சனி, 25 அக்டோபர், 2014

சூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டது என்கிற வாதம் சரியா?



கடலில் தத்தளிப்பவன், ஒரு சிறு துரும்பு கையில் கிடைத்தாலும் அதைக்கொண்டு தப்பிக்க முடியுமா என்று சிந்திப்பதை போல தான், சூனியப்பிரியர்களின் கூடாரம் நாளுக்கு நாள் காலியாகிக்கொண்டே வருவதையடுத்து, தங்கள் கடைசி புகலிடமாக இந்த வாதத்தை வைக்கின்றனர்!
இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியொரு வாதம் இது நாள் வரை இவர்களால் பெருமளவில் வைக்கப்பட்டதேயில்லை!
இது நாள் வரை சூனியம் உண்டு எனவும், அல்லாஹ் நாடினால் இப்போதும் அது பலிக்கும் எனவும் சொல்லி வந்தவர்கள் என்றைக்கு பிஜெ தன் உயிரையே பணயமாக வைத்து சூனியத்தை பொய்ப்பிக்க இறங்கினாரோ அன்று முதல் சூனியம் என்பது அப்போ இருந்த, இப்போ இல்லை, எனவே பிஜெ தோற்க மாட்டார் என வெட்கமில்லாமல் பேசி, தங்கள் அப்பட்டமான, கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டுகின்றனர் .
இப்போது நாம் கேட்பது என்னவென்றால், ஏற்கனவே சூனியம் இருக்கு இருக்கு என்று சொல்லி வந்தவைகளுக்கு இதுவரை ஆதாரம் காட்டாத இவர்கள், யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்த கதையாய், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சூனியம் என்பது அழிந்தே போனது என புது கதை விடுகிறார்கள் எனும் போது,
இவர்கள் இப்போது இதற்கும் ஆதாரம் காட்டியாக வேண்டும்.
சூனியம் என்பது மூசா நபி காலத்தில் இருந்தது, முஹம்மது நபி காலத்தில் இருந்தது என்றெல்லாம் இவர்கள் முன்வைக்கும் குர்ஆன் ஹதீஸ் சான்றுகள் அனைத்தும் சூனியம் உண்மை என்று சொல்வதாக ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டால் கூட, அவை எதிலாவது இந்த கலை இத்தோடு அழிந்து விட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறதா?
இவர்கள் வாதப்படியே, சூனியக்கலையானது ஹாரூத் மாஃரூத் எனும் மலக்குகள் மூலம், இதை கற்று வழிகெட்டு விடாதீர்கள் என்கிற எச்சரிக்கை செய்யப்பட்டு மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கப் பட்டது என்று தானே புரிய வேண்டும்?
இப்போது அந்த கலை தொடர்ச்சி பெறவில்லை என்று அந்த வசனம் சொல்கிறதா?
இவர்களின் புரிதலின்படியாவது சொல்கிறதா? இல்லையே !
அப்படி இவர்கள் புரிவார்களென்றால் கற்றுக்கொடுக்க வந்த மலக்குமார்கள் தங்கள் வேலையை உருப்படியாக செய்யவில்லை என்கிற கருத்து தான் மிஞ்சும்!
இருந்தது என்பதற்கு எப்படி ஆதாரம் காட்ட வேண்டுமோ , அழிந்து விட்டது என்பதற்கும் ஆதாரம் காட்டத்தான் வேண்டும்.
இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு திரியலாம்.
ஆண்கள் கருவுற்று குழந்தை பெற்றுக்கொள்ளும் வழக்கம் ஒரு காலம் வரை இருந்தது, இன்று அது அழிந்து போனது என்று ஒருவன் முக்காடையும் இட்டுக்கொண்டு மைக்கில் பேசுவான்.
முக்காடல்லவா போட்டிருக்கிறான், அப்படியானால் அவன் சொல்வது சரி தான் என்போமா அல்லது இதற்கு என்ன ஆதாரம் ? என்று அவன் தலையை தட்டிக் கேட்போமா?
எவ்வளவு தான் சாப்பிட்டாலும் மலஜலம் கழிக்கும் அவசியம் ஏற்படாத அளவிற்கு திறமைகளை ஒரு காலத்தில் மனிதன் வளர்த்து வைத்திருந்தான், இன்று அது அழிந்து போனது என்று கூட ஒருவன் சொல்வான்.
தாடியும் முக்காடும் வைத்துக் கொண்டால் என்ன வேண்டுமானாலும் உளரிக் கொட்டலாம், மக்கள் நம்பி விடுவார்கள் என்கிற எண்ணமே இதற்கெல்லாம் காரணம் !
தலையில் முக்காடு மட்டும் இருந்தால் போதாது தலைக்குள்ளே கூறும் இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்துள்ளதால் இவர்களைப் போன்றோரின் எந்த வாதமும் சிந்திக்கும் சமூகத்தில் எடுபடாது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக