ஏகத்துவ சிந்தனையை கொண்டவர்கள் கூட தடுமாறி விடும் தருணம் சோதனைகள்.
ஒருவருக்கு தோல்விக்கு மேல் தோல்வியும், சோதனைக்கு மேல் சோதனையும் ஏற்படும் சமயத்தில் அவர் அல்லாஹ்வின் மகத்தான அருளுக்கு தான் உள்ளாகிறார் என்பதே குர்ஆன், ஹதீஸ் கூறுகிற பேருண்மை.
உலக வாழ்வில் எந்த சிரமங்களையும் சந்திக்காத நல்லதோர் வாழ்வை இறுதி வரை பெற்றிருப்பவர்கள் தான் உண்மையில் தங்கள் நிலை குறித்து கவலை கொள்ள வேண்டும்.
அதிக சிரமங்களை சந்திக்கிற ஒருவர், தான் செல்கிற மார்க்க ரீதியிலான வழியானது நேரானது தான் என்று ஆறுதலடைந்து கொள்ளலாம்.
இதில் விதிவிலக்குகள் இருக்கலாமே தவிர, பொதுவாய் இஸ்லாம் கூறும் அளவுகோல் இது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான்.
ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்'' என்று கூறினார்கள். நூல் : திர்மிதி 2322
சோதனைகள் நமக்கு அதிகம் வந்து கொண்டே இருக்கிறது என்றால் நமது கொள்கை உறுதி அதிகமாய் இருக்கிறது என்று வற்றாத பேரானந்தத்தை நாம் அடையலாம்.
சோதனைகள் வரவர, இம்மையில் நாம் செய்த பாவங்கள் அழிந்து கொண்டே வருகின்றன என்று ஆறுதலைடயலாம் !
இந்த ஆனந்தத்தையும் ஆறுதலையும், சோதனைகளை சந்திக்காத, எப்போதும் எல்லா வளமும் பெற்றவர்களால் அனுபவிக்க இயலாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (புகாரி 5642)
ஆக, ஒருவர் தமது வாழ்க்கையில் எல்லாம் சரியாய் செல்கிறது என்பதற்காக
தமக்கு அல்லாஹ் அருள் செய்து விட்டான் என்று மார்தட்டிக் கொள்ளவும் முடியாது ;
அது போல், வாழ்வில் அவன் சந்திப்பவை அனைத்துமே சவால்களாய் இருந்தால் அவன் அல்லாஹ்வின் அருளை இழந்தவனாகவும் கருதப்பட முடியாது !
எதிர்மறையாய் இருக்கலாம் என்கிற அச்ச உணர்வில் தங்கள் பாதையை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் முதலாமவர்களும்,
சோதனைகளை அழகிய பொறுமை மூலம் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற கவனத்துடன் இரண்டாமவர்களும் தங்கள் உலக வாழ்வை கழிக்க வேண்டும் !
உலக வாழ்க்கை இன்னும் சிறு காலம் தான் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக