தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! அல்குர்ஆன் 9:107, 108
மேற்கண்ட வசனத்தில் நபியவர்களுடைய காலத்தில் ஏகத்துவ வாதிகளுக்கெதிராக முனாஃபிக்கீன்கள் கட்டிய ஒரு பள்ளிவாசலைப் பற்றித் தான் அல்லாஹ் பேசுகிறான். முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியைப் பற்றி அல்லாஹ் நான்கு காரணங்களைக் கூறுகிறான்.
1. முஃமின்களுக்குத் தீங்கு இழைத்தல்
2. ஏக இறைவனை மறுத்தல்
3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல்
4. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிவோருக்குப் புகலிடம்
இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.
இந்த நான்கு காரணங்களும் எந்தெந்தப் பள்ளிகளில் காணப்படுகின்றதோ அவற்றைக் கட்டியவர்கள் அதனைப் பள்ளிவாசல் என்று சொல்லிக் கொண்டாலும் அவை இறைவனின் பார்வையில் இறையாலயமாகாது. இப்படிப்பட்ட பள்ளிகளில் உண்மையான முஸ்லிம்கள் சென்று தொழுவதும் தகாது.
இன்று நம் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்றதா என்று பார்ப்போம்.
1. முஃமின்களுக்குத் தீங்கிழைத்தல்
நபிகள் நாயகம் காலத்தில் பள்ளிவாசல் என்பது மக்களின் துயர் துடைக்கும் மையமாக விளங்கியது. பசியால் வாடுபவர்களும், படுப்பதற்கு இடமில்லாதவர்களும், பிணியால் அவதிப்படுவோரும், துயரங்களுக்கு உள்ளானவர்களும் நாடி வரும் இடமாகப் பள்ளிவாசல் தான் இருந்தது. ஆனால் இன்றோ வயிற்றுச் சோறுக்கு வழியில்லாதவன் கூட பள்ளிக்கு வரி கட்டவில்லையென்றால் அவனுக்கு அடக்கம் செய்ய இடம் கிடையாது என்று அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் நபிவழியின் பிரகாரம் விரலசைத்து, நெஞ்சில் கைகட்டி தொழுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பெண்களுக்குப் பள்ளிவாசல்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. மஃரிப் உடைய முன் சுன்னத் போன்ற தொழுகைகள் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நபி வழியின் பிரகாரம் சப்தமிட்டு ஆமீன் கூறுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பள்ளியில் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் படிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
தன்னைப் பெற்ற தந்தைக்கு மகன் ஜனாஸா தொழுவிப்பதற்குப் பள்ளிவாசல் நிர்வாகிகள் கதவடைக்கின்றனர். சத்தியக் கருத்துகளை உள்ளது உள்ளபடி பள்ளியில் எடுத்துரைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. நபிவழியின் பிரகாரம் வரதட்சணை வாங்காமல் அனாச்சாரங்களை ஒழித்து செய்யப்படும் திருமணங்களுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்படுகிறது. பதிவுப் புத்தகம் தர மாட்டோம் என்று மிரட்டப்படுகின்றனர்.
வரதட்சணை வாங்கினாலும் பள்ளிக்குப் பங்கு தரவேண்டும் என்று ஜமாஅத்துகள் விதி வகுத்துள்ளன. வரதட்சணைத் திருமணங்கள் பள்ளிவாசல் இமாம், முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் முன்பாகவே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன.
பள்ளிவாசல்களுக்குக் கோடிக் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் மக்களிடம் பணம் கறப்பதில் தான் பள்ளிகள் போட்டியிடுகின்றனவே தவிர யாருக்கும் எந்த உதவியும் இன்றைய பல பள்ளிகளில் காண முடிவதில்லை. இவ்வாறு பல விஷயங்களில் பள்ளிவாசல்கள் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இடமாகத் தான் உள்ளனவே தவிர நபிகள் நாயகம் காலத்தில் இருந்த ஒரு நிலையை சில பள்ளிகளில் தவிர மற்றவற்றில் காண முடிவதில்லை.
2. இறை நிராகரிப்பு
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் 72:18
மேற்கண்ட வசனத்திற்கு நேர் எதிராகப் பல பள்ளிவாசல்கள் இணைவைப்புக் காரியங்களின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. பள்ளிவாசல்களுக்குப் பெயர் வைக்கும் போதே நாகூராண்டவர் பள்ளிவாசல், முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்று இறைவனல்லாத ஆண்டவர்களுக்காகத் தான் பள்ளிவாசல்களே கட்டப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவர் எங்கும் வருவார் என்ற குஃப்ரான நம்பிக்கையில் தான் பல பள்ளிகளுக்கு இவருடைய பெயரைச் சூட்டுகின்றனர்.
இறைவனுடைய அடிமைகளை எல்லாம் இறைவனாகப் பாவித்து ஓதப்படுகின்ற கேடுகெட்ட மௌலிது குப்பைகள் பள்ளிவாசல்களில் தான் அரங்கேற்றப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவரை ஆயிரம் முறை அழைத்தால் விரைந்து வருவார்; அழைப்பிற்குப் பதில் தருவார் என்ற நரகத்து வரிகளை உள்ளடக்கிய யாகுத்பா, சுப்ஹான மௌலிது, நாகூர் ஆண்டவர் மௌலிது, ஸலாத்துன் னாரிய்யா போன்ற பல குப்பைகள் பள்ளிவாசல்களில் கொட்டப்படுகின்றன. பள்ளிவாசல்களுக்குள்ளேயே கப்ருகள் கட்டப்பட்டு வணக்க வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் பள்ளிவாசல்களோடு இணைந்ததாக பள்ளிவாசல் காம்பவுண்டிற்குள் அட்டாச்டு தர்ஹாக்களும் இணைந்துள்ளன. மேலும் தாயத்து தகடுகள், பில்லி, சூனியம், பால்கிதாப் பார்த்தல், போன்ற இன்னும் பல இணை கற்பிக்கும் காரியங்கள் அனைத்தும் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. இவ்வாறு பல பள்ளிகள் இறை நிராகரிப்பின் தளங்களாகத் தான் திகழ்கின்றன. இந்த இரண்டாவது காரணமும் பல பள்ளிகளில் நிதர்சனமாக, தெளிவாகவே காணப்படுகிறது.
3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல்
பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் மையமாகும். ஆண்டியும், அரசனும், கருப்பனும், வெள்ளையனும் சமம் என்றுரைக்கும் இடம் தான் பள்ளிவாசல். ஆனால் இத்தகைய பள்ளிவாசல்கள் தான் முஃமின்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் இடங்களாக நமக்கு மத்தியில் காட்சியளிக்கின்றன. நான்கு மத்ஹபுகளின் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் எங்கள் பள்ளிக்குள் வரக் கூடாது என்று போர்டு மாட்டி வைத்திருப்பதே பிரிவினைக்கு முதல் சான்றாகும். சமுதாயத்தில் ஏற்படும் எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் கூட தீர்த்து விடலாம். ஆனால் இந்த ஷாஃபி, ஹனஃபி பிரச்சினை கியாமத் நாள் வரை தீராத பிரச்சினையைப் போன்றும், ஜாதிப் பிரிவினைகளைப் போன்று பிறக்கும் போது ஒட்டிக் கொண்டு பிறக்கின்ற ஒரு பிரிவினையாகி விட்டது. இன்றைக்கும் கூட பல ஊர்களில் ஷாஃபியாக்கள் மற்றும் ஹனஃபியாக்களுக்கு மத்தியிலான திருமண உறவுகள் மிக அரிதாகவே நடைபெறுகின்றன. பள்ளிவாசல்கள் உருவாக்கப்படும் போது இது ஷாஃபி பள்ளி இது ஹனஃபி பள்ளி என்று பிரிவினையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.
நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரே பள்ளியில் குறுக்காகச் சுவர் வைக்கப்பட்டு ஷாஃபிகள் ஒரு புறமும், ஹனஃபிகள் ஒரு புறமும் தொழுது வருகின்றனர். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற பெரும் மதரஸாக்களிலெல்லாம் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைப் போன்று ஷாஃபி மாணவர்கள் ஒரு புறமும் ஹனஃபி மாணவர்கள் ஒரு புறமும் மிகவும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.
கஃபாவில் கூட பல ஆண்டுகளாக நான்கு முஸல்லாக்கள் விரிக்கப்பட்டிருந்தன. தவ்ஹீதின் ஆட்சி வந்த பிறகு தான் அவையனைத்தும் ஒன்றாக்கப்பட்டன. அனைத்து ஆலிம்களும் ஷாஃபி ஹனஃபி பிரிவினை தான் சரி என்றே பள்ளிவாசல்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.
இமாம் ஷாஃபியின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் அபூ ஹனீஃபாவின் மிகச் சிறந்த ஒரு மார்க்கத் தீர்ப்பை ஷாஃபியானவன் பின்பற்றினால் அவன் நரகவாதியா? இமாம் அபூ ஹனீஃபாவின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் ஷாஃபி அவர்களின் மிகச் சிறந்த மார்க்க ரீதியிலான கருத்துக்களை ஹனஃபியானவன் பின்பற்றினால் அவன் நரக வாதியா?
இதற்கெல்லாம் இந்தப் பிரிவினை ஆலிம்கள் பதில் கூறத் தயாரில்லை. இப்படிப்பட்ட இந்த மத்ஹப் பிரிவினைகளின் உலைக்களங்களாகத் தான் இன்றைய பல பள்ளிகள் திகழ்கின்றன. இப்படிப்பட்ட பள்ளிகள் உண்மையான முஸ்லிம்கள் தொழுவதற்குத் தகுதியானதா? என்பதை உண்மை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
4. அல்லாஹ்விற்கும் தூதருக்கும் எதிராகப் போர் புரிபவர்களுக்குப் புகலிடம்
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். அல்குர்ஆன் 9:17, 18
மேற்கண்ட வசனங்கள் இணை கற்பிப்பவர்கள் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வது கூடாது என்பதைத் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல் நிர்வாகிகள் 1. அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர்களாகவும் 2. தொழுகையை நிலை நாட்டுபவர்களாகவும் 3. ஸகாத்தை நிறைவேற்றுபவர்களாகவும். 4. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவராகவும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஆனால் இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளின் நிலைகளை நாம் பார்க்கும் போது இதற்கு நேர்மாற்றமாகத் தான் உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மௌலிதுகள் போன்ற அனைத்து இணை கற்பிக்கும் காரியங்களுக்கும் குத்தகைதாரர்களாகத் திகழ்கின்றனர். இவையனைத்தையும் பள்ளி வாசல்களில் இவர்கள் தான் அரங்கேற்றுகின்றனர்.
மேலும் இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யக்கூடிய வட்டி மூசாக்கள், வரதட்சணையை ஆதரிக்கும் இமாம்கள், முத்தவல்லிகள், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகள், லாட்டரி வியாபாரிகள், கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள், பள்ளிவாசலை சீட்டாட்டத்திற்கும், பொழுது போக்கிற்கும் பயன்படுத்தி விட்டுப் பாங்கு சொன்னவுடன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறக் கூடியவர்கள், அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கக்கூடிய அரசியல் புரோக்கர்கள், பெண்களைப் பலவந்தமாக அடையக் கூடிய காமவெறியர்கள், விபச்சாரம் செய்யக் கூடியவர்கள், மது அருந்தக் கூடியவர்கள் ஆகியோர் தான் இன்றைக்குப் பல பள்ளிவாசல் நிர்வாகிகளாகக் காட்சி தருகின்றனர். மேலே சுட்டிக்காட்டப்பட்ட காரணங்களிலும் அல்லது சொல்லப்படாத இன்னும் பல தீய காரணங்களிலும் ஒன்றோ இரண்டோ அல்லது இதற்கு அதிகமான விஷயங்களோ இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் காணப்படாமல் இல்லை. இவற்றை வெளிப்படையாகவே பலர் செய்து வருகின்றனர். இப்படி இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, இறைவனுக்கெதிராக யுத்தம் செய்கின்றவர்களுக்குப் புகலிடமாகத் தான் பல பள்ளிகள் திகழ்கின்றன.
இது போன்ற பள்ளிகள் உண்மையான முஃமின்கள் நின்று வணங்குவதற்குத் தகுதியானவை கிடையாது என்பது தான் முதலில் நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இறைவனின் பிரகடனமாகும். நாங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் நாடவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக