வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 4 (A)



கண்ணியமான முறையிலும், ஹக்கினை அறிந்து கொள்ளும் ஒரே நோக்கிலும் தான் நாம் கருத்துப்பரிமாற்றம் செய்கிறோம் என்கிறபடியால், வாதங்களை சற்று விரிவாகவே தருகிறேன்.

Nizar Mohamed அவர்கள் தொடர் 1 இல் நான் பிஜெவின் ஷிர்க் ஸ்கூலில் பயின்று வருவதாக துவங்கியுள்ளீர்கள்.

ஒரு சித்தாந்தத்தை பற்றி நாம் பேசுகிறோம். இரு கொள்கைகளில் எந்த கொள்கை சரி என்பது பற்றி பேசுகிறோம்.
இதில் பிஜே என்கிற தனி நபரைப் பற்றி நீங்கள் பேசுவது பொது சபையில் உங்களை தான் தகுதிக் குறைவானவராய் காட்டும்.
கொள்கையை பேசுகிற போது, அதற்கான வாதப்பிரதிவாதங்கள் மட்டும் வையுங்கள். அது தான் கண்ணியம்.

ஈஸா நபி இறந்து விட்டார் என்பதை நிரூபிக்கிறேன் என்று வந்த நீங்கள் 5:76 வசனத்தை காட்டினீர்கள். அதில், ஈஸாவுக்கு முன்னுள்ளவர்கள் இறந்து விட்டார்கள் என்று தான் இருக்கிறது.
ஈஸாவுக்கு முன்னுள்ளவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொல்லப்படுவது எப்படி ஈஸாவும் இறந்து விட்டார் என்கிற கருத்தை தரும் என்கிற நியாயமான கேள்வி தான் என்னுடையது.
அதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு தான் பிஜெ ஷிர்க்கில் இருக்கிறார், ஷிர்க் ஸ்கூல் நடத்துகிறார் என்றெல்லாம் அறிவுப்பூர்வமான (?) வாதங்களை வைக்கிறீர்கள்.
இதற்கு நான் பதில் சொல்லி நேரத்தை களைய விரும்பவில்லை. ஷிர்க்கில் இருப்பது யார், நரக கொள்ளிக்கட்டையாக விரும்புவது யார் என்பதெல்லாம் உண்மையை புரிகிற மக்கள் அறிந்து தான் வைத்திருக்கிறார்கள்.

சில வாதங்களை வைத்திருக்கிறீர்கள், அவை சரியா என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் என்றென்றும் வாழும் வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. என்கிற 21:34 (71:35 என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள், அது தவறு) வசனத்தை எடுத்துக் காட்டி, என்றென்றும் வாழும் வாழ்க்கையை ஈஸா நபி பெற்றிருப்பதாக நாம் சொல்கிறோம் என்றும் அதனால் அது இந்த வசனத்திற்கு முரண் என்றும் கூற முயற்சிக்கிறீர்கள்.

உங்கள் புரிதலில் உள்ள முதல் தவறு !

என்றென்றும் வாழும் வாழ்வினை எவருக்குமே அல்லாஹ் வழங்கவில்லை என்பது சரி தான். யாருமே மறுக்கவில்லை. ஈஸா நபி மரணிக்கவில்லை என்று சொல்வதால் இந்த வசனம் எப்படி பொய்ப்பிக்கப்படுகிறது என்பது தான் நான் அன்றிலிருந்தே கேட்டு வருகிற கேள்வி.

என்றென்றும் வாழும் வாழ்க்கையை தான் எவருக்குமே அல்லாஹ் கொடுக்கவில்லை. ஈஸா நபி என்றைக்கும் வாழ்பவர் அல்ல. அப்படி நாம் சொல்லவுமில்லை. அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நீளமான ஆயுள் வழங்கப்பட்டால் என்றைக்கும் வாழ்பவர் என்கிற அர்த்தம் வராது.

நீளம் என்பதற்கு வரையறை கிடையாது. 90 வயதை கூட ஒருவர் நீளம் என்பார். 115 வயது வரை வாழ்ந்து சாதனை படைப்பவர்களையெல்லாம் நாம் செய்திகளில் வாசிக்கிறோம், இப்போதுள்ள காலகட்டத்திற்கு அவையெல்லாம் மிக நீளமான வாழ்வு தான். ஆனால் அது நிரந்தரமான வாழ்வல்ல. ஏன், நூஹ் நபியின் ஆயுள் நாம் கற்பனையில் கூட எண்ணிராத 900 வருடங்களுக்கும் மேல் தான். அதுவும் நிரந்தரமல்ல.

நிரந்தரமான ஆயுள் தான் எவருக்கும் இல்லையே தவிர, நீளமான ஆயுள் வழங்கப்படத்தான் செய்திருக்கிறது. அவை இந்த வசனத்தை பொய்ப்பிக்காது ! ஆகவே இந்த வாதத்தை வைத்தெல்லாம் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று உங்களால் நிறுவ‌ முடியாது.

அடுத்து, பூமியில் தான் தங்குமிடம் உள்ளது, பூமியில் தான் மனிதன் தங்குவான், பின் பூமியில் தான் புதைக்கப்படுவான், பூமியிலிருந்தே தான் எழுப்பவும் படுவான் என்கிற கருத்தை தரக்கூடிய 7:25, 20:55 ஆகிய வசனங்களை எடுத்துக் காட்டி, பூமியில் தான் மனிதன் வாழ்வான் என்று அல்லாஹ் சொல்கிறான், நீங்களோ ஈஸா நபி உடலோடு வேறு உலகிற்கு உயர்த்தப்பட்டு அங்கே வாழ்வதாக கூறுகிறீர்கள், அந்த நம்பிக்கை இந்த வசனத்திற்கு எதிரானது என்று ஒரு வாதத்தை வைக்கிறீர்கள்.

இதன் காரணமாக, குர் ஆனில் முரண்பாடு இருப்பதாக கருத வேண்டியதிருக்கிறது // என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

குர் ஆன் பற்றிய போதிய ஞானமில்லாத காரணத்தால் தான் இது போன்ற வாதத்தை எழுப்புகிறீர்கள்.

அல்லாஹ் அமைத்து வைத்திருக்கிற பொது நியதிகளாக இருந்தாலும் சரி, அவன் மனிதர்களுக்கு இடும் கட்டளைகளானாலும் சரி,

குர் ஆனின் நடை எப்படி இருக்குமென்றால், பொதுவானவைகளை சொல்வதற்கென ஒரு நடை இருக்கும். அந்த வசனங்கள் பொதுவாக அனைவரையும் குறிக்கக்கூடியவைகளாக இருக்கும். அதே விஷயத்தில் விதிவிலக்குகளாய் சில மனிதர்களோ சில சட்டங்களோ கூட இருக்கத்தான் செய்யும்.
அந்த விதிவிலக்குகளை பற்றி குறிப்பிட்ட இந்த பொதுவான வசனம் பேசாது.
மாறாக, அந்த பொது விதியிலிருந்து விலக்கு பெற்ற செய்தி குர் ஆனின் வேறு பகுதிகளிலோ, அல்லது நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மூலமாக கிடைக்கப்பெறூம் ஹதீஸ்கள் வாயிலாகவோ அல்லாஹ்வால் அறிவிக்கப்படும்.

பொதுவான செய்தியையும், அதிலிருந்து விதிவிலக்கு பெற்ற இன்னபிற செய்தியையும் இணைத்து தான் முடிவெடுக்க வேண்டி வரும். அல்லாமல், பொதுவாக சொல்லக்கூடிய ஒரு வசனத்தை மட்டும் எடுத்து, இப்போது நீங்கள் பேசுவது போன்று பேசுவதாக இருந்தால் குர் ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக நீங்களே ஒப்புக் கொள்ள வேண்டி வரும்.

உதாரணத்திற்கு சிலவற்றை பார்ப்போம்.

தாமாக செத்தவை அனைத்தும் உண்பதற்கு ஹராம் என்பது குர் ஆனின் கட்டளை. (பார்க்க 5:3)

கடல் பிராணிகளில் தாமாக செத்தவைகளாக இருந்தாலும் அவை நமக்கு ஹலால் தான் என்று திர்மிதி 64 இல் நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.

உங்கள் வாதப்படி, இந்த திர்மிதி ஹதீஸ், மேற்கூறப்பட்ட இறை வசனத்திற்கு முரண் என்று சொல்ல வேண்டும். சொல்வீர்களா?
அல்லது, குர் ஆனில் பொதுவாய் கூறப்பட்டது, ஹதீஸில் அதிலுள்ள விதிவிலக்கு சொல்லப்பட்டுள்ளது என்பீர்களா?

இறந்து போனவர்கள் செவியேற்க மாட்டார்கள், பதில் சொல்ல மாட்டார்கள் என்பது அல்லாஹ் குர் ஆனில் கூறும் பொதுவான கட்டளை.

ஆனால் ஹதீஸில், பத்ர் போரின் போது கொல்லப்பட்ட எதிரிகளின் உடலைப் பார்த்து நபி (சல்) அவர்கள் பேசுவதாகவும், அவர்கள் அதை கேட்கிறார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ், அந்த இறை வசனத்திற்கு முரண் என்று சொல்லி இந்த ஹதீஸை பொய்ப்படுத்துவீர்களா? அல்லது இது விதிவிலக்கு என்பீர்களா?

சாமிரி என்பவன் காளை மாட்டை போன்ற சிலையொன்றை செய்து அதை அடித்த போது அது நிஜ மாட்டை போன்று சத்தம் போடுவதாய் இரண்டாம் அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
இறந்தவர்கள் பேச மாட்டார்கள், சிலைகள் எந்த நன்மையோ தீமையோ செய்யாது என்றெல்லாம் அல்லாஹ்வின் பொதுவான கூற்றுகளுக்கு (பார்க்க 21:63) இந்த வசனம் முரணாய் இருப்பதால் குர் ஆனிலேயே முரண்பாடு உள்ளது என்பீர்களா அல்லது அந்த பொதுவான கூற்றுக்கு இந்த சம்பவம் மட்டும் விதிவிலக்கு என்பீர்களா?

அல்லாஹ் தான் படைப்பாளன் என்று 59:24 வசனம் சொல்கிற போது, இறந்தவர்களுக்கு தஜ்ஜாலும் உயிர் கொடுப்பான் என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதே, இந்த ஹதீஸ் பொய் என்பீர்களா? அல்லது விதிவிலக்கு என்பீர்களா?

முஹம்மது நபிக்கு மறைவானவை எதுவும் தெரியாது என்று 7:188 வசனம் சொல்கிறது. அதே சமயம், மக்கா வெற்றி, கியாமத் நாளின் அடையாளம் என்பன போன்ற மறைவான முன்னறிவிப்புகளை நபி (சல்) அவர்கள் செய்ததாகவும் ஹதீஸ்கள் உள்ளன.
இவற்றை எப்படி பார்க்கிறீர்கள்? நபிக்கு மறைவானவை தெரியாது என்று குர் ஆன் சொல்லி விட்டதால், கியாமத் நாளின் அடையாளம் என்பதாக நபி சொன்னவை அனைத்தும் பொய் என்பீர்களா? அல்லது இது விதிவிலக்கு என்பீர்களா?

தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் சொல்கிறான். மற்றோர் இடத்தில் பயணிகளுக்கு களா செய்யும் சலுகையையும் வழங்கியிருக்கிறான். இரண்டையும் முரண் என்பீர்களா அல்லது விதிவிலக்கு என்பீர்களா?

யார் ரமலான் மாதத்தை அடைகிறார்களோ அவர்கள் அனைவருமே நோன்பு நோற்க வேண்டும் என்று பொதுவாக ஒரு இடத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
கர்பிணிகள், மாதவிடாய் பெண்கள், பயணிகள், நோயாளிகளுக்கு அந்த மாதத்தில் நோன்பு வைப்பது கட்டாயமில்லை என்று வேறொரு இடத்தில் சொல்கிறான்.
இது முரண் என்பீர்களா அல்லது விதிவிலக்கு என்பீர்களா?

இது போன்று இன்னும் எத்தனையோ சான்றுகளை எம்மால் காட்ட முடியும்.

பூமி தான் மனிதர்களுக்கான வசிப்பிடம் என்று அல்லாஹ் சொல்வது ஒரு பொதுவான செய்தி. அதை கூட எந்த கான்டெக்ஸில் அல்லாஹ் சொல்கிறான்? முந்தைய வசனத்தில் ஆதம் நபி சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டதாய் சொல்லி விட்டு, மனிதர்களுக்கென்று பூமியை தங்குமிடமாக படைத்திருப்பதாய் சொல்கிறான்.
இது பொதுவான ஒரு செய்தி.
எல்லா மனிதர்களும் எல்லா காலத்திற்கும் பூமியில் தான் வாழ முடியும். ஆனால், ஈஸா நபி விஷயத்தில் மட்டும் சில விதிவிலக்குகள் உள்ளன. அந்த விதிவிலக்குகளை கடந்துப் பார்த்தால், அவரும் இவ்வுலகில் திரும்ப வந்து, இவ்வுலகிலேயே மரணித்து, இங்கேயே அடக்கமும் செய்யப்பட்டு, பின் இங்கிருந்தே தான் எழுப்பவும் படுவார்.

ஆகவே, இது போன்ற வாதமும் உங்கள் கொள்கையை தூக்கி நிறுத்த உதவாது.
இவை தான் உங்கள் தொடர் 1 இல் நீங்காள் வைத்த வாதங்கள்.

தொடர் 2க்கான பதில் அடுத்து.. இன்ஷா அல்லாஹ்

உங்கள் தொடர் 2 க்கான எனது பதில்

சக்கராத்தில் இருப்பவரை பற்றி நான் எதற்கு விளக்கினேனோ அதை புரிந்தும் புரியாதது போல், ///நீ காட்டிய உதாரணத்தின் படி ஈஸா நபியை சக்கராத் நிலையிலாவது உயிரோடு வைக்கவேண்டும் என்று நீ எழுதியுள்ளது தான் வேடிக்கை//

என்று வேடிக்கையாய் பேசுகிறீர்கள்.

ஒரு மனிதர் சராசரியாக எந்த வயது வரை வாழ்வாரோ அதை விடவும் அதிகமாக வாழ்வதாய் சொல்லி விட்டதாலேயே நாம் இணை வைத்தவராகி விட மாட்டோம்.
ஈஸா நபி இறந்து விட்டதாய் சொல்கிறீர்கள். குர் ஆன் ஹதீஸ்களில் இறக்கவில்லை என்று அல்லாஹ் சொல்கிறான் என்பதால் ஈஸா நபி இன்னும் இறக்கவில்லை என்று நாம் சொல்கிறோம்.

இன்னும் இறக்கவில்லை என்று அவரைப் பற்றி நான் சொல்வதால் நான் ஷிர்க் வைத்தவனாகி விட மாட்டேன். ஏனெனில், இதை நான் சுயமாக சொல்லவில்லை, அல்லாஹ் சொல்வதால் சொல்கிறேன்.
இன்னும் மரணிக்கவில்லை என்றாலும் அவரும் ஒரு நாள் மரணிப்பார். அவரது ஆயுள் தான் நீட்டிக்கப்படிருக்கிறதே தவிர, மரணத்திலிருந்து விதிவிலக்கொன்றையும் அவர் பெறவில்லை.

மரணத்திலிருந்து விதிவிலக்கு பெற்றவன் அல்லாஹ் ஒருவன் தான். ஆக, இதில் ஷிர்க் எதுவும் இல்லை.

2000 ஆண்டுகளாக இந்த இயற்கை விதிக்கு அப்பாற்பட்ட முறையில் உண்ணாமல் குடிக்காமல் toilet போகாமல் ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்புவதும் ஒன்றல்ல. ................ ///

என்கிறீர்கள்.

உண்ணாமல் குடிக்காமல் toilet போகாமல் ஈஸா நபி இருப்பதாக நான் சொல்லவில்லை. அப்படி அல்லாஹ் சொல்லவில்லை. அவரை இந்த பூமியிலிருந்து அப்புறப்படுத்தியதாக மட்டும் தான் அல்லாஹ் சொல்கிறான். இந்த பூமியில் அவர் இல்லையென்பதால் அவர் உண்ணாமல் பருகாமல் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமொன்றும் இல்லை.

சரி, ஒரு வாதத்திற்கு உண்ணாமல் பருகாமல் இருக்கிறார் என்று புரிவதாக வைத்துக் கொண்டாலும் கூட, இதுவும் ஏற்கனவே நான் கூறிய விதிவிலக்கு பட்டியலில் தான் வரும். ஏனெனில் இதை சொல்வது அல்லாஹ்.

ஒரு நல்லடியார் பற்றி நபி (சல்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஒன்றில்,குதிரையுடன் அவர் பயணப்பட்ட சமயத்தில் திடீரென ஒரு தூக்கத்தை அல்லாஹ் அவருக்கு வழங்கினான் எனவும் அந்த தூக்கம் 100 வருடங்கள் இருந்தது எனவும், அவர் வந்த குதிரை செத்து மக்கிபோனது எனவும் உணவு மட்டும் கெட்டுப்போகாமல் இருந்தது எனவும் சொல்கிறார்கள். (ஹதீஸ் எண் கிடைத்ததும் தருகிறேன்)

நூறு வருடம் ஒருவரால் பூமியில் தூங்க முடியுமா? என்று பொதுவாக ஒருவர் கேள்வி கேட்டால் முடியாது என்பது தான் பதில். நூறு வருடம் ஒருவரால் தூங்கிக் கொண்டே இருக்க முடியாது, நூறு வருடம் ஒருவரால் சாப்பிடாமல், பருகாமல் இருக்க முடியாது. ஆனால் அவையெல்லாம் பொதுவான விதி.

அந்த பொது விதியிலும் அல்லாஹ் சில அற்புதங்களை நிகழ்த்தத்தான் செய்வான். அதையும் சேர்த்தே தான் நாம் நம்ப வேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான் என்பதால் நம்ப வேண்டும்.
குர் ஆனும் ஹதீஸும் அதை சொல்கிறது என்பதால் நம்ப வேண்டும். அப்படி நம்புவது, ஏற்கனவே சொல்லப்படும் பொது விதிக்கு முரணில்லை, அது ஷிர்க்கும் இல்லை.

கிறித்தவர்கள் ஈஸா நபி உயிருடன் இருப்பதாக தான் சொல்கிறார்கள், நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள், ஆகவே நீங்கள் கிறித்தவவர்களை பின்பற்றுபவர்கள் என்று ஏற்கனவே என்னை நோக்கி நீங்கள் சொன்ன குற்றசாட்டுக்கு, அதே பாணியில் ஒரு கேள்வியொன்றை கேட்டிருந்தேன்.

கிறித்தவர்களும் கியாமத் நாளை நம்புகிறார்கள், நிசார் முஹம்மது அவர்களும் நம்புகிறார். ஆகவே நிசார் முஹம்மது யூத நசாரா கொள்கையை கொண்டிருக்கிறார் என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டிருந்தேன்.

கிறித்தவர்களும் சொர்க்கம் இருப்பதை நம்புகிறார்கள், நிசார் முஹம்மது அவர்களும் நம்புகிறார். ஆகவே நிசார் முஹம்மது யூத நசாரா கொள்கையை கொண்டிருக்கிறார் என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டிருந்தேன்.

இதற்கு எங்கே பதில்?

உங்கள் தொடர் 2 இல் நீங்கள் சொன்னவை இவ்வளவு தான்.

தொடர் 3 க்கான எனது பதில் அடுத்து, இன்ஷா அல்லாஹ்.

உங்கள் தொடர் 3 க்கான எனது பதில்

இதிலும் சில வேடிக்கையான வாதங்களை வைக்கிறீர்கள். அவை பற்றி ஒவ்வொன்றாக விளக்கமாக பார்ப்போம்.

16:20, 21 இல், இறந்தவர்களை அழைக்காதீர்கள் எனவும், அவர்கள் செவியேற்க மாட்டார்கள், அவர்கள் இறந்து விட்டவர்கள் என்றும் அல்லாஹ் சொல்கிறான்.

இதிலிருந்து நீங்கள் வைக்கும் வாதம் என்ன?

இந்த வசனம் மனிதர்கள் பொய்யாக கற்பனை செய்த கடவுள்களை பற்றி பேசும் வசனம்.
அந்த பொய் கடவுள்கள் இறந்து விட்டவர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
கிறித்தவர்கள் ஈஸாவை கடவுள் என்கிறார்கள்.
அவர் பொய் கடவுள்.
பொய் கடவுள் எல்லாம் இறந்து போனவர்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டான்.
ஆகவே ஈஸாவும் இறந்து விட்டார் !!

இது தான் நீங்கள் சொல்லும் கணக்கு !!
இந்த கணக்கை இடுவதற்குள் ஆர்கிமிடிஸ் கூட தோற்றுப் போவார் போல..

முதலில், அந்த வசனமானது ஈஸா நபியை பற்றியா சொல்கிறது? இல்லை.

அந்த வசனம், அல்லாஹ்வை தவிர யாரையெல்லாம் அவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் பொதுவாய் சொல்கிற வசனம்.

இறந்து விட்ட ஒருவரை நீ அழைப்பதாக இருந்தால், இதோ பார் அவர் இறந்து விட்டவர், அவர் செவியேற்க மாட்டார் என்று சொல்லும் வசனம்.
இறக்காமல் உயிருடன் இருக்கும் ஒருவரை அழைப்பதாக இருந்தால், இதோ பார் அவர் இறக்ககூடியவர், அவர் உனக்கு பதிலளிக்க மாட்டார் என்று சொல்கிற வசனம்.

இறந்து போனவர்களை பற்றி மட்டும் தான் இது பேசுகிறது என்றாலும் இந்த வசனத்தின் கருத்து இது தான் என்பது எளிதில் புரிகிற ஒன்று தான்.
அவர்கள் யாரை வணங்குகிறர்களோ அவர்கள் இறந்து விட்டார்கள் என்று தான் இதை புரிய வேண்டுமே அல்லாமல், அவர்கள் வணங்கும் எவராக இருந்தாலும் அவர்கள் இறந்து விட்டவர்கள் தான் என்றோ அல்லது இறந்து விட்டவர்களை மட்டும் தான் அவர்கள் கடவுளாக கருதுவார்கள் என்றோ புரியக் கூடாது.

அப்படி புரிவதாக இருந்தால் இறக்காமல் உயிருடன் இருப்போரை வணங்குவதில் தவறில்லை என்று கருத்து வந்து விடும்.

இதை வைத்து, ஈஸா நபி இறந்து விட்டதாய் நீங்கள் கூறுவீர்கள் என்றால், உயிருடன் இருக்கும் ஒருவரை வணங்கும் ஒருவர் பற்றி என்ன நிலையை நீங்கள் கொள்வீர்கள் ?
அது இணை வைப்பில்லையா?

சாய் பாபா உயிருடன் இருக்கும் காலத்தில் அவர் கடவுளாக தான் வணங்கப்பட்டார்.

நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவருமே இறந்து விட்டவர்கள், ஆகவே அது ஷிர்க் என்று தானே இந்த வசனத்திற்கு அர்த்தம் வைத்தீர்கள்?
அப்படியானால் உங்கள் பார்வையில் உயிருடன் இருந்த சாய் பாபாவை வணங்கிய ஒருவன் அல்லாஹ் சொல்லும் இந்த முஷ்ரிக் பட்டியலில் வர மாட்டான் தானே?
இதுவா வாதம்?
இறந்தவர்களை வணங்கினாலும் ஷிர்க் தான், உயிருடன் இருப்பவர்களை வணங்கினாலும் ஷிர்க் தான்.

அல்லாஹ் தன்னை தவிர வேறு எவரை வணங்கினாலும் அவர்கள் மரணிக்கக்கூடியவர்கள், மரணித்தவர்கள் என்று சொன்னால் அது ஒரு பொதுவான செய்தி. அதை வைத்து, ஈஸா நபியையும் ஒரு கூட்டம் அழைக்கிறது, ஆகவே ஈஸா நபியும் மரணித்து விட்டார்கள் என்றெல்லாம் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது.
அப்படி போடுவதாக இருந்தால் சாய் பாபாவை வணங்கியவன் அல்லது இன்று மாதா அமிர்தானந்த மயியை வணங்குபவன் உங்களிடம் வந்து, "அப்படியானால் எனது கடவுள் இன்னும் இறக்கவில்லை, ஆகவே இது பொய் கடவுள் இல்லை தானே?
என்று கேள்வி கேட்டு விடப்போகிறார், அப்புறம் உங்களிடம் பதில் இருக்காது, கவனம் !

அடுத்து, இன்னொரு வேடிக்கையான கேள்வியொன்றை எழுப்புகிறீர்கள்.

உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமானவர் அல்லர் என்று அல்லாஹ் சொல்கிறான். இதை வைத்துக் கொண்டு, இறந்து விட்ட உங்கள் முஹம்மது நபியை விடவும் உயிருடன் இருக்கும் எங்கள் ஈஸா தான் சிறந்தவர் என்று ஒரு கிறித்தவர் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்று கேட்கிறீர்கள்.

மிகவும் அபத்தமான, குர்ஆன் பற்றிய அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் தான் இந்த கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

உயிருள்ளவனும் இறந்தவரும் சமமில்லை என்று அல்லாஹ் சொல்வது இணை வைப்பின் வாசலை அடைப்பதற்கு தானே தவிர இரண்டில் சிறந்தவர் யார் என்பதை சொல்வதற்கில்லை என்கிற சாதாரண உண்மையை கூட நீங்கள் புரியாமல் வாதம் புரிவது வியப்பாய் உள்ளது.

எப்படி இருளும் வெளிச்சமும் எதிர் எதிர் சித்தாந்தமோ,
எப்படி கண் பார்வை இல்லாததும் கண் பார்வை இருப்பதும் எதிர் எதிர் நிலையோ,
எப்படி நிழலும் சூடும் எதிர் எதிர் நிலையோ

அது போல் ஒரு உடலில் உயிர் இருப்பதும் உயிர் இல்லாமல் இருப்பதும் எதிர் எதிர் நிலை.

இரண்டும் என்றைக்கும் சமமாகாது. ஆகவே உயிருடன் இருக்கும் போது கேட்பது போல் இறந்த பிறகு கேட்காது.
உயிருடன் இருக்கும் போது பார்ப்பது போல், உயிருடன் இருக்கும் போது சிந்திப்பது போல் எல்லாம் உயிர் பிரிந்த பிறகு நடக்காது

என்கிற தத்துவத்தை உதாரணங்களுடன் சொல்லி, இணை வைக்கும் மக்களை அல்லாஹ் எச்சரிக்கிறான்.

இந்த அடிப்படை பற்றி சிந்திக்காமல், ஈஸா நபி இறக்கவில்லை, முஹமம்து நபி இறந்து விட்டார், ஆகவே யார் சிறந்தவர்? என்று மிகவும் நுனிப்புல்வாரியாக கேள்வி கேட்கிறீர்கள்.

சரி நான் கேட்கிறேன், நிசார் முஹம்மது அவர்கள் இறக்கவில்லை, நபி (சல்) அவர்கள் இறந்து விட்டார்கள். உங்கள் கேள்வியை உங்கமிடமே கேட்கிறேன், இருவரில் யார் சிறந்தவர் என்று இப்போது நீங்கள் பதில் சொல்லுங்கள், பார்ப்போம்.

இந்த பதிலை, நீங்கள் ஈஸா நபி விஷயமாக கேட்டதற்கும் பதிலாய் வைத்துக் கொள்ளுங்கள்.

இதில் இறுதியாக..

//1000 கணக்கான முல்லாக்கள் இஸ்லாத்தை விட்டு விலகி கிறிஸ்தவ பாதிரிகளாக மாறி ,மேற்சொன்ன கேள்வியை விடுத்தார்கள்... அதற்கு hazrat அஹ்மத் (அலை) அவர்கள் அந்த கிறிஸ்தவர்களுக்கு சாட்டை அடி கொடுத்து நபி ஸல் அவர்களின் கண்ணியத்தை காப்பாற்றினார்கள்///

என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் ஹசரத் இதற்கு சொன்ன சாட்டையடியை கொஞ்சம் விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் தொடர் 3 இல் நீங்கள் வைத்த வாதங்கள் இவை தான்.

தொடர் 4 க்கான எனது பதில் அடுத்து, இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக