சனி, 24 மே, 2014

நோன்புக் கஞ்சி ஒற்றுமை


ஒற்றுமை நாடுவோரில் பெரும்பான்மையானோர் குறைமதியாளர்களாகவும் மார்க்கத்தில் உறுதியான பிடிப்பற்றவர்களாகவும் தான் இருக்கின்றனர்.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்று கூடி பின் கலைவது என்பதெல்லாம் காலணா பெறுமானம் இல்லாத போலியான ஒற்றுமை.

இஸ்லாம் கூறும் ஒற்றுமை என்பது கொள்கைகளை இணைப்பது தானே தவிர, ஏதேனும் பொது நிகழ்ச்சியில் ஒன்று கூடி டீயும் பருப்பு வடையும் சாப்பிட்டு சலாம் கூறி பிரிவதல்ல !

அப்படி பார்க்கப்போனால், இது போன்ற போலி ஒற்றுமையை அரசியல்வாதிகள் தினம் தினம் உருவாக்கிக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

ஒரு படி மேலே சென்று, கட்டியணைத்து டிவிக்கு போஸ் கூட கொடுப்பார்கள்,
இவரை விட்டால் நாதியில்லை என்று எதிர் தரப்பு நபரை ஆஹா ஓஹோ என புகழக் கூட செய்வார்கள்.
அவையெல்லாம் இருவரிடையே நிஜமான ஒற்றுமைக்கு வழி கோலியதா?
இல்லவே இல்லை !
அவை சந்தர்ப்பவாத ஒற்றுமைக்கு தான் வழி வகுக்கும்.

சில நோக்கங்களுக்காக ஏற்படும் அந்த போலி ஒற்றுமை,வேறு சில நோக்கங்களுக்காக கலைந்தும் விடும்.

இஸ்லாமிய இயக்கங்களின் ஒற்றுமைக்கான ஒரே சாத்தியக்கூறு தவ்ஹீத் கொள்கை தான்.
இன்றைய அரசியல், தவ்ஹீதுக்கு எதிரானது.. இதிலேயே பல இயக்கங்கள் அவுட்.
தனி மனித புகழ்ச்சி தவ்ஹீதுக்கு எதிரானது
கப்ர் வணக்கம், கத்தம், கொடியேற்றம், மீலாது ஊர்வலம் போன்றவை தவ்ஹீதுக்கு எதிரானது..மாற்று மத கலாச்சாரங்கள் இஸ்லாத்திற்கு எதிரானவை.

இவை அனைத்திற்கும் எதிரான நிலையை எந்த அமைப்புகளெல்லாம் கொண்டிருக்கின்றனவோ அவை தான் ஒற்றுமையடைய முடியும்.

அல்லாமல், பிறை 1 இல் அனைத்து இயக்கமும் இஃப்தாருக்கு ஒன்று கூடி சலாம் சொல்லிக் கொள்ளுங்கள் என்று கூறி அழைத்தால், நோன்புக் கஞ்சி சூப்பர் என்று கூறி கலைந்து விடுவார்களே அல்லாமல்,
ஒரு சுண்டக்காய் ஒற்றுமையும் ஏற்படாது !

பிறை 1 இல் அனைவரும் கூட வேண்டும் என்கிற அழைப்பிலேயே, அத்தகைய ஒற்றுமை சாத்தியமில்லை என்கிற கருத்து ஒளிந்துள்ளது தான் உச்சகட்ட வேடிக்கை.

பிறை 1 இல் அனைத்து இயக்க தலைவர்களும் கூட வேண்டும், சரி. பிறை 1 என்பது எந்த கிழமை?
எந்த இயக்கம் சொல்கிற பிறை 1 இல் கூட வேண்டுமாம்?

ஒரு இயக்கம் திங்கட்கிழமையை பிறை 1 என்று சொல்லும், இன்னொரு இயக்கம் செவ்வாயை பிறை 1 என்று சொல்லும், இன்னொரு இயக்கம் புதனை சொல்லும்.

இதில் எந்த கிழமையில் கூட வேண்டும் என்கிற கருத்தொற்றுமை கூட ஏற்படாத நிலையில் இவர்கள் ஒன்று கூடுவார்களாம், கஞ்சி குடிப்பார்களாம்.

போகாத ஊருக்கு வழி கேட்டானாம் ஒருவன்.. அந்த கதையாத்தான் இருக்கு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக