வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஜமாஅதே இஸ்லாமியை எதிர்ப்பது ஏன்?


அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் P.J.அவர்களுக்கு,

தங்களின் இந்த தவ்ஹீத் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டிக்கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள பல இயக்கங்கள் தங்களை தனிப்பட்ட முறையில் எதிர்த்தாலும், கொள்கை ரீதியாகவும் சில இயக்கங்கள் எதிர்க்கின்றன. அதில் ஜமாத்தே இஸ்லாமியும் ஒன்று. குரான் சுன்னாவைத் தான் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் ஜமாத்தே இஸ்லாமி, குரான் சுன்னாவை மட்டும் பின்பற்றும் தவ்ஹீத் ஜமாஅத்ஐ எதிர்ப்பது ஏன்? எனது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதால் அந்த இயக்கத்தை பற்றி தங்களது கருத்தை சற்று விரிவாக தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன்.
குறிப்பு: இதே கேள்வியை ஜமாத்தே இஸ்லாமி இயக்கதாரிடம் கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள், P.J. -வை பற்றி எங்களிடம் பேசாதே என்ற கருத்துப் பட பதில் தருகிறார்கள். இதனால் தான் தங்களிடம் கேட்கிறேன். எனது கேள்வியில் ஏதேனும் பிழை இருந்தாலோ, அல்லது எனது வார்த்தை உச்சரிப்பில் ஏதனும் தவறு இருந்தாலோ அல்லாஹ்விற்க்காக பொருத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
- சேக் செய்யது

P.J. -

ஜமாஅதே இஸ்லாமி இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் நம்மை விமர்சனம் செய்வதில்லை அந்த வகையில் அவர்களின் தலைவர்களை நாம் விமர்சனம் செய்வதில்லை.

ஆனால் அவர்களின் கொள்கையில் நாம் முரண்படுகிறோம்.

இஸ்லாமிய அரசை நிறுவுவது தான் இஸ்லாத்தின் இலட்சியம் என்ற கொள்கையின் மீது இந்த இயக்கம் நிறுவப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கை முற்றிலும் தவறாகும்.

நாம் சத்திய இஸ்லாத்தைச் சொல்ல வேண்டும். அதன் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு பெரும்பான்மை பெற்றால் அப்போது இஸ்லாமிய அரசு உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றால் அதில் நமக்கு மறுப்பு இல்லை.

ஆனால் ஆட்சியை உருவாக்குவது தான் இஸ்லாத்தின் ஒரே கொள்கை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நான் இஸ்லாமிய அரசை உருவாக்கப் போகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்ததில்லை.

மேலும் மறுமையை முன்னிறுத்தி இஸ்லாத்தின் பால் அழைத்தால் தான் மக்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவார்கள். இஸ்லாமிய் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று பிரகடணம் செய்து விட்டு அழைத்தால் ஆட்சி அமைப்பது தான் இவர்களின் திட்டமா? நம்மை ஆள்வதற்குத் தான் இஸ்லாத்துக்கு அழைக்கிறார்களா என்று கருதி அனேகமானோர் இஸ்லாத்துக்கு வருவதற்கு இது தடையாகி விடும் என்ற சாதாரண விஷயம் கூட இவர்களுக்குப் புரியவில்லை.

மேலும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அபத்தமான கொள்கையைக் கையில் எடுத்ததால் எந்தப் பிரச்சனையை அதிகமான மக்கள் ஏற்க மாட்டார்களோ அந்த விஷயங்களைச் சொல்லக் கூடாது என்று அடுத்த நிலைபாட்டை எடுத்தனர்.

சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசக் கூடாது; சின்ன விஷயங்களைப் பேசக் கூடாது அப்போது மக்கள் (பாவங்கள் செய்வதில்) ஒற்றுமையாக இருப்பார்கள் என்ற அபத்தமான கருத்தை வைத்தனர்.

அப்போது தான் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியும் என்பது இவர்களின் கணக்கு.

(நம்மைத் தவிர அனைவருடனும் இவர்கள் சமரசம் செய்து கொண்ட போதும் அவர்களின் திட்டம் பயனளிக்கவில்லை. தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எந்த அளவு மக்கள் ஆதரவு உள்ளதோ அதில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு கூட தமிழகத்தில் ஆதரவு இல்லை என்பது தான் ரிஸல்ட்.

பாகிஸ்தானில் கூட இவர்கள் மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லை.

இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக கூறும் இவர்கள் இஸ்லாமிய ஆட்சி அமையும் போது எந்த அடிப்படையில் ஆட்சி அமைப்பார்கள்? மத்ஹபு அடிப்படையலா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலா? பரேலவிக் கொள்கை அடிப்படையிலா? இவர்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்று ஆட்சி அமைக்கும் போது எந்த முறையில் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று கூறுவார்களானால் அந்த வினாடியே சுக்கு நூறாகச் சிதறிப் போய் விடுவார்கள.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் ஆட்சி என்று அவர்கள் கூறினால் மதஹப் தரீக்கா வாதிகள் உடனே கைகழுவி விடுவார்கள். வணக்க வழிபாடுகளையே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைத்துக் கொள்ளாதவர்கள் எப்படி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆட்சி செய்வார்கள் என்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

நடக்காத ஒன்றைக் கூறி மக்களை மதி மயக்கத்தில் நாளை மறு நாள் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்து விடும் என்ற போதையில் வைத்திருப்பது தான் இவர்களின் திட்டம் என்பது தெரிகிறது.

மேலும் இவர்களின் தலைவர் மவ்தூதி அவர்கள் மதஹபை நியாயப்படுத்தியதை மாலை அமர்வுகளில் என்ற இவர்களின் வெளியீட்டிலும், இது தான் இஸ்லாம் இரண்டாம் பாகத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

சாதாரண அறிவு படைத்தவனுக்கே மத்ஹப் என்பது அபத்தம் என்பது விளங்குகிறது. ஆனால் இவர்கள் அப்பட்டமாக மதஹபை ஆதரிக்கின்றனர்.

ஜனநாயகம் ஷிர்க், மனிதனுக்குக் கட்டுப்படக் கூடாது, ஆட்சியமைப்பதற்காக முஸ்லிம்களைக் கொல்லலாம் என்பதெல்லாம் இவர்களின் கொள்கையாக இருந்தது.

இவர்களைப் பற்றி இலங்கையில் ஆற்றிய உரையில் நான் விரிவாக விளக்கியுள்ளேன். மேலும் 72 கூட்டம் என்ற தொடரிலும் இதை விளக்கியுள்ளேன்.

www.onlinepj.com

1 கருத்து:

  1. நுனிப்புல் மேய்ந்து கூறப்பட்டுள்ள கருத்துக்கள். 
    முதலில் ஜமாஅதே இஸ்லாமி யின் கொள்கை, கோட்பாடுகள், வழிமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். 
    மத்ஹப் சம்பந்தமாக மௌதூதி (ரஹ்)
    கருத்துக்கள் இருப்பினும் அந்த விஷயத்தில் ஜமாஅத் எவரையும் வற்புறுத்துவதில்லை என்பதுதான் உண்மை. 
    ஜமாஅத்தின் வரலாறு நூல் வடிவில் வெளியாகி உள்ளது. 
    படித்து பார்த்து கருத்தை பதிவு செய்யணும். 

    பதிலளிநீக்கு