புதன், 19 மார்ச், 2014

ஜெயலலிதாவிடம் காணப்படும் வியத்தகு மாற்றம் !



ஒரு காலத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு பற்றி வாய் திறக்கவே தயங்கிய அரசியல்வாதிகள்..

அதை கோரிக்கையாக வைத்தால் கூட, மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றே இரு பெரும் திராவிட கட்சிகளும் சொல்லி வந்தன ஒரு காலத்தில்..

இட ஒதுக்கீடு கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என்கிற நிலையில், அந்த ஓட்டுக்களை தக்க வைப்பதற்காக வேண்டா வெறுப்பாக தான் இரு திராவிட கட்சிகளும் இட ஒதுக்கீடு அளிக்க சம்மதித்தன என்பதை மறுப்பதற்கில்லை.

கொடுத்த இட ஒதுக்கீட்டினை உயர்த்திக் கேட்ட போது, அதை குறித்து வெறும் வாயளவில் வேண்டுமானால் சொல்கிறேன், தேர்தல் அறிக்கையில் சொன்னால் சாதிக் கட்சிகளின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்று அதை கூட எழுத மறுத்தனர் ஒரு காலத்தில்..

கடந்த 2011 சட்டசபை தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போது, ஒட்டு மொத்த தமிழகத்தில், ஜெயலலிதாவின் ஒரு மாத கால ஒட்டு மொத்த பிரச்சார சுற்றுப்பயணத்தில், திருச்சியில் நடைபெற்ற ஒரேயொரு கூட்டத்தில், ஒரேயொரு வரியில் இட ஒதுக்கீடு பற்றி பேசினார்.
நாளை, நானும் தான் பேசினேனே, என்று காட்டிக் கொள்ள அது உதவும் என்கிற எண்ணம் தான் அவருக்கு இருந்ததே தவிர, உண்மையில் சட்டமாக்குகிற எண்ணம் அப்போது அவருக்கு இல்லை !

ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழ் ! பாசிச சிந்தனை, இஸ்லாமியர்களை வெறுப்பவர் என்றெல்லாம் கூறப்பட்ட ஜெயலலிதா குறித்து நாம் நிஜமாகவே வியப்படைகின்ற அளவிற்கு அவரது சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன !

இயக்க விருப்பு, வெறுப்புகளின்றி நடுனிலையுடன் இதை சிந்திக்கையில், அவரது சமீபத்திய பிரச்சார அணுகுமுறையானது, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டினை வழங்கத் தான் போகிறார் என்பதினை உறுதியுடன் நமக்கு சொல்கிறது.

இட ஒதுக்கீட்டுக்கான ஆணையம் அமைத்தார். அத்தோடு நிற்கவில்லை.

இட ஒதுக்கிடு விஷயத்தில் முஸ்லிம்களை தாம் ஏமாற்றவில்லை என்றும், கலைஞர் தான் ஏமாற்றுவார் என்றும்,
இட ஒதுக்கீடு தர வேண்டுமானால் கமிஷனை தான் முதலில் அமைக்க வேண்டும் என்றும்,
கலைஞரும் அதை தான் செய்தார் என்றும்,
தன் பிரச்சாரத்தை துவக்கிய காஞ்சீபுரம் தொகுதி கூட்டத்திலேயே கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் இதை மட்டுமே பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அந்த ஒரு கூட்டத்தோடு நிறுத்தாமல், காஞ்சிபுரத்திலிருந்து, சென்னை மீனம்பாக்கம், நாகர்கோவில் துவங்கி இன்று அவர் கலந்து கொண்டிருக்கும் சங்கரன்கோவில் பிரச்சாரக் கூட்டம் வரை முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி ஒரு ஐந்து நிமிடமேனும் பேசுகிறார் என்றால்,

முந்தைய நிலைமை அல்ல இது !
முன்பு போல் நம்மை ஏமாற்ற எண்ணுகிற‌ ஜெயலலிதாவும் இது அல்ல !

ஓட்டுக்காக தான் இதை செய்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை என்ற போதிலும், சொல்லி விட்டு ஏமாற்றும் நோக்கத்துடன் சொல்பவையாக இவை நிச்சயம் தெரியவில்லை.
சொல்லி விட்டு பின்னர் ஏமாற்றுவது நோக்கமாக இருக்குமானால், 2011 இல் திருச்சியில் சொல்லி விட்டு கடந்த 2 வருடங்களாக ஏமாற்றி வந்தாரே அது போல் ஏதேனும் ஒரு ஊரில் சும்மா பேருக்கு பேசி முடித்திருப்பார்.

அதே சமயம், இட ஒதுக்கீடு என்கிற ஒரு விஷயம் தவிர, வேறு எதற்காகவும் நாம் அவரை ஆதரிக்க மாட்டோம், அவரை புகழ மாட்டோம், அவரது பாசிச ஆதரவு சிந்தனைக்கு வக்காலத்து வாங்க மாட்டோம், நாளை பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்றெல்லாம் எந்த உறுதியும் தர மாட்டோம்.

இட ஒதுக்கீடு விஷயத்தில் அவர் மாறியிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

நாம் எதை கோரிக்கையாக இத்தனை மாதங்களாய் முழங்கி வந்தோமோ,
எதற்காக வெளிநாடுகளில் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை வாரி இறைத்தோமோ,
எதற்காக உடல் ஊனத்தையும் பொருட்படுத்தாமல் கொளுத்தும் வெயிலில் போராட்டக் களம் கண்டோமோ,
எதற்காக முதியோர் முதல் பச்சிளங்குழந்தைகள் வரை கால் கடுக்க பல தொலைவுகள் நடந்தோமோ,
அந்த தியாகங்கள் அனைத்திற்கும் கை மேல் பலனாய் தான் இந்த இட ஒதுக்கீடு !

அதை தருவதற்குரிய எல்லா சாத்தியக்கூறுகளும் தற்போது உருவாகியுள்ளன என்பது தான் நிதர்சனமான உண்மை !

வாக்குறுதியோடு நிற்காமல், அதற்கான ஆணையம் அமைத்ததே அதை உறுதி செய்ய போதுமானது என்றாலும் கூட, முஸ்லிம்களின் ஆதரவை பெறும் பொருட்டு, செல்லும் இடங்களிலெல்லாம் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்று பேசுவது ஜெயலலிதாவுக்கு புதிது !

அவர் வாயால் அதை நாம் கேட்பது அதை விட புதிது !

இன்னும் இரண்டு வருடங்களில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால், இன்ஷா அல்லாஹ், ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் சட்டத்தை அவர் இயற்றுவதற்கான வாய்ப்புகள் மிக மிக பிரகாசமே !!

ஓட்டுக்காக தான் அனைத்தையும் செய்கிறார் என்றாலும், நாம் கேட்டதை தருவதற்கு தயாராகி விட்ட ஜெயலலிதாவுக்கு இம்முறை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும் !

வாக்களியுங்கள் அ.இ.அதிமுகவிற்கே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக