வெள்ளி, 31 டிசம்பர், 2010

மாதவிடாய் உள்ள பெண்கள் குர்ஆனை ஓதலாமா?



மாதவிடாய் உள்ள பெண்கள் குர்ஆனை தொடுவதற்கும், ஓதுவதற்கும், பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்கும் தடையுண்டா?

ஓரு சகோதரர் குர்ஆன் பற்றிக் கூறும்போது – அது எல்லா புத்தகங்களை போன்ற ஒரு புத்தகம்தான். அதனை கீழே வைப்பதற்கோ, கால்களில் வைத்துக் கொண்டு ஓதுவதற்கோ தடையில்லை. குளிப்பு கடமையான நிலையிலும், ஒளு இல்லாமலும் குர்ஆனை ஓதலாம் என்கிறார். இது பற்றி விளக்கவும்?.
அல்-குர்ஆனின் 56வது அத்தியாயம் ஸூரத்துல் வாகியாவின் 79வது வனத்திற்கான விளக்கம் என்ன?.
மேற்படி கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இது பற்றி விரிவாக அலசுவோம்.
மேற்படி கேள்விகள் எல்லாம் வருவதற்கு முதல் காரணம் குர்ஆன் நமக்கு மட்டும் சொந்தம் என்று முஸ்லிம் சமுதாயம் விளங்கி வதை;திருப்பதுதான். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கைக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட சட்டங்கள் குர்ஆனில் உண்டு. தவிர, இந்த மொத்த குர்ஆனும் முஸ்லிம்களுக்காகவே வந்தது என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.
இறுதித் தூதராக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மொத்த உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் மொத்த உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:
‘இந்த குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்). இதே கருத்துடைய வசனங்கள் அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்ட அத்தியாங்களில் உள்ளன:3:138, 38:87, 68:52, 81:27.
இந்த குர்ஆனுடைய போதனை நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. உலகிலுள்ள 600கோடி பேர்களில் 200 கோடி பேர் முஸ்லிம்கள். மீதமுள்ள 400 கோடியும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான். அவர்களும் இறை நேசம் பெற வேண்டுமானால் குர்ஆனை படித்தாக வேண்டும். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனை கொண்டு போகலாம் என்பது பொருந்தாத வாதம். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனடைய வசனங்களில் சிலவற்றை பரவலாக கொண்டு போக முடியுமேத் தவிர, மொத்த குர்ஆனையும் கொண்டு போக முடியாது. குர்ஆனைப் படிக்கத் துவங்கினால்தான் மொத்த குர்ஆனுடனும் ஐக்கியமாகி புரிந்து கொள்ள முடியும். அதற்கு தங்கு தடையை குர்ஆன் ஏற்படுத்தவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களே எந்த சந்தர்ப்பத்திலும் குர்ஆனைத் தொடலாம். படிக்கலாம். சிந்திக்கலாம் என்றாகிவிடும் போது – இறை நம்பிக்கையாளர்களான முஸ்லிம்களுக்கு இதில் எந்தத் தடையும் இருக்க முடியாது.
தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இந்த குர்ஆனை தொடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக சில அறிவிபப்புகள் உள்ளன. அந்த அறிவிப்புகளின் தரம் எப்படிப்பட்டது என்பதை காண வேண்டும்.
1. குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், குர்ஆனிலிருந்து எதையும் ஓதக் கூடாது என்று நபி (ஸல்) சொன்னதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். அபுதாவூத், திர்மிதி, இப்னுமாஜாவில் இந்த செய்தி இடம் பெறுகிறது.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களின் தொடரில் ‘இஸ்மாயில் பின் அய்யாஸ்’ என்ற ஒருவர் இடம் பெறுகிறார். இவர்; ஹிஜாஸ்வாசிகளிடமிருந்து கேட்டு அறிவிப்பவை பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியை ‘மூஸா பின் உக்பா’ என்ற ஹிஜாஸ்வாசி வழியாகவே இவர் அறிவிக்கிறார். எனவே இந்த ஹதீஸ் பலகீனமானதாகும். இந்த ஹதீஸை ஏற்கத் தேவையில்லை என்று அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸின் கருத்து போன்றே தாரகுத்னியின் ஒரு ஹதீஸ் வருகிறது. அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் பலவீனமானது.
2. நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த பின், குர்ஆன் ஓதுவார்கள். எங்களுடன் மாமிசம் உண்பார்கள். ஜனாபத் (பொருந்தொடக்கு) தவிர வேறெதுவும் குர்ஆன் ஓதுவதிலிருந்து அவர்களை தடுக்காது என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூதாவூத், இப்னுமாஜா, நஸயி, திர்மிதி, பைஹகி போன்ற நூல்களில் இந்த செய்தி வருகிறது.
இமாம் ஷாஃபி அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் ஸலாமா என்பவர்தான். இவருக்கு வயதான காலத்தில் நினைவு தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த ஹதீஸை முதுமையில்தான் அறிவிக்கிறார் என்று ஷிஃபா அவர்கள் கூறுகிறார்கள். இதே காரணத்திற்காகத்தான் இமாம் ஷாஃபி அவர்களும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். அஹ்மத், அத்தாபி, நவவி போன்ற அறிஞர்களும் அந்த ஹதீஸஸ விமரிசித்து உள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ்; பலவீனமானதாகும்.
3. நபி (ஸல்) அவர்கள் எமன் நாட்டவருக்கு எழுதிய கடிதத்தில் ‘தூய்மையானவர்களைத் தவிர, மற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது’ என்று குறிப்பிட்டார்கள். அமீருப்னு ஹஸ்மு (ரலி) மூலம் ஹாக்கிம், தாரகுத்னி, நூல்களில் இந்த செய்தி வருகிறது.
இந்த செய்தியில் ஸுவைத் பின் அபீஹாத்திம் என்பவர் வருகிறார். இவர் பலகீனமான அறிவிப்பாளர். இவர் இடம்பெறும் ஹதீஸ்கள் அனைத்துமே பலகீனமாகும்.
நஸயீயில் இடம்பெற்ற ஹதீஸில் ஸுலைமான் பின் அர்கம் என்பவர் வருகிறார். ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவருமே இவரையும் பலகீனமான அறிவிப்பாளர் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இந்த செய்தியும் பலகீனமாகும். (ஒரு ஹதீஸ் எப்படி பலகீனப்படுகிறது என்பதை ‘ஹதீஸ்கள் பலவீனப்படுமா?. எப்படி?.. என்ற கட்டுரையில் சுருக்கமாக விளக்கியுள்ளோம். படித்து பாருங்கள்).
ஆக துய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் எதுவும் நிரூபிக்கப்பட்டதாக இல்லை. இவற்றை வைத்து எந்தச் சட்டமும் எடுக்க முடியாது.
இனி அல்-குர்ஆனின் 56வது அத்தியாயம் ஸூரத்துல் வாகியாவின் 79வது வசனத்திற்கு வருவோம்.
இந்த வசனத்தை எடுத்துக் காட்டியும், ‘தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது’ என்று சிலர் வாதிடுகின்றனர். எனவே அதுபற்றியும் முழுமையாக அறிவது அவசியம்.
‘நிச்சயமாக இது மிகவும் கண்ணியமும், சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இது இருக்கின்றது. தூய்மையானவர்களைத் தவிர இதனைத் தொடமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகிஆ வின் 77, 78, 79ஆம் வசனங்கள்).
இந்த வசனத்தில் இடம் பெறும் ‘தூய்மையானவர்கள்’ யார்? என்பதையும், அதனைத்தொடமாட்டார்கள் என்பதில் வரும் ‘அதனை’ என்பது எது என்பதையும் விளங்கிக் கொண்டால் தெளிவு கிடைத்துவிடும்.
‘அதனை தொடமாட்டார்கள்’ என்கிறான் இறைவன். இது குர்ஆனை குறிப்பதாக இருந்தால் ‘தொடக் கூடாது’ என்ற கட்டளை மனிதர்களை முன்னிலைப் படுத்தி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். கட்டளையாக வராமல் ‘தொடமாட்டார்கள்’ என்று படர்க்கையாக ‘செயல்வினைச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது இனி நடக்க வேண்டிய ஒரு காரியத்தைப் பற்றி இறைவன் பேசாமல், ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி பேசுகிறான்.
தொடமாட்டார்கள் என்பது மனிதர்களை குறிப்பதாக இருந்தால் அந்த வசனம் அர்த்தமில்லாமல் போகிறது. எப்படி?.
ஒளு செய்துவிட்டு தொடுவதுதான் தூய்மை என்றால் – ஒளுவும், தொழுகையும் நபி (ஸல்) அவர்களின் 52வது வயதில்தான் கடமையாகிறது. அதாவது திருக்குர்ஆனின் வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் 40வயதாக இருக்கும்போது வஹியாக வரத்துவங்கியது. அவ்வாறு வஹியாக வரத்துவங்கி 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒளுவும், தொழுகையும் கடமையாகிறது. அப்படியெனில் குர்ஆன் வஹியாக வரத் துவங்கி 12 ஆண்டுகள் வரை நபித் தோழர்கள் அசுத்தமான நிலையிலேயே குர்ஆனை பதிவு செய்துள்ளார்கள் என்ற பொருள் வருகிறது. மேற்கண்டவாறு விளங்கினால் அந்த வசனம் சொல்லும் கருத்துக்கு அர்த்தமில்லாமல் போகிறது.
‘இனி தொடமாட்டார்கள்’ என்ற கருத்தில் அந்த வசனம் வந்திருக்கிறது என்று எவராவது சொன்னால், இந்த வசனம் இறங்கிய பிறகாவது நபித்தோழர்கள் ஒளு செய்துவிட்டு வந்துதான் வஹியை – குர்ஆனை பதிவு செய்தார்கள். நபி (ஸல்) இப்படித்தான் இந்த வசனத்தை விளக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.
எனவே ‘தொடமாட்டார்கள்’ என்பது மனிதர்களை குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை. மனிதர்களை குறிப்பதாக இருந்தால் ‘தொடக்கூடாது’ என்ற கட்டளை வந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘அதனை’ என்பது என்ன?.
‘அதனை’ என்பதற்கு குர்ஆன் என்று பொருள் கொண்டால் – குர்ஆன் தொடக்கூடிய வடிவத்தில் இறங்கியிருக்க வேண்டும். குர்ஆன் தொட்டு உணரக் கூடிய நூல் வடிவத்தில் இறங்கவில்லை. மாறாக ஓதி அறியக்கூடிய ‘வஹி’ யாகத்தான் இறக்கியருளப்பட்டது. அதற்கு ஆதாரமாக அருள்மறை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் உள்ளன.
‘இறைவனின் கட்டளைப்படி ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 – ஸூரத்துல் பகராவின் 97வது வசனம், அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷூஃராவின் 192வது வசனம்).
‘(நபியே!) நாம் உம்மை ஓதி காட்டச் செய்வோம் பிறகு நீர் மறக்கமாட்டீர்’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 87 ஸூரத்துல் அஃலாவின் 6வது வசனம்)
மேற்படி வசனங்கள் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வஹியாக அறவிக்கப்பட்டதேத் தவிர ஏடாக வரவில்லை என்பதை அறிவிக்கிறது.
‘எழுதப்பட்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கியிருந்தால் அதை தமது கரங்களால் தொட்டுப் பார்த்து இது வெறும் சூனியமேத் தவிர வேறில்லை என்று கூறியிருப்பார்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 7வது வசனம்)
மேற்படி வசனத்தின் மூலம் குர்ஆன் ஒரு எழுதப்பட்ட ஏடாக வரவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஓசையும் – உச்சரிப்பாகவும் மட்டும்தான் குர்ஆன் வஹியாக அருளப்பட்டது. ஓசையையும், உச்சரிப்பையும் – யாராலும் தொட முடியாது. அப்படியானால் ‘அதனை’ என்று தொடக் கூடிய வடிவத்தில் இருக்கும் ஒன்றைத்தான் இறைவன் கூறியிருக்க முடியும். குர்ஆன் தொடக் கூடிய வடிவத்தில் இறைவனிடமிருந்து இறங்கவில்லை என்பதால் ‘அதனை’ என்பது குர்ஆனை குறிக்காது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
தூய்மையானவர்கள் என்றால் யார்?.
இஸ்லாமிய மொழி வழக்கில் அதாவது குர்ஆன் – ஸூன்னா வழியில் தூய்மை என்பது பல அர்த்தங்களில் வந்துள்ளது.
உள்ளத்தூய்மை, ஒளு, மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டிலிருந்து தூய்மை அடைதல், தீய காரியங்களிலிருந்து விலகி நிற்றல் என்று ஏராளமாக சொல்லலாம். இதில் எதுவும் நாம் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு பொருந்தாது. ஏனெனில் ‘அதனை’ என்று குர்ஆன் அல்லாத ஒன்றை இறைவன் சொல்வதால் இந்த அர்த்தங்கள் அங்கு பொருந்தாது.
இப்போது இந்த வசனத்தின் வரலாற்றுப் பின்னனியை அணுகினால் முடிவான விடை கிடைத்துவிடும்.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவ பிரச்சாரம் செய்தபோது எதிரிகளால் பல ‘சொல்’ தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் ஒன்று ‘ஷைத்தான்கள் இவருக்கு கற்றுக் கொடுப்பதைதான், இவர் மக்களுக்கு ஓதிக் காட்டுகிறார்’ என்பதாகும்.
மேற்படி ‘சொல்’ தாக்குதலை மறுத்து இரண்டு வசனங்கள் இறங்கின.
‘இதை ஷைத்தான்கள் இறக்கிவைக்கவில்லை. அது அவர்களுக்கு தகுதியானதுமல்ல. அதற்கு அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷுஃராவின் 210 மற்றும் 211ஆம் வசனங்கள்)
‘இது கண்ணியமிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட (லவ்ஹூல்- மஹ்ஃபூல்) என்னும் ஏட்டில் அது இருக்கிறது. தூய்மையானவர்(மலக்கு)களைத் தவிர வேறு யாரும் அதனை (லவ்ஹூல்- மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டை) தொடமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வஆகியா 77 முதல் 79வது வசனம் வரை)
மக்காவில் உள்ள இறை நிராகரிப்பாளர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பாக நீங்கள் கூறுவது போல் ஷைத்தான்கள் இதனை இறக்கவில்லை. அதை இறக்கக் கூடிய சக்தி அவர்களுக்குக் கிடையாது. பாதுகாக்கப்பட்ட மூல ஏட்டிடம் ஷைத்தான்கள் நெருங்க முடியாது. பாவம் என்றால் என்னவென்றே அறியாத
‘தூய்மையான மலக்குகளைத் தவிர வேறு எவரும் ‘அதனைத் தொடமாட்டார்கள்’
என்று இறைவன் தெளிவாக அறிவித்து விட்டான். இப்னு அப்பாஸ் (ரலி) ஸயீத் பின் ஜூபைர் (ரலி), அனஸ் (ரலி) போன்ற நபித்தோழர்கள் அனைவரும் மேற்கண்ட விளக்கத்தையே கொடுகத்துள்ளார்கள். (இப்னு கஸீர் விளக்கவுரை).
அருள்மறை குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதாலும்,
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் அனைத்தும் பலகீனமாக இருப்பதாலும்,
‘தூய்மையானவர்களைத் தவிர’ என்பது மனிதர்களை குறிக்கவில்லை என்பதாலும்,
அருள்மறை குர்ஆனை எந்த சந்தர்ப்பத்திலும், எந்நிலையிலும் தொடலாம், ஓதலாம். அதைத் தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஓசையும் உச்சரிப்புமாக இறங்கிய குர்ஆன் பிற்கால மக்களுக்காக எழுத்து வடிவமாக பதிவு செய்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவத்தைப் படிக்கும்போது ஓசையும், உச்சரிப்பும் அதேவிதத்தில் வருவதால் எல்லா புத்தகங்களைப் போன்றதுதான் என்று சமமாக பார்க்க முடியாது. குர்ஆனில் இருக்கும் பொருளின் காரணத்தால் – குர்ஆனுக்கு கண்ணியம் அவசியமாகிறது என்பதை விளங்கலாம்.
குர்ஆனை மக்கள் தொடும் விஷயத்தில், ஓதும் விஷயத்தில் ஒளு வேண்டும், தூய்மை வேண்டும் என்று நாமாகப் பல தடைகளைப் விதித்திருப்பதால்தான் மக்கள் குர்ஆனிலிருந்து விலகி நிற்கின்றனர். குர்ஆனிலிருந்து மக்களை விடுபடச் செய்யும் இந்த போக்கு அநீதி என்றே முடிவு செய்ய முடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக