்லாமல், ஏற்கனவே கல்லையும் கப்ரையும் வணங்கக்கூடியவர் முன்னிலையில் ஆரத்தி எடுத்தும் கோவிலுக்கு பிரசாதம் அனுப்பியும் நாம் வழிகாட்டக்கூடாது.

அத்தகைய தவறான வழியில் இருக்கும் ஒரு சமூகம், அதையே மார்க்கமாக நம்பி பின்பற்றுவதற்கு அதிக நேரமாகாது !

பாஜக உயிரை கொல்லும், தமுமுக, எஸ்டிபிஐ போன்றோர் உள்ளங்களை கொல்பவர்கள் !

பாஜகவை எதிர்ப்பது 100% நியாயமெனில் இந்த பெயர்தாங்கிகளை எதிர்ப்பதும் 100% நியாயமானதே !

நானும் முஸ்லிம், எனக்கு ஓட்டு போடுங்கள் என்று இத்தகைய பெயர்தாங்கிகள் போட்டியிடும் தொகுதியில் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் பொருட்டு தவ்ஹீத் ஜமாஅத் விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதை விமர்சிக்கும் தகுதி எந்த
நாவுக்கும் கிடையாது,

காரணம், அந்த நாவுகள் எவையும் உள்ளங்களை கொல்லக்கூடிய காரியங்களை கண்டிக்க துப்பு கெட்டவை !!

வேலிக்கு ஓணான் சாட்சியா?



ஆரத்தி தட்டை வைத்துக் கொண்டு நின்ற கிழவியிடம் ஆசி பெறுவதற்காக அவசர அவசரமாக ஓடோடி சென்ற மானமுள்ள கட்சியின் வேட்பாளரை தடுத்து நிறுத்தி காதர் மைதீனின் ஆறாவது கடமை குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க சொன்னது நமது தவறு தான் !

அட போயா ஆறாவது கடமைன்னு அவர் பேசிட்டாராம், அதை நான் கண்டிக்கணுமாம்..

நான் பாரு, கிழவியவே கடவுளாக்கியிருக்கிறேன்,

இப்போ காதர் மைதீனுக்கு நான் கண்டனம் தெரிவிக்கணுமா அல்லது அவர் எனக்கு கண்டனம் தெரிவிக்கணுமானு இப்போ நீங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டீங்க பாத்தீங்களா..

இது தாண்டா எனக்கு வேணும்..

இந்த காலத்துல வந்துகிட்டு கொள்கையாவது கத்திரிக்காயாவது.. வெள்ளந்திப் பசங்க இந்த தவ்ஹீத் ஜமாஅத் காரனுவோ..
உலகம் தெரியாம இருக்குறாங்க..!

பள்ளிவாசலில் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது தவறா?


கடையந‌ல்லூர் தவ்ஹீத் பள்ளியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதை விமர்சனம் செய்வோருக்கு இந்த மறுப்பு விளக்கம்
-----------------------------------------------------------------------------------------

அறியாமையில் இருப்பது பலகீனம் என்றால், அதிலிருந்து கொண்டே பிறரை கேலி செய்வது மிகப்பெரிய மடமையாகும்.
பள்ளிவாசல் என்பது தொழுகைக்கும் திக்ருக்கும் மட்டும் உரியது என்று கருதுவோர் குர் ஆன், ஹதீஸ் குறித்த போதிய ஞானமில்லாதவர்களாவர்.

நபி (சல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசல் என்பது தொழுகைக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை ;
மாறாக அது தான் ஆட்சியின் தலைமைப்பீடம்.
அது தான் கைதிகளை சிறைப்பிடிக்கும் இடமாகவும் இருந்தது (பார்க்க புஹாரி 4372)
நபி முன்னிலையில் பள்ளி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன (பார்க்க புஹாரி 988)
தொழுகைக்கு பிறகு, அறியாமைக்கால செயல்கள் குறித்த பழைய கதைகளையெல்லாம் சஹாபாக்கள் பள்ளிவாசலில் அமர்ந்தவாறே பேசியிருக்கிறார்கள், அதை நபி (சல்) அவர்கள் கேட்டு ரசித்திருக்கிறார்கள் (பார்க்க முஸ்லிம் 4641)
நபி (சல்) அவர்கள் காலத்தில் சஹாபாக்கள் பள்ளிவாசலுக்குள்ளேயே தூங்கவும் செய்திருக்கின்றனர் (பார்க்க புஹாரி 440)

இதையெல்லாம் செய்யலாம் என்றால் நம்மை ஆட்சி செய்யப்போவது யார் என்பது குறித்து முடிவு செய்ய மஷூரா நடத்துவதும் கூடும்.

சில விதிவிலக்குகள் தவிர, பொது காரியங்களாக பள்ளிவாசலுக்கு வெளியே எவையெல்லாம் நமக்கு ஹலாலோ அவை அனைத்தும் பள்ளிவாசலுக்கு உள்ளேயும் ஹலால் தான் !

இந்த பொது விதியில் பெண்களை (மனைவியை) தீண்டுவது விதிவிலக்கு பெற்றது, ஆகவே பள்ளிவாசலுக்குள் அது கூடாது (பார்க்க 4:43)

இந்த பொது விதியில் மாதவிடாய் பெண்கள், குளிப்பு கடமையானோர் விஷயத்தில் விதிவிலக்கு உள்ளது, அவர்கள் உள்ளே நுழையக் கூடாது (பார்க்க 4:43)

தனிப்பட்ட வியாபாரங்கள் விதிவிலக்கு பெற்றது ஆகவே அதை பள்ளிவாசலுக்குள் செய்வது கூடாது (பார்க்க திர்மிதி 296)

(எனினும் பைத்துல்மால் போன்ற‌ பொது நலம் சார்ந்த வியாபாரமெனில் அதை செய்ய அனுமதியும் உள்ளது ‍ பார்க்க புஹாரி 2097)

காஃபிர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம் என்பதற்கு, இணை வைப்பாளராக இருந்த‌ ஒருவர் (பின்னாளில் இஸ்லாத்தை தழுவிய சுமாமா என்கிற சஹாபி) சிறைப்பிடிக்கப்பட்டு பள்ளிவாசலின் தூணில் கட்டிவைக்கப்பட்டதாய் வரக்கூடிய
ஹதீஸ் சான்றாகும் (பார்க்க புஹாரி 4372)

பள்ளிவாசலில் பயான் செய்ததை கேட்டு உள்ளம் உருகியதாக கூறிய ஜுபைர் (ரலி) அவர்கள் (அப்போது இஸ்லாத்தை தழுவாத நிலையில் இருந்தார் !) அறிவிக்கும் புஹாரி 4854 ஹதீஸும் இதற்கு சான்றாய் இருக்கிறது !

ஆக, காஃபிர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம், பள்ளிவாசலுக்குள் நமது அவசியத் தேவைக்காக உலக நடப்புகளை பேசவும் செய்யலாம்.

இறுதியாய் இவர்கள் கேட்பது, ஹிஜாபிடாத மாற்று மத பெண்கள் முன்னிலையில் அமரலாமா? என்பதாகும்.

இதுவும் பள்ளிவாசலுக்கு வெளியே என்ன சட்டமோ அது தான் பள்ளிவாசலுக்கு உள்ளேயும், என்று நாம் சொல்கிறோம்.

காஃபிர்களோடு கலந்து வாழக்கூடிய சமூகத்தில், அவர்களே பெரும்பான்மையாய் இருக்கும் ஒரு சமூகத்தில், அவர்களை சந்திக்க வேண்டிய, அவர்களோடு பேச வேண்டிய அவசியத் தேவைகள் நமக்கு வரத்தான் செய்யும், அவை நிர்பந்தமான நிலை தான்.

பள்ளிவாசலுக்கு வெளியே, இது போன்று மாற்று மத பெண்களோடு பேச வேண்டிய, அவர்களை நேருக்கு நேராக காண வேண்டிய சந்தர்ப்பம் ஒருவருக்கு வந்தால் இப்போது நம்மை விமர்சிப்பவர்கள் அவருக்கு என்ன ஃபத்வா வழங்குவார்களோ அதை தான் பள்ளிவாசலுக்கு உள்ளே காண்பதற்கும் வழங்க வேண்டும்.

பள்ளிவாசலுக்குள் இவ்வாறு அமரக்கூடாது என்பவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியேயும் அவ்வாறு அமரக்கூடாது என்று சொல்வார்களா?
மாற்று மத பெண்களை பார்க்கவே கூடாது என்று சொல்வார்களா?

அப்படி சொல்வதாக இருந்தால் அது போன்ற வேடிக்கையான ஃபத்வா வேறு இருக்க முடியாது என்பதையும், நம்மை எதிர்ப்பதற்காக எத்தகைய முரண்பாடான நிலைபாட்டினையும் இவர்கள் கொள்வார்கள் என்பதையும் அப்போது நாம் நிரூபிப்போம், இன்ஷா அல்லாஹ் !

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கேள்வி கேட்பதற்கே பிறந்தவர்கள்


மார்க்கத்திற்கான முழு முதற்சொந்தக்காரன் படைத்த இறைவன் தானே தவிர, தனி நபர்களோ ஒரு குழுவோ அதற்கு உரிமை கொண்டாடுபவர்களல்ல !

மார்க்கத்தை ஆய்வு செய்ய வேண்டிய கடமையும், பிறருக்கு எத்தி வைக்கும் உரிமையும் நம் ஒவ்வொருவரின் மீதும் விதியானது தான் என்பதுடன், பிறரிடம் மார்க்க சட்ட திட்டங்கள் குறித்து கேள்வியெழுப்புவதும் ஒவ்வொருவரின் உரிமை சார்ந்தது தான்.

ஆனால், மார்க்கம் பேசுகிறோம் என்கிற பெயரில் இன்று கேள்வி கேட்பதற்காகவே சிலர் திரிவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கென எந்த கொள்கையும் கிடையாது என்பதால் தவ்ஹீத் கொள்கையை உயிர் மூச்சாய் கொண்டவர்களிடம் எதிர் கேள்வி கேட்பது ஒன்றையே தங்கள் வாழ்நாள் கொள்கையாக வகுத்து வைத்திருக்கின்றனர்.

எப்படி நடுநிலைப் பேர்வழிகள் என ஒரு கும்பல் அலைகிறதோ அது போன்று இது கேள்விக்கு பிறந்த கும்பல்.
கேள்வி கேட்பது மட்டுமே இவர்களுக்கு தெரிந்த ஒன்று !

இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்று அடுக்கடுக்காக பல சான்றுகளை முன் வைத்து நாம் விள்க்குகிறோம் என்று வைப்போம். கேள்விக்கு பிறந்த கூட்டம் என்ன செய்யும் தெரியுமா?
அதெப்படி? நீ என்ன முட்டாளா?? அன்றைக்கு இரண்டையும் இரண்டையும் கூட்டினால் ஐந்து என்று இன்னார் எழுதியுள்ளாரே? என்பர்.

அப்படியானால் உனது நிலை என்ன? இரண்டையும் இரண்டையும் கூட்டினால் ஐந்து வரும் என்பது தானா? என்று நாம் திருப்பிக் கேட்டால் பதில் வராது.
அல்லது, இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு தான் வரும் என்பதற்கு நாம் அடுக்கடுக்காக தந்த ஆதாரங்களுக்கு உன்னிடம் மறுப்பு உள்ளதா? என்று கேட்டால் அதற்கும் பதில் வராது.

அதாவது, அவரிடம் நாம் எதையும் கேட்கக் கூடாது, அவர் தான் நம்மிடம் கேட்பார்.
அவரிடம் நாம் கேள்வி கேட்டால், கேள்வி பல்வேறு வழிகளில் பிரியும், ஒன்றில் இல்லையென்றாலும் இன்னொன்றில் வசமாக சிக்குவார், தமது முரண்பாடு அம்பலத்திற்கு வரும், அதற்கு அஞ்சக்கூடியவர் தம்மை சுற்றி இடக்கூடிய‌ பாதுகாப்பு வேலி தான் கேள்வி மட்டும் கேட்பது !

முஹ்ராஜ் இரவை கொண்டாடுவது கூடாது என நாம் சான்றுகளை முன் வைத்து விளக்கினால், அந்த சான்றுகளுக்கு பதில் சொல்வதை விட்டு, அல்லது குறைந்த பட்சம், மிஹ்ராஜ் இரவை கொண்டாடலாம், அது தவறில்லை என்று கூட வெளிப்படையாக சொல்வதை விட்டு விட்டு,
இதை இதற்கு முன்பு எந்த அறிஞராவது சொல்லியிருக்கிறாரா? என்று கேட்பர்.
இது தான் கேள்விக்கு பிறந்தவர் என்பது.

மிஹ்ராஜ் இரவை கொண்டாடலாம் என்பது தான் எனது நிலைபாடு என்று வெளிப்படையாக அறிவித்து விட்டாரேயானால், அதற்கு நாம் குர் ஆன், ஹதீஸில் ஆதாரம் கேட்போம், விழி பிதுங்க வேண்டி வரும்,
நபி இப்படி சொன்னார்களா என்று கேட்போம், உளர வேண்டி வரும்,
நல்ல விஷய்த்தையெல்லாம் செய்யலாம் என்றால் லுஹரை ஆறு ரக்காஅத் தொழலாமா? என்று கேட்போம்,
ஹிஹி என பல்லிளிக்க வேண்டி வரும்,

இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், தமது நிலை என்ன என்பதை சொல்லக்கூடாது, மாறாக இதை இதற்கு முன் எவராவது சொல்லியிருக்கிறாரா என்று நம்மை நோக்கி ஒரு கேள்வி கேட்க வேண்டும்,
பிறகு, நபியை புகழ்வது உங்களுக்கு பிடிக்காதா? என்று கேட்க வேண்டும்.
உங்கள் நூலில் உங்கள் அறிஞர் அப்படி எழுதியிருக்கிறாரே, இப்படி எழுதியிருக்கிறாரே? என்று சம்மந்தமில்லாத கேள்விகளையாக கேட்க வேண்டும்.

இப்படி கேள்விகளை மட்டுமாக கேட்டுக் கொண்டிருந்தேயிருந்தால், தமது அறியாமை வெளியுலகிற்கு தெரியாது, தமது நிலைபாடு எத்தகைய கூமுட்டைத்தனமானது என்பது பிறர் மத்தியில் சந்தி சிரிக்காது,
நானும் கேள்வி கேட்டேன் என்று கூமுட்டை சபையில் தம்மையே மெச்சிக் கொள்ளலாம் !

இது தான் இந்த பிறவிகளின் உன்னத கொள்கை !

மார்க்கத்தில் கேள்வி கேட்பதற்கு மட்டுமாக எவரையும் அல்லாஹ் படைத்து அனுப்பவில்லை. அது போல் ஆதாரங்களை தேடி தேடி பதில் சொல்ல வேண்டியவர் என்று தனியாக எவரையும் அல்லாஹ் படைக்கவில்லை.

கேள்வி கேட்கும் உரிமை இருப்பவனுக்கு பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது.
பதில் சொல்லும் கடமையை பெற்றவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையும் இருக்கிறது.

மார்க்கத்தில் இது எனது நிலை, இது உனது நிலை. எனது நிலைக்கு இது ஆதாரம், உனது நிலைக்கு நீ ஆதாரம் காட்டு? என்று பரஸ்பரம் உரையாடுகிற, அனைவருக்கும் பொதுவான சித்தாந்தம் தான் இஸ்லாம் !

இதை கேள்விக்கு பிறந்த கூட்டம் புரிந்தால் அவர்களுக்கு நல்லது !!

சமூகவலைதளங்கள் உருவாக்கும் மாற்றம்


அரசியல் பேசுவதோடும், விவாதிப்பதோடும் நிறுத்தாமல், வாக்களிக்க சலிப்படைந்து விடுமுறை தினத்தை பொழுதுபோக்காய் கழிக்கலாம் என்று எண்ணுகிறவர்களை வாக்குசாவடிக்கு செல்ல வைப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

தேசிய அளவில், ஊழலுக்கும் மதவாதத்திற்கும் எதிராய் மிகப்பெரிய மாற்றம் நிகழ வேண்டுமானால், அதிகமான விழுக்காடு வாக்குகள் பதிவாக வேண்டும் என்பது மிக முக்கியம். 

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி நாட்டின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாய் ஊடகமும் சமூகவலைதளங்களும் உருவாகியுள்ளன‌ !

Internet & Mobile Association of India (IAMAI) நிகழ்த்தியிருக்கும் ஆய்வின் படி நாட்டில் மொத்தமாய் உள்ள 80 கோடி வாக்காளர்களில் 17 கோடிக்கும் அதிகமானவர்கள் இணையதளம் பயன்படுத்துபவர்கள் எனவும் அதில் கிட்டத்தட்ட 29% பேர் (அதாவது 4.8 கோடி) கல்லூரிக்கு செல்லும் இளைஞர்கள் எனவும் தெரிகிறது.

இவர்களையடுத்து 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 26%, வேலைக்கு செல்லும் பெண்கள் 10% இணையத்தை, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் என்றும் கூறும் அந்த ஆய்வின் படி பார்த்தால், ஆட்சியை தீர்மானிப்பதில் பெரும் பங்கினை இளைஞர்கள் வகிக்கின்றனர் என்பதை அறியலாம்.

இன்ஷா அல்லாஹ், நாம் நினைக்கும் மாற்றத்தை சமூக வலைதளங்கள் மூலமே நம்மால் உருவாக்க முடியும் !!

கலைஞரை ஆதரிப்பதில் நியாயமில்லை


மோடி எனது நண்பர் என்று அரசியல் காரணங்களுக்காக சொன்ன, 
சுய இலாபத்திற்காக கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்த, 
வைத்ததோடு ஐந்து வருடங்கள் அதே கூட்டணியில் நீடித்த,
குஜராத் கலவரத்திற்கு எதிரான கண்டனத்தீர்மானத்தில் கூட நரேந்திர மோடிக்கு ஆதரவளித்த‌..

கருணாநிதியை ஆதரிப்பது தவறில்லையென்றால்

இதே போன்ற எண்ணம் கொண்டிருந்த போதிலும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை காரணமாக வைத்து அதிமுகவை ஆதரிப்பது மட்டும் ஏன் தவறு?

அதிமுகவை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிப்பதாக அறிவித்த போது, ஏதோ கொலைக் குற்றம் செய்ததை போன்று ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் குதித்தவர்கள், திமுக ஆதரவு நிலையை எடுக்கும் கட்சிகள் விஷயத்தில் இதே போன்று குதித்தார்களா?

ஜெயலலிதாவும் மோடிக்கு நெருக்கமானவர் தான் என்பது மறுப்பதற்கில்லை என்ற போதிலும், அந்த நெருக்கத்திற்கும் இந்த நெருக்கத்திற்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.

என்ன தான் இருவரும் ஆதரிப்பார்கள் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் கலைஞர் தமது சுய கெளரவத்தையும் விட்டுக் கொடுத்துக் கூட ஆதரிப்பார்.
ஜெயலலிதாவுக்கு தமது சுய கெளரவம் , மோடிக்கு ஆதரவளிப்பதை விட பெரிது என்பதற்கு கடந்த காலங்களில் பாஜகவோடு இவர்கள் கூட்டணி வைத்திருந்த வரலாறுகள் நமக்கு தெளிவுப்படுத்துகின்றன.

தம்மை உதாசீனப்படுத்தினால் 13 மாதங்களில் பாஜக கூட்டணியை கூட கவிழ்க்க தயங்காதவர் ஜெயலலிதா.
தம்மை தரை மட்டத்திற்கு அவமானப்படுத்தினாலும், கட்சியின் சுய இலாபம் என்று வரும் போது கூட்டணியை விட்டு விலகாமல் பாஜகவை காப்பவர் கலைஞர்.
அதற்காக, குஜராத் கலவர விஷயத்தில் கூட மோடியை விட்டுக் கொடுக்காமல் தர்மம் (?) காத்தவர் அவர் !
இந்த நிலை தான் கடந்த 2004 முதல் இவர் தொடர்ந்து வந்த காங்கிரஸுடனான கூட்டணி விஷயத்திலும் பளிச்சிட்டது !

அதிமுகவை ஆதரித்ததற்காக‌ கொய்யோ முய்யோ என்று கத்தியவர்களை பார்த்து நாம் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான்.

திமுகவுடன் கூட்டணி என்று அறிவிப்பு செய்யும் பெயர்தாங்கிகளை கண்டிக்காமல் உங்கள் நடுநிலை வேஷம் நாறிப் போயிருப்பது ஏன்?

கலைஞரின் சுபாவம் தான் உங்களுக்குமா?

ஆறாவது கலிமாவுக்கு மணிமண்டபமே பரிசு !


ஈமான் என்றால் என்ன, இஸ்லாம் என்றால் என்ன? மறுமை சிந்தனையென்பது ஒரு முஸ்லிமுக்கு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் அரசியல் எனும் சாக்கடைக்குள் காலூன்றுவது வரை தான் ஒருவனுக்கு இன்றியமையாது கருத்தில் கொள்ளத்தக்கவை.

எப்போது, ஓட்டுப் பொறுக்கும் அரசியல் சாக்கடையில் மூழ்கி விட்டானோ, அடுத்த நொடியே அவன் கொண்ட கொள்கை காற்றில் பறக்கும், 
இறையச்சம் நட்டாற்றில் விடப்பட்டும் ; 
அவனது சுயமரியாதை சந்தி சிரிக்கும் !

பேரும், புகழும் பதவி சுகமும் மட்டுமே அவன் கண் முன் தெரியும்
என்பதற்கு தக்க உதாரணம் தான் முஸ்லிம் லீக் தலைவரின் சமீபத்திய அறிவிப்பு.

கருணாநிதிக்கு வாக்களிப்பது ஈமானின் ஒரு பகுதி என்று நினைத்திருந்த ஒரு காலம், இன்றைக்கு அத்தகைய சமூகத்தை ஏகத்துவ எழுச்சியானது மீட்டெடுத்திருக்கிறது என்றெல்லாம் தவ்ஹீத் அறிஞர்கள், திமுகவிற்கு வாக்களிப்பதை தங்கள் கடமையாகவே கருதி வந்த காலத்தினை பற்றி வேடிக்கையாக‌ பயான் செய்திருக்கின்றனர்.

ஆனால், அது வேடிக்கையாக சொல்லப்பட்டவையல்ல, நிஜமாகவே அது தான் சில தலைவர்களின் எண்ணமாக இன்றைக்கும் இருக்கிறது என்றால்
இந்த சமுதாயத்தை இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

ஆதீனத்திடம் கை கூப்பி வணக்கம் தெரிவித்த புகைப்படம் பரவிய போது இவ‌ருக்கு வக்காலத்து வாங்கியவர்களெல்லாம் இப்போது எங்கே?
இப்போதும் இவரோடு கூட்டணியில் கைகோர்த்து சல்லாபமிடும் சக முஸ்லிம் பெயர்தாங்கிகள் எங்கே?
இவருக்கான கண்டனம் எங்கே?

அது சரி, இந்த கொள்கையையும், இதை விடவும் கூடுதலாக, கலைஞருக்கு அடிமை சேவனமே செய்து விட்ட சக இயக்கங்கள் இந்த அறிவிப்பை மட்டும் எப்படி கண்டிப்பார்கள்?

அரசியலில் கூத்தடிப்பதெல்லாம் மய்யித்தாவது வரை தான். மய்யித்தான பிறகு,
இவர்கள் பெயரில் மணி மண்டபம் வேண்டுமானால் திமுக ஆட்சி எழுப்பலாம்.
ஆனால் நாளை மறுமையில் இது போன்ற அறிவிப்புகள் தான் உங்களுக்காக சாட்சி சொல்லுமேயொழிய இந்த மணிமண்டபங்கள் அல்ல என்பதை நினைவூட்டுகிறோம் !!

பாஜகவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகள்


பாஜக வெற்றி பெறக்கூடாது என்கிற அக்கறை உண்மையிலேயே இருக்குமானால், ஒட்டு மொத்த எதிர்ப்பு வாக்குகளும் ஒரு அணிக்கு சென்று சேர வேண்டும்.
இந்த சாதாரண உண்மையை புரிந்தவர்கள் எவரானாலும் அவர்கள் எதிர்க்க வேண்டியது தனித்து நிற்கிறோம் என்கிற பெயரில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்கும் சுயேட்சைப்பிரிவுகளை தானே?

பல கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடத்தி, எதுவுமே சரிபட்டு வராத நிலையில், நாடெங்கிலும் நாற்பது தொகுதிகளில் தனித்து நிற்கிறோம் என்று அறிவிக்கிறது ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி கட்சி.

பலமான இரண்டோ மூன்றோ கட்சிகள் போட்டியிடுகின்ற ஒரு தொகுதியில் குறைந்த அளவிற்கு செல்வாக்கு உடைய ஒரு கட்சி தனித்து நிற்கிறது என்றால் அதன் பொருள் என்ன? அதன் விளைவு என்ன?

பாஜக பெரிய கட்சி, சரி. அதை தோற்கடிக்க அதே போன்ற பெரிய கட்சிக்கு தானே வாக்களிக்க வேண்டும்? ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஓரணியில் திரண்டால் தானே பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தில் சிறிதேனும் அர்த்தமிருக்கும்?

இராமனாதபுரத்தில் நான்கு முனை போட்டி. முஸ்லிம்கள் செல்வாக்கு அதிகமுள்ள அந்த தொகுதியில், முஸ்லிம் மானம் காக்கப்போகிறோம் என்று சொல்பவர்களது நிலை என்னவாக இருக்க வேண்டும்? எந்த பக்கம் நின்றால் பாஜகவை தோற்கடிக்க முடியுமோ அந்த பக்கம் நிற்க வேண்டும். அதற்கு ஒரே வழி, பெரும்பான்மை முஸ்லிம்கள் எதன் பக்கம் நிற்கிறார்களோ அதற்கே ஆதரவளிப்பது தான்.

அல்லாமல், தனித்து நின்று 2000 ஓட்டுகளை தனியே பிரித்தெடுப்பதால் யாருக்கு என்ன இலாபம் என்று கூட சிந்திக்க தெரியாத அறியாமை சமூகமல்ல நம் சமூகம் !

2000 ஓட்டுக்காக, தனித்து களமிறங்கி வேறு வேறு கட்சி முஸ்லிம் வேட்பாளர்களையெல்லாம் இவர்கள் தோற்கடிப்பார்களாம், முஸ்லிம் லீக் பெரும்பான்மையாக உள்ள கேரளா போன்ற மாநிலங்களிலெல்லாம் அவர்களை கூட எதிர்த்து களமிறங்குவார்களாம்,
ஆனால், ஒரு வழ்வாதார கோரிக்கையை முன்வைத்து அதிமுகவை ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆதரிக்கையில் அதை விமர்சனம் செய்வார்களாம்.

அதிமுகவை ஆதரிப்பதால் பாஜகவிற்கு நன்மையா அல்லது இது போன்று தனித்து போட்டியிடுவதால் பாஜகவிற்கு நன்மையா? என்பதை மட்டும் வைத்து தனியாக ஆய்வு செய்தால் கூட தனித்து போட்டியிடுவதால் ஏற்படும் சமுதாய பலகீனமே மிகப்பெரிய பாதிப்பு என்பதை உணரலாம்.

தனித்து நிற்கிறோம் என்கிற ஒற்றை முழக்க‌மொன்றே போதும், இவர்கள் பாஜக எதிர்ப்பு போர்வையில் செயல்படும் சுயந‌லவாதிகள் என்பதை அறிந்து கொள்ள !

இதை புரிந்து செயல்படும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் வளர்ந்து விட்டதால் இது போன்ற செல்லாக்காசுகளின் அரசியல் நாடகங்கள் விரைவில் சந்தி சிரிக்கும் என்பதில் ஐயமில்லை !!

கவலையும் பரிசு தான் !


கவலை எப்படி மனிதனுக்கு பரிசாக அமையும்?

ஆம், அதுவும் உண்மை தான் என விஞ்ஞானம் சொல்கிறது,தெரிந்தோ தெரியாமலோ மனிதனின் ஆழ் மனமும் இதை அங்கீகரிக்கிறது !

சோதனை ஒன்றை மனிதன் சந்திக்கையில், அதை சகித்துக் கொள்ள இயலாமல் திண்டாடுகிறான். சில சோதனைகள் உடனே நீக்கப்படும், சில சோதனைகள் பல காலங்கள் நீளும்.
பல காலம் ஒரு சோதனையை உள்ளத்தில் பூட்டி வைக்க மனிதன் சிரமப்படுவான். 

அத்தகைய சூழலில் அவனுக்கு அருமருந்தாய் அமைவது அவன் எதிர்பாராத, அதை விட பெரியதான மற்றொரு சோதனை தான் !

அவன் எதிர்பாராத மற்றொரு பெரிய சோதனை ஒன்றை அவன் சந்திக்க நேரும் போது, அது நாள் வரை தம்மால் தாங்க இயலாததாக அவன் கருதி வந்த முந்தைய சோதனையானது அவனுக்கு மிக இலேசானதாக மாறி விடும் ;
அதை எதிர்கொள்ளும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அவனுக்கு கிடைத்து விடும் !

மனோதத்துவ ரீதியிலான இந்த ஆய்வை 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் அறிவித்து விட்டது !

உஹது போரின்போது நபி (சல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று பரப்பப்பட்ட புரளியானது, போரில் அடைந்த தோல்வியின் மனரீதியான பாதிப்பை சஹாபாக்களுக்கு குறைக்க உதவியது என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.

உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான்
(3:153)

கவலையும் தோல்வியும் கூட சில நேரங்களில் பரிசு தான் !
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ..
அதை தருவது நம்மைப் படைத்த இறைவன் என்று பொறுமை காக்க வேண்டும், அவ்வளவு தான் !!

யூகம் எப்படி உறுதி செய்யப்பட்டதாக ஆகும்?


இரு வாரங்களுக்கும் மேலாக தேடப்பட்ட மலேசிய விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், அது ஆஸ்திரேலயா அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்துவிட்டது (விழுந்திருக்கக் கூடும் என்று இல்லை !) என மலேசியப் பிரதமர் உறுதிப்பட அறிவித்திருப்பது வியப்பை அளிக்கிறது !

இதற்கு என்ன ஆதாரம்? என்று சீன அரசாங்கம் கேட்டதற்கு, வானிலை மோசமாக இருப்பதால் எங்களால் தொடர்ந்து தேட முடியவில்லை, தேடல் பணி நிறுத்தப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

அப்படியானால் விமானம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தானே அர்த்தம் ?

இந்தியப்பெருங்கடல் பக்கம் விழுந்திருக்கக்கூடும் என்கிற யூகத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பென்றால் இதை முன்னரே அறிவித்திருக்கலாமே?

கடலில் விழுந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று அனைவருமே நம்பிய நேரத்தில், இல்லை இல்லை அது கடத்தப்பட்டிருக்கலாம் என்று சொன்ன அரசு, இப்போது யூகத்திற்கு கூட இடமளிக்காமல் உறுதிப்பட அறிவிப்பு செய்திருப்பது நிஜமாகவே வியப்பானது தான் !

இறைவன் நாடினாலே தவிர,பயணிகளின் உடல்களை காணாத வரை அவர்கள் உறவினர்களுக்கு ஆறுதல் கிடைக்காது என்பது மட்டும் உறுதி !!

மறுமை பாக்கியமே ஒரே இலக்கு !


தங்கள் தலைவனின் கட் அவுட் ஏன் வைக்கப்படவில்லை என்று கேட்டு சண்டையிடும் கட்சியினர் மத்தியில் ..

தன் இயக்க தலைவரது புகைப்படமொன்று அரசியல் பேனரில் இடப்பட்டதை கண்டித்து அந்த பேனரையே அப்புறப்படுத்தும் கொள்கையுறுதி கொண்ட அமைப்பு ஒன்றில் உறுப்பினராக இருப்பதற்கு நானும் சரி, அதிலுள்ள ஒவ்வொரு நபரும் சரி, பெருமிதம் கொள்கிறோம்.

ஒரு பக்கம் முஸ்லிம் கட்சி என்று சொல்லிக் கொண்டே மலர் மாலைகள் , பொன்னாடைகள், கட் அவுட் விளம்பரங்கள், ஆடல், பாடல், கூத்து கும்மாளங்கள், அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மாபாதக செயல்கள்..

மறு பக்கம், இயன்ற வரை தூய்மையின் சிகரமாய் வாழ்ந்து வரும் இயக்கம்..

இதை விட தெளிவான வேறுபாடு வேறென்ன வேண்டும் ?

இப்படியொரு இயக்கமா? இப்படியொரு கொள்கையுறுதியா?
பொன்னாடைகளும், மலர் மாலைகளும் வேண்டாம் என்போர் இதை கொண்டு என்ன நாடுகின்றனர் ?
என்ன நாடி விட முடியும், மறுமை பாக்கியத்தை தவிர..?
சுப்ஹானல்லாஹ் !!

இறுதி வரை இதே கொள்கையுறுதியுடன் செயல்பட இந்த இயக்கத்திற்கு அல்லாஹ் அருள் புரிவானாக ! ..
மற்றவர்களுக்கும் இதையே ஒரு பாடமாகவும் ஆக்குவானாக!!

நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (29:69)

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (3:104)

இறுதி நபி : ஹதீஸ் ஆதாரங்கள்


இறுதி நபி : ஹதீஸ் ஆதாரம் 1

ஹாத்தம் நபி குறித்து வரக்கூடிய புஹாரி 3535 ஹதீஸை திரித்தும் மறித்தும் கூறும் அஹமதியா வழிகேடர்கள், இந்த ஹதீஸில் வரக்கூடிய ஹாத்தமு என்பதற்கு "சிறப்புக்குரிய" என்று மொழிப்பெயர்க்கிறார்கள்.

ஹதீஸை முழுமையாக படிக்காத, அரபி தெரியாத பாமரர்களை ஏமாற்றும் நோக்கில் இது போன்று மார்க்கத்தில் விளையாடினாலும் ஹதீஸ் உண்மையில் சொல்வது என்ன என்பது விபரமுள்ளவர்கள் அறிகிறார்கள்.

ஹாத்தமு நபி என்றால் இவர்கள் சொல்வது போன்று சிறப்பு வாய்ந்த அர்த்தம் கொடுக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஹாத்தமு நபி என்பதற்கு இறுதி நபி என்கிற அர்த்தமும் இருக்கத்தான் செய்கிறது.

எந்த அர்த்தம், இந்த context உடன் ஒத்துப்போகுமோ, அந்த அர்த்தத்தை தான் கொடுக்க வேண்டும்!

context என்ன என்பதை அறிந்தால், இவர்கள் ஹதீஸை எந்த அளவிற்கு திரிக்கிறார்கள், தங்கள் வாதத்தை நிறுவுவதற்காக எப்படி எல்லாம் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாகும்.

அந்த ஹதீஸில் என்ன வருகிறது தெரியுமா?

இந்த உலகில் தோன்றிய எல்லா நபிமார்கள் குறித்தும், என்னை குறித்தும் ஒரு உதாரணத்துடன் விளக்கவா? என்று கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஒரு உதாரணம் சொல்கிறார்கள் - அது தான் இந்த புஹாரி 3535 ஹதீஸ்.

என்ன உதாரணம்?

அழகான ஒரு கட்டிடம் இருக்கிறது.. பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது. ஆனால், ஒரே ஒரு இடத்தில் ஒரு செங்கல் வைப்பதற்கு மட்டும் சிறு இடம் ஓட்டையாக உள்ளது. அந்த வகையில், அந்த கட்டிடம் முழுமையடந்ததாக எவரும் கருத மாட்டார்கள்.

இப்போது, அந்த அழகான கட்டிடம் தான் எனக்கு முன் சென்ற எல்லா நபிமார்களும்.
ஒரு செங்கல் வைக்க இடமிருக்கிறது என்று சொன்னேனே, அந்த ஒரு செங்கல் தான் நான்!!!!!!!

சுபுஹானல்லாஹ் ! எவ்வளவு தெளிவான வார்த்தைகள்!!!! இதிலேயே நமக்கு புரிகிறது, முஹம்மது நபி தான் இறுதி நபி என்பது.

ஆனால், இதை சொல்லி விட்டு, அதன் தொடர்ச்சியாக அவர்களே சொல்கிறார்கள் (அதே புஹாரி 3535 ஹதீஸ்), நான் தான் ஹாத்தம் நபி!!!!!!

இந்த இடத்தில் சிறப்பான நபி என்று அர்த்தம் வருமா இறுதி நபி என்று வருமா? என்பதை எந்த சிறு பிள்ளையிடம் கேட்டாலும் சொல்லும் !


இறுதி நபி : ஹதீஸ் ஆதாரம் 2
-----------------------------------------------------------------------------------

முஸ்லிம் 812 இல் பதிவான ஹதீஸ்..

பொருள் நிறைந்த பொன் மொழிகள் வழங்கப்பட்டிருக்கிறேன்.

என்னை கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.
யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
நிலமெல்லாம் தொழுகை இடமாகவும், தூய்மை படுத்தும் பொருளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. 
மனித குலம் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
நபிமார்களின் வருகை என்னால் நிறைவு படுத்தப்படுகிறது.

அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (812)

ஆறு விஷயங்களின் காரணமாக நான் மற்ற நபிமார்களில் இருந்து தனித்து விளங்குகிறேன் என்று சொன்ன நபிகள் பெருமானார்,
பல காரணங்களை சொல்லி விட்டு, இறுதியில்,தான்ன் முத்திரையிடப்பட்ட நபி என்கிறார்கள்.

இந்த முத்திரைக்கு கூட, context புரியாததால், சிலர் ""சிறப்பு"" என்று அர்த்தம் கொடுப்பார்கள்.
அது, எந்த அளவிற்கு தவறான அர்த்தம் என்பதை இந்த ஹதீஸை படிக்கும் எவருக்கும் புரிய முடியும்.

இந்த ஹதீஸின் துவக்கமே, இன்னின்ன விஷயங்களினால் அல்லாஹ் என்னை சிறப்பித்திருக்கிறான் என்பது தான்.

அல்லாஹ் தன்னை சிறப்பித்திருக்கிறான் அதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்று ஆறு காரணங்களை சொல்கிற போது,
அல்லாஹ் என்னை சிறப்பாக்கி உள்ளான், அதுவே எனது சிறப்பு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
அது பொருளற்றதாகி விடுகிறது.

அல்லாஹ் என்ன இறுதி நபியாக்கி விட்டான், அதுவே எனது சிறப்பு என்று கூறுவது மிகவும் பொருத்தமாகி விடுகின்றது.

தவிர, ஐந்தாம் சிறப்புடன் இதை ஒப்பிட்டு பார்த்தாலும் , இறுதி நபித்துவத்தை தான் சிறப்பு என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாக விளங்கும் !





இறுதி நபி : குர்ஆனிய‌ ஆதாரம்


திருக்குர் ஆன் 7 :158 - 
மனித குலம் முழுவதற்கும் நான் தான் தூதர் என்று முஹம்மது நபியை அல்லாஹ் சொல்ல சொல்கிறான்.

திருக்குர் ஆன் 25 :1 - 
அகிலத்தில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கை செய்வதற்காகவே இந்த குர் ஆன் தரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வேதமும் அந்தந்த சமுதாய மக்களுக்கு மட்டும் வழி காட்ட இறக்கியிருந்த அல்லாஹ், குர் ஆனை மட்டும், அகிலத்தார் அனைவருக்காகவும் தந்துள்ளதாக சொல்கிறான்.
ஆகவே, மிர்சா குலாம் என்பவனும் பொய்யன், அவன் வேதம் என்று கொண்டு வந்ததும் பொய் !!

திருக்குர் ஆன் 34 :28 -
மனித குலம் அனைவருக்கும் எச்சரிக்கை செய்வதற்காக முஹம்மத் நபியை அல்லாஹ் அனுப்பியதாக சொல்கிறான்.
அவர்களுக்கு முன் சென்ற எந்த நபியையும் மனித குலம் முழுமைக்காகவும் அல்லாஹ் அனுப்பவில்லை!
முஹம்மது நபிக்கு முன் சென்ற எல்லா நபிமார்களையும் ஒவ்வொரு சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பினான். முஹம்மது நபியை குறித்து சொல்லும் போது மட்டும், அகிலத்தார் அனைவருக்காகவும் அனுப்பினேன் , என்கிறான்.

மனித குலம் குலம் முழ்மைக்கும் நபியாக ஒருவரை அனுப்பி விட்ட பிறகு, இன்னொரு நபியை அல்லாஹ்வே அனுப்பினால், தனது வார்த்தைக்கு அல்லாஹ்வே முரண்பட்டு விட்டான் என்கிற பயங்கரமான கருத்து வந்து விடும்.

அத்தகைய பயங்கரத்தை சர்வ சாதாரணமாக செய்கிறார்கள் இந்த மிர்சா குலாம் அபிமானிகள்!

இத்தா சட்டங்கள்



கணவனை இழந்த பெண்கள் அல்லது விவாகரத்து மூலம் கணவனை பிரிந்த பெண்கள் உரிய கால அவகாசம் முடியாதவரை வேறொரு திருமணத்தை செய்வது கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.

இதன் மூலம், முதல் கணவரின் மூலம் அந்த பெண் கருவுற்றிருப்பளேயானால் அது வெளி உலகிற்கு தெளிவாக்கப்பட்டு, இதன் மூலம் அவள் மறுமணம் செய்கிற பொது தேவையற்ற சந்தேகங்களும் குழப்பங்களும் தவிர்க்கப்படும். 

கணவன் இறந்து விட்டால் :
-------------------------------------
நான்கு மாதம் பத்து நாட்கள் மறு மணம் செய்யக்கூடாது. - ஆதாரம் குர் ஆன் 2:234

பருவ வயதை அடையாத பெண்ணாகவோ அல்லது மாதவிடாய் நின்று விட்ட பெண்ணாகவோ இருந்தால் :
----------------------------------------------------------
மூன்று மாதம் மறு மணம் செய்யக்கூடாது. - ஆதாரம் குர் ஆன் 65:4

விவாகரத்து பெற்றுக்கொண்ட பெண்ணாக இருந்தால் :
---------------------------------------------------------------------------
மூன்று மாதம் மறு மணம் செய்யக்கூடாது. - ஆதாரம் குர் ஆன் 2:228

கணவனை இழக்கின்ற போது கர்பிணியாக இருந்தால் :
---------------------------------------------------------------------------
சுமந்திருக்கிற குழந்தையை பெறுகிற வரை மறு மணம் செய்யக்கூடாது. - ஆதாரம் குர் ஆன் 65:4

திருமணம் முடிந்து, இருவருக்கிடையே எந்த தாம்பத்திய உறவும் நடக்காத நிலையில் கணவன் பிரிந்து விட்டால் :
------------------------------------------------------------------
இத்தா காலம் இல்லை , எப்போது வேண்டுமானாலும் மறுமணம் செய்து கொள்ளலாம் . ஆதாரம் குர் ஆன் 33:49

இத்தா காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை :
-------------------------------------------------------------------

திருமணம் பற்றிய பேச்சுக்களை நேரடியான முறையில் சம்மந்தப்பட்ட பெண்ணும் பேசக்கூடாது வேறு நபர்களும் அந்த பெண்ணிடம் அது பற்றி நேரடியான முறையில் பேசிக்கொள்ள கூடாது.

ஆதாரம் குர் ஆன் 2:235

நேரடியான முறையில் திருமணம் பற்றி பேசக்கூடாது என்றும், வாக்குறுதி கொடுக்க கூடாது என்றும் மேற்கண்ட வசனம் கட்டளையிட்டாலும் மறைமுகமாகவும் சாடை மாடையாகவும் திருமண விருப்பங்களை தெரிவிப்பது அனுமதிக்கப்பட்டது தான் என்றும் அதே வசனம் சொல்கிறது !

இத்தா காலங்களில் சுர்மா இடுவதோ மணப்போருட்களை உபயோகிப்பதோ சாயமிடப்பட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. நெய்வதற்கு முன் நூலிலேயே சாயமிடப்பட்ட துணிகளை தவிர .
புஹாரி 313

சாயமிடப்பட்ட துணிகளை உபயோகிக்க கூடாது என்பதால் வெள்ளை துணியை தான் அணிய வேண்டும் என்று புரிய கூடாது. மேற்கண்ட ஹதீஸிலேயே, நெய்வதற்கு முன் சாயமிடப்பட்ட துணியை தவிர, என்று சொல்லப்பட்டதில் இருந்து, இன்றைக்கு நாம் அணிகிற வண்ண ஆடைகளை இந்த ஹதீஸ் தடுக்கவில்லை என்று தெரிகிறது.
ஆடைகள் தயாராக்கப்பட்டு பயன்படுத்த துவங்கி பிறகு மீண்டும் சாயமிட்டு வண்ணங்களை மெருகேற்றும் வழக்கம் இருக்கிறது. அது போன்ற காரியங்கள் நபி (ஸல் அவர்கள் காலத்திலும் இருந்திருக்கிறது அதை தான் இத்தா கால பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் சொல்கிறதே தவிர, வண்ண ஆடைகளை நெய்து அணிந்து கொள்ளும் இன்றைய வழக்கத்தை இது தடுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

மேற்கண்ட கட்டுபாடுகளை தவிர, இத்தா கால பெண்கள் மீது வேறெந்த கட்டுப்பாடுகளையும் இஸ்லாம் விதிக்கவில்லை !

இவை அல்லாத எந்த நிபந்தனையை யார் சொன்னாலும் அதை நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை !!

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்


கை கூப்பி வணக்கம் தெரிவிப்பது இணை வைக்கும் மாபாதக செயலல்லவா? என்று கேட்டால், ஒன்று ஆமாம் அது தவறு தான் என்று ஒப்புக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்,
அல்லது, குறைந்த பட்சம் மெளனமானவாவது இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அதையும் நியாயப்படுத்த கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம். 
அதிலென்ன தவறு? ஒளு செய்து, தக்பீர் சொல்லி, ருகூஹ், சஜதா செய்வது தான் வணக்கம், இவர் அந்த நிய்யத்திலா கை கூப்புகிறார்?

என்று, வணக்கம் தெரிவிப்பதை கூட நியாயப்படுத்த,

மார்க்கம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, எங்கள் கட்சிக்கு இழுக்கு வந்து விடக்கூடாது என களமிறங்கியிருக்கும் இது போன்ற படுபாவிகளுக்கு ஒன்றை சொல்கிறோம்.

முஸ்லிம் ஒற்றுமை என்றும், இஸ்லாமிய சமுகத்திற்காக குரல் கொடுக்கிறோம் எனவும் இந்த உலகில் நீங்கள் எதை சொல்லியும் ஏமாற்றலாம்.
விபரமறியா நால்வர், அதன் சூட்சமத்தை அறியாமல் உங்கள் பின்னால் வரவும் செய்யலாம்.
ஆனால், உங்களை அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
சூட்சமக்காரனுக்கெல்லாம் மிகப்பெரிய சூட்சமக்காரன் அவன்.

வணக்கம் சொல்லி விட்டு, நான் என்ன ஒளு செய்து தொழவா செய்தேன்? என்று நா கூசாமல் பேசும் உங்கள் நாவுகளை இரு துண்டுகளாக ஆக்க அவனுக்கு ஒரு கண நேரம் போதும் !

முஸ்லிம்கள் மத்தியில் ஒரு முகத்தையும் காஃபிர்கள் மத்தியில் வேறொரு முகத்தையும் காட்டித் திரியும் நயவஞ்சகர்களாகிய உங்களுக்கு, நீங்கள் இதே நிலையில் தொடர்வது வரை, இம்மையில் படுகேவலமான இழிவை தருவதும், மறுமையில் அதிபயங்கரமான நரகில் தள்ளுவதும் அவனுக்கு மிக லேசானது என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்களுக்கு எதிராக கையேந்தும் நிலைக்கு இந்த முஸ்லிம் உம்மத்தை தள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம் !!

மகனை பிரிந்து வாடிய நபி


புனித குர்ஆனில் அல்லாஹ் கூறிக் காட்டும் நபிகள் சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகள். சூரா யூசுப் - 12: 70, 76, 83, 84, 85, 86 & 87.

''மகன் யூசுபையும் (அலை) இளைய மகன் புன்யாமீனையும் (பிரிந்து-அல்லது) இழந்து வாடிய தந்தை யா'கூப் (அலை) கூறுகிறார், 

"நான் அழகிய பொறுமையை கடைபிடிக்கிறேன். அவர்களை அல்லாஹ் என்னிடம் சேர்க்கக்கூடும் .............."

''யூசுபுக்கு நிகழ்ந்ததென்னவென்று அறியாதவராய் கவலையால் கண்ணீர் சொரிந்து கண்கள் வெளுத்து போகுமளவுக்கு துக்கப் பட்டார் (தந்தை யா'கூப் ). பின் துக்கத்தை அடக்கிக் கொண்டார்.''

''எனது துக்கத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்..........''

''எனது மக்களே! நீங்கள் சென்று (உங்கள் சகோதரர்களாகிய) எனது மக்களை (யூசுபையும் புன்யாமீனையும்) தேடுங்கள்.

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள். இறை நிராகரிக்கும் கூட்டத்தாரைத் தவிர யாரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள் என்று யாகூப் கூறினார்.''

யாகூப் நபி அவர்கள் தமது உயிருக்கிணையான மக்களை (அவர்கள் தொலைந்து விட்டார்களோ என்று கலக்கமுற்றவராய் )பிரிந்து வாடிய நிகழ்வுகளை அருளாளன் அல்லாஹ் நம் கண் முன்னே, நம் சிந்தையின் உணவாய் வழங்கி நம்மை ஆறுதல் படுத்துகிறான்,

நம்மை நேர்வழிப் படுத்துகிறான். அவனது அருட்கொடையான இந்த புனித நூலில் இல்லாத ஆறுதல் எது? இல்லாத நேர்வழி எது? சுபுஹானல்லாஹ் !!

"ஹஸ்புனல்லாஹு வ நி'மல் வக்கீல்'' (3:173).

எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன் !!