வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (A)அஸ்ஸலாமு அலைக்கும்.

நான்கு தொடர்களை எழுதியுள்ளீர்கள். அவற்றில் உங்கள் தொடர் 1 க்கான பதிலுரை துவங்குகிறது.

குர் ஆன் வசனத்தை ஆதாரமாக தருவதாக இருந்தால் கூட அதையும் நான் முழுமையாக வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளீர்கள்.
உங்கள் கோரிக்கையை ஏற்று, நாம் எடுத்து வைக்கும் அனைத்தையும் முழுமையாகவே தருகிறோம்.
அதிகமாக எழுதுவதற்கு இதன் மூலம் வாய்ப்பேற்படுத்தி தந்திருக்கிறீர்கள்.
அனைத்து பாகங்களும் முடியும் வரை நீங்கள் ஓய்வெடுத்து பொறுமையாக வாசித்து வரலாம்.

நான் என்ன கேள்விகளையெல்லாம் வைத்தேன், அவைகளில் எவைகளுக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள், எவைகளுக்கு பதில் சொல்லவில்லை என்கிற பட்டியலை தனியாக தருகிறேன்.
நீங்கள் சொன்ன பதில்களின் தரம் என்ன என்பதை தனியாக விளக்குகிறேன்.

நீங்கள் எந்த வாதத்தை எந்த வரிசையில் சொல்லியிருக்கிறோர்களோ, அந்த வரிசை கூட மாறாமல், ஒரு வாதத்தை கூட விட்டு விடாமல் எம்மிடமிருந்து தெளிவாக பதில் வரும்.

இறுதியில் கூட்டிக் கழித்து பார்க்கையில் உங்கள் வாதம் அனைத்தும் தவிடு பொடியாகி இருக்கும், உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் தரப்பட்டிருக்கும், 
ஆனால் நாம் வைக்கும் எந்த வாதத்திற்கும் உங்கள் தரப்பில் உருப்படியான விடை இருக்காது.
அல்லாஹ்வின் பேருதவியால் அது தான் நடக்கபோகிறது.

ஆகவே பதில் எங்கே, பதில் எங்கே என்று ரொம்பவும் ஆர்வம் காட்டி ஏமாற்றமடைந்து போக வேண்டாம்.

உங்கள் கொள்கையை சவக்குழிக்குள் தள்ளாமல் நாம் ஓய மாட்டோம் இன்ஷா அல்லாஹ். எனது பதில்களில் அவை உறுதியாகும் !
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
நீங்கள் உங்களது மொத்த வாதங்களையும் நிறைவு செய்யும் போது, அதாவது,
உங்கள் தொடர் 4, பாகம் 2 இல் நீங்கள் கடைசியாக முடித்த வாதத்திலிருந்து நான் துவக்குகிறேன்.

முதலில் ஈஸா நபியின் மரணம், பிறகு நபித்துவம், பிறகு மிர்சா சாஹிப்.. இந்த வரிசையில் பேசலாம் என்றீர்கள்.

இந்த வரிசையை பேண வேண்டிய அவசியம் இல்லை. 
அனைத்தையும் ஒரு சேர பேசலாம். 
ஈஸா நபியை பற்றி பேசிக் கொண்டே மிர்சாவின் வண்டவாளங்களையும் பேசலாம். தவறொன்றும் இல்லை என்பது எனது நிலை.

ஈஸா மரணிக்கவில்லை என்று சொல்வது ஷிர்க், ஆகவே அதை பற்றி தான் முதலில் பேச வேண்டும் என்கிறீர்கள்.

என்னைப் பொறுத்தவரை,
நபிக்கு பிறகு இன்னொரு நபி வரலாம் என்பது குஃப்ர். இறை நிராகரிப்பு. ஒரு சராசரி மனிதன் பேசுவது அல்லாஹ்வின் வார்த்தையாகும் என்பது இந்த கொள்கையின் பொருளாகிறது.

எப்போது, இன்னார் மூலம் அல்லாஹ் பேசுகிறான் என்று பொய்யாக ஒருவரை பற்றி நம்பி விட்டீர்களோ, அதுவே இறை நிராகரிப்பு, அல்லாஹ்வுக்கு இணை வைப்புக்காரியமாகி விடுகிறது.

அல்லாஹ்வின் வசனங்களை ஒரு தனி மனிதனால் கேட்க முடியும், கனவில் அல்லாஹ்வோடு ஒரு தனி மனிதனால் உரையாட முடியும், அந்த அற்புத ஆற்றல் ஒரு தனி மனிதருக்கு இருக்கிறது என்று மிர்சா என்கிற மனிதனை அற்புத ஆற்றலுடையவராக நம்புவது பச்சை ஷிர்க்.

தவிர,இஸ்லாம் என்பது குர் ஆனும் ஹதீஸும் தான். இவ்விரண்டையும் பேணி நடப்பவர்கள் தான் முஸ்லிம்கள்.
எவரொருவர், இந்த இரண்டை தாண்டி இன்னொரு நூலை வேத நூலாக கொள்வாரோ அவர் எம்மைப் பொறுத்தவரை மதமாறி சென்றவராவார்.
எப்படி கிறித்தவர்களுக்கு பைபிள் வேத நூலாக கருதப்படுகிறதோ அது போன்று காதியானிகளுக்கு மிர்சா அஹமதின் நூல் வேத நூல். ஆகவே, எம்மைப் பொறுத்தவரை கிறீத்தவமும் காதியானிசமும் இஸ்லாம் அல்லாத வேறு மதங்கள்.

வேறு மதத்தை பின்பற்றுகிற அளவிற்கு வெளிப்படையான இறை நிராகரிப்பு உங்களிடம் காணப்படுகிறது என்பது எனது வாதம்.

அந்த ஷிர்க்கை, அந்த இறை நிராகரிப்பைப் பற்றி தான் முதலில் பேச வேண்டும் என்று என்னாலும் சொல்ல முடியும். 

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பது ஷிர்க் ஆகவே அதை தன் முதலில் பேச வேண்டும் என்கிற உங்கள் வாதத்திலொன்றும் மிகப்பெரிய அர்த்தமொன்றும் இல்லை என்பதற்காக சொல்கிறேன்.

தொடர் 4, பாகம் 2 இல், ஒரு கிறித்தவனிடம் முதலில் அவன் நம்பக்கூடிய கடவுளான ஈஸாவை பற்றி தான் முதலில் பேச வேண்டும் எனவும், அவன் நம்புவது போல் அவர் கடவுளில்லை என்று நிரூபிக்க வேண்டும் எனவும், அப்படி நிரூபித்து விட்டால் முஹம்மதை அவன் எளிதாக நம்பி விடுவான் என்றும் கூறியிருக்கிறீர்கள்.

மிக அழகான வாதம். ஆம் சரி தான் ! எதிர் கொள்கையுடையவரிடம் பேசுகையில் அவர் நம்புகிற கொள்கையை தான் முதலில் உடைக்க வேண்டும்.

உங்கள் அழகான வாதத்தை உங்கள் பக்கமே நான் திருப்புகிறேன்.

காதியானி மதத்தை சார்ந்தவர்களிடம் நான் பேசுவதாக இருந்தால் அவர்கள் யாரை நபி என்று நம்புகிறார்களோ அவரை பற்றி தான் முதலில் பேச வேண்டும்.
அந்த நபர் நபியல்ல என்று நீரூபணமானால், பிறகு முஹம்மது தான் இறுதி நபி என்று அவர்கள் தானாக நம்பி விடுவார்கள்.

உங்கள் வாதம் தான் இது. இது ஈஸா நபிக்கு மட்டும் பொருந்தாது, மிர்சா சாஹிபுக்கும் பொருந்தும்.

மிர்சா சாஹிப் எவ்வளவு பெரிய பொய்யர் என்பதும், அவர் நபியாக மட்டுமல்ல, ஒரு சராசரியான மனிதனாக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் என்பதும் அடுக்கடுக்கான சான்றுகளுடன் நிரூபிக்கப்படும்.

அத்தோடு,
ஈஸா நபி இறக்கவில்லை என்று அல்லாஹ் சொல்வதும் ஆதாரத்துடன் தரப்படும். 

தலைப்பிற்குள் செல்லலாம்..

உங்கள் தொடர் 1, பாகம் 1 அருமையான மூன்று கேள்விகளோடு துவக்கியுள்ளீர்கள்.

மிர்சா பொய்யர் என்று வைத்துக் கொண்டால் கூட அவரை நபியென நம்புகிறவர்களுக்கு நரகம் கிடைக்கும் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பது உங்கள் அற்புத (?) கேள்வி.

இத்தோடு நிறுத்தாமல், அந்த மிர்சாவுக்கு நரகம் கிடைக்கும் என்பதற்கு என்ன ஆதாரம், என்று வேறு கேட்டிருக்கிறீர்கள்.

அத்துடனும் நிறுத்தாமல், பொய் நபிமார்களை அல்லாஹ் தண்டித்ததாக ஏதும் ஆதாரம் உண்டா? என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள்.

"
நமது தெளிவான வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். 'இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?' என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது."
22:72

மேற்கூறப்பட்ட வசனம், அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போருக்கு நரகம் என்று சொல்கிறது.

நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், 'நாங்கள் எலும்பாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?' என்று கூறிய தாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை. (17:98)

இறைவனின் வார்த்தைகளை மறுத்தால் அவர்களுக்கு நரகம் என்று மேலேயுள்ள வசனமும் சொல்கிறது.

மேலும்

அல்லாஹ் குர் ஆனில் 6:93 இல் கீழ்கண்டவாறு சொல்கிறான்.

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிட மிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். 'உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாத வற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!' (எனக் கூறுவார்கள்).

அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டுபவன்என்பதில் நீங்கள் கேட்டபடி, மிர்சாவை பின்பற்றுபவர்கள் அடங்குவார்கள்.

தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது என்பதில் நீங்கள் நபியென நம்பும் மிர்சா அடங்குவார்.

இவர்கள் அனைவருக்கும் இழிவுப்படுத்தும் வேதனை உண்டு என அந்த வசனம் சொல்கிறது.

உங்கள் கேள்விகளுக்கு விடை மேலே சொல்லப்பட்டு விட்டது !

அடுத்து, பொய் நபியை அல்லாஹ் தண்டித்ததாக ஏதும் ஆதாரம் உண்டா என்று கேட்டிருக்கிறீர்கள்.

பொய் நபியை உலகிலேயே தண்டிக்க வேண்டும் என்கிற நிர்பந்தமொன்றும் அல்லாஹ்வுக்கு இல்லை. அவனை யாரும் நிர்பந்திக்க முடியாது.
பொய்யர்களை உலகிலும் தண்டிப்பான், 
அல்லது மறுமையில் மட்டும் தண்டிப்பான், 
சிலரை இரு இடங்களிலும் தண்டிப்பான்.
அது அவனது விருப்பத்தைப் பொறுத்தது.

பார்த்தீர்களா, எங்கள் நபியை இவ்வுலகில் அல்லாஹ் தண்டிக்கவில்லை ஆகவே அவர் பொய் நபி இல்லை என்றொரு வாதத்தை வைத்தீர்கள் என்றால் அது அர்த்தமற்ற வாதமாக தான் ஆகும்.

அதன்படி, பொய்யர்களாகவும் வழிகேடர்களாகவும் இருப்பவர்கள் அல்லது நான் தான் அல்லாஹ் என்று கூட் சொல்பவர்கள் எவரானாலும் அவர்கள் இவ்வுலகிலேயே தண்டிக்கப்பட்டால் தான் அவர்கள் பொய்யர்கள் என நிரூபிக்கப்பட்டதாக ஆகும் என்கிற அறியாமை வாதம் அதில் தொங்கி நிற்கிறது.

நான் தான் கடவுள் என்று சொன்ன சாய்பாபா இவ்வுலகில் தண்டிக்கப்படவில்லை என்பதால் அவர் பொய் கடவுள் இல்லை என்று ஆகி விடும்.

அல்லது, என்ன செய்ய வேண்டும், பொய் நபியை அல்லாஹ் இவ்வுலகிலேயே தண்டிப்பான் என்று ஏதும் இறை வசனமிருந்தால் அதை எடுத்துக் காட்டி, இதோ அல்லாஹ் இப்படி நேரடியாக சொல்லி விட்டானே, அப்படி எங்கள் மிர்சா தண்டிக்கப்படவில்லையே? என்று நீங்கள் கேல்வியெழுப்பியிருந்தாலாவது அதை நியாயம் எனலாம்.

அல்லாமல், பொத்தாம் பொதுவாக வாதம் புரிவதில் எந்த அர்த்தமும் கிடையாது !

தொடரும், இன்ஷா அல்லாஹ்..

உங்கள் தொடர் 1 இல், முஹம்மது நபிக்கு பிறகு இன்னொரு நபி வர முடியும் என்று சொல்லியுள்ளீர்கள்.

ஆனால், பல்வேறு இறை வசனங்கள் வர முடியாது என்று சொல்கிறது.

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். (7:158)

மனிதகுலம் முழுமைக்கும் தூதராக முஹம்மது நபி இருக்கையில் இன்னொரு நபி வர மாட்டார்.

மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. (10:57)

ஒட்டு மொத்த மனிதர்களுக்கான நேர்வழியை அல்லாஹ் முஹம்மது நபி மூலமாக தந்து விட்டதாக கூறிய பிறகு, இன்னொரு நபியையும் இன்னொரு வேதத்தையும் அனுப்ப மாட்டான், அது இந்த வசனத்தைப் பொய்ப்பிப்பதாக ஆகி விடும்.

(முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன். (10:109)

முஹம்மது நபிக்கு எது அறிவிக்கப்பட்டுள்ளதோ அதை தான் அவரும் நாமும் பின்பற்ற வேண்டும். அத்துடன் கியாமத் நாள் வரை பொறுமை தான் காக்க வேண்டும், இன்னொரு வேதத்தையோ சட்டத்தையோ நாடி செல்லக்கூடாது என்பது இதன் பொருள்.

பிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். (33:40)

முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராக வும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். (34:28)

ம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம். (4:79) 

சில ஹதீஸ்களை பார்க்கலாம்..

எனக்கும் எனக்கு முன்சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் இது தான். ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டினான். அதை அழகுபடுத்தினான். ஒரு மூலையில் ஒரு செங்கல் தவிர மற்ற அனைத்தையும் அழகுற அமைத்தான். மக்கள் அதைச் சுற்றிப்பார்த்து அதில் வியப்படைந்தார்கள். இந்த ஒரு செங்கல்லையும் வைத்திருக்கக் கூடாதா என்றும் அவர்கள் பேசிக்கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள் நான்தான் அந்த ஒரு செங்கல். நான்தான் நபிமார்களுக்கு முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நுல் : புகாரி 3535

அதாவது, நபித்துவம் என்கிற அழகிய கட்டிடத்தில் மிச்சமிருந்தது ஒரேயொரு செங்கல், அதுவும் முஹம்மது நபி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது.

மிர்சாவுக்கோ வேறு எவருக்குமோ கட்டிடத்தில் நுழைவதற்கு கூட இடமில்லை !

மற்றொரு ஹதீஸ்..

நான் மற்ற இறைத்தூதர்களை விடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்

என்னை கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.
யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
நிலமெல்லாம் தொழுகை இடமாகவும், தூய்மை படுத்தும் பொருளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது
மனித குலம் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
நபிமார்களின் வருகை என்னால் நிறைவு படுத்தப்படுகிறது.

அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (812)

இன்னும்..

நான் தான் இறுதியானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை

(நூல்: புகாரி 4896, முஸ்லிம் 4342)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள்தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான் தான் நபிமார்களில்முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்: திர்மிதி 2145

சாம்பிளுக்கு சில ஆதாரங்களை மட்டும் மேலே தந்திருக்கிறேன். இவை முஹம்மது நபிக்கு பிறகு இன்னொரு நபி வர மாட்டார், வர தேவையுமில்லை என்பதை தெளிவாக எடுத்து சொல்கிறது.

இத்தனை சான்றுகளுக்கு எந்த பதிலும் சொல்லாத நீங்கள், 7:36 வசனமான

ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும் போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

என்பதை காட்டி முஹம்மது நபிக்கு பிறகு இன்னொரு நபி வர முடியும் என்கிறீர்கள்
பல இறை வசனங்களும், ஹதீஸ்களும் இறுதி நபி முஹம்மது (சல்) அவர்கள் தான் என்பதை தெளிவாக சொல்லும் போது, அவைகளுக்கு முரணில்லாத வகையில் தான் இந்த வசனத்தையும் விளங்க வேண்டும்.

தூது செய்தியை ஏற்று நடப்போர் வெற்றி பெற்றவர்கள் என்கிற பொதுவான செய்தியை தான் இந்த வசனம் சொல்கிறது. இதில் முஹம்மது நபிக்கு பிறகு இன்னொரு நபி வருவார் என்கிற கருத்து இல்லை
அப்படி கருத்து இருப்பதாக சொல்பவர்கள், இறுதி நபித்துவம் குறித்த நமது ஏனைய சான்றுகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இத்துடன், எனது முந்தைய பதிவுகளில் இரண்டு ஹதீஸ்களை காட்டியிருந்தேன்,
அஹமத் 13322 வில் முஹம்மது நபி தான் இறுதி என்கிற செய்தி நேரடியாகவே சொல்லப்பாட்டிருக்கிறதே, இதற்கு என்ன பதில்? என்று கேட்டேன், இதுவரை விடை வரவில்லை.

புஹாரி 3455 இல் பனி இஸ்ரவேலர்களுக்கு வந்தது போல் சிறு சிறு இடைவெளியில் நபிமார்கள் வரமாட்டார்கள் என்று தான் நபி (சல்) அவர்கள் அதில் சொல்கிறார்கள் என்று, ஹதீஸில் இல்லாத இடை செருகலை செய்தீர்கள். அது குறித்த விளக்கத்தை கேட்டிருந்தேன், அதற்கும் இதுவரை பதில் இல்லை.

சரி, முஹம்மது நபிக்கு பிறகு வேறு நபி வர முடியும் என்று வைத்துக் கொண்டால் கூட அந்த நபி மிர்சா தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்கிற கேள்வியையும் பல முறை கேட்டேன், உருப்படியான எந்த பதிலும் உங்கள் தரப்பில் இல்லை.

உங்கள் தொடர் 1, பாகம் 1இல், மிர்சா சாஹிப் நபியாவார் என்று எழுதியிருக்கிறீர்கள்.

எதெற்கெடுத்தாலும் என்னிடம் ஆதாரம் ஆதாரம் என்று அவசரம் காட்டக்கூடியவர், இந்த தகவலுக்கு ஆதாரத்தை தந்தீர்களா

தெருவில் போகிற ஒருவரை சுட்டிக்காட்டி, அதோ போகிறாரே அவர் அல்லாஹ்வின் நபியாக்கும் என்றால், எவராக இருந்தாலும் ஆதாரத்தை தான் கேட்பார்.

ஆதாரத்தை காட்டி, இதோ இன்னின்ன காரணங்களினால் அவர் நபி என்று விளக்கும் கடமை உங்களை சார்ந்தது.
அதை செய்யுங்கள்.

எதனால் அவர் நபி? நபிக்குரிய தன்மைகளாக அவரிடம் தென்பட்டவை என்ன?
அவர் கொண்டு வந்த வேதம் அல்லாஹ்வின் வார்த்தைகளை கொண்டது தான் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ?

என்பதையெல்லாம ஆதாரத்துடன் முன் வையுங்கள்.

இதை செய்வதை விடுத்து, வேடிக்கையாக கீழ்கண்டவாறு சொல்லி சிரிக்க வைக்கிறீர்கள்.

முஹம்மது நபியின் மிகசிறந்த முன்மாதிரியின்படி வாழ்ந்த காரணத்தால் ஒருவரால் நபியாக முடியும் என்று மிர்சா சாஹிப் நிரூபித்திருக்கிறாராம்.

இதென்ன கூத்து?

முஹம்மது நபியை ஒருவர் பின்பற்றினால் பின்பற்றுபவரும் நபியா? அப்படி நிரூபணமாகி விடுமா?

ஒரு போதும் ஆகாது
இன்னும் சொல்லப்போனால், இந்த மிர்சா சாஹிப் முஹம்மது நபியை பின்பற்றவில்லை, ஷைத்தானை தான் பின்பற்றினார் என்பதற்கு தொடர்ந்து நாம் அடுக்கப்போகும் அவரது வண்டவாளங்களே சான்று பகரும்.

மேலும்,
பிஜே என்கிற தனி மனிதரைப் பற்றி பேசி உங்கள் தகுதியை இழக்காதீர்கள் என்று நான் சொன்னதற்கு, நீங்கள் மட்டும் மிர்சா என்கிற தனி மனிதனை பற்றி பேசலாமா? என்று சிறு பிள்ளைத்தனமான வாதமொன்றினை வைத்திருக்கிறீர்கள்.

மிர்சா என்கிற தனி மனிதரை நான் பேசுவதும், பிஜெ என்கிற தனி மனிதரை பற்றி நீங்கள் பேசுவதும் சமமில்லை என்பது அடிப்படை அறிவு கொண்ட எவருக்கும் புரியும்.

நான் மிர்சாவை பற்றி பேசுகிறேன் என்றால், அவரை நீங்கள் நபியென்கிறீர்கள், அதனால் பேசுகிறேன்.
அவரை உரசிப்பார்க்கும் கடமை எனக்கும் உங்களுக்கும் உள்ளதால் பேசுகிறேன்.
அல்லாஹ்வும் நபியை உரசிப்பார்த்து பின்பற்றுமாறு தான் சொல்கிறான்.

ஒருவரை நபி என்கிறீர்கள். அவரிடம் அல்லாஹ் பேசுகிறான் என்கிறீர்கள், அவரை பின்பற்றினால் தான் சொர்க்கம் என்கிறீர்கள்,
அப்படிப்பட்ட அந்த மனிதர் நபியாக இருக்கும் தகுதியை கொண்டிருப்பவரா? நபிக்குரிய தகுதிகள் அவருக்கு இருக்கின்றனவா? என்றெல்லாம் ஆய்வு செய்யும் கடமை எனக்கு உள்ளது
அவருக்கு அந்த தகுதி இல்லையென்று எனது ஆய்வில் நிரூபணமானால் அதை விளக்கும் கடமையும் எனக்கு உள்ளது.

அதே சமயம், நீங்கள் பேசும் பிஜெ நபியல்ல. அவரை பின்பற்றினால் சொர்க்கம் என்று நான் சொல்லவில்லை
நான் அப்படி சொன்னால் என்னிடம் பிஜேவை பற்றி பேசுங்கள்.

ஈஸா நபி மரணிக்கவில்லை என்று பிஜே உங்களுக்கு கற்று தந்தார், அனைத்தையும் பிஜே தான் உங்களுக்கு சொல்லி தந்தார் என்று கூறியிருக்கிறீர்கள்.
1980களில் உங்களுக்கு ஏற்பட்ட பதிப்பின் வெளிப்பாடாய் தான் இதை நான் பார்க்கிறேன். அல்லாமல், பிஜேவையும் விஞ்சும் அளவிற்கு அவரது மாணவர்கள் இன்று உருவெடுத்து விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியாது தான்.

ஒரு சித்தாந்தாத்தை பேசும் போது, அவரிடம் தான் இதை கேட்டீர்கள், இவர் தான் உங்களுக்கு சொன்னார் என்பன போன்ற மூன்றாம் தரவாதங்களை தவிருங்கள் என்று மீண்டும் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

நான் அதை ஒப்புக்கொண்டால் தான் அதை பேச வேண்டும். ஏகத்துவம் எங்கள் உள்ளங்களை ஆக்கிரமித்துக் கொண்டதால், பிஜேவை பின்பற்ற வேண்டிய நிலைமை எங்களுக்கு அல்லாஹ்வின் கிருபையால் இல்லை.

நீங்களும், எங்களுக்கும் மிர்சாவை பின்பற்ற வேண்டிய நிலையில்லை, நாங்களும் மிர்சாவை பினபற்றவில்லை என்று இப்போது நான் சொல்வதை போன்று சொல்லி விடுங்கள், நானும் மிர்சா பற்றி பேச மாட்டேன்.

அல்லாமல், மிர்சா என்கிற மனிதரை நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுவீர்கள் என்றால் அந்த மனிதரை பேசத் தான் செய்வோம்.

நான் பிஜேவை பின்பற்றுவதாய் உங்களிடம் சொல்லவில்லை, ஆகவே அவரை பற்றி என்னிடம் பேச வேண்டியதில்லை.

சிறு பிள்ளைக்கு சொல்ல வேண்டியவிளக்கங்களையெல்லாம் என் சிறிய தந்தைக்கு சொல்ல வேண்டிய நிலைமை குறித்து நான் வருந்துகிறேன்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக