கட்சிகளின் எண்ணிக்கை பெருகி, அனைவரும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்ததை தொடர்ந்து சிறு அளவிலான வாக்குகள் கூட ஒரு கட்சியின் வெற்றியை தீர்மானித்து விடும்.
100 ஓட்டுகளில் A வுக்கு 25 ஓட்டு, B க்கு 23, மீதமுள்ள கட்சிகளுக்கு அதை விடவும் குறைவான ஓட்டுகள் என்றால் அனைவரையும் விட அதிக வாக்குகள் பெற்ற A வெற்றி பெறுவார், ஆட்சியை கைப்பற்றுவார்.
ஆனால் அந்த கட்சிக்கு கிடைத்த வாக்குகளோ 25% தான்.
நூறு பேரில் 25 பேர் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் என்றால் 75 பேர் இந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டாம் என்று வாக்களித்திருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது.
75% பேர் வேண்டாம் என்று கூறிய கட்சி வெற்றி பெறுவது என்பது கேலிக்கூத்தா இல்லையா?
பெரும்பான்மை மக்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு கட்சி நியாயப்படி தோல்வியடைந்த கட்சி. தோல்வியடைந்த கட்சி ஆட்சியமைக்கும் கேலிக்கூத்து தான் இந்தியா பின்பற்றும் பிரிடிஷ் ஜனநாயக முறை !
அனைவரும் அறிந்து வைத்திருக்கும் சாதாரண உண்மை தான் இது என்ற போதும், தனித்து போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை இம்முறை அதிகம் என்பதால் இந்த கேலிக்கூத்து பல தொகுதிகளில் பட்டவர்த்தனமாய் தென்படும் வாய்ப்புள்ளது !
விகிதாசார பிரதிநிதித்துவம் தான் ஜனநாயக நாட்டில் வெற்றியை தார்மீக ரீதியாக நிர்ணயிக்கும் சரியான முறையாக இருக்கும்.
25 ஓட்டுகள் பெற்ற கட்சி அதற்கேற்றார் போல் ஆட்சியில் பங்கு செய்யும். 20 வாக்குகள் பெற்ற கட்சி அந்த விகிதத்தில் பங்களிக்கும், 2% ஓட்டு பெற்ற கட்சியாக இருந்தால் அதற்கு கூட ஆட்சியில் உரிமையுண்டு என்கிற வாக்களிப்பு முறை என்பது நாட்டு மக்களின் ஒட்டு மொத்த அங்கீகாரத்தையும் ஆதரவையும் பெற்ற ஆட்சியை நாட்டில் நிலை பெற செய்யும்!
கட்சிகள் தங்களுக்கிடையே நடத்தி வருகின்ற முகம் சுளிக்க வைக்கும் மூன்றாம் தர அரசியல் களேபரங்கள் அப்போது இருக்காது.
கட்சி தான் முன்னிலைப்படுத்தப்படுமே தவிர வேட்பாளர் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்.
அனைத்து கட்சியும் ஆட்சியில் பங்கு பெறும் பட்சத்தில் நாட்டில் ஊழல் குறையும்,
மதவாதம் தலை தூக்காது,
சிறுபான்மை குரலுக்கு விலை கிடைக்கும்,
கார்பரேட் நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்தியாவில் தொழில் துவங்குகிறேன் என்கிற பெயரில் அடிப்படை தேவைகளுக்கான விலைவாசி ஏற்றம் பெற காரணமாக இருக்காது,
கொள்முதல் விலையை விடவும் இரட்டிப்பு மடங்கு வரியேய்ப்பு செய்வதும் குறையும்.
சுருங்க சொன்னால் இந்தியாவின் ஒவ்வொரு தனி நபரும் இந்தியாவை ஆள்வார் !
இந்தியா வல்லரசாகும் !
விகிதாசார பிரதிநிதித்துவம் கிடைக்கும் ஜெர்மன் ஜனநாயக முறை தான் நாட்டின் எதிர்காலத்திற்கு ஏற்றது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக