சனி, 25 அக்டோபர், 2014

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்?



-------------------------------------------------------------------
முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது ஷைத்தானின் தூண்டுதலை தான் குறிக்கிறது என்பதற்கு பல சான்றுகளை நாம் முன் வைத்திருக்கிறோம்.
முடிச்சு என்பதற்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு ?
இரவில் தூங்கும் போது மூன்று முடிச்சுகளை ஷைத்தான் இடுகிறான் என புஹாரி 1142 இல் சொல்லப்பட்டுள்ளது.
ஊதுதலுக்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு?
ஷைத்தானின் தூண்டுதலை அவனது ஊதுதல் என்றும் அத்தகைய ஊதுதலிலிருந்து பாதுகாப்பு தேடுமாறும் அபுதாவுத் 651 இல் சொல்லப்பட்டுள்ளது.
ஷைத்தானை ஏன் பெண்பாலாக ஏன் சொல்ல வேண்டும்?
இதற்கான விடையை அறிவதற்கு முன், இது தொடர்பாக சலஃபிகளின் முரண்பாட்டை விளக்க வேண்டியுள்ளது. இந்த வசனம் ஷைத்தானை தான் சொல்கிறது என்று நாம் சொல்லும் போது, அப்படியானால் இங்கு ஏன் பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது? பெண் ஷைத்தானிடமிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று குதர்க்கமாக கேட்பர்.
அதே சமயம், இந்த வசனம் சூனியத்தை தான் குறிக்கிறது எனவும் இன்னொரு பக்கம் சொல்வார்கள்.
அப்படியானால் சூனியத்தை பெண்களால் மட்டும் தான் செய்ய முடியுமா? அல்லது பெண்கள் செய்யும் சூனியத்திலிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று, இவர்களது கேள்வியை நாம் இவர்களிடமே திருப்பிக் கேட்பதன் மூலம் இவர்களது சந்தர்ப்பவாதத்தையும் முரண்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் நஃப்ஃபாஸாத் என்பது இலக்கண அடிப்படையில் பெண்பாலை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் கூட, பொருள் அடிப்படையில் அது பொதுவாய் சொல்லப்படுபவை தான்.
முடிச்சுகளில் ஊதுபவைகளின் தீமையை விட்டும், என்று பொதுவாய் மொழியாக்கம் செய்வதும் இவ்விடத்தில் தகும்.
இதற்கு சான்றாய் குர்ஆனின் வேறு பல வாசகங்களை இங்கே பார்க்கலாம்.
79:1 5 வசனங்களில் பொதுவாக மலக்குகளை பற்றி அல்லாஹ் பேசும் போது நாஸியாத், நாஷிதாத் என்கிறான். இவை, இலக்கணப்படி பெண்பாலாக இருந்தாலும் மலக்குகளில் அவ்வாறு பாலின வேறுபாடு கிடையாது என்பதே சரி. இங்கு பொதுவாய் மலக்குகள் அனைவரையும் குறிக்கும் என்று தான் புரிய வேண்டுமே தவிர மலக்குகளில் பெண் மலக்கு உண்டு என்று புரியக்கூடாது !
அது போல், 77:5 வசனத்தில் இதயத்தில் உபதேசங்களை இடும் மலக்குகள் பற்றி சொல்கிற இடத்தில் முல்கியாத் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பெண்பாலை குறிக்கும் சொல் தான்.
அரபு மொழியில் இலக்கண ரீதியில் பாலின வேறுபாட்டுடன் குறிப்பிடுவது பயன்பாட்டில் இருக்கிறது, கருவுற்றிருக்கும் பெண்ணை குறிக்க ஹாமில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், ஹாமில் என்பது ஆண்பால் !
மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை குறிக்க ஹாயில் என்கிற சொல் உபயோகப்பட்டாலும் ஹாயில் என்பது இலக்கணப்படி ஆண்பாலாகும்.
ஆக, முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று மொழியாக்கம் செய்தாலும், அது ஜின் இனத்தின் ஆண், பெண் என இரு பாலரையும் பொதுவாய் குறிக்கும் பொதுவான சொல் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக