வெள்ளி, 15 நவம்பர், 2013

மக்கா முதல் மதினா வரை - 11



இஸ்லாத்தை தழுவிய அப்துல்லாஹ் இப்னு சலாம் பற்றிய முக்கிய செய்தி யாதெனில், அவர் அன்றைக்கு அச்சமூகத்தில் வாழ்ந்த யூத சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக, மத போதகராக திகழ்ந்தார்.
அந்த வகையில் யூதர்களின் பெரும் மதிப்புக்கு பாத்திரமாய் திகழ்ந்து வந்தார் அவர்.

தான் இஸ்லாத்தை தழுவியதை குறித்து அந்த யூத கூட்டத்தார் எத்தகைய எண்ணங்களை கொண்டிருப்பர் என்பதை அறிவதற்காக, அந்த யூதர்களிடம் தாவா செய்யும் ரசூலுல்லாஹ்விடம் தம்மை பற்றி அவர்களிடம் விசாரிக்குமாறு சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களும் அந்த கூட்டத்தாரிடம், அப்துல்லாஹ் எப்படிப்பட்டவர் என்றெல்லாம் விசாரிக்கிறார்கள்.
அத்துடன், அப்துல்லாஹ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்றும் கேட்கிறார்கள்.
அவ்வாறு நடக்கவே நடக்காது என்று அவர்கள் மறுக்க, திடீரென அவர்கள் முன் தோன்றிய அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அறிவிக்கிறார்கள்.

அதுவரை அவரை புகழ்ந்த வாய்கள் அனைத்தும் அவரை சபித்தவாறு அங்கிருந்து சென்றனர்.

இவை புஹாரி 3329 இல் பதிவாகியுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் தாக்கம் மதீனத்து யூதர்கள் மத்தியில் பரவத் துவங்கியது.
இருப்பினும்,மக்காவிலிருந்து வந்தேறிய சஹாபா பெருமக்கள், நபியின் பிரச்சாரம் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மதினாவாசிகள் என ஒரு பெருங்கூட்டம் இஸ்லாத்தை தழுவியிருந்த அந்த காலத்தில், எதிரிகளால் வாய் கட்டி மெளனமாக‌ தான் இருக்க முடிந்ததே தவிர,எதிர்ப்பு வேலைகளில் உடனடியாய் இறங்க முடியவில்லை.

வேகமாய் வளர்ந்து வந்த அல்லாஹ்வின் மார்க்கத்தை அந்த மண்ணில் நிலைநாட்டிடவும், அதை உலகமெங்கும் பரவ செய்திடவும் தங்களுக்கென ஒரு தலைமை பீடமாய் ஒரு பள்ளிவாசலொன்று அவசியம் என கருதிய பெருமானார், மதினாவின் கடை வீதிகளில் உலா வந்து, தாம் விரும்பிய ஒரு இடத்தை பள்ளிவாசலுக்கென தேர்வு செய்து அதை தமது சொந்த பணம் கொண்டு வாங்குகிறார்கள்.
இலவசமாய் அந்த நிலத்தை மதினாவாசிகள் தர விரும்பிய போதும் கூட அதை இலவசமாய் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.

பள்ளிவாசல் கட்டுமான பணிகள் வேகமாக நடந்தன.

பள்ளிவாசல் எழுப்புவதற்கு முன்பாய் அந்த இடம், பேரீத்தமரங்கள் நிறைந்த இடமாகவும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் இருந்தன.

அவ்விடத்தை சுத்தம் செய்யுமாறு கூறிய நபி (ஸல்) அவர்கள், பள்ளிவாசல், இறந்து போனவர்களிடன் அடக்கஸ்தலத்தின் மீது எழுப்பப்படக்கூடாது என்பதற்காக, கப்ர்களை தரைமட்டமாக்கியதோடு மட்டுமல்லாமல், அடங்கப்பட்ட அனைத்தையும் தோண்டி சுத்தப்படுத்தவும் கட்டளையிட்டார்கள்.

எந்த நிலையிலும் கப்ரின் மீது பள்ளிவாயில்கள் கட்டப்படக் கூடாது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

சஹாபாக்கள் போட்டி போட்ட வண்ணம் கட்டுமான பணிகளில் ஈடுபட, அவர்களுக்கு சமமாய் நபி (சல்) அவர்களும் கல் சுமக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

பள்ளிவாசலுக்கென நபி அவர்கள் தேர்வு செய்த இடமானது பெரும் நிலப்பரப்பை கொண்டதாகும்.

அதன் அளவு ஹதீஸ்களில் சொல்லப்படவில்லையென்றாலும் கூட, நபியின் அடுத்த பத்து வருடாஅட்சி காலத்தில், தொழுமிடம், அரசு செயலகம், கஜானா, பைத்துல் மால், ராணுவ கருவூலங்கள், வீர தீர‌ விளையாட்டு மற்றும் பயிற்சி இடங்கள், எதிரிகளை அடைத்து வைக்கும் சிறைகள் என‌ அங்கு தான் இஸ்லாமிய ராஜ்ஜியத்தின் அனைத்து பணிகளும் செயல்பட்டன என்கிற வகையில், அதன் பரப்பளவு மிகப்பெரிதாக தான் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அந்த பள்ளிவாசலுக்கு அருகிலேயே தமக்கென ஒரு வீட்டையும் உருவாக்கி கொள்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.

மேற்கூறிய சம்பவங்கள் புஹாரி 3906 இல் பதிவாகியுள்ளது.

உருவானது மஸ்ஜிதுன் நபவி ! தோன்றியது இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் !!
13 வருட காலம் அந்த உம்மத் பட்ட அடிகளுக்கும் வேதனைகளுக்கும் ஒரு விடிவு காலத்தை அல்லாஹ் காட்டத் துவங்கிய நாள் அது !

உலக அளவில் எவராலும் அசைக்க முடியாத மாபெரும் சக்கரவர்த்தியாய் உருவானார்கள் பெருமானார் அவர்கள் !!



இறுதிப் பாகம், அடுத்து, இன்ஷா அல்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக