உண்ணாவிரத போராட்டம் என்பது மார்க்கத்திற்கு விரோதமானது என்று நாம் சொல்கிற போது, அத்தகைய செயலை நியாயப்படுத்தும் விதத்தில் சிலர் தற்போது அதற்கு முட்டுக் கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.
இதற்கு சில வாதங்களை இவர்கள் முன் வைக்கின்றனர். இவை சரி தானா என்பதை பார்ப்போம்.
சாகும் வரை போராட்டம் என்றாலும் யாரும் சாக போகிறோம் என்று எண்ணி இதை செய்வதில்லை என்று கூறுகிறார்.
இது போன்ற வாதம் சம்மந்தப்பட்ட நபரை முட்டுக்கொடுக்க உதவுமா அல்லது அவரை கேலி செய்கிறதா?
இந்த கோரிக்கையை வெல்வது வரை நான் உண்ணாவிரதமிருக்கிறேன் என்றால் அதன் அர்த்தமே இது கிடைக்கவில்லையென்றால் செத்துப் போவேன் என்பது தான்.
இவரது நோக்கம் செத்துப் போவது இல்லை என்றால், ஒன்று, சாக மாட்டோம், எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் எண்ணிக் கொண்டே .. இதோ சாகும் வரை விரதம் இருக்கிறேன் சாகும் வரை விரதம் இருக்கிறேன் என்று விளம்பரத்திற்காக இப்படி ஷோ காட்டி திரிகிறார் என்கிற பொருள் வரும்,
அல்லது உடல் களைப்பு ஏற்படாமலிருக்க அன்னனா ஹசாரே போல் திரைக்கு பின்னால் க்ளுகோஸ் சாப்பிட்டு திரைக்கு வெளியில் நடிக்கிறார் என்கிற அர்த்தம் கொள்ள வேண்டி வரும்.
இரண்டில் எதை சொன்னாலும் இவர்கள் அவருக்கு முட்டுக் கொடுக்கவில்லை, மாறாக கேலி தான் செய்கிறார்கள் என்பது புலனாகும்.
வாழ பிடிக்காமல் தற்கொலை செய்வதை தான் இஸ்லாம் தடுக்கிறது, இவர் வாழப் பிடிக்காமல் இதை செய்யவில்லை, எண்ணம் தான் முக்கியம் என்கிற காரணத்தை சொல்லிப் பார்க்கின்றனர். இதுவும் மிகவும் தவறான, பலகீனமான வாதமாகவே தெரிகிறது.
வரக்கூடிய ரயிலை நிறுத்த சொல்லப்போகிறேன் என்று கூறி ஒருவன் தண்டவாளத்தில் நின்று போராட்டம் செய்கிறான் என்றால் அவர் வாழப் பிடிக்காமல் இதை செய்யவில்லை என்றாலும், இந்த செயலினால் அவன் சாகப்போவது உறுதி.
நாம் செய்யப்போகும் காரியத்தினால் சாவு உறுதி என்றால் அதை செய்வது தான் தற்கொலை.
இதனால் தான் தற்கொலைப்படை தாக்குதல் கூடாது என்கிறோம். இந்த வாதம் சரியென்றால் தற்கொலை தாக்குதலை தவறு என்று இவர்கள் சொல்லக்கூடாது.
இன்னும் சொல்வதானால், தற்கொலைப்படை தாக்குதலிலாவது ஒருவித நிர்பந்தம் உள்ளது என்று சொல்லலாம், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதில் நிர்பந்தம் இருக்கிறதா?
என்னுடைய உயிர் போனாலும் உன்னோடு போரிட்டு வெற்றி பெறுவேன் என்று வாள் கொண்டு போரிட வரும் ஒருவர் சொல்வது தற்கொலையா என்று கேட்கின்றனர். அது தற்கொலையில்லை. காரணம், இதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அது போல் ஒரு அரசாங்கத்தை நிறுவி, வாள் கொண்டு சிறை வாசிகளுக்கு எதிரானவர்களுடன் இவர் போர் செய்ய போகட்டும், யார் தடுப்பார்?
சாப்பிடாமல் சாகப்போகிறேன் என்று சொல்லாலாமா? என்று கேட்டால், இஸ்லாம் அனுமதித்திருக்கிற போரை ஆதாரமாக காட்டும் அளவிற்கு பலகீனமாய் போய் விட்டது இவர்கள் வாதம்.
செத்தாலும் பரவாயில்லை என்று ஒருவன் தன் உயிர், உடமைக்காக வாளேந்தி போரிட செல்வானேயானால் (அரசாங்கம் நிறுவிக்கொண்டு) அவன் செத்தால் அவன் ஷஹீத்.
சிறையில் உள்ளவர்களை விடுவி, அல்லது தண்டவாளத்தில் தலை வைத்து செத்துப் போவேன் என்று ஒருவன் செத்தால் அவன் ஷஹீதா அல்லது நரகத்திற்குரியவனா?
ஒரு வாதத்திற்கு இது பொருந்துகிற உதாரணம் என்று வைத்துக் கொண்டாலும் இரண்டுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது.
செத்தாலும் பரவாயில்லை என்று ஒருவன் போரிட போகிறான் என்றால் அவன் நோக்கம் சாவது இல்லை. மாறாக, எதற்கும் துணிந்து, இதில் வெற்றி பெற வேண்டும், நாம் சாகக்கூடாது என்கிற உத்வேகத்துடன் போராட வந்திருக்கிறான் என்று தான் பொருளாகும்.
இறுதி இலக்கு வெற்றி தான்.
ஆனால், உண்ணாவிரதம் என்பதன் இலக்கே சாவது தான். சாப்பிடாமல் இருந்தால் சாவு உறுதி. அது 100% உண்மை. 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்ட ஒன்றை ஒருவன் செய்கிறான் என்றால், அவனது நோக்கம் வெற்றியல்ல, நோக்கமே சாவு தான்.
எவனது நோக்கம் சாவாக இருக்கிறதோ அவன் செய்வது தற்கொலை. வாழ்வையே வெறுத்து போகாவிட்டாலும் சரியே !
தன்னையே வருத்திக் கொள்ளலாமா? என்று கேட்கப்பட்டதற்கு, முட்டாள் தனமான காரணங்களுக்காகவோ அல்லது காரணமே இல்லாமலோ தன்னை தானே வருத்துவது தான் கூடாது, இது நல்ல நோக்கத்திற்காக வருத்திக்கொள்வது என்கின்றனர்.
இது தவறான வாதம் மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு எதிரான வாதம்.
நோக்கம் நல்லதா கெட்டதா என்பதல்ல விஷயம், தம்மை வருந்திக் கொள்ளலாமா கூடாதா என்பது தான் விஷயம்.
கால்கள் இழுபட காபாவிற்கு சென்ற முதியவரை நபி (ஸல்) அவர்கள் தடுத்து, இப்படி செய்யக்கூடாது என்றார்கள், இது அல்லாஹ்வுக்கு தேவையற்றது என்றார்கள் (பார்க்க புஹாரி 1865)
இங்கே இந்த முதியவர் ஒன்றும் முட்டாள்தனமான நோக்கத்தை கொண்டிருக்கவில்லை, காபாவிற்கு செல்லும் உயர்ந்த எண்ணத்தை தான் கொண்டிருக்கிறார். இருந்த போதும் நபியவர்கள் அதை தடுக்கிறார்கள்.
அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை கூட உடலை வருத்தி செய்யாதே என்று இஸ்லாம் கட்டளையிட்டிருக்கிற போது, அற்பத்திலும் அற்பமான மனித சக்திக்காக உடலை வருத்தலாமா? என்கிற வலுவான கேள்வி இவர்கள் முன் வைக்கப்பட்டும் கூட இதன் ஆழத்தை சிந்திக்காமல், பயனுள்ள நோக்கம், பயனற்ற நோக்கம் என நுனிப்புல் வாரியாக வாதிட்டு வருவது நமக்கு வியப்பை தருகிறது.
அனைத்தையையும் விட முக்கியமாக, உண்ணாவிரதம் என்பது இஸ்லாம் காட்டித்தந்துள்ள வணக்க முறை.
ஒரு வணக்க முறையை அல்லாஹ்வுக்காக தான் செய்ய வேண்டும். நோக்கம், நிய்யத் என்றெல்லாம் கூறி இதை நியாயப்படுத்தவே முடியாது.
சரி நான் கேட்கிறேன், நாளை முதல் ஒருவன் சென்னை அண்ணா சாலையை மறித்து நின்று கொண்டு ருகூவும் சுஜூதும் செய்து கொண்டே நிற்கிறான் என்று வைப்போம்.
எதுக்குடா இப்படி செய்ற? என்று கேட்கிற போது, சிறையில் எனது அண்ணன் இருக்கிறார், அவரை வெளியில் விடுவதற்கு போராடுகிறேன், அவர் விடுவிக்கப்படுவது வரை இப்படியே செய்து கொண்டிருப்பேன் என்று அவன் சொன்னால், இப்போது உண்ணாவிரத்ததிற்கு முட்டுக் கொடுக்கும் சங்கத்தினர், இதையும் சரி காண வேண்டும்.
செய்வார்களா?
அவன் ஒன்றும் அல்லாஹ்வை தொழவில்லையே, அப்படி அவன் நிய்யத்தும் வைக்கவில்லையே? அவன் ருகூவ்வும் சஜதாவும் செய்கிறான், அவனது நோக்கம், சிறையில் இருக்கும் அவன் அண்ணனை அரசு விடுதலை செய்ய வேண்டும், அதற்காக இந்த நூதன போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறான் என்று விட்டு விடுவீர்களா? அவனுடன் சேர்ந்து கொடி தூக்குவீர்களா.
இஸ்லாத்தை எப்படி புரிகிறார்கள் என்று நமக்கு புரியவில்லை !
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நபர் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறானோ இல்லையோ, அவருக்கு கொடி தூக்கும் இது போன்ற நபர்களின் மீது தான் அல்லாஹ்வின் கோபம் அதிகம் விழும் என்கிற அச்ச உணர்வுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக