கடையநல்லூர் தவ்ஹீத் பள்ளியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதை விமர்சனம் செய்வோருக்கு இந்த மறுப்பு விளக்கம்
அறியாமையில் இருப்பது பலகீனம் என்றால், அதிலிருந்து கொண்டே பிறரை கேலி செய்வது மிகப்பெரிய மடமையாகும்.
பள்ளிவாசல் என்பது தொழுகைக்கும் திக்ருக்கும் மட்டும் உரியது என்று கருதுவோர் குர் ஆன், ஹதீஸ் குறித்த போதிய ஞானமில்லாதவர்களாவர்.
நபி (சல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசல் என்பது தொழுகைக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை ;
மாறாக அது தான் ஆட்சியின் தலைமைப்பீடம்.
அது தான் கைதிகளை சிறைப்பிடிக்கும் இடமாகவும் இருந்தது (பார்க்க புஹாரி 4372)
நபி முன்னிலையில் பள்ளி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன (பார்க்க புஹாரி 988)
தொழுகைக்கு பிறகு, அறியாமைக்கால செயல்கள் குறித்த பழைய கதைகளையெல்லாம் சஹாபாக்கள் பள்ளிவாசலில் அமர்ந்தவாறே பேசியிருக்கிறார்கள், அதை நபி (சல்) அவர்கள் கேட்டு ரசித்திருக்கிறார்கள் (பார்க்க முஸ்லிம் 4641)
நபி (சல்) அவர்கள் காலத்தில் சஹாபாக்கள் பள்ளிவாசலுக்குள்ளேயே தூங்கவும் செய்திருக்கின்றனர் (பார்க்க புஹாரி 440)
இதையெல்லாம் செய்யலாம் என்றால் நம்மை ஆட்சி செய்யப்போவது யார் என்பது குறித்து முடிவு செய்ய மஷூரா நடத்துவதும் கூடும்.
சில விதிவிலக்குகள் தவிர, பொது காரியங்களாக பள்ளிவாசலுக்கு வெளியே எவையெல்லாம் நமக்கு ஹலாலோ அவை அனைத்தும் பள்ளிவாசலுக்கு உள்ளேயும் ஹலால் தான் !
இந்த பொது விதியில் பெண்களை (மனைவியை) தீண்டுவது விதிவிலக்கு பெற்றது, ஆகவே பள்ளிவாசலுக்குள் அது கூடாது (பார்க்க 4:43)
இந்த பொது விதியில் மாதவிடாய் பெண்கள், குளிப்பு கடமையானோர் விஷயத்தில் விதிவிலக்கு உள்ளது, அவர்கள் உள்ளே நுழையக் கூடாது (பார்க்க 4:43)
தனிப்பட்ட வியாபாரங்கள் விதிவிலக்கு பெற்றது ஆகவே அதை பள்ளிவாசலுக்குள் செய்வது கூடாது (பார்க்க திர்மிதி 296)
(எனினும் பைத்துல்மால் போன்ற பொது நலம் சார்ந்த வியாபாரமெனில் அதை செய்ய அனுமதியும் உள்ளது பார்க்க புஹாரி 2097)
காஃபிர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம் என்பதற்கு, இணை வைப்பாளராக இருந்த ஒருவர் (பின்னாளில் இஸ்லாத்தை தழுவிய சுமாமா என்கிற சஹாபி) சிறைப்பிடிக்கப்பட்டு பள்ளிவாசலின் தூணில் கட்டிவைக்கப்பட்டதாய் வரக்கூடிய
ஹதீஸ் சான்றாகும் (பார்க்க புஹாரி 4372)
பள்ளிவாசலில் பயான் செய்ததை கேட்டு உள்ளம் உருகியதாக கூறிய ஜுபைர் (ரலி) அவர்கள் (அப்போது இஸ்லாத்தை தழுவாத நிலையில் இருந்தார் !) அறிவிக்கும் புஹாரி 4854 ஹதீஸும் இதற்கு சான்றாய் இருக்கிறது !
ஆக, காஃபிர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம், பள்ளிவாசலுக்குள் நமது அவசியத் தேவைக்காக உலக நடப்புகளை பேசவும் செய்யலாம்.
இறுதியாய் இவர்கள் கேட்பது, ஹிஜாபிடாத மாற்று மத பெண்கள் முன்னிலையில் அமரலாமா? என்பதாகும்.
இதுவும் பள்ளிவாசலுக்கு வெளியே என்ன சட்டமோ அது தான் பள்ளிவாசலுக்கு உள்ளேயும், என்று நாம் சொல்கிறோம்.
காஃபிர்களோடு கலந்து வாழக்கூடிய சமூகத்தில், அவர்களே பெரும்பான்மையாய் இருக்கும் ஒரு சமூகத்தில், அவர்களை சந்திக்க வேண்டிய, அவர்களோடு பேச வேண்டிய அவசியத் தேவைகள் நமக்கு வரத்தான் செய்யும், அவை நிர்பந்தமான நிலை தான்.
பள்ளிவாசலுக்கு வெளியே, இது போன்று மாற்று மத பெண்களோடு பேச வேண்டிய, அவர்களை நேருக்கு நேராக காண வேண்டிய சந்தர்ப்பம் ஒருவருக்கு வந்தால் இப்போது நம்மை விமர்சிப்பவர்கள் அவருக்கு என்ன ஃபத்வா வழங்குவார்களோ அதை தான் பள்ளிவாசலுக்கு உள்ளே காண்பதற்கும் வழங்க வேண்டும்.
பள்ளிவாசலுக்குள் இவ்வாறு அமரக்கூடாது என்பவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியேயும் அவ்வாறு அமரக்கூடாது என்று சொல்வார்களா?
மாற்று மத பெண்களை பார்க்கவே கூடாது என்று சொல்வார்களா?
அப்படி சொல்வதாக இருந்தால் அது போன்ற வேடிக்கையான ஃபத்வா வேறு இருக்க முடியாது என்பதையும், நம்மை எதிர்ப்பதற்காக எத்தகைய முரண்பாடான நிலைபாட்டினையும் இவர்கள் கொள்வார்கள் என்பதையும் அப்போது நாம் நிரூபிப்போம், இன்ஷா அல்லாஹ் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக