இஸ்லாமிய போர்வையில் இரட்டை வேடம் போடும் எஸ்டிபிஐ எந்த அளவிற்கு மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன என்கிற பட்டியலை நாம் இடும் போது, நாங்களொன்றும் இஸ்லாமிய கட்சி இல்லையே என்று பதில் சொல்கின்றனர்.
மார்க்க ஞானம் குறைவாய் இருந்த காலகட்டங்களில் இளைஞர் பட்டாளத்தை மூளை சலவை செய்து இதோ உங்களுக்கான ஒரு அமைப்பை நாங்கள் உருவாக்கி விட்டோம், இதோ இஸ்லாமிய ஆட்சி வரப்போகிறது, இதோ வந்தே விட்டது என்றெல்லாம் பசப்பு வார்த்தைகள் கூறி ஆள் சேர்க்கும் நாட்களில், நாங்கள் இஸ்லாமிய அமைப்பு நாங்கள் இஸ்லாமிய அமைப்பு என்று பேசிய வாய்களெல்லாம் இன்று, இவர்களது மார்க்க விரோத போக்கினை சுட்டிக்காட்டுகையில் பிரண்டு பேசுகிறது என்றால் இது ஒன்றே இவர்களது சந்தர்ப்பவாத போக்கிற்கு போதுமான சான்று.
மேலும், முன்பு தான் இந்த இஸ்லாமிய ஆட்சி என்கிற லட்சியம் எங்களுக்கு இருந்தது, இப்போது அது இல்லை என்று இன்னொரு பக்கம் தங்களது கையாலாகா நிலைக்கு முட்டுக் கொடுக்க முற்படுகின்றனர் சிலர்.
முஸ்லிம்களை இஸ்லாமிய ஆட்சி அமைப்போம் வாருங்கள் என்று அழைத்த போது இருந்த செயல் திட்டம் இன்று எஸ்டிபிஐ என்கிற அரசியல் கட்சிக்கு இருக்கிறதா? இல்லை, அதை நீக்கி விட்டோம் என்றால், அதை நீக்கியதற்கான ஆதாரம் என்ன? ஆள் சேர்க்கும் வரை இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய ஆட்சி என்போம், ஆள் சேர்ந்த பிறகு கல்லையும் மண்ணையும் வணங்க சென்று விடுவோம் என்றால், இஸ்லாமிய ஆட்சி என்கிற லட்சியத்தை கிறுக்குத்தனமாய் நம்பி இவர்கள் பின்னால் அணிவகுத்த மக்களிடம், அந்த லட்சியத்தையெல்லாம் நாங்கள் தூக்கி எறிந்து விட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யும் தார்மீக கடமை இவர்களுக்கு வேண்டாமா?
சரி நான் கேட்கிறேன், அரசியலில் நுழைவதற்கு முன்பு தான் எந்த செயல் திட்டமும், எந்தவித அடிப்படை அர்த்தமும் இல்லாமல், இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்போகிறோம் என்றார்கள், சரி, இப்போது அரசியலிலும் நுழைந்தாகி விட்டது, ஓட்டுப் பொறுக்கி, MP, MLA ஆகி, முதலமைச்சராகி, பிரதமராக ஆகும் ஆசையையும் கொண்டாகி விட்டது.
ஒரு வாதத்திற்கு, ஒட்டு மொத்த இந்தியாவும் எஸ்டிபிஐயை ஆதரிக்கிறது என்றே வைப்போம், 540 இல் 540 உம் இவர்களுக்கே கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதன் பிறகு இவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்வார்களே, அது இஸ்லாமிய ஆட்சியா அல்லது இந்திய அரசியல் அமைப்பிலான ஆட்சியா?
அப்போதும் இந்திய அரசியல் அமைப்பிலான ஆட்சியை தான் இவர்களால் நிறுவ முடியும். ஒட்டு மொத்த இந்தியாவும் இவர்களை ஆதரித்து ஆட்சி கிரீடத்தை வழங்கினால் கூட செய்ய முடியாத ஒரு கற்பனை கோட்டையை தான் இவர்கள் இது நாள் வரை கட்டி வந்திருக்கிறார்கள் என்பதை கூட விளங்காமல் இவர்கள் பின்னால் சிந்தனையற்று சென்றவர்களெல்லாம், இவர்கள் செய்யும் மார்க்க விரோத காரியங்களை கண்டு வெளியேற துவங்கி விட்டனர்.
ஆர்எஸ்எஸை எதிர்க்கிற போது மட்டும் முஸ்லிம்கள் என்கிற முகமூடி,
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் போது மட்டும் முஸ்லிம்கள் என்கிற முகமூடி
அதுவே, குர் ஆன் ஹதீஸை மக்களிடம் போதனை செய்திருக்கிறீர்களா? என்று கேட்கையில், நாங்கள் பொது கட்சி என்கிற மற்றொரு முகமூடி
குர் ஆன் ஹதீஸுக்கு எதிரான இன்னின்ன காரியங்களை உங்கள் கட்சி செய்கிறதே? என்று கேட்கையில், நாங்கள் எங்களை முஸ்லிம் அமைப்பு என்றா சொன்னோம்? என்று பேசும் இரட்டை நாக்கு..
அதிமுக, திமுக, மதிமுக போல தான் நாங்களும் என்றால், அதற்காகவெல்லாம் உங்களை ஆதரிக்க முடியாது.
அவர்கள் காஃபிர்கள் என்றாலும் கூட, இஸ்லாத்திற்கு விரோதமான எண்ணம் படைத்தவர்கள் என்றாலும் கூட, இஸ்லாமிய சமுதாயத்திற்கென்று ஏதும் நன்மைகள் செய்யாமல் இல்லை, செய்த நன்மைகளுக்காக அவர்களை ஆதரிக்கிறோம்.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக இஸ்லாமிய கொள்கையையும் நபி வழியையும் கேவலப்படுத்தி, குழி தோண்டி புதைக்கும் செயல்களை தவிர இந்த எஸ்டிபிஐ எனும் அரசியல் கூட்டம் சாதித்தது வேறெதுவும் இல்லை.
சிலைகள், உருவங்கள் இருக்கும் இடம் காஃபிருக்கு சொந்தமானது என்றால் அதற்கு ஒரு பார்வை, அதுவே ஒரு முஸ்லிமின் வீடு என்றால் வேறொரு (கடும்) பார்வை என்று அளவுகோல் நபிகள் நாயகம் (சல்) அவர்களால் தெளிவாகவே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒரு அதிமுக கட்சியை சேர்ந்தவன் சிலைக்கு மாலை அணிவித்தால் இஸ்லாம் பாதிக்கப்படாது, முஸ்லிம்களுக்கு அதனால் அவமானம் எதுவும் இல்லை, அதுவே முஸ்லிம் என்கிற போர்வையில் இவர்கள் அதை செய்கையில் பிற மக்கள் இஸ்லாத்தையே தவறாக எண்ணும் நிலை ஏற்படுகிறது.
ஈமானுள்ள எந்த முஸ்லிமும் இதை சகிக்க மாட்டான் !
முஸ்லிமாக பிறந்தவனுக்கு ஆயிரமாயிரம் லட்சியங்களும் கொள்கைகளும் இருக்க வேண்டும், அல்லாமல், வெறும் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு பிரச்சாரம் மட்டும் ஒருவரது வாழ்வின் லட்சியமில்லை.
அத்தோடு, ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு என்பது இவர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட கொள்கையும் இல்லை. அதை எதிர்க்கக்கூடிய பல கட்சிகளும் அமைப்புகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.
ஓட்டுப்பொறுக்குவதற்காக வினாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்தும், கல்லுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியும் தங்கள் கொள்கையுறுதியை (?) வெளிக்காட்டும் இவர்கள், ஓட்டுக்காக நாளை பாஜகவையும் ஆதரிக்க மாட்டார்கள் என்று எந்த நிச்சயமும் இல்லை என்பதே நாம் புரிய வேண்டிய உண்மை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக