திங்கள், 10 மார்ச், 2014

ஒற்றுமைக்கான இலக்கணம்


ஒற்றுமைக்கான தேடல் என்பது நெளிவு சுளிவுடன் கூடிய கடினமான பாதையில் மேற்கொள்ள வேண்டிய பயணமல்ல; மிகவும் இலகுவான இலக்கு தான் ஒற்றுமை என்பது.

தவறு எங்கே நிகழ்கிறது என்றால் ஒற்றுமையை விரும்பும் எவரும் அந்த இலக்கை அடைவதற்கான வழியிலும் ஒற்றுமை வேண்டும் என விரும்புவதில்லை. 

இலக்கு எப்படி முக்கியமோ அது போல் அதை அடைவதற்கு நாம் மேற்கொள்ளும் பயணமும் முக்கியம் என்பதை புரியாத காரணத்தால் தான் இன்று ஒற்றுமைக்கான இலக்கணம் இது போன்றவர்களால் கேலிக்குரியதாக்கப்படுகிறது !

நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன், நீயும் போட்டியிடுகிறாய், ஆகவே நாமிருவரும் ஒற்றுமையாய் இருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அபத்தம் !
ஒரே காரியத்தை இருவர் செய்வதால் இருவரும் ஒற்றுமையாய் இருப்பதாக அர்த்தமில்லை.

சரி, நானும் பாஜகவை எதிர்க்கிறேன், நீயும் எதிர்க்கிறாய் என ஒரே இலக்கை கொண்டிருந்தாலாவது அது ஒற்றுமையாகுமா? என்றால் அதுவும் தவறே!
ஹிந்துவும் நாத்திகத்தை மறுக்கிறான், முஸ்லிமும் மறுக்கிறான் என்பதால் கொள்கையளவில் இருவரும் ஒன்றுபட்டு விட்டார்கள் என்று பொருள் வருமா?அப்படி யாராவது கருதுவோமா?

தேர்வு செய்யும் வழியை ஒன்றிணைக்கவில்லையெனில் அவரவர், தான் சார்ந்திருக்கும் வழியின் படி தான் இலக்கை அடைய முயற்சிப்பர்.

சில வழிகள் கடினமானதாக இருக்கும், சில வழிகள் மயிலிறகால் வருடுவது போலிருக்கும்.
சில வழிகளில் நேர்மை, நாணயம் இருக்கும், சிலவற்றில் வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கும்.
மார்க்கத்தை விட்டும் தடம் புரளாத வழிகள் இருக்கும், மார்க்கத்தை அடகு வைத்து பயணிக்கும் வழிகளும் இருக்கும்.

அனைத்தும் சமமல்ல ! அனைத்தும் இலக்கை சரியாய் அடைவதற்கு உதவி செய்பவையுமல்ல !

ஒரே புள்ளியிலிருந்து துவங்குங்கள்,
ஒரே பாதை வழியாக செல்லுங்கள் ..
ஒற்றுமை எனும் இலக்கு வெகுதூரமில்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக