வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (B)ஈஸா நபி இறந்து விட்டார் என்பதற்கு ஐந்து ஆதாரங்களை காட்டியதாக திரும்ப திரும்ப சொல்கிறீர்கள்.

திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தால் படிப்பவரும், ஆம் உண்மையில் ஐந்து ஆதாரங்களை இவர் வைத்து தான் இருக்கிறார் போல.. என்று எண்ணி விடக்கூடாது என்பதற்காக, நீங்கள் வைத்த ஐந்து ஆதாரங்களின் தரங்களை முதலில் விளக்கி விட்டு என் தரப்பு ஆதரங்களுக்குள் செல்கிறேன்.

ஐந்து ஆதாரங்களில் நீங்கள் வைத்த முதல் ஆதாரம் 

5:75. ஈஸா நபிக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிற வசனம்.

அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிற வசனத்தை எடுத்துக் காட்டி, பார்த்தீர்களா இதிலிருந்து ஈஸா நபி இறந்து விட்டார் என்று புரிகிறது என்று எப்படி வாதம் புரிகிறீர்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை.

அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிற வசனமே அவர் மரணிக்கவில்லை என்கிற கொள்கைக்கு தான் ஆதாரமாக நிற்கிறது.

எது எனக்கு ஆதாரமோ அதை உங்கள் தரப்பு ஆதாரமாக எப்படி வைக்கிறீர்கள்??

அவருக்கு முன் எல்லாரும் இறந்து விட்டார்கள் என்று ஒருவரை பார்த்து சொன்னால் அவர் இறக்கவில்லை என்று தான் பொருள்.

இந்த பேருந்துக்கு முன்பாக புறப்பட்ட எல்லா பேருந்துகளும் சென்னையை அடைந்து விட்டன
என்றால் இந்த பேருந்து இன்னும் சென்னையை அடையவில்லை என்று பொருள்.

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதால் தான் அவரை கடவுளாகநம்புகிற கூட்டத்தாரிடம் பேசும் போது அவர் மரணித்து விட்டார் என்று சொல்லாமல், அவருக்கு முன்னுள்ளவர்கள் மரணித்து விட்டார்கள் என்கிறான் அல்லாஹ்.

அவர் மரணிக்கவில்லை என்பதால் தான் அவர் உணவு உண்டதையெல்லாம் சொல்லிக்காட்டி சாப்பிடுபவர் இறைவனாக இருக்க முடியாது என்கிறான்.

முந்தைய நபிமார்கள் மரணித்து விட்டதால் அவர்கள் எப்படி கடவுள் இல்லையோ அதே போல் இவர் சாப்பிடுவதால் கடவுள் இல்லை.

இதை விளக்கும் வசனம் தான் 5:75. 

ஈஸா நபி மரணித்தது உண்மையாக இருக்குமானால் அதை சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் இது தான். ஏனெனில், இந்த வசனமே அவர் கடவுளில்லை என்று சொல்வதற்காக இறக்கப்பட்ட வசனம் தான். அதனால் தான் அவர் தூதரை தவிர வேறில்லை என்று அந்த வசனம் துவங்குகிறது

அவர் கடவுளில்லை என்று சொல்லி மறுப்பதாக இருந்தால் கடவுளின் இலக்கணத்திற்கு முதல் முரணாக நிற்பது மரணம். கடவுள் எப்படி மரணிப்பார் என்று கேட்டால் அது தான் காஃபிர்களின் சிந்தனையை தட்டும் கேள்வியாக இருக்கும்.

ஆனால், இங்கே அதை அல்லாஹ் கேட்கவில்லை. கேட்காமல், அவருக்கு முந்தைய நபிமார்கள் மரணித்து விட்டார்கள் என்று தான் சொல்கிறான்.
ஆகவே, இந்த வசனம், ஈஸா நபி மரணிக்கவில்லை, அதே சமயம், முந்தைய நபிமார்கள் மரணித்ததை போல் அவரும் மரணிக்கத்தான் போகிறார் என்கிற செய்தியை தான் சொல்கிறது.

அவரே மரணித்து போனவராக இருந்திருந்தால், ஈஸா மரணித்து விட்டார், மரணிப்பவர் எப்படி கடவுளாவார்? என்று அல்லாஹ் கேட்டிருப்பான், வெறும் உணவு உண்டதை கேட்டிருக்க மாட்டான்.

உங்கள் முதல் ஆதாரத்தின் நிலை இது தான்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆதாரமாக 7:25 & 20:55 வசனங்களை காட்டுகிறீர்கள்

பூமியிலேயே வாழ்வீர்கள், பூமியிலேயே இறப்பீர்கள் என்று பொதுவாய் அல்லாஹ் பேசும் வசனம்.

இதை வைத்து ஈஸா நபியும் பூமியில் தான் வாழ முடியும் என்று வாதம் வைக்க முடியாது.

அதற்கான காரணம், பொதுவான சட்டம் ஒரு இடத்திலும் அதிலிருந்து விதிவிலக்கு பெற்றவை இன்னொரு இடத்திலும் சொல்லும் வழக்கு அல்லாஹ்விடம் உண்டு.

அதற்கு பல உதாரணங்களையும் சொல்லியிருந்தேன்.

அந்த உதாரணங்களுக்கு பதில் என்கிற பெயரில் சில சப்பைக் கட்டுகளை உங்கள் தொடர் 1 பாகம் 3 இல் செய்திருக்கிறீர்கள்.

அவற்றை விளக்குவது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கே அவற்றை விளக்குகிறேன்.

தாமாக செத்தவை அனைத்தும் ஹராம் என்று அலலஹ் பொதுவாக தான் குர் ஆனில் சொல்கிறான், ஆனால் ஹதீஸில் கடல் பிராணிகளில் தாமாக செத்தவை ஹலால் என்று விதிவிலக்கு கூறப்பட்டுள்ளது என்று சொல்லியிருந்தேன்.

இதற்கு பதில் என்கிற பெயரில், அந்த குர் ஆன் வசனத்தில் தாமாக செத்தவை என்பது நிலத்தில் வாழும் பிராணிகளை சொல்வதாக தான் புரிய முடிகிறது என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

அப்படி நேரடியாக அங்கே சொல்லப்பட்டிருக்கிறதா? என்பது தான் எனது கேள்வி.
ஹதீஸில் கடல் பிராணிகளுக்கு அனுமதி இருக்கிற காரணத்தால் இந்த வசனம் நிலத்தில் வாழும் பிராணிகளை தான் குறிக்கிறது என்று நாமாக புரிந்து கொள்கிறோமே தவிர, இந்த வசனம் குறிப்பாக அப்படி சொல்லவில்லை. தாமாக செத்தவை என்று மட்டும் தான் உள்ளது.

இது நிலத்தில் வாழ்வதை தான் குறிக்கிறது என்றால் ஆகாயத்தில் வாழ்வதை குறிக்கவில்லையா? அதையும் தானே குறீக்கிறது?

நீரை தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளையும் தான் இந்த வசனம் சொல்கிறது
நாம் கேட்பதெல்லாம், அதை இந்த வசனத்தை மட்டும் வாசித்தால் நமக்கு புரிய முடியுமா? ,முடியாது.

இந்த வசனத்தை மட்டும் வாசித்தால் தாமாக செத்த எந்த பிராணியாக இருந்தாலும் ஹராம் என்கிறபொது விதியை தான் பெற முடியும்.

ஹதீஸில் கடல் பிராணிகளுக்கு விதிவிலக்கு என்கிற செய்தி இல்லாவிட்டால், அப்படியானபொது விதியில் தான் இன்றும் நின்றிருப்போம்.

ஹதீஸில் விதிவிலக்கை கண்ட பிறகு தான், ஓஹோ அப்படியானால் இந்த வசனம் கடல் பிராணிகளை சொல்லவில்லை, ஆகாயத்திலும் நிலத்திலும் வசிப்பவை பற்றி மட்டும் தான் பேசுகிறது என்று புரிகிறோம்.

ஆகவே உங்கள் பதில் பொருந்தவில்லை.

20:89 வசனத்தில் சாமிரி என்பவன் காளை மாடு போல ஒன்றை செய்கிறான், அது சத்தம் போடுகிறது
ஆனால் பொதுவாக சிலைகள் பேசாது, அதற்கு எந்த சக்தியும் கிடையாது என்று அல்லாஹ் சொல்கிறான். இது முரண்பாடு என்பீர்களா? என்கிற எனது கேள்விக்கு,

அடுத்த வசனத்தில் அந்த மாடு உங்களுக்கு பதில் தராது என்று அல்லாஹ் சொல்லி விட்டான் என்று பதில் சொல்கிறீர்கள்.

நான் என்ன கேட்கிறேன், நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் ?

அடுத்த வசனத்தில் அது பதில் பேசாது என்று சொன்னால், பேசாது என்று நம்பலாம், அவ்வளவு தான். அது தொடர்ந்து பேசுமா பேசாதா என்பதை பற்றி நான் கேட்கவில்லை.
அது முதலில் ஒரு முறை சத்தம் போட்டதே, அது எப்படி என்பது தான் கேள்வி.
சிலைகளால் ஒரு முறை சத்தம் போட முடியும் என்று அல்லாஹ் எங்காவது பொது விதியாகசொல்லியிருக்கிறானா?
அல்லது பேசவே முடியாது, எந்த ஆற்றலும் கிடையாது என்கிறானா?
எந்த ஆற்றலும் இல்லை என்று தானே சொல்கிறான்?

ஒரு முறை சத்தம் போட்டதே இதற்கு முரண் தானே? எனபது எனது கேள்வி.
அடுத்த வசனத்தில், அது தொடர்ந்து பேசாது என்று அல்லாஹ் சொல்வதற்கும் எனது கேள்விக்கும் தொடர்பில்லை.

தொழுகை என்பது முஃமீன்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் சொல்கிறான்.
ஆனால், ஹதீஸ்களில் பயணிகளுக்கு நேரத்தில் சலுகை உள்ளது என்றும் சொல்கிறான்.

இது விதிவிலக்கா முரணா? என்கிற எனது கேள்விக்கு முறையான பதிலை சொல்லியிருக்கிறீர்களா?
தொழுகை சட்டங்களை அல்லாஹ் முழு கட்டுரையாக எழுத வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயா? என்று அப்பாவித்தனமாய் கேள்வி மட்டும் கேட்கிறீர்களே,

இதை தானே நானும் ஈஸா நபி விஷயமாக கேட்கிறேன் ?

ஈஸா நபி மீண்டும் இவ்வுலகில் வருவார்கள் என்று அல்லாஹ் ஹதீஸ்கள் மூலம் தெளிவுப்படுத்துகிறான்.
குர் ஆனில், அவருக்கு முன் மற்றவர்கள் இறந்து விட்டார்கள், அவர் இறக்கவில்லை என்கிறான், அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டேன் என்கிறான்
இதை சொல்லும் வரிசையில்,மனிதர்கள் பூமியில் தான் வாழ்வார்கள் என்று பொதுவாகவும் சொல்கிறான் என்றால்
இந்த பொது விதியில் ஈஸா நபி விதிவிலக்கு பெறுகிறார், அவர் இன்னும் மரணிக்கவில்லை, அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வர இருக்கிறார் என்று ஹதீஸ்கள் சொல்வதையும் சேர்த்தே புரிய வேண்டும்.

அல்லாமல்,
ஈஸா நபி விஷயமாக பேசுகையில்
யார் யார் மரணித்தார்கள் யார் யார் இவ்வுலகிற்கு மீண்டும் வருவார்கள், யாரெல்லாம் வர மாட்டார்கள், யாரெல்லாம் பூமியில் வசிப்பார்கள், யார் வசிக்க மாட்டார்கள் என்கிற செய்திகளையெல்லாம் ஒரே கட்டுரையாக அல்லாஹ் எழுத வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
என்று, தொழுகை விஷயமாக நீங்கள் கேட்ட கேள்வியை நான் உங்களிடம் திருப்பிக் கேட்டால் என்ன சொல்வீர்கள் ?

பொது விதியையும் விதிவிலக்காக ஒரு நபரைப் பற்றி சொல்லப்படுவதையும் சேர்த்தே சொல்லும் போது முரண் என்று ஆகி விடாது

மனிதனை விந்து துளியால் படைத்தேன் என்று 16:4 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
ஆனால் ஈஸா நபி தந்தையின்றி பிறந்தவர்கள் என்று வேறு இடத்தில் சொல்கிறான்.
ஆதம் நபியை தன் கையால் படைத்ததாக இன்னொரு இடத்தில் சொல்கிறான்.

ஏன், மனிதர்கள் என்று பொதுவாக சொன்னதில் ஈஸாவும் ஆதமும் அடங்குவார்கள் ஆகவே இந்த வசனங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண் என்று தான் சொல்வீர்களா?
அல்லது விதி விலக்கு என்பீர்களா?

மனிதனை எவ்வாறு படைத்தேன் என்பது பற்றி, ஆதம், ஈஸா நபிகளின் படைப்பு, ஏனைய மனிதர்களின் படைப்பு போன்றவைகள் பற்றி ஒரே கட்டுரையாக அல்லாஹ் எழுத வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
என்று, தொழுகை விஷயமாக நீங்கள் கேட்ட கேள்வியை நான் உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன்.

உங்கள் கொள்கையை தூக்கி நிறுத்துவதற்காக, முரண் முரண் என்பீர்கள் ;
உங்களுக்கு எதிரான கேள்வியென்று வரும் போது இவையெல்லாம் விதிவிலக்கு என்பீர்கள்
இது தான் நேர்மையானவரின் அணுகுமுறையா?

தொடர்ந்து,
ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு சான்றாய் நீங்கள் வைத்த நான்காவது சான்று 21:34.

இதில் யாருக்கும் நிரந்தரமான வாழ்வை அல்லாஹ் தரவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
இதை ஏற்கனவே விளக்கி விட்டேன். யாருக்கும் நிரந்தர வாழ்க்கை தரப்படவில்லை என்பது ஈசா நபி விஷயத்தில் முரணாகவில்லை. இங்கே விதிவிலக்கு என்றும் நாம் சொல்லவில்லை.
ஈஸா நபிக்கும் நிரந்தர வாழ்க்கை வழங்கப்படவில்லை. ஆகையால் இது உங்கள் வாதத்தை தூக்கி நிறுத்தாது.

முஹம்மது மரணிப்பார், முந்தையவர்கள் மட்டும் உயிருடன் இருப்பவர்களா? என்று அந்த வசனம் சொல்வதாக சொல்லியுள்ளீர்கள். அது தவறு.

முந்தையவர்கள் என்று அங்கே இல்லை. அவர்கள் உயிருடன் இருப்பவர்களா? என்று தான் அல்லாஹ் கேட்கிறான்.
அவர்கள் என்றால் முஹம்மது நபி காலத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்களே அவர்கள்.
அதை கூட எதற்கு அல்லாஹ் சொல்கிறான் என்றால், முஹம்மது நபி எப்படி மரணிப்பவரோ அதே போன்று அவர்களும் மரணிப்பவர்கள், யாரும் மரணத்தை ஜெயித்து நிரந்தரமாக இங்கே வாழ்ந்து விட முடியாது என்பதை விளக்குவதற்கு தான்.

இந்த கருத்தை நிலைநாட்டும் வகையில் தொடர்ந்து வரக்கூடிய வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போது "ஒவ்வொருவரும் மரணத்தை சுவைப்பவரே" என்கிறான்.

அதாவது, மரணத்திலிருந்து எவரும் விதிவிலக்கு பெற முடியாது என்பது தான் இந்த வசனங்களின் ஒட்டு மொத்த கருத்து.

ஈஸா நபியும் விதிவிலக்கு பெற முடியாது தான். அவரும் மரணிப்பவர் தான் !
ஆகவே இந்த ஆதாரமும் நிற்காது.

இறுதி ஆதாரமாக,4:82 வசனத்தை காட்டுகிறீர்கள். அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராள மான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

என்பது அந்த வசனம். இதிலிருந்து ஈஸா நபி ம்ரணிக்கவில்லை என்று சொல்வது குர் ஆனில் முரண்பாடு கற்பிப்பதாகும் என்றால் ஏற்கனவே நான் முரண்பாடா விதிவிலக்கா? என்கிற கேள்விகளோடு தந்த பட்டியலுக்கும் இதே வசனத்தை பொருத்திப் பார்த்து நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும்.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு நீங்கள் இதுவரை எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவேயில்லை என்பது, ஐந்து ஆதாரம் , ஐந்து ஆதாரம் என்று என்று நீங்கள் செய்த அறிவிப்புகளிலிருந்தே தெளிவாகி விட்டது.
நீங்கள் காட்டிய ஐந்து ஆதாரங்களின் நிலை இது தான்.

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கு குர் ஆனிலும் ஹதீஸ்லும் ஏராளமான சான்றுகள் உள்ளன

அவற்றைப் பற்றி விளக்கமாக தொடர்ந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்..


ஈஸா மரணித்து விட்டார்..ஈஸா நபி மரணித்து விட்டார் என்று கூறி கூறியே நாட்கள் கடத்திய நீங்கள் அதற்கு சான்றாக காட்டிய ஐந்து ஆதாரங்கள் எவ்வாறு உங்கள் கருத்தை நிலைபெற செய்யவில்லை என்பதை முந்தைய பதிவில் விளக்கமாக பார்த்தோம்.

நேரடியாக, ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதை உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்பது தான் இறுதியாக நிரூபணமாகியுள்ளது

நீங்கள் கியாமத் நாள் வரை முயன்றாலும் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு எந்த சான்றையும் உங்களால் தர முடியாது.. ஏற்கனவே வைத்தது போன்ற ஐந்து ஆதாரங்களை தான் தர முடியும்.

எந்த மனிதனாக இருந்தாலும் இறந்து தானே போவார், எந்த மனிதனாக இருந்தாலும் சராசரியான ஆண்டுகள் வாழ்ந்து பின் இறந்து தானே போவார்,
எந்த மனிதனுக்கும் 2000, 3000 ஆண்டுகள் எல்லாம் உயிர் வாழும் தன்மை இருக்காது தானே?

என்கிற இயல்பாய் நமக்கு தோன்றும் எண்ணங்களின் வெளிப்பாடாய் தான் ஈஸா நபியும் இறந்து தான் போனார் என்றும் நம்பப்படுகிறது
அல்லாமல், குறிப்பாக அவர் மரணித்து விட்டார் எனநேரடியாக எந்த தகவலையும் அல்லாஹ் சொல்லவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

ஆக, ஈஸா நபி இறந்து விட்டார் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ குர் ஆனில் எங்குமே இல்லை என்பது நிரூபணமாகியுள்ள நிலையில்,
அவர்கள் மரணிக்கவில்லை என்று குர் ஆனும் ஹதீஸ்களும் சொல்கின்றன!!

குர் ஆன், ஹதீஸ்களை ஒரு கோர்வையாக சிந்திக்கும் போது மிகவும் அழகாக புரிகிறது.
அதென்ன கோர்வை? தெளிவான சிந்தனையுடன் தொடர்ந்து படியுங்கள்.

முதலில், ஈஸாவுக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற 5:75 வசனம்.
அவர் மரணிக்கவில்லை என்பதற்கு நான் வைக்கும் முதல் ஆதாரமாகவும் இதை கொள்ளலாம்.

ஈஸா நபியை நபியென ஏற்று அல்லாஹ்வை வணங்கிய கூட்டம் இருந்தது போல ஒரு படி மேலே சென்று அவர் அல்லாஹ்வின் மகன் என்றும், அவர் தான் அல்லாஹ்வின் மறு அவதாரம் எனவும் நம்பி அவரையே கடவுளாக வணங்கிய கூட்டத்தாரும் அந்த சமூகத்தில் இருந்து வந்தனர்.

அவர்களை கண்டித்து எச்சரிக்கை செய்வதற்காக இறக்கப்படும் வசனம் தான் இது.
இந்த மனிதரை கடவுளாக வணங்குகிறீர்கள், இவர் உண்மையில் கடவுள் இல்லை என்பதை காரண காரியங்களுடன் விளக்குவதற்கு தான் அந்த வசனத்தை அல்லாஹ் அருளுகிறான்.

அவர் கடவுள் கிடையாது என்று சொல்வதற்கு அருளப்படும் வசனத்தில் அவர் மரணித்தார் ஆகவே மரணித்த ஒருவர் கடவுளாக முடியாது என்று அல்லாஹ் நேரடியாக சொல்லியிருக்கலாம்.
ஏனெனில், மரணம் என்பது கடவுளின் தன்மையில்லை என்பதை அவர்களும் ஒப்புக் கொள்வார்கள்.

ஆனால் அதை அல்லாஹ் இவ்விடத்தில் சொல்லாமல், அவருக்கு முந்தையவர்கள் மரணித்து விட்டார்கள் என்றும், அவர் உணவு உண்பவர் என்றும் சொல்கிறான் என்றால், இங்கே அவர் மரணிக்கவில்லை என்கிற கருத்து கிடைக்கிறது.

சரி, இதிலிருந்து ஈஸா நபி மரணிக்கவில்லை என்று உறுதியான முடிவுக்கு வர வேண்டாம்.
ஆனால், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்றும் இந்தசொல்லவில்லை என்பதை மறக்க வேண்டாம்.

ஆகவே தொடர்ந்து சிந்திப்போம்.

அவரை சிலுவையில் அறைவதற்காக கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தை அல்லாஹ் 4 ஆம் அத்தியாயத்தில் விளக்குகிறான்

அதில், அவரை கொன்று விட்டதாக யூதர்கள் எண்ணுகிறார்கள்.
அதைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, அவர்கள் அவரை கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை.
அவர்கள் தவறான நம்பிக்கையிலேயே இருக்கிறார்கள்
நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை

என்று அல்லாஹ் சொல்லி விட்டு, அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டதாகவும் சொல்கிறான்.

இவை 4:157,158 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள சம்பவம்.

இது உடலுடனான உயர்த்துதல் இல்லை, அந்தஸ்து உயர்வு, என்றெல்லாம் உங்கள் தரப்பில் வைக்கப்படும் எந்த வாதமும் அர்த்தமில்லாதது, அவற்றை நீங்கள் சொல்கிற போது, அவை எந்த அளவிற்கு பொருத்தமற்றது என்பது விளக்கப்படும்.

உடலோடு உயர்த்தப்பட்டார் என்கிற பொருளாக்கம் தான் சரியானது, இவ்விடம் பொருத்தமானது.

கொல்லப்பட இருந்த ஈஸாவை தன்னளவில் உயர்த்திக் கொண்டதாய் அல்லாஹ் சொல்கிறான் என்றால், இங்கேயும் சிந்தனையை செலுத்த வேண்டும்.

அப்படியானால் அவர் அல்லாஹ்வால் உடலோடு உயர்த்தப்பட்டு விட்டார்.

இப்போது மீண்டும் 5:75 வசனத்தை சிந்தியுங்கள்

அவர் தூதரே தவிர வேறில்லை. அவருக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள், அவர் உணவு உண்பவராக இருந்தார்.

அவர் கடவுள் கிடையாது என்று சொல்வதற்கு அருளப்படும் வசனத்தில் அவர் மரணித்தார் ஆகவே மரணித்த ஒருவர் கடவுளாக முடியாது என்று அல்லாஹ் நேரடியாக சொல்லாமல்,அவருக்கு முந்தையவர்கள் மரணித்து விட்டார்கள் என்றும், அவர் உணவு உண்பவர் என்றும் சொல்கிறான் !

சுப்ஹானல்லாஹ்.. ஏதோ ஒரு பொருத்தம் கிடைக்கிறது.

இன்னும் தொடர்வோம்.

அவர்கள் அல்லாஹ்வால் உடலோடு உயர்த்தப்பட்டார்கள் என்பதை சொல்கின்ற வசனத்தை தொடர்ந்து
அடுத்த வசனமான 4:159 வசனத்தில் அல்லாஹ் சொல்கிற போது,

வேதக்காரர்கள் அனைவரும் அவர் மரணிப்பதற்கு முன்பாக அவரை நம்பிக்கை கொள்வார்கள் என்று சொல்கிறான் !!

அவர் மரணிப்பதற்கு முன்பு நம்பிக்கை கொள்வார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் அவர் இன்னும் மரணிக்கவில்லை என்கிற கருத்து நேரடியாகவே கிடைக்கிறது !

தொடர்ந்து 43:61 வசனத்தில் கியாமத் நாளுக்கு அடையாளமாக ஈஸா நபி இருப்பார் என்றும் அல்லாஹ் சொல்கிறான் !

அதாவது,

அவரை அவர்கள் கொல்லவில்லை என்று முதலில் சொல்கிறான்..

பின் அவரை உயர்த்தி விட்டதாய் அடுத்து சொல்கிறான்..

அவர் கடவுள் கிடையாது என்று சொல்ல வேண்டிய இடத்தில் கூட அவர் மரணித்து விட்டதை சொல்லாமல் அவருக்கு முன்னுள்ளவர்கள் மரணித்து விட்டார்கள் என்கிறான்..

அவர் கடவுள் இல்லை என்று மறுக்க வேண்டிய இடத்தில் கூட அவர் இறந்ததை சொல்லாமல் அவர் உணவு உண்டதை தான் சொல்கிறான்..

அவர் மரணிப்பதற்கு முன்பாக வேதக்காரர்கள் அவரை நம்பிக்கை கொண்டு விடுவார்கள் என்று வேறு சொல்கிறான்..

அவர் கியாமத் நாளுக்கு அடையாளமாக இருக்கிறார் என்றும் சொல்கிறான்.

இத்தனையையும் இணைத்து சிந்திக்கையில், ஈஸா நபியின் மரணம் இன்னும் நிகழவில்லை, அதில் ஏதோ ஒரு அற்புதம் இருக்கிறது என்று தெளிவாக விளங்குகிறது.

சரி, கியாமத் நாளோடு ஈஸா நபியை ஏன் தொடர்புபடுத்த வேண்டும்?

குர் ஆனுக்கு விளக்கம் ஹதீஸ். அல்லாஹ்வின் வேதத்தை விளக்கும் பொறுப்பை கொண்டுள்ள நபி (சல்) அவர்கள் இதை அழகாக விளக்குகிறார்கள்.
அவர்கள் அறிவிக்கும் செய்திகளில் கியாமத் நாளோடு ஈஸா நபியை அல்லாஹ் ஏன் தொடர்புபடுத்தினான் என்பதற்கான விளக்கம் தெளிவாக கிடைக்கிறது.

கியாமத் நாளுக்கு சமீபமாக அவர்கள் இவ்வுலகில் மீண்டும் வருவார்கள். அவரது வருகை என்பது கியாமத் நாளை உறுதி செய்யகூடியதாகவும், குர் ஆனை மெய்ப்பிக்கக்கூடியதாகவும் இருக்கும். (அதை தான் 43:61 வசனம் சொல்கிறது)
அது நாள் வரை அவரை கடவுள் என நம்பிக்கொண்டிருந்த வேதக்காரர்கள் கூட அவரது வருகையை கண்ட மாத்திரத்தில் அவரை சரியான முறையில் ஈமான் கொண்டு விடுவார்கள். (அதை தான் 4:159 வசனம் சொல்கிறது)

அவர் தான் தஜ்ஜாலை கொல்வார்
அவர் இவ்வுலகில் நீதமான ஆட்சியை செலுத்துவார், அவர் ஹஜ்ஜும் செய்வார் என பல்வேறு செய்திகள் ஹதீஸ்கள் வாயிலாக நபி (சல்) அவர்கள் நமக்கு சொல்கிறார்கள்.

இதோ அந்த ஹதீஸ்கள்..

...இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2476, 3448, 3449

ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 221

உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 3449

ஈஸா நபி இறங்கும் போது, அப்போதைய முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், எங்களுக்கு தொழுகை நடத்துங்கள்", என்று கேட்பார். அதற்கு ஈஸா நபி , "உங்களை சார்ந்தவர் தான் உங்களுக்கு இமாமாக இருக்க முடியும், அது தான் அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு செய்திருக்கும் கண்ணியம் என்று பதில் சொல்வார்கள்.

முஸ்லிம் 225

ஈஸா நபியவர்கள் அவனைத் (தஜ்ஜாலை) தமது கையால் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5157

சான்றுகளில் ஒரு பகுதியை தான் இங்கே வைத்திருக்கிறேன்

இதில் நீங்கள் நடத்தும் திருகுதாளங்கள், நீங்கள் சொல்லும் சப்பைக்கட்டுகள் ஒவ்வொன்றும் நான் அறிந்துள்ளோம்.
உயர்த்தட்டார் என்பதற்கும் கியாமத் நாளின் அடையாளம் என்பதற்கும் நீங்கள் என்ன வாதம் புரட்டி குட்டிக்கரணம் அடித்தாலும் அவை பொருந்தவே செய்யாத தவறான சால்ஜாப்புகளாகவே இருக்கும் !

எனினும், அவற்றை நீங்கள் சொன்ன பிறகு அவைகளுக்குண்டான பதில்களை சொல்கிறேன்.

உங்கள் கொள்கையை சரி காண்பதற்காக சில அபத்தமான வாதங்களை வைத்திருக்கிறீர்கள், அவற்றை அடுத்தடுத்த தொடர்களில் பார்க்கலாம்.

அத்துடன், மிர்சா சாஹிப் உங்களையெல்லாம் எவ்வாறு ஏமாற்றியிருக்கிறார், அவரை நம்பி எப்படி நீங்கள் மோசம் போயிருக்கிறீர்கள், அவர் எந்த அளவிற்கு பொய் சொல்பவராகவும் தனக்கு தானே முரண்படக்கூடியவராகவும் இருக்கிறார் என்பதையும் அடுக்கடுக்கான பல்வேறு சான்றுகள், தெளிவுகளுடன் அடுத்தடுத்து பார்க்க இருக்கிறோம்.

தொடரும்..இன்ஷா அல்லாஹ்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக