உங்கள் தொடர் 4 க்கான எனது பதில்
ஈஸா நபி இந்த உலகிற்கு மீண்டும் வர மாட்டார்கள் என்று ஒரு பக்கம் சொல்கிறீர்கள்.
குர் ஆனுடன் சேர்த்து ஹதீஸையும் நம்புவதாய் வேறு சொல்லிக் கொள்கிறீர்கள்.
ஹதீஸ்களில் ஈஸா நபி இவ்வுலகிற்கு மீண்டும் வருவார்கள் என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது, குர் ஆனுடன் சேர்த்து ஹதீஸையும் நம்புகிறேன் என்று சும்மா பொய் சொல்கிறீர்களா அல்லது நிஜமாகவே ஹதீஸ்களையெல்லாம் ஏற்பவர் தானா நீங்கள் ?
என்பது நான் பலமுறை எழுப்பி வரும் கேள்வி.
இதற்கு பதில் சொல்வதற்கு தான் இந்த தொடர் 4 ஐ எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இந்த தொடர் முழுக்க நானும் தேடிப் பார்த்த வகையில், எனது இந்த கேள்விக்கு எந்த பதிலையும் எழுதவேயில்லை என்பது ஆச்சர்யம் தான் !!
இதே கேள்வியை ஐந்தாவது முறையாக மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன்.
ஈஸா நபி மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்பதாக வரக்கூடிய எண்ணற்ற ஹதீஸ்கள் குறித்த உங்கள் நிலைபாடு என்ன?
அவை உண்மை தான் என்பது உங்கள் நிலையா அல்லது அந்த ஹதீஸையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்பது உங்கள் நிலையா?
இதை விளக்கவும்.
இத்துடன் உங்கள் நான்கு தொடர்களுக்கு வரிக்கு வரி பதில் எழுதியிருக்கிறேன்.
இத்துடன், நான் ஏற்கனவே எழுப்பியிருந்த சில கேள்விகளை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
முஹம்மது நபிக்கு பிறகு இன்னொரு நபி வருவார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டிருந்தேன் பதில் இன்னும் வரவில்லை. (உங்கள் தொடர்கள் 5, 6 இலும் இல்லை !)
அப்படி வருவார் என்றால் அந்த நபி மிர்சா சாஹிப் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டிருந்தேன் பதில் இன்னும் வரவில்லை. (உங்கள் தொடர்கள் 5, 6 இலும் இல்லை !)
புஹாரி 3455 இல் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு வேறு நபி வர மாட்டார் என்று தான் முஹம்மது நபி சொல்கிறார்கள் என்று சொன்னீர்களே, "குறிப்பிட்ட இடைவெளி" என்று ஹதீஸில் இல்லையே, இது இடைசெருகல் தானே? என்று கேட்டிருந்தேன். பதில் இன்னும் வரவில்லை. (உங்கள் தொடர்கள் 5, 6 இலும் இல்லை !)
அஹமத் 13322 வில், இறுதி நபி நான் தான் என்று இன்னும் தெளிவாக முஹம்மது நபி சொல்கிறார்களே அதற்கு என்ன பதில் என்று கேட்டிருந்தேன். பதில் இன்னும் வரவில்லை. (உங்கள் தொடர்கள் 5, 6 இலும் இல்லை !)
குர் ஆனில் பிளேக் நோய் பற்றி அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான் என்று உங்கள் இமாம் மிர்சா சாஹிப் சொல்லியிருக்கிறாரே, அது எந்த வசனம் என்று கேட்டிருந்தேன், ஒரு குறிப்பிட்ட வசனத்தை சுட்டிக் காட்டினீர்கள், ஆனால் அந்த வசனத்திற்கும் பிளேக் நோய்க்கும் எந்த சம்மந்தமுமில்லை.
ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன், பதில் இல்லை.உங்கள் தொடர்கள் 5, 6 இலும் பதில் இல்லை !)
மீதமுள்ள உங்கள் தொடர்கள் 5 & 6 ஆகியவற்றுக்கான எனது பதில்களை ஒருசில தினங்களுக்கு பின் தருகிறேன், இன்ஷா அல்லாஹ்.
அனைத்தையும் பெற்றுக் கொண்டு, ஒரு முறைக்கு இரு முறை வாசித்து விட்டு பின் பதில் எழுதுங்கள்.
உலகில் சாதாரண விஷயத்தில் கூட பொய் பேசுபவர்கள் பிடிக்கப்படுகிறார்கள், நீ குறிப்பிட்டபடி பொய்யையே மூலதனமாக கொண்ட மிர்சா சாஹிபுக்கு அல்லாஹு தண்டனை வழங்கவில்லையே ஏன்?
என்பது உங்கள் தொடர் 5 இல் நீங்கள் வைத்திருக்கும் ஒரே வாதம்.
இதுவெல்லாம் நியாயமான, அறிவுப்பூர்வமான வாதம் தான் என்று தான் எண்ணுகிறீர்களா அல்லது விவாதம் என்று வரும் போது மட்டும் இப்படியெல்லாம் கேட்க வேண்டும் என்று உங்களுக்கு போதிக்கப்பட்டிருக்கிறதா?
ஒருவரை அல்லாஹ் இவ்வுலகில் தண்டிக்கவில்லை என்பதால் அவர் நல்லவர் என்று முடிவுக்கு வந்து விடலாம் என்பது எந்த வகையில் சரி?
அல்லது,
பொய் நபி என்று யாரெல்லாம் வருகிறார்களோ அவர்கள் அனைவரையும் இவ்வுலகிலேயே நான் தண்டிப்பேன் என்று அல்லாஹ் சொல்கிற குர்ஆன் வசனங்கள் ஏதும் இருக்கிறதா?
பொய்யர்கள் நிச்சயம் இவ்வுலகிலேயே தண்டிக்கப்படுவார்கள் என்கிற உத்திரவாதம் எதையும் அல்லாஹ் தரவில்லை.
அல்லாஹ் சொல்லும் உத்திரவாதமெல்லாம் மறு உலகில் தான். சிலர் இவ்வுலகிலும் தண்டிக்கப்படுவார்கள், ஒரு சமுதாயமே கூட இவ்வுலகிலேயே கூண்டோடு அழிக்கப்பவும் செய்வார்கள்.
அதே சமயம், சிலரை அல்லாஹ் இவ்வுலகில் விட்டு வைக்கவும் செய்வான்.
ஆனால், மறுமை நாளில் அவனது பிடி கடுமையாக இருக்கும்.
அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்' என்றும் கூறுவீராக!(6:57)
நியாயத் தீர்ப்பு நாளில் அவன் எழுதும் தீர்ப்பு தான் நிரந்தரமானது.
இவ்வுலகில் கெட்டவர்கள் நன்றாக வாழவும் செய்வார்கள். அதுவெல்லாம் அவர்கள் நல்லவர்கள் என்பதை நிரூபிக்க உதவும் என்பது மிகவும் தவறான வாதம்.
நரேந்திர மோடி, அத்வானி போன்றோர் நன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.
முஸ்லிம்களை கொன்று குவித்த பால் தாக்கரே நன்றாக வாழ்ந்து இயற்கை மரணம் தான் அடைந்தான்.
நான் தான் கடவுள் என்று சொல்லி பல்லாயிரம் மக்களை வழிகெடுத்த சாய் பாபா செல்வ செழிப்புடன் வாழ்ந்து மறைந்தவன் தான்.
சாய் பாபாவை அல்லாஹ் தண்டித்தானா? இல்லையே.. ஆகவே சாய் பாபா கடவுளின் அவதாரம் என்பது மெய்ப்பிக்கபட்டுள்ளது என்று சொல்வது எப்படி அபத்தமான வாதமோ அது போன்று தான் நீங்கள் சொல்வதும் உள்ளது.
நான் ஏற்றுக் கொண்டிருக்கும் ஏகத்துவ கொள்கை கூட அத்தகைய சத்தியத்தின் மீது நிறுவப்பட்டது என்றால், எது சரியான கொள்கையோ அதை நான் ஏற்பேன் என்று எனக்குள் நான் கொண்டிருக்கும் சத்தியம்.
சரியான கொள்கையை ஏற்பேன் என்று என்னிடம் சத்தியம் செய்ய சொன்னீர்களே, அதற்கு நான் சொன்ன பதில் தான் இது.
காதியானி கொள்கை மட்டுமல்ல, வேறெந்த கொள்கையானாலும், அது சரி என்று எனக்கு பட்டால் சத்தியமாக அதை ஏற்பேன்.
இதை தான் அங்கே குறிப்பிட்டிருந்தேன்.
வேறு எந்த வாதமும் உங்கள் 5 ஆம் தொடரில் இல்லை.
தொடர் 6 க்கான எனது பதில் அடுத்து.. இன்ஷா அல்லாஹ்
மிர்சா சாஹிபின் நூல்களை நான் நேரடியாக படிக்க வேண்டும் எனவும் அவரது நூலிலிருந்து மேற்கோள் காட்டும் போது வாசகத்தை அப்படியே தர வேண்டும் எனவும் கேட்டுள்ளீர்கள்.
இது உங்கள் கொள்கை பலகீனத்தையே காட்டுகிறது.
குர்ஆனில் காஃபிர்களை வெட்டுங்கள், கொல்லுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே, உங்கள் அல்லாஹ் இவ்வளவு கொடூரனா?
என்று நேரடி வசனங்களை மேற்கோள் காட்டாமல், பொதுவாக தான் இஸ்லாத்தின் எதிரிகள் கேள்வி கேட்பார்கள்.
அவர்கள் பொதுவாக கேட்டாலும், அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள், எந்த வசனத்தில் இந்த கருத்து இடம்பெறுகிறது என்பதெல்லாம் நமக்கு தெரியும் என்பதால் முழு வசனத்தையும் மேற்கோள் காட்டும்படி அவர்களை நாம் கேட்க மாட்டோம்.
நேரடியாகவே விளக்கத்தை சொல்லி விடுவோம்.
மிர்சா சாஹிபின் நூல் என்பது உங்கள் வேதம். அல்லாஹ்வின் வஹீ அந்த நூலில் இருப்பதாக நம்புகிறவர்கள் நீங்கள்.
அந்த நூலில், நூலின் பெயரையும் குறிப்பிட்டு, அதன் பக்கத்தையும் குறிப்பிட்டு, இந்த நூலில் இந்த பக்கத்தில் இந்த கருத்துப்பட மிர்சா சாஹிப் இதை சொல்லியுல்ளாரே, அது சரியா?
என்று கேள்வி கேட்டால் முழு வாசகத்தையும் தர வேண்டும் என்று நீங்கள் அடம்பிடிப்பது நியாயமான கோரிக்கையாக எனக்கு தெரியவில்லை.
நானே நேரடியாக அந்த நூலை வாசிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். அந்த அவசியமும் எனக்கு இல்லை. நானே வாசித்தாலும், வேறொருவர் வாசித்து எனக்கு கொடுத்தாலும் கருத்து மாறப்போவதில்லை.
ஒரு வேளை நான் பாகம் பக்கத்துடன் மேற்கோள் காட்டும் செய்தி அந்த நூலில் இல்லவே இல்லை என்றோ அவ்வாறு மிர்சா சாஹிப் ஒரு போதும் சொன்னதே கிடையாது என்றோ நீங்கள் சொல்லும் பட்சத்தில், அப்போது, நீயே படித்து பிறகு கேள்வி கேள், இன்னொருவர் சொல்வதை எடுத்து சொன்னால் இப்படி தான், இல்லாத விஷயங்களையெல்லாம் நம்ப வேண்டி வரும், என்று நீங்கள் சொல்லலாம்.
ஆக, இது, உங்கள் தரப்பில் என் கேள்விக்கு பதில் இல்லாததால் அதை சமாளிக்க சொல்லப்படும் பதிலாகவே தெரிகிறது.
எனக்குள் அல்லாஹ் நுழைந்து விட்டான், இப்போது நான் தான் அல்லாஹ், நான் தான் இந்த உலகை படைத்தேன், நான் தான் இந்த மனித குலத்தை படைத்தேன் என்று மிர்சா சாஹிப் சொல்கிறாரே? என்று கேட்டதற்கு,
நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை, மாறாக அல்லாஹ் எறிந்தான் என்று எட்டாவது அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்கிற வசனத்தை பதிலாக தருகிறீர்கள்.
சுப்ஹானல்லாஹ்.
நீர் எறிந்த போது உண்மையில் நீர் எறியவில்லை, அல்லாஹ் தான் எறிந்தான் என்று அல்லாஹ்வே சொல்வதும், நான் தான் அல்லாஹ் என்று ஒரு மனிதன் சொல்வதும் சமமா??
அங்கே சொல்வது அல்லாஹ். இங்கே சொல்வது மிர்சா எனும் மனிதன். ஒரு மனிதன் தன்னையே கடவுள் என பிரகடப்படுத்தி எழுதியுள்ளாரே என்று கேட்டால், அல்லாஹ் நேரடியாக சொல்லும் வாசகத்தை இதற்கு ஆதாரமாக காட்டுவது எந்த வகையில் நியாயம்?
அதை விட, அல்லாஹ் எறிந்தான் என்றால், அல்லாஹ் உதவி புரிந்தான் என்று பொருள். போரில் உனக்கு நான் உதவி செய்தேன் என்பதை தான் அல்லாஹ் இந்த வார்த்தையில் சொல்கிறான்.
நல்லடியார்கள் பிடிக்கும் கையாக பார்க்கும் பார்வையாக நான் மாறி விடுவேன் என்று கூட அல்லாஹ் சொல்கிறான். ஏழைக்கு நீ உணவளித்தால் அங்கே அல்லாஹ்வை கண்டிருப்பாய் என்று கூட அல்லாஹ் சொல்கிறான்.
இதுவெல்லாம் அல்லாஹ் கூறும் உவமைகள்.
அல்லாஹ் ஒன்றை உவமையாக கூறுவதும், உங்களையும் என்னையும் போன்றவர்கள், நான் தான் அல்லாஹ் நான் தான் இவ்வுலகை படைத்தேன் என்று சொல்வதும் சமமா?
அப்படியானால் ஃபிர் அவனின் வாதத்தையும் இதே அளவுகோல் கொண்டு நியாயப்படுத்த வேண்டியது தானே?
சாய் பாபா, நான் தான் கடவுள் என்று சொன்ன போது, ஆம் சரி தான், அல்லாஹ்வே குர் ஆனில், நீர் எறிந்த போது நான் தான் எறிந்தேன் என்று சொல்லி விட்டான், ஆகவே சாய் பாபாவுக்க்குள் அல்லாஹ் இருக்கவும் வாய்ப்பிருக்கு என்று தத்துவம் பேச வேண்டியது தானே?
அல்லாஹ் குர் ஆனில் உவமையாக சொன்னதை எடுத்து வந்து, நானே அல்லாஹ், நான் தான் இவ்வுலகை படைத்தேன் என்று சொன்ன ஒருவருக்கு முட்டுக் கொடுக்கிறீர்கள் என்றால் அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
இது பச்சை ஷிர்க்.
பிளேக் நோய் பற்றி குர் ஆனில் எங்குமே இல்லை, அப்படி இருக்கிறது என்று மிர்சா சாஹிப் சொல்கிறார், எந்த வசனத்தில் இருக்கிறது? என்று கேட்டதற்கு சம்மந்தமேயில்லாத ஒரு வசனத்தை எடுத்து காட்டினீர்கள்.
அந்த வசனத்தில் பிளேக் நோய் பற்றி எதுவும் இல்லை என்று எனது முந்தைய பதிலின் போதே சொல்லியிருந்தேன்.
///அந்த வசனத்தில் உனக்கு புரியாதது என்ன என்பதை எடுத்துக்காட்டினால் என்னால் பதில் சொல்ல முடியும்//
என்று கேட்கிறீர்கள். அந்த வசனத்தில் எனக்கு புரியாதது, அதில் பிளேக் நோய் பற்றி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்பது தான்.
அந்த வசனம் பிளேக் நோய் பற்றி பேசுகிறது என்பதை என்னால் புரிய முடியவில்லை.
புரியாதது எது என்பதை சொல்லி விட்டேன். இப்போது பதில் சொல்லுங்கள்.
இது தவிர, வேறு உருப்படியான வாதம் எதையும் இந்த தொடரில் நீங்கள் எழுப்பவில்லை.
சில கேலி கிண்டல்கள் மட்டும் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.
அவைகளுக்கு நான் பதில் சொல்லி எனது நிலையை தாழ்த்த விரும்பவில்லை.
பொய் நபியை அல்லாஹ் ஏன் அழிக்கவில்லை என்று மீண்டும் இதிலும் கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை முந்தைய பதிவில் விளக்கி விட்டேன்.
மிர்சா சாஹிப் பொய் சொல்கிறார் என்பதற்கு இன்னொரு ஆதாரமாக,ஈஸா நபி இறக்கவில்லை மீண்டும் வருவார் என்று அவரே சொன்னதாக ஒரு சான்றினை காட்டியிருந்தேன். (ஆயினே கமாலாத் என்கிற நூல் பக்கம் 409)
இதற்கு என்ன பதில் என்று கேட்டேன், இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லை.
மிர்சா சாஹிப் பற்றிய இன்னும் இரு கேள்விகளை எழுப்பி எனது பதிலுரைகளை நிறைவு செய்கிறேன்.
ஈசா நபியின் கபுர் பாலஸ்தீனில் உள்ளது என்று நூருல் ஹக் இத்மாமுல் ஹுஜ்ஜா என்கிற நூல், பக்கம் 296 இல் மிர்சா சாஹிப் கூறியுள்ளார்.
ஈசா நபியின் கபுர் காஷ்மீரில் உள்ளது கிஸ்தி நூஹ், பக்கம் 25 இல் கூறியிருக்கிறார்.
இரண்டில் எது சரி? முரண்பட்டு பேசுபவர் நபியாக இருக்க முடியுமா?? என்பத|ற்கு விடை சொல்லவும்.
மூஸா நபி மரணிக்கவில்லை என்று அல்லாஹ்வே சொல்லியுள்ளான் என்று நூருல் ஹக், பக்கம் 68 இல் சொல்லியுள்ளார் இந்த மிர்சா சாஹிப்.
அல்லாஹ் ஒன்றை சொன்னான் என்றால் குர் ஆனில் அது இருக்க வேண்டும். அல்லது நபி (சல்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களில் இருக்க வேண்டும்.
மூசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்று குர் ஆன், ஹதீஸில் இருந்து எடுத்து காட்டுங்கள்
என்று கூறி இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.
ஆறு பதிவுகளுக்கும் தனித்தனியாக பதில் எழுதுங்கள்.
உங்கள் அடுத்தடுத்த தொடர்களை தொடர் 7, தொடர் 8 என்று வரிசைப்படுத்துங்கள்.
மீண்டும் தொடர் 1 என்று எழுதினால் குழப்பம் ஏற்படும் என்பதனால் சொல்கிறேன்.
வஸ்ஸலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக