செவ்வாய், 5 நவம்பர், 2013

மக்கா முதல் மதினா வரை - 2


மக்காவில் துயரங்களுக்கு மேல் துயரம் அனுபவித்த நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் தங்களால் இயன்ற அளவிற்கு அனைத்தையும் சகித்து கொள்ளத்தான் செய்தார்கள்.
எந்த நிலையிலும், எதிரிகளை திருப்பி தாக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கவில்லை. மாறாக, அவர்களுக்கும் தூய இஸ்லத்தின் பால் அழைப்பையே விடுத்து வந்தார்கள். 

ஆனால், எதிரிகளில் பெரும்பான்மையானோர் நபியின் போதனைகளுக்கு அப்போது செவி சாய்க்கவில்லை. இந்த போதனை மக்கா நகரில் வியாபித்து விட்டால் தங்களது சிலை வழிபாடும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் இலாபமும் பெருத்த பாதிப்புக்குள்ளாகும் என்பதால் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் மிகக் கடுமையாக எதிர்க்க துவங்கினர்.

எங்களால் தாங்க இயலவில்லை யா ரஸூலுல்லாஹ், என்று தோழர்கள் வேதனையாலும் சொல்லணா துயரத்தாலும் வெம்பி நபியிடம் முறையிடும் அளவிற்கு நிலைமை மிகவும் பயங்கரமாய் இருந்தது.

ஆனால், அல்லாஹ்விடமிருந்து மாற்று வழிக்கான அறிவுரைக்காக காத்திருந்த நபிகளார், சஹாபாக்களை கையமர்த்தி, பொறுமை காக்க சொன்னார்கள்.

அல் அக்பா உடன்படிக்கை :

மக்காவில் நிலைமை இவ்வாறிருக்க, இஸ்லாத்தை எட்டு திக்கும் பரவ செய்யும் நோக்கில் பல வழிகளில் தாவா செய்து வந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்.
அன்றைய காலகட்டத்தில், மக்கா நகருடன் வியாபார தொடர்பில் இருந்த மதினா நகரில் நபிகள் நாயகம் பற்றிய செய்தி சென்றடைகிறது.

மக்காவில் வாழ்வதற்கே வழியில்லாத நிலை ஏற்பட்டாலும், மதினாவில் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு அங்குள்ள மக்கள் மத்தியில் வேகமாக பரவத் துவங்கியது.

இவ்வாறு மதினாவில் இஸ்லாம் பரவிய அந்த காலகட்டத்தில், அங்கு அவ்ஸ் , கஸ்ரஜ் ஆகிய இரு கோத்திரத்தார் வாழ்ந்து வந்தனர். இரு கோத்திரத்தாரும் பல பிரிவுகளாக பிரிந்து மக்காவுக்கு பயணமாகி நபியை சந்தித்து இஸ்லாத்தை ஏற்கிறார்கள்.

குறிப்பாக, மினா நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் அல் அகபா எனும் பகுதியில் வைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதினாவாசிகளில் பெரும் பகுதினர் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு, தாங்கள் ஏற்ற இந்த கொள்கையை மதினாவுக்கு சென்று பரப்பவும் செய்வோம் என்று நபியிடம் உறுதிமொழி அளிக்கின்றார்கள்.

அதிகமான வரலாற்று செய்திகளை கொண்ட இந்த சம்பவங்கள் புஹாரி 3892 வில் பதிவாகியுள்ளது.

நபியுடன் மதினாவாசிகள் செய்து கொண்ட இந்த ஒப்பந்த்தம் தான் இஸ்லாம் மக்காவை தாண்டி பரவுவதற்கு வித்திட்டது.
இந்த ஒப்பந்தம் தான் நபியும் அவர்களது தோழர்களும் மக்காவில் அடைந்து வந்த துன்பங்களுக்கு விடிவுகாலமாகவும் அமைந்தது.

இஸ்லாமிய வரலாற்றில் அல் அகபா உடன்படிக்கை தனி முத்திரை பதித்தது.


தொடரும், இன்ஷா அல்லாஹ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக