செவ்வாய், 5 நவம்பர், 2013

மக்கா முதல் மதினா வரை - 5


இரண்டு முறை உயிர் பிழைத்த நபி (ஸல்) அவர்கள்
------------------------------------------------------------------------

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேற திட்டம் தீட்டியதை அறிந்து கொண்ட மக்கத்து முஷ்ரிக்குகள், அவர்களை எப்படியும் கொலை செய்வது என்று முடிவு செய்து, அதற்கான திட்டத்தை தீட்டி வந்தனர்.

இந்த செய்தி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா அவர்கள் காதுக்கு வர, பதறியடித்துக் கொண்டு தந்தையிடம் விஷயத்தை கூறுகிறார்கள்.

எதிரிகள் எந்த நேரத்திலும் தம்மை சுற்றி வளைக்கலாம் என்பதை அறிந்தும் கூட பதட்டப்படாத நபி அவர்கள், ஒளு செய்து தொழுது விட்டு பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது போல், ஒரு சிறு குதிரைப்படையொன்று, பள்ளிவாசலை சூழ்ந்து கொள்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதுரியமாக செயல்பட்டு, எதிரிகள் கண்களில் மண்ணை வாரி வீசி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்கிறார்கள்.

இந்த சம்பவம் அஹமத் 2626 இல் விளக்கமாக பதியப்பட்டுள்ளது.

மற்றொரு சந்தர்ப்பத்தில், நபி (சல்) அவர்களது வீட்டிற்கும் எதிரிகள் படையெத்து வந்தனர்.

நபியின் வீட்டு வாசல் பெரும்பான்மையான நேரங்களில் வெறும் பாயை கொண்டு தான் மறைக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் அந்த மறைவு கூட இருக்காது.
அந்த வகையில், தூரத்திலிருந்து பார்க்கின்ற போதே உள்ளே இருப்பது யார் என்பதை சில வேளைகளில் அறிந்து கொள்ளலாம்.

எதிரிப்படை தம்மை கொலை செய்ய வீட்டை நோக்கி வரப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள், தமது வளர்ப்பு பிள்ளையான அலி (ரலி) அவர்களை வீட்டில் இருக்க வைத்து விட்டு அவ்விடத்திலிருந்து தப்பிக்கிறார்கள்.

அலி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் படுக்கையில் படுத்திருக்க, தூரத்திலிருந்து பார்க்கையில் நபி தான் படுத்திருக்கிறார் என்று எண்ணி எதிரிகள் வீட்டின் அருகில் வந்து பார்த்து, அது நபி இல்லை என்பதை அறிந்து ஏமாற்றமடைகிறார்கள்.

தொலைவிலிருந்து பார்த்து, வீடு வரை வரக்கூடிய அந்த நேரம் நபி (ஸல்) அவர்கள் அதிக தூரம் தப்பித்து செல்ல உதவும் என்பதால் தமது உயிரை கூட துச்சமாக கருதி அலி (ரலி) அவர்கள் செயல்பட்டது மகத்தான காரியமாகும்.

எதிரிகள், அலி (ரலி) அவர்களிடம் நபி குறித்து விசாரித்த போதும், "எனக்கு தெரியாது", என்று நபி குறித்து எந்த தகவலையும் தர‌ திட்டவட்டமாக மறுத்து விடுகிறார்கள்.

மேற்கண்ட நிகழ்வுகள் அஹ்மத் 3081 இல் பதிவாகியுள்ளது.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இரு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கிறார்கள்.

இதை அல்லாஹ் தனது திருமறையில் கீழ்கண்டவாறு சொல்கிறான்..

(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (8:30)

எதிரிகளின் சூழ்ச்சியை அல்லாஹ்வின் உதவி கொண்டு தவிடு பொடியாக்கிய நபி (ஸல்) அவர்கள், இனி ஒரு நிமிடம் கூட மக்காவில் இருக்க முடியாது என்பதை உணர்கிறார்கள்.

தான் மக்காவிலிருந்து வெளியேறும் விஷயம் கூட எதிரிகள் காதுகளுக்கு சென்று விட்டதால் தமது பயணத்தை ரகசியமாய் மேற்கொள்வதற்காக‌ ஒரு தந்திரத்தை நபி அவர்கள் கையாண்டார்கள்.

இதற்கிடையே, மக்காவை விட்டும் நபி (ஸல்) அவர்கள் தப்பித்து சென்று விடக்கூடாது என்பதில் தீவிரமாய் இருந்த எதிரிப்படையினர், முஹம்மது நபியை உயிருடனோ பிணமாகவோ பிடித்து வருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு என்கிற பரபரப்பான அறிவிப்பொன்றை மக்கத்து தெருக்களில் விடுக்கின்றனர்.

நபியின் தலைக்கு விலை பேசப்பட்ட இந்த செய்தி புஹாரி 3906 இல் பதிவாகியுள்ளது.

எதிரிகளின் கொலை வெறி என்னானது? நபி (ஸல்) அவர்களது ரகசிய திட்டம் என்ன? அது எப்படியெல்லாம் அவர்களுக்கு கை கொடுத்தது?

அடுத்தடுத்து காணலாம், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக