குனிந்து தரையை பார்க்கிற அளவிற்கு எதிரிகள் நெருங்கி விட்டதை அறிந்து கவலையும் பயமுமுற்ற அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், " ரசூலுல்லாஹ்வே, நாம் வசமாக சிக்கிக் கொண்டோம் போல் இருக்கே, என்று வருத்தப்படுகிறார்கள்.
தோழரை அமைதிப்படுத்திய நபிகளார், அபுபக்கரே, எந்த இருவருடன் மூன்றாவதாக அல்லாஹ் இருக்கிறானோ, அந்த இருவரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு, நம்முடன் அல்லாஹ் இருக்கிறான், எந்த நிலையிலும் அவன் நம்மை காப்பான் என்று உறுதிப்பட சொல்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களை காப்பாற்றினான்.
நாலா திக்கும் தேடிய எதிரிகள், குனிந்து கீழே பார்க்க வேண்டும் என்பதை மறந்தவர்களாக அங்கிருந்து வெளியேறினார்கள்.
நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழரும் அல்லாஹ்வால் காக்கப்படுகிறார்கள்.
இந்த குகை தொடர்பாக இவ்வளவு தான் ஆதாரப்பூர்வமான செய்திகளாக பதிவாகியுள்ளது. (புஹாரி 3653)
இது அல்லாமல், குகை வாசலில் சிலந்தி வலை பின்னியது என்றும், புறாக்கள் முட்டை இட்டு வைத்திருந்தன என்றும், அபுபக்கர் அவர்களை பாம்பு கொத்தியது என்றும் சொல்லப்படும் செய்திகள் அனைத்தும் புனையப்பட்ட தவறான செய்திகளாகும்.
எதிரிகளிடமிருந்து இருவரையும் காப்பாற்றியது பற்றி அல்லாஹ்வும் தமது திருமறையில் சொல்கிறான்.
நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏக இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், 'நீர் கவலைப் படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்' என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக் கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். (9:40)
எதிரிகளிடமிருந்து தப்பித்த நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும்,
வழிகாட்டியான அரீகத்தின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். ஒப்பந்த்திற்கு மாறு செய்யாத அரீகத், ஒப்புக்கொண்டபடி குறிப்பிட்ட மூன்றாம் இரவில் இரண்டு ஒட்டகங்களுடன் சவ்ர் குகைக்கு வருகிறார்.
நபி (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்கள், அவர்களது அடிமை புஹைரா ஆகியோருடன் அரீகத்தும் இணைந்து கொள்ள, மதினாவை நோக்கிய அவர்களது பயணம் தொடர்கிறது.
இடையில் களைப்பு காரணமாக ஓய்வு எடுக்கும் போதெல்லாம், நபியை தூங்க சொல்லி விட்டு, தான் தூங்காமல் நபிக்காக காவல் இருந்தார்கள் அவர்களது தோழர் அபுபக்கர் அவர்கள்.
பயணத்தினூடே உணவு தேவையை, ஆங்காங்கே ஆடுகள் மேய்ப்பவர்களிடம் பால் கறந்து தருமாறு கேட்டு அருந்தி பூர்த்தி செய்து கொள்வார்கள்.
இந்த செய்திகள் அனைத்தும் புஹாரி 3615, 2439 ஆகிய ஹதீஸ்களாக பதிவாகியுள்ளன.
அபுபக்கர் (ரலி) அவர்களின் சாதுர்யம் :
-----------------------------------------------------
எதிரிகளின் சந்தேகப்பார்வை தங்கள் மீது விழாமல் இருக்கும் பொருட்டு, கடற்கரை வழியாக தங்களது பய்ணத்தை தொடர்கிறார்கள். அவ்வாறு பயணப்பட்டு செல்கிற போது எதிரே மதினாவை சேர்ந்த வியாபாரக்கூட்டமொன்று மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த வியாபரக்கூட்டத்திற்கு அபுபக்கர் அவர்களை தெரிந்திருக்கிறது, ஆனால் நபிகள் பெருமானாரை அவர்களுக்கு தெரியவில்லை.
உடனே அபுபக்கர் அவர்களை பார்த்து, இவர் யார், என்று நபியை குறித்து விசாரிக்கிறார்கள்.
இந்த கூட்டம் சென்று கொண்டிருப்பது மக்காவை நோக்கி என்பதால், இவர் தான் முஹம்மது நபி என்கிற உண்மையை இவர்களிடம் சொல்வது ஆபத்து என்பது அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு தெரியும்.
அதே சமயம், பொய் சொல்லவும் அனுமதியில்லை.
சாதுர்யமாக செயல்பட்ட அவர்கள், "இவர் எனது வழிகாட்டி", என்று பதில் சொல்கிறார்கள்.
தனது வாழ்க்கையின் வழிகாட்டி என்கிற பொருளில் அபுபக்கர் அவர்கள் சொன்னதை, மதினா செல்வதற்கான பாதையை காட்டுபவர் என்று அவர்கள் சொன்னதாக புரிந்த கொண்ட அந்த வியாபரக்கூட்டம், அங்கிருந்து சென்றனர்.
இந்த சம்பவம் புஹாரி 3911 இல் பதிவாகியுள்ளது
பயணம் தொடர்கிறது..
மக்காவிலிருந்து பல மைல் தூரம் கடந்து விட்ட அவர்கள், எதிரிகளின் அச்சுறுத்தலிலிருந்து தப்பி விட்டதாய் தான் எண்ணியிருப்பார்கள். அப்போது தான் அந்த அதிர்ச்சி அவர்களுக்காக காத்திருந்தது..
இன்ஷா அல்லாஹ், தொடரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக