திங்கள், 6 டிசம்பர், 2010

டவுன் ஹாஜி செய்தது மட்டும் எப்படி தவறாகும்?



சென்னையில் பார்த்த பிறை செங்கல்பட்டை கட்டுப்படுத்தாது

என்று தீவிர பிரச்சாரம் செய்து வந்த நாம் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் தமிழக
அளவுக்கு மாறியது நியாயம் என்றால் டவுன் ஹாஜி செய்தது மட்டும் எப்படி
தவறாகும்?


உங்கள் கேள்வி நியாயமானது, !

  • பிற விஷயத்தை பொறுத்தவரை, கணிக்ககூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.
  • ஒரு பிறை முழு உலகத்தையும் கட்டுப்படுத்தும் என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.

மேற்கூறிய இரண்டு கொள்கைகளையும் நாம் மறுக்கிறோம், அதில் மிக உறுதியாக உள்ளோம். ஏன்? ரசூல் (ஸல்) அவர்கள் அவ்வாறு காட்டி தரவில்லை என்பதனால்.

ஆனால், பிறை விஷயத்தில், அனைத்து சட்டங்களையும் தந்த அவர்கள் ஒரு பிறை தகவலுக்குரிய எல்லை என்ன? என்பதை தராமல், நமது முடிவின் படி விட்டு விட்டார்கள்.
எந்த இடத்தில் நம்மிடம் முடிவெடுக்கும் உரிமை தரப்பட்டுள்ளதோ, அதில் நாம் முடிவெடுதுக்கொள்ளலாம்.


நாம் முடிவு எடுக்கலாம் என்று வரும்போது, நமது ஊரின் ஒற்றுமை, குழந்தைகளின் பள்ளி விடுமுறை அனைத்தையுமே கருத்தில் கொண்டு ஒரு ஒற்றை முடிவை ஜமாத்தாக (கூட்டாக) சேர்ந்து முடிவு செய்ய இஸ்லாம் அனுமதி அளித்துள்ளதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.

29 முடிந்தால் பிறை பார்க்க வேண்டும், இல்லை என்றால் 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையிலும், ஒரு பிறை தகவலை எடுக்கும் போது, நடைமுறை சிக்கல்கள் வராத வரையில் அதன் எல்லையை எவ்வளவு தூரத்திற்கு இழுத்து செல்லலாம் என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

(நடைமுறை சிக்கல்கள் என்ன? என்பதை வேறு இழைகளில் விளக்கியுள்ளேன், தேவைப்பட்டால் தருகிறேன்..)


ஆக, ஒரு கொள்கையின் பால் இருந்துக்கொண்டு, எல்லையை ஜமாத்தாக முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யலாம் எனும்போது, தமிழகம் முழுவதையும் ஒரே எல்லையாக கொண்டால், பல வகைகளில் நமக்கு வசதியாய் அமையும் என்பதால் தமிழகத்தை எல்லையாக கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், மாவட்டத்தை எல்லையாக முன்பு கொண்டிருந்தார்களே, அதையும் நான் குறை சொல்ல மாட்டேன், தமிழகம் வரை அந்த எல்லையை விரிவுப்படுதியதையும் நான் குறை சொல்ல மாட்டேன்.
முக்கியமாக, டவுன் ஹாஜி மாலேகானை எல்லையாக கொண்டதையும் இங்கு விமர்சனம் செய்ய நான் வரவில்லை. அதை தான் நீங்கள் புரியவில்லை.


விஷயம் என்னவெனில், ஒரு ஜமாத்தாக, ஒரு சட்டத்தின் கீழ், பள்ளி விடுமுறை, அரசாங்க விடுமுறை என அனைத்தும் ஒரு குடையின் கீழ் அமையப்பெற்ற நம் மாநிலத்தை ஒரு எல்லையாக கொள்ளலாம் என்று , அரசாங்க விடுமுறைகளை முடிவு செய்பவரான டவுன் ஹாஜீயிடம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கேட்டனர்.

இதற்கு முன்பு, இதையே தனது கொள்கையாக கொண்டும், தில்லியில் பிறை தென்பட்டால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம், என்று உறுதியாக மீடியாக்களிடம் பேசியவருமான டவுன் ஹாஜி, தவ்ஹீத் ஜமாத்துடன் இணைந்து செயல்ப்படுவது என்று ஒப்புக்கொண்டார்.
இதை தான் ஒரு கொள்கை என்று நான் குறிப்பிட்டது.

இந்த ஒருமித்த முடிவை ஒருவர் மாற்ற வேண்டும் என்றால், தக்க காரணத்தை அவர் கூற வேண்டும்.
அதை அவர் கூறவில்லை என்பதோடு அல்லாமல், ""இந்த முறை விட்டு விடுவோம், அடுத்த முறை தமிழகத்தை எல்லையாக கொள்ளலாம்"", என்று தனக்கு பிறை குறித்து எந்த கொள்கையும் கிடையாது என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். .

அதோடு, தவ்ஹீத் ஜமாத்திடம் அவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எந்த காரணமும் இல்லாமல் மீறியுள்ளார்.

கொள்கையற்ற தன்மை, ஒப்பந்த மீறல், என்பது, தக்க காரணங்களும், இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையிலும் இல்லாமல் இருந்தால் அதை நாம் எவ்வாறு ஏற்க முடியும்?

இந்த வருடம் மாலேகானை ஏற்ற அவர், அடுத்த வருடம் காஷ்மீரை எர்ப்பார், அதற்கடுத்த வருடம் உலகம் முழுவதும் என்பார், நமது அடிப்படை கொள்கை மாறுபட்டு விடும் என்பதாலேயே டவுன் ஹாஜீக்கு கண்டனம் தெரிவித்தோம்.

டவுன் ஹாஜி அடிப்படையற்று செய்ததற்கும், தவ்ஹீத் ஜமாஅத், முன்பு மாவட்டத்திலிருந்து மாநிலத்தை தேர்ந்தேடுத்ததற்க்கும் வேறுபாடு இல்லையா?
நிச்சயம் வேறுபாடு உள்ளது!!
புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக