சனி, 24 மே, 2014

வென்றது பாஜக !


மோடி அலை என்பது எப்படி நேற்று வரை பொய் பிரச்சாரமாக பார்க்கப்பட்டதோ, அதே பொய் தகவலாய் தான் இன்றும் நிற்கிறது.

காரணம், 300 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் தகுதியை அக்கட்சி பெற்றாலும், ஒட்டு மொத்த தேசிய அளவிலான வாக்குகளில் 32 சதவிகிதம் தான் பாஜகவினருக்கு உரித்தானது.

அதாவது, நாட்டில் அதிகமானோர் மோடி ஆட்சிக்கு வரக் கூடாது என விரும்பியவர்கள் தான்.

இந்தியாவின் ஜனநாயக முறை என்பது கேலிக்கூத்தானது என்பதால் அதிகமானோர் வேண்டாம் என்று கூறியும் கூட ஒரு கட்சியால் வெற்றி பெற முடியும், ஆட்சியும் புரிய முடியும் என்பதற்கு இந்த தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.

மோடி ஆட்சிக் கட்டிலில் அமரக்கூடாது எனக்கூறி எதிர்த்தவர்களெல்லாம் ஓரணியில் நிற்காது சிதறிப்போனது மோடிக்கு சாதகமாய் போனது.
எதிர்ப்பது மட்டும் போதாது, சாதுரியத்துடன் எதிர்க்க வேண்டும் என்கிற பாடத்தை அரசியலின் கைக் குழந்தை ஆம் ஆத்மி கட்சி இன்னேரம் உணர்ந்திருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெற்று விடலாம் என்கிற வெற்றி கணக்கை துவக்கம் முதலே முதல்வர் ஜெயலலிதா கொண்டிருந்தது அவரது தன்னம்பிக்கைக்கும் அரசியல் சாதுரியத்திற்கும் எடுத்துக்காட்டு.

செய்வீர்களா செய்வீர்களா ... கோஷம் கேலியாக பார்க்கப்பட்டாலும் ஜெயாவின் அரசியல் சாதுரியத்தில் அதுவும் ஒரு பாகம் என்பது மறுக்க இயலாத உண்மையாகி விட்டது.

மாநில அளவில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனை, விலை வாசி உயர்வு போன்ற எதுவும் மக்கள் மனதில் நிலைத்திருக்கவில்லை என்பதும், பொது ஜனத்தின் நினைவாற்றல் குறைவினை சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியமும் அதிமுகவிற்கு உள்ளது என்பதும் அதிமுகவின் தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.

தேர்தலுக்கு பிறகு மோடியை திமுக ஆதரிக்குமா அல்லது அதிமுக ஆதரிக்குமா? என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு யாரும் எதிர்பாராத விடையொன்று கிடைத்திருப்பது தான் இந்த தேர்தல் முடிவு தந்திருக்கும் வியப்பின் உச்சம் !

வென்றாலும் மோடிக்கு ஆதரவளிக்க மாட்டேன் என்று கூறிய திமுகவிற்கு, அதை நிரூபிப்பதற்கான சூழல் ஏற்படவில்லை.
அது போல்,
வென்றால் ஆதரிக்கலாம் என்று ரகசியமாய் காய் நகர்த்திய அதிமுகவிற்கு அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.

காங்கிரஸின் கையாலாகா ஆட்சி, அதை சாமர்த்தியமாய் பயன்படுத்த தெரியாத மூன்றாம் அணி, காசுக்காக மோடி அலை என்கிற பொய் பிம்பத்தை உருவாக்கிய ஊடக வியாபாரிகள் என பல்வேறு காரிணிகள், பாஜக வரலாறு காணாத வெற்றியை காண வழி கோலியுள்ளது !

பாஜக வென்றது.. நாட்டின் ஜனநாயகமும் மதசார்பின்மையும் நட்டாற்றில் விடப்பட்டது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக