செவ்வாய், 5 நவம்பர், 2013

சலஃபிகளுக்கு மறுமையில் ஷைத்தான் கூறும் பதில்


உள்ளத்தை வழிகெடுப்பது தான் ஷைத்தானுக்கு வழங்கப்பட்டிருக்கிற ஆற்றலே தவிர உடல் உபாதைகளை செய்வது அவனுக்கு சாத்தியமில்லை.

மனிதனுக்கு பகுத்தறிவை வழங்கியுள்ள இறைவன், அதை கொண்டு அவன் சரியான முறையில் சிந்தித்து சொர்ர்க்கம் செல்லும் வாசலையும் திறந்து தான் வைத்துள்ளான், ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆட்ப்பட்டு நரகத்திற்கு செல்லும் வழியையும் வைத்து தான் இருக்கிறான்.

பகுத்தறிவின் பயனாய், இவ்விரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் திறனையும் நமக்கு இறைவன் தந்துள்ளான்.

ஆக, ஷைத்தான் நம்மை வழிகெடுத்தாலும் கூட அவனது தூண்டுதலை மீறி நன்மை செய்யும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு.

இன்னும் சொல்லப்போனால், அந்த ஆற்றல் மனிதனுக்கு இருந்தால் தான் மனிதனுக்கு சிந்திக்கின்ற ஆற்றல் உண்டு என்கிற தத்துவத்தில் அர்த்தம் இருக்கும்.
அப்போது தான் சொர்க்கத்தை அடைய மனிதன் தனது சுய முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று குர்ஆன் சொல்வதில் பொருள் இருக்கும்.

அல்லாமல், நம்மையும் மீறி ஷைத்தான் நம்மை ஆட்கொள்வான், அவனுக்கு நம்மீது முழு அதிகாரமும் உண்டு என்று நம்பினால், மனிதன் தன் சக்தியையும் மீறி நரகம் செல்கிறான் என்று பொருளாகும்.

ஷைத்தானுக்கு எப்படி நம்மை வழிகெடுக்கும் ஆற்றல் வழங்கப்பபட்டிருக்கிறதோ, அதே போன்று, அவனது சூழ்ச்சியிலிருந்து தப்பிக்கும் ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருக்க, ஷைத்தான் மனிதனை பைத்தியமாக்குவான் என்றும், அதன் மூலம் மனிதன் செய்யும் நற்காரியங்களுக்கு அவன் முற்றுப்புள்ளி வைப்பான் என்றும் சொன்னால், மனிதனுக்கு ஷைத்தானை மீறிய எந்த ஆற்றலும் இல்லை என்று ஆகி விடுகிறது.

தன்னிடம் உள்ள பகுத்தறிவைக் கொண்டு எந்த பயனுமில்லை என்று பொருளாகிறது.

காரணம், கெட்ட எண்ணங்களிலிருந்து விடுபடுவது தான் சிந்தனையின் மூலம் மனிதனால் செய்ய இயன்றதே தவிர தான் பைத்தியமாக்கப்படுவதை விட்டும் தற்காத்துக் கொள்வது அவனது கையில் இல்லை.

ஷைத்தான் மனிதனை பைத்தியமாக்கி அதன் மூலம் அவனது நன்மைகளுக்கு முட்டுக்கட்டை இடுவான் என்று சொன்னால், தனது கட்டுப்பாட்டையும் மீறிய விஷயத்தில் மனிதனை விழ செய்து, இறுதியில் அவ்வாறு அவன் வீழ்ந்ததால் அவனுக்கு நரகம், என்கிற பாரபட்சமான தீர்ப்பை அல்லாஹ் தருவதாக அர்த்தமாகி விடும்.

ஆகவே, ஷைத்தானின் அதிகாரம் என்பது நம்மை வழிகெடுக்க தூண்டுவது தானே தவிர நமக்கு உடல் உபாதைகள் செய்வதில்லை என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

இதை நாம் சுயமாகவும் சொல்லவில்லை. மறுமை நாளில் ஷைத்தானே இதை சொல்வான் என்று அல்லாஹ் சொல்கிறான்.

உங்களை அழைத்தேன், எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! (14:22)

நம்மை பைத்தியமாக்கும் ஆற்றல் ஷைத்தானுக்கு உண்டு என்கிற நம்பிக்கை, இந்த இறை வசனத்திற்கு முரண்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக