வெள்ளி, 31 டிசம்பர், 2010

சஹாபியின் அறிவுரையை கேளுங்கள்!!


ரசூல் (ஸல்) அவர்களையே பின்பற்ற வேண்டும், சஹாபாக்களை அல்ல ! சஹாபியின் அறிவுரையை கேளுங்கள்!!
அன்பிற்குரிய சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்..
மார்க்கம் சம்மந்தமாக, ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை ஒரு பக்கம் இருக்க, உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் போன்றோர், ரசூல் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில சட்டங்களை மாற்றுகின்றனர்.
சில சட்டங்கள், அவர்களது கவனக்குறைவாலும், ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீதை சரி வர அறிந்து கொள்ளாததாலும் அவர்களால் மாற்றமாக அறிவிக்கப்படுகிறது. இன்னும் சில சட்டங்களை, சில காரணங்களை கூறி, வேண்டுமென்றே கூட மாற்றுகிறார்கள். (உதாரணம், முத்தலாக், ஜும்மாவிற்கான பாங்கு..)
இவ்வாறு, ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் மாற்றம் செய்யப்படும் போது, மாற்றம் செய்தது நம்மை விடவும் மேலான சஹாபாக்கள் தான் என்றாலும், ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் தான் நமக்கு பெரிது என்று சஹாபாக்கள் அறிவிக்கும் சட்டங்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்று கூறி வருகிறோம்.
ஆனால், இன்றும், ஜும்மாவுக்கு பாங்கு சொல்லும் விஷயத்தில், சஹாபாக்களின் முறையே பல ஜமாத்களில் பின்பற்றப்படுகிறது.
அதற்கு ஆதாரம் கேட்டால், உஸ்மான் (ரலி) அவர்கள் இவ்வாறு தானே செய்திருக்கிறார்கள், என்று கூறுகிறார்கள். ரசூல் (ஸல்) இதற்கு மாற்றமாக அல்லவா செய்திருக்கிறார்கள்? என்று இவர்களிடம் திருப்பி கேட்கும் போது மௌனமாகி விடுகிறார்கள்.
இவர்களது மௌனம், மறைமுகமாக, ரசூல் (ஸல்) அவர்களை விட உஸ்மான் (ரலி) அவர்கள் சிறந்தவர் என்பது போல இவர்கள் நம்புவதாக தான் நமக்கு தோன்றுகிறது, அது தான் உண்மையும் கூட!
இவர்களது இத்தகைய நம்பிக்கைக்கு நாம் பதில் கூறுவதை விட, சஹாபி ஒருவரே (உமர் (ரலி) அவர்களின் மகன்! ) பதில் கூறியிருக்கிறார். இவர்களது இந்த கொள்கைக்கு வேட்டு வைக்கும் ஹதீஸ் இங்கு தரப்பட்டுள்ளது!

மத்து ஹஜ்ஜ் பற்றி அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம் ஒரு சஹாபி விளக்கம் கேட்டார். "அது அனுமதிக்கப்பட்டது தான்", என்று அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் பதில் தருகிறார்கள். அதற்கு அந்த சஹாபி, "உங்கள் தந்தை (உமர் அவர்கள்) , அதை கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே?", என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லா பின் உமர் அவர்கள், ""என் தந்தை ஒன்றை தடுத்திருக்கிறார்கள், ரசூல்(ஸல்) அவர்கள் அதை செய்திருக்கிறார்கள் என்றால் எனது தந்தையின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா அல்லது ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல்"", என்றார்கள் .
அதற்கு அவர், ரசூலை தான் பின்பற்ற வேண்டும் என்றார்கள். உடனே இப்னு உமர் அவர்கள், தமத்து ஹஜ்ஜ் அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறினார்கள்.
(திர்மிதி 753 )


சகோதரர்களின் சிந்தனைக்காக இந்த இழை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக