செவ்வாய், 18 மார்ச், 2014

இறை நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு ஹாஜரா அம்மையார்


இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை வலிமையாக இருந்தால் எத்தகைய சோதனைகளையும் வெல்ல முடியும் என்பதற்கு அன்னை ஹாஜரா அவர்களின் வரலாறானது மிகப்பெரிய‌ சான்றாகும். 

மனிதர்கள், தண்ணீர், விலங்குகள், விவசாயம் எதுவுமே இல்லாத பாலைவனத்திலே இன்றைய கஅபா அமைந்துள்ள இடத்திலே கைக் குழந்தையோடு மனைவியை விட்டு விட வேண்டுமென இறைவன், இப்ராஹீம் நபி அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றான்.

ஏகத்துவத்தின் தந்தையான இப்ராஹிம் நபி, துளியும் சஞ்சலப்படாமல் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்க தயாராகிறார்கள். மனைவி, குழந்தையை சுடும் பாலைவனத்தில் விட்டு விடுகிறார்கள்.
அப்போது நடந்த சம்பவங்களை நபி (ஸல்) அவர்கள் விளக்குவதை பாருங்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜரா அம்மையார் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேற்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள்.
அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள்.

அவர்களுக்கு அருகே பேரிச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர் பை ஒன்றையும் வைத்தார்கள்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, "இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.
இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள்.

ஆகவே, அவர்களிடம் ஹாஜரா (அலை) அவர்கள், "அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?'' என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள்.

அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், "அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்'' என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். (புகாரி 3364)

சுப்ஹானல்லாஹ் ! என்ன ஒரு இறை நம்பிக்கை !!

இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது (60:4)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக