சனி, 24 மே, 2014

பாடம் கற்க வேண்டிய பெயர்தாங்கிகள்


மமகவின் மயிலாடுதுறை தோல்வி குறித்து தனிப்பட்ட எந்த விமர்சனமும் நமக்கு கிடையாது.

அதிமுகவிற்கு ஆதரவான அலை தான் எல்லா தொகுதியிலும் திமுகவை தோல்வியடைய செய்திருக்கின்றன, மயிலாடுதுறையிலும் அது தான் நடந்திருக்கிறது. 

அதே சமயம், மமகவானாலும், எஸ்டிபிஐயானாலும், முஸ்லிம் லீகானாலும் அனைத்துமே இஸ்லாத்தின் அடிப்படைக்கு புறம்பாக நின்று தான் அரசியல் செய்கின்றன‌ என்பதில் இப்போதும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

நாம் பலமுறை எடுத்துச் சொன்னதைப் போல, இக்கட்சிகளினால் இஸ்லாமிய சமூகத்திற்கு சிறிதேனும் அவப்பெயர் தான் உருவாகியுள்ளதே அல்லாமல், கிஞ்சிற்றும் நன்மை விளையவில்லை.
அதற்கான அறுவடையை பாசிச ஆதரவாளர்கள் பெற்றுள்ளனர்.

ஒரு தொகுதி அரசியலுக்காக அம்மாவிடமிருந்து விலகி அய்யாவிடம் தஞ்சம் புகுந்து, இன்று உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா என வருந்துபவர்கள், என்றைக்கும் கொள்கைக்காக அரசியல் நடத்தப்போவதில்லை என்பதை தான் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய சமூகத்தின் கண்ணியம் இவர்களால் ஒரு போதும் காப்பாற்றப்படாது என்பதை மக்கள் விளங்கிக் கொண்டு விட்ட நிலையில், தங்களது இருப்பை மீண்டுமொரு முறை இவ்விரு கட்சிகளும் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.

கொள்கையை விற்ற காசில் கிடைக்கும் அற்ப பதவி சுகங்கள் நமக்கு வேண்டாம் என்கிற சபதத்தை இந்த தேர்தல் தோல்வியிலிருந்து பெறக்கூடிய பாடமாக இவர்கள் கருதி தங்களை மாற்றிக் கொண்டாலே தவிர, இவர்கள் மென்மேலும் இழிவையே சந்திப்பார்கள்.

ஏற்றிருக்கக்கூடிய கொள்கையை தன் உயிரை விடவும் பெரிதாய் மதிக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்குங்கள்,
அதை அஸ்த்திவாரமாக இட்டு அதில் இயக்கம் காணுங்கள், அதில் ஏற்படும் சமூக ஒற்றுமைக்கு தான் அல்லாஹ் வெற்றியை தருவான் என்பதை இனியாவது புரியுங்கள்.

அந்த வெற்றி மகத்தான வெற்றியாக இருக்கும், ஒட்டு மொத்த சமுதாயமும் திரண்டு வந்து தரக்கூடிய வெற்றியாக அது இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறோம் !

அத்துடன், இஸ்லாத்தின் ஆறாவது கடமையை சரி வர நிறைவேற்றாத முஸ்லிம் லீக் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதையும்,
ஃபர்ளில் குறை வைத்த குற்றத்திற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரும்படியும் இதன் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக