வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (C)



உங்கள் தொடர் 2 மீண்டும் ஐந்து ஆதாரம் ஐந்து ஆதாரம் என்கிற அதே பல்லவியோடு துவக்கியுள்ளீர்கள்.
அந்த பல்லவிக்கு ஏற்கனவே வரிக்கு வரி பதில் சொல்லப்பட்டு விட்டது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

ஒரேயொரு வாதத்தை தான் இந்த தொடரில் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.

ஈஸா நபி உயிருடன் இருப்பதாக நம்புவது கிறித்தவ கலாச்சாரம் என்று என்னை நோக்கி நீங்கள் சொன்ன போது, இதையெல்லாம் வைத்து கிறித்தவ கலச்சாரம் என்று வாதிட முடியாது என்று பதில் சொல்லியிருந்தேன்.

அப்படி பார்க்கப்போனால், அவர்களும் சொர்க்கத்தை நம்புகிறார்கள், நீங்களும் நம்புகிறீர்கள், ஆகவே நீங்கள் அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றுவதாக ஆகுமா? என்று கேட்டேன்.

நாம் ஆதாரத்தின் அடிப்படையில் ஒன்றை நம்பினால், அதே போன்று இன்னொரு மதத்தவரும் நம்புவது நமக்கு பொருட்டல்ல.
ஆதாரமில்லாமல் இன்னொரு மதத்தை பின்பற்றுவது தான் தவறு.

இதை விளக்குவது தான் எனது இந்த கேள்வியின் நோக்கம்.

இதற்கு பதில் என்கிற பெயரில், அவர்கள் தவ்ராத்தின் அடிப்படையில் சொர்க்கத்தை நம்புகிறார்கள், நான் குர் ஆனின் அடிப்படையில் நம்புகிறேன் என்று
எனது வாதத்தையே திருப்பிக் கூறியிருக்கிறீர்கள்.

இதை தான் நானும் சொல்கிறேன்.

ஈஸா நபி இறக்கவில்லை, மீண்டும் இவ்வுலகிற்கு வருவார் என்று அவர்கள் அவர்கள் மதத்தின் படி நம்புகிறார்கள்,
நான் குர் ஆன் ஹதீஸில் சொல்லப்பட்டதை வைத்து நம்புகிறேன்.

நான் நம்புவதற்கு நான் ஆதாரம் வைத்திருக்கிறேனா இல்லையா என்று தான் பார்க்க வேண்டுமேயல்லாமல், இதே நம்பிக்கையைப் போன்று வேறு மதத்தவர்களும் நம்புகிறார்கள் என்று அதனோடு தொடர்புபடுத்தி மாற்று மத கலாசாரம் என்கிற பொருந்தா வாதங்களை மேற்கொள்வது அறிவார்ந்த செயல் இல்லை !

ஆக, உடும்பு பொந்து ஹதீஸ் இங்கே பொருந்தாது !

ஒருவர் உண்ணாமல் பருகாமல் உயிரோடு இருப்பதாக நம்புவது ஷிர்க் அல்லவா? என்று கேட்டீர்கள். அப்படி அல்லாஹ்வே சொல்லும் போது அது ஷிர்க் ஆகாது என்பதற்கு 2;259 வசனத்தில் வரக்கூடிய பிரயாணி ஒருவரை பற்றி அல்லாஹ் சொல்வதை உதாரணத்திற்கு சொல்லியிருந்தேன்.

வசனத்தை முழுமையாக விளக்குமாறு கேட்டிருக்கிறீர்கள். அந்த வசனத்தை இங்கே தருகிறேன்.

ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. 'இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து 'எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?' என்று கேட்டான். 'ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்' என்று அவர் கூறினார். 'அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது 'அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்' எனக் கூறினார். (2:259)

இதில் உங்களுக்கு புரியாதது எது? எதை நான் விளக்க வேண்டும் என்கிறீர்கள்? என்பதை குறிப்பிட்டு சொல்லவும்.

வேறு உருப்படியான வாதம் எதுவும் உங்கள் தொடர் 2 இல் இல்லை.

ஈஸா நபி கிட்னேப் செய்யப்பட்டாரா என்கிறீர்கள்
ஜெயிலில் தண்டனை பெற்று வரும் கைதிக்கு கூட ஒரு நாள் விடுதலை கிடைத்து விடும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஈஸா நபிக்கு என்றைக்கு விடுதலை?

என்றெல்லாம் திறமையை காட்டும் விதமாய் வேடிக்கையாய் கேள்வி கேட்கிறீர்கள்.

உங்கள் வேடிக்கை வித்தைகளுக்கெல்லாம் நான் பதில் சொல்வது நேர விரயம்
ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கும் அறிவுப்பூர்வமான சான்றுகளுடன் முன்வைக்கப்படும் வாதங்களுக்கும் தான் நான் பதில் அளிப்பேனே தவிர, இது போன்ற வேடிக்கை வித்தைகளுக்கு பதில் அவசியமில்லை.

உங்கள் திறமையை என்னிடம் காட்டுவதாக நினைத்து அல்லாஹ்விடம் தான் காட்டுகிறீர்கள் என்கிற எச்சரிக்கையை மட்டும் செய்கிறேன்.

ஏற்கனவே கண்டவர்களையெல்லாம் நபியென்று கூறி புது மதம் தேடிய நீ, இப்போது ஈஸா நபி குறித்த எனது விதியையும் கேலி செய்கிறாயா?

என்று அல்லாஹ் நாளை உங்கள் நாடி நரம்பைப் பிடித்து விடக்கூடாது என்பதில் கவனமுடன் இருங்கள்..

சிறிய தந்தை என்கிற வகையில் அந்த கவலை எனக்கும் இருக்கிறது

அவ்வாறு நடந்து விடக்கூடாது என்கிற மனப்பூர்வமான ஆதங்கத்துடன் தான் உங்களோடு நான் வாதம் புரிந்து வருகிறேன்
நான் இருக்கும் பணி சூழலில் உங்களுக்கென நேரம் ஒதுக்கி எழுத முன்வந்திருப்பதற்கு கூட இந்த ஆதங்கம் ஒன்று தான் காரணம்.

அந்த அக்கறையிலும் ஆதங்கத்திலும் நான் சொல்ல விரும்புவது, அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்வதை விட்டு விட்டு, திறந்த மனத்துடன் சிந்திக்க முன்வாருங்கள்

கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவையா அல்லது ஆதாரங்களுடன் வாதப்பிரதிவாதங்கள் செய்வதற்கு சாமர்த்தியம் அவசியமா என்பதெல்லாம் தங்களுக்கு தெரியும்.

மற்றபடி, இந்த தொடரில் வேறெந்த ஆக்கப்பூர்வமான வாதம் எதுவும் உங்கள் தரப்பில் இல்லை.


உங்கள் தொடர் 3 என்பது உங்கள் அபத்தமான சிந்தனையின் உச்சமாக இருக்கின்றது.
வழிகேட்டில் சென்றவர்களை அல்லாஹ் மென்மேலும் தவறிழைக்க தான் செய்வான் என்கிற அவனது கூற்றுகள் மெய்யாகும் தருணமே உங்கள் தொடர் 3இன் வாதங்கள்.

இதை சற்று விளக்கமாக கூறினால் தான் உங்கள் வாதத்தின் அபத்தம் தெளிவாகும்.

ஈஸா நபி இறந்து விட்டதை நிரூபிக்க முடியாமல் தடுமாறிய நீங்கள், 16:21 வசனத்தை வைத்துக் கொண்டு ஒரு உலக மகா ஆர்கிமிடிஸ் தத்துவம் ஒன்றை சொன்னீர்கள்.

அது என்ன தத்துவம்?

முதலில் 16:21 வசனத்தை பார்ப்போம்.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.
அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

இது தான் அந்த வசனம்.

இதை வைத்து நீங்கள் போட்ட ஆர்கிமிடிஸ் கணக்கு இது தான்..

""
அல்லாஹ்வை தவிர யாரையெல்லாம் மக்கள் கடவுளாக கருதுகிறார்களோ அவர்கள் எல்லாம் பொய் கடவுள்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
அவர்கள் எல்லாம் இறந்து போனவர்கள் என்கிறான்.

ஈஸா நபியையும் சிலர் கடவுளாக கருதுகிறார்கள்.
அவரும் பொய் கடவுள் தான்.

பொய் கடவுள்கள் இறந்து விட்டதாய் அல்லாஹ் சொல்கிறான். ஆகவே ஈஸா நபியும் இறந்து விட்டார். ! ""

ஆஹா.. என்ன ஒரு கணக்கு !!

இந்த கணக்குக்கு நான் எனது முந்தைய பதிலில் மறுப்பு சொல்கிற போது, இந்த வசனம் பொதுவாக அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் அனைவரையும் பற்றி சொல்கிற வசனம். 
அவர்கள் இறந்து போகக்கூடியவர்கள் என்கிற பொதுவான விதியை தான் இது சொல்கிறது. அல்லாமல், கடந்த காலத்தில் இறந்தவர்கள் என்று தனியாக சொல்லவில்லை.

கடந்த காலத்தில் இறந்தவர்களைப்பற்றி தான் இது சொல்கிறது என்றால், இறக்காமல் உயிருடன் இருந்த காலத்தில் சாய் பாபா போன்ற சிலரை மக்கள் வணங்கினார்களே, அவர்கள் எல்லாம் பொய் கடவுள் இல்லை, அவர்கள் நிஜக்கடவுள் என்கிற கருத்து வந்து விடும்.

இந்த வசனமானது இன்றைய காலகட்டத்தில் கடவுளாக வணங்கப்படும் சாமியார்களையும் தான் குறிக்கும். அவர்கள் இன்று உயிருடன் இருந்தாலும் அவர்களும் இறந்து தான் போவார்கள். அதை தான் இந்த வசனம் சொல்கிறது என்று விளக்கியிருந்தேன்.

இதற்கு பதில் சொல்கிறேன் என்று வந்த நீங்கள்,

""
அழைத்தல் என்றால் அல்லாஹ்வைப் அழைப்பது போல் அழைப்பதை தான் குறிக்கும். அல்லாஹ்வின் சிஃபத்துகளான காத்தல், அழித்தல், படைத்தல் என அனைத்து ஆற்றல்களும் ஒருவருக்கு இருப்பதாய் நம்பி எவரையாவது வணங்கினால் அதை மட்டும் தான் இந்த வசனம் பேசுகிறது,

சாய் பாபா, அமிர்தானந்தமயி போன்றவர்களை வணங்குபவர்கள் அவர்களை அல்லாஹ்வின் சிஃபத்துகளோடு இணையாக்கி வணங்கவில்லை எனவும்,
ஆகவே அவர்களை வணங்குவதை பற்றி இந்த வசனம் பேசவில்லை எனவும் கூறுகிறீர்கள்.

சுப்ஹானல்லாஹ் ! உங்கள் கொள்கையை நிலைனாட்டும் பொருட்டு, இணைவைப்பு காரியத்திற்கு கூடவா வக்காலத்து வாங்குவீர்கள் ?

சாய் பாபாவை வணங்குகிறவன் அல்லாஹ்வின் சிஃபத்தை சாய் பாபாவுக்கு கொடுத்து தான் வணங்குகிறான். மறுக்கவே முடியாது !

அல்லாஹ்வின் எல்லா சிஃபத்தும் சாய் பாபாவுக்கு இருக்கிறது என்று அவன் நம்பவில்லையென்றாலும் கூட, அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய, வேறெந்த மனிதருக்கும் இருக்கவே இருக்காத சிஃபத்துகள் சாய்பாபாவுக்கு இருப்பதாய் தான் அவன் நம்புகிறான்.

அதை தான் இணை வைப்பு என்கிறோம் !

அஹமதியா கொள்கை பற்றி பேச வந்து இணை வைப்பு என்றால் என்ன என்கிற பாடத்தை நான் நடத்துகிற அளவிற்கு உங்கள் அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருக்கிறது எனப்தை கவனிக்கவும்.

அல்லாஹ்வின் அனைத்து சிஃபத்தும் ஒருவருக்கு இருப்பதாக நம்பினால் தான் அல்லாஹ்வை அழைப்பது போல் அழைப்பதாக ஆகும் என்கிற உங்கள் கூற்று முற்றிலும் தவறு.

அப்படியானால் தர்காவுக்கு சென்று அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பவரை அழைப்பது உங்கள் கருத்துப்படி அல்லாஹ்வின் சிஃபத் அனைத்தையும் கொடுத்து அழைப்பதாக ஆகாதா?
ஏனெனில்,
அல்லாஹ்வுக்கு அனைத்து இடத்திலும் வியாபித்திருக்க முடியும். ஆனால் அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் அங்கே மட்டும் தான் இருப்பார்.
அவரை "அழைப்பவர்கள்" கூட அவர் எல்லா இடங்களிலும் எழுந்து வருவார் என்று நம்புவதில்லை. 

சரி, உங்கள் வாதப்படியே வருகிறேன்.

சாய் பாபாவையோ மாதா அமிர்தானந்தமயியையோ ஒருவன், அல்லாஹ்வுக்கு இருக்கும் அனைத்து சிஃபத்தையும் வழங்கி அழைப்பதில்லை என்கிறீர்கள். அவர் உண்பார், உறங்குவார், இறப்பார் என்றெல்லாம் நம்பிக் கொண்டு தான் அழைக்கிறார்கள் என்கிறீர்கள்.

ஆனால் ஈஸாவை அல்லாஹ்வின் சிஃபத் அனைத்தையும் கொடுத்து அழைக்கிறார்கள் என்கிறீர்கள்.

இந்த வாதமும் தவறான வாதம் தான் !

அல்லாஹ்வை அழைப்பதைப் போன்று சாய் பாபாவை எவரும் அழைப்பது கிடையாது என்றால்
ஈஸா நபியையும் தான் அவ்வாறு எவரும் அழைப்பது கிடையாது !

பிறப்பது அல்லாஹ்வின் சிஃபத்திற்கு எதிரானது. ஈஸா நபி பிறந்தார் என்று நம்பிக் கொண்டு தான் அவரை அழைக்கிறார்கள்.

உலகில் மனிதனாக நடமாடுவது அல்லாஹ்வின் சிஃபத்திற்கு எதிரானது.ஈஸா நபி அவ்வாறு மனிதனாக நடமாடினார் என்று நம்பிக் கொண்டு தான் அவரை அழைக்கிறார்கள்.

இன்னும், உலகில் உணவு உண்டார், அவருக்கு பசித்தது, அவர் ஒய்ய்வெடுத்தார், தூங்கினார், எதிரிகளைக் கண்டு அச்சமடைந்தார் என அனைத்தையும் நம்பிக் கொண்டு தான் அவரை கடவுள் என அழைக்கிறார்கள்.

யார் சொன்னது அல்லாஹ்வின் சிஃபத்தை கொடுத்து அழைக்கிறார்கள் என்று?

அல்லாஹ் உணவு உண்ண மாட்டான். அல்லாஹ்வுக்கு பசிக்காது, அவனுக்கு ஓய்வு தேவையில்லை, தூக்கம் தேவையில்லை, எதிரிகளை கண்டு அச்சமடைய மாட்டான்.

இந்த சிஃபத்துக்கெல்லாம் எதிரானது தான் ஈசா நபி பற்றிய அவர்கள் பார்வை.
அத்தகைய நம்பிக்கையுடன் தான் அவரையும் கடவுள் என்கின்றனர்.

கடவுள் தன்மைக்கு எதிரான தூங்குதல் என்கிற தன்மை சாய் பாபாவுக்கு இருக்கிற காரணத்தால் சாய் பாபாவை அழைப்பது அல்லாஹ்வை அழைப்பதற்கு இணையாக ஆகாது என்றால்,
கடவுள் தன்மைக்கு எதிரான "பிறப்பது" என்கிற தன்மை ஈஸா நபிக்கு இருக்கிற காரணத்தால் ஈஸா நபியை அழைப்பதும் கூட அல்லாஹ்வை அழைப்பதற்கு இணையாக ஆகாது !

ஈஸா நபியை "அழைப்பவர்கள்" எவரும் அவர் மரியம் அல்லது மேரி என்கிற ஒரு தாய்க்கு பிறந்தவர் என்பதை மறுக்கவில்லை.

இப்போது உங்கள் ஆர்கிமிடிஸ் கணக்கிற்கு மீண்டும் வருவோம்.

அல்லாஹ்வை தவிர யாரையெல்லாம் அவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இறந்தவர்கள், ஆகவே ஈஸா நபியும் இறந்தவர்

என்றால்,

மாதா அமிர்தானந்தமயி ஏன் இறக்கவில்லை?
இறக்காததால் அவர் உண்மையான கடவுள் தானா? இறந்த பிறகு தான் பொய் கடவுள் ஆவாரா?
சாய் பாபா உயிருடன் இருந்த காலத்தில் அவரை வணங்கியவர்கள் தவறிழைக்கவில்லை என்கிறீர்களா? அவர் உயிருடன் இருந்த காலத்தில் உண்மை கடவுளாக தான் வலம் வந்தார் என்கிறீர்களா?

இப்போது, சாய் பாபாவுக்கு அல்லாஹ்வின் சிஃபத்தை கொடுத்து யாரும் வணங்கவில்லை , அவர் உணவு உண்பார், தூங்குவார் என்று பதில் சொல்வீர்கள் என்றால்,

ஈஸா நபிக்கும் அல்லாஹ்வின் சிஃபத்தை கொடுத்து யாரும் வணங்கவில்லை , அவரும் உணவு உண்பார், தூங்குவார் என்று நம்பி தான் அழைக்கிறார்கள்.
அவர் ஒரு தாயின் கருவில் பிறந்தார் என்கிற அல்லாஹ்வின் சிஃபத்திற்கு மாற்றமான நம்பிக்கையுடன் தான் அவரை வணங்கினர்.

ஆக, இந்த வசனம் சாய் பாபாவையும் மாதா அமிர்தானந்தமயியையும் குறிக்கவில்லை என்றால் ஈஸா நபியையும் தான் குறிக்கவில்லை.

ஈஸா நபியை குறிக்கும் என்றால் சாய் பாபாவையும் மாதா அமிர்தானந்தமயியையும் தான் குறிக்கும்.

எப்படி வைத்தாலும் உங்கள் வாதம் தவிடு பொடியாகித் தான் போகும் !

உங்கள் அபத்தங்களில் மேலும் சிலவற்றை அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடரும்.. இன்ஷா அல்லாஹ்


உங்கள் தொடர் 3 பாகம் 2 இல், மற்றுமொரு நகைச்சுவை ஒன்றை பதிந்திருக்கிறீர்கள் !

உயிருள்ளவரும் இறந்தவரும் சமமில்லை என்று அல்லாஹ் சொல்கிறான்.

எதையுமே எடக்கு முடக்காகவும் எக்குத்தப்பாகவுமே விளங்கும் நீங்கள், இந்த வசனத்தை வைத்துக் கொண்டு என்னிடம எக்குத்தப்பாக கேட்ட கேள்வி,

""
ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்கிறாய், முஹம்மது நபி இறந்து விட்டார். இப்போது இருவரில் யார் சிறந்தவர் என்று சொல்.""

இப்படியொரு அபத்தமான வாதத்தை நான் இதற்கு முன் எங்கும் பார்த்தது கிடையாது என்ற போதிலும் இதற்கும் நான் தெளிவாக பதில் தந்தேன்.

இந்த வசனம், உயிருடன் இருப்பவர் உயிர் இல்லாதவரிடையே சிறந்தவர் யார் என்பதை கற்பிப்பதற்கு சொல்லப்படும் வசனமல்ல. 

இருவரும் சமமாக மாட்டார்கள் என்பதை சொல்லும் வசனம்.

சிறந்ததை பற்றி பேசும் வசனம் என்று உங்களைப் போல் யாரும் எக்குத்தப்பாக புரியக் கூடாது என்பதால் தானோ என்னவோ, அத்தோடு கூடுதலாக இரண்டு உதாரணங்களையும் சேர்த்து அல்லாஹ் சொல்கிறான்.

இருளும் வெளிச்சமும் சமமாகாது என்கிறான்.
வெப்பமும் நிழலும் சமாகாது என்கிறான்.

இருள் இருள் தான், வெளிச்சம் வெளிச்சம் தான். இருளுக்கு இருளின் தன்மை தான் இருக்குமே தவிர, வெளிச்சத்தின் தன்மை இருளில் இருக்காது.

இரண்டும் வெவ்வேறு என்பது தான் இதன் பொருளே தவிர,
இப்போது சொல், இருள் சிறந்ததா வெளிச்சம் சிறந்த்ததா? என்று யாராவது கேட்டால் சிந்தனை கோளாறு என்பது கேட்பவரிடம் தான் உள்ளது என்று பொருள்.

இரு விஷயங்களை ஒப்பீடு செய்யும் எல்லா இடங்களிலும் சிறந்தது சிறப்பு குறைந்தது என்றெல்லாம் கணக்கிட முடியாது. 
சிறந்ததைப் பற்றி சொல்லும் நோக்கத்தில் அந்த ஒப்பீடு செய்யப்படுகிறதா அல்லது இரண்டும் சமமில்லை என்பதை சொல்வது தான் நோக்கமா? என்பதை வைத்து தான் தீர்மானிக்க வேண்டும்.

டூத் பேஸ்டும் டூத் பிரஷும் சமமில்லை என்கிறேன் நான். இரண்டும் சமமில்லை என்று சொல்லி விட்ட காரணத்தால் இரண்டில் எது சிறந்தது என்று சொல் என்று இதற்கு கேள்வி கேட்கக் கூடாது.

சமமில்லை என்றால் சமமில்லை என்று புரிந்தால் போதும். டூத் பிரஷின் பயன்பாடு வேறு, டூத் பேஸ்டின் பயன்பாடு வேறு.. அதன் தன்மை வேறு, இதன் தன்மை வேறு..

இது தான் சமமில்லை என்பதற்கான அர்த்தம்.

அது போல, உயிருள்ளவரும் இறந்தவரும் சமமில்லை என்றால், உயிர் இருப்பவருக்கு என்ன தன்மையெல்லாம் உண்டோ அந்த தன்மை உயிரற்றவருக்கு இருக்காது. அவர் பார்ப்பது போல் இவர் பார்க்க மாட்டார், அவர் கேட்பது போல இவர் கேட்க மாட்டார். அவர் செயல்படுவது போன்று இவர் செயல்பட மாட்டார்.

இது தான் இந்த வசனத்தின் நோக்கமே அல்லாமல், இருவரில் யார் சிறந்தவர் என்று சொல்வதற்கு அல்ல.

இதற்கு பதில் சொல்கிறேன் என்று வந்த நீங்கள் கீழ்காணும் கேள்வியை கேட்கிறீர்கள்.

"""
அதாவது, ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்கள், ஆகவே நாம் பேசுவது அவருக்கு கேட்கும்.
முஹம்மது நபி உயிருடன் இல்லை, ஆகவே கேட்காது, இப்போது சொல் யார் சிறந்தவர்?""""""

இதை அபத்தம் என்று சொல்வதா? அல்லது வேண்டுமென்றே கேட்பதாய் கருதவா?

ஈஸா நபி உயிருடன் இருப்பதால் நாம் பேசுவது கேட்கும் என்று அல்லாஹ் சொல்கிறானா?

அல்லது நான் அப்படி எங்கேயாவது சொன்னேனா?

உயிருடன் இருப்பது மட்டுமே காது கேட்பதற்கு போதுமான தகுதியா?? வேறு தகுதிகள் எதுவும் அவசியமில்லையா?

நீங்கள் உயிருடன் தான் இருக்கிறீர்கள். நான் பேசுவது உங்களுக்கு கேட்கிறதா?

என்ன வாதம் புரிகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

அதற்கு தான் நான் கேட்டேன், நிசார் ஆகிய நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், முஹம்மது நபி இறந்து விட்டார்கள், இருவரில் யார் சிறந்தவர் என்று.

அதற்கு பதில் சொன்ன நீங்கள், நிசார் தன்னை நபியென்று வாதிடவில்லை என்கிற சம்மந்தமேயில்லாத பதிலை சொல்கிறீர்கள்.

நபி என்று சொன்னால் என்ன, சாதாரண மனிதனாக இருந்தால் என்ன? உயிருடன் இருப்பதும் உயிரில்லாமல் இருப்பதும் சமமில்லை என்று தானே அல்லாஹ் அந்த வசனத்தில் சொல்கிறான்?
அல்லாமல், உயிருடன் இருக்கும் நபியும் உயிரில்லாமல் இருக்கும் நபியும் சமமில்லை என்றோ
அல்லது
உயிருடன் இருக்கும் மனிதனோ உயிரில்லாமல் இருக்கும் நபியோ சமமில்லை என்றோ அல்லாஹ் அதில் சொல்லவில்லையே?

பிறகு ஏன் நிசார் தன்னை நபியென்று வாதிடவில்லை என்கிற பொருத்தமற்ற பதில்?

இறந்தவரும் உயிருடன் இருப்பவரும் சமமில்லை என்கிற பொதுவான இறை வசனத்தை, நபித்துவத்தோடு இணைத்து வாதத்தை நீங்கள் தான் துவக்கினீர்கள்.

ஈஸா நபி உயிருடன் இருப்பதால் அவர் சிறந்தவர், முஹம்மது நபி இறந்து போய் விட்டதால் அவர் சிறந்தவரில்லை என்று சொல்வீர்களா? என்று கூறியது நீங்கள்.

அல்லாஹ் பொதுவாய் மனிதர்கள் பற்றி சொன்ன வசனத்தை இரு நபிமார்களோடு நீங்கள் தான் தொடர்புபடுத்தினீர்கள்.

நீங்கள் தான் நபியோடு தொடர்புபடுத்தினீர்களே தவிர, அல்லாஹ் சொல்வது நிசார் முஹம்மது போன்ற மனிதர்களை தான்.

ஆகவே எனது கேள்வி அர்த்தமுள்ளது தான். 

அல்லது இப்படி வைப்போம். நிசார் அவர்கள் இறக்கவில்லை, நிசார் அவர்களது வாப்பா இறந்து விட்டார்கள். 
நான் பேசுவது உயிருடன் இருக்கும் நிசார் அவர்களுக்கு கேட்கும், இறந்து விட்ட அவர்களது வாப்பாவுக்கு கேட்காது. இப்போது சொல்லுங்கள், நீங்கள் சிறந்தவரா உங்கள் வாப்பா சிறந்தவர்களா?

நிசார் முஹம்மது உயிருடன் இருக்கிறார், முஹம்மது நபி இறந்து விட்டார்கள். இருவரில் யார் சிறந்தவர் என்று கேட்கையில், உங்களிடமிருந்து வர வேண்டிய ஒரே உருப்படியான பதில் என்னவாக இருக்க வேண்டும் தெரியுமா?

இங்கே சிறப்பு என்பது உயிருடன் இருப்பதை வைத்து தீர்மானிக்கப்படாது

என்பது தான்.

இந்த பதில் தான் நியாயமான, பொருத்தமான பதில். இது ஈஸா நபி, முஹம்மது நபியை தொடர்புபடுத்தி நீங்கள் கேட்டதற்கும் பொருந்தும். 

இரு தன்மைகளை சொல்லி இரண்டும் சமமில்லை என்று அல்லாஹ் சொன்னால் சமமில்லை என்று புரிவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சிறந்தது எது என்கிற ஆராய்ச்சியில் இறங்கக்கூடாது.. இறங்கினால் இப்படி தான் எக்குதப்பாய் மாட்டிக் கொள்ள நேரிடும்.

சரி, நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன்,

மிர்சா சாஹிப் உயிருடன் இருந்த காலத்தில் யார் சிறந்தவராக இருந்தார்? மிர்சாவா முஹம்மது நபியா?
என்பதற்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்.

உங்கள் அபத்தமான வாதம் எப்படி உங்களுக்கே செக் வைக்கிறது பார்த்தீர்களா?

சத்தியத்திற்கு தான் ஆதாரம் இருக்கும். அசத்தியத்திற்கு ஆதாரம் இருக்காது.
ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய், அதை மறைக்க இன்னொன்று.. என்று தான் செல்லும்.

உங்கள் வாதப்படி பார்க்கப்போனால், முஹம்மது நபி உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் மூஸா நபியை விட சிறந்தவர்கள்
மூஸா நபி இப்ராஹிம் நபியை விட சிறந்தவர்கள்.. இப்படியே போய் கொண்டே இருக்கலாம்.

ஆக கடைசியாக, சிறப்புகளில் இறுதி இடத்தை பிடிப்பது ஆதம் நபி தான்.. ஏனெனில், அவர் உயிருடன் இருக்கும் போது தான் அவர் சிறந்தவர். அவருக்கு பின் வந்தவர்கள் உயிருடன் இருந்த போது அவர் உயிருடன் இருக்கவில்லை, ஆகவே உங்களது உயரிய (?) தத்துவத்தின் படி எல்லா நபிமார்களும் ஆதம் நபியை விடவும் சிறந்தவர்கள் தான்..
அல்லது எல்லா நபிமார்களை விடவும் ஆதம் நபி சிறப்பு குறைந்தவர்கள் தான் !!

ஆஹா அருமை ! என்ன ஒரு அற்புத தத்துவத்தை சொல்லியிருக்கிறீர்கள்.. !

இந்த அற்புத (?) வாதத்தை நீங்கள் வைத்ததற்காகதான் உங்களை சார்ந்தவர்கள், எக்ஸலென்ட், நாக்கில் கொக்கு போட்டு விட்டீர்கள் என்றெல்லாம் உங்களை பாராட்டி கமன்ட் எழுதியிருந்தார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

அது உண்மையிலேயே பாராட்டுக்கள் தானா அல்லது வஞ்சப்புகழ்ச்சியா என்று எனக்கு தெரியவில்லை.

உங்கள் மூன்றாம் தொடருக்கான பதில்கள் முடிந்தன.

இனி ஹசரத் மிர்சா குலாம் அஹமத் சாஹிபின் வண்டவாளங்களுடன் தொடர்ந்து சந்திப்போம், இன்ஷா அல்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக