செவ்வாய், 5 நவம்பர், 2013

மக்கா முதல் மதினா வரை - 8


பல்வேறு சோதனைகளை கடந்து பயணத்தின் பெரும்பான்மையான தூரத்தை கடந்தாகி விட்ட நிலையில், நபி (ஸல்) அவர்களுக்கு மேலும் ஒரு சோதனை காத்திருந்தது. 

மக்கா நகரை விட்டு முஹம்மது தப்பி விட்டார் என்பதையறிந்து எட்டு திக்கும் தேடியலைந்து தோல்வியுற்ற மக்கத்து காஃபிர்கள், நபியை பிடிக்க இயலாத விரக்தியில் பெரும் கோபங்கொண்டனர்.

பின்னாளில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சுரக்கா (ரலி) அவர்கள் அந்த காலகட்டத்தில் மக்கத்து காஃபிர்களின் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

அவரது தலைமையில் மக்காவில் மிகப்பெரிய கூட்டமொன்று மீண்டும் கூட்டப்படுகிறது, நபியை தேடி கண்டுபிடிப்பதற்கான வியூகம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இன்னிலையில், கடற்கரை வழியாக மதினாவை நோக்கி ஒரு ஒட்டக கூட்டமொன்று சென்று கொண்டிருக்கிறது என்கிற செய்தி மக்கத்து காஃபிர்கள் காதுகளுக்கு எட்டுகிறது.

நிச்சயம் அது முஹம்மதும் அவரது நண்பருமாக தான் இருக்கும் என்று முடிவு செய்தது மக்கத்து காஃபிர் கூட்டம்.

நபி (ஸல்) அவர்கள் மதினாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் ஆத்திரமடைந்த சுரைக்கா (ரலி) அவர்கள்,தனி நபராக நபியை கொலை செய்வது என்று தீர்மானிக்கிறார்கள்.
அதன் படி, தனது குதிரையில் ஏறி, செய்தி கிடைக்கப்பெற்ற அந்த கடற்கரை திசை நோக்கி வாளுடன் பயணப்பட்டார்கள்.

நபியை கொலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர்களது சிந்தனையில் இருந்த ஒரே லட்சியமே தவிர அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தெல்லாம் அவர்கள் திட்டமிடவில்லை.

வேகமாக தாவி சென்ற குதிரை இலக்கை (நபியை) நெருங்கியது.
பின்னால் கொலை வெறியுடன் ஒரு எதிரி வருவதை அபுபக்கர் அவர்கள் கண்டு அதை நபியிடம் சொல்ல, தங்களை தாக்குவதற்கு தான் அந்த நபர் வருகிறார் என்பதை இருவரும் புரிந்து கொள்கிறார்கள்.

உடனடியாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கையேந்துகிறார்கள். தங்களை காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் முறையிடுகிறார்கள்.
நபி செய்த பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ், அந்த இடத்தில் ஒரு அற்புதத்தை நிகழ்த்துகிறான்.

பாய்ந்து வந்துக் கொண்டிருந்த சுரைக்கா (ரலி) அவர்களது குதிரை திடீரென நிலைகவிழ்ந்து தலை குப்புற கீழே விழுந்து இறக்கிறது.

பாலைவனத்தில் தன்னந்தனி ஆளாக வந்த ஒருவருக்கு, தான் பயணப்பட்டு வந்த குதிரையும் இறந்து போய் விட்டால், அவர் உயிர் பிழைப்பதும் கூட கேள்விக்குறியாகி விடும். காரணம், பாலைவனத்தில் உணவோ தண்ணீரோ கிடைக்காது, நாம் பயணம் செய்து அருகிலிருக்கும் ஏதேனும் ஊரை அடைந்தாலோ அல்லது பாலைவனத்திலேயே ஏதேனும் வாகனக் கூட்டத்தை சந்திக்க நேர்ந்தாலோ தான் உணவுத் தேவை பூர்த்தியாகும்.
அந்த வகையில்,பயணப்பட்டு வந்த குதிரை நிலை கவிழ்ந்து போனதையடுத்து தான் கொண்டிருக்கும் அசத்தியக் கொள்கை தான் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்பதை சுரக்கா (ரலி) அவர்கள் உணர்கிறார்கள்.

நபி (சல்) அவர்களை அழைத்த சுரக்கா (ரலி), நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்ததினுடைய விளைவு தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது, நான் தப்பிப்பதற்காக மீண்டும் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள், நான் இஸ்லாத்தை ஏற்கிறேன் என்று கூறுகிறார்கள்.

அவரது கோரிக்கையை ஏற்ற நபி (சல்) அவர்கள், அவருக்காக பிரார்த்தனை செய்ய, சுரக்காவின் குதிரை மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது.

அந்த இடத்தில் வைத்தே இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சுரக்கா (ரலி) அவர்கள், அந்த நொடி முதல் நபி (ஸல்) அவர்களின் மெய் காப்பாளராக மாறினார்கள்.

நபி இருக்கும் இடத்தை எதிரிகள் அறிந்து கொண்டு விட்டதால் அந்த இடத்திலிருந்து உடனடியாக செல்லுமாறு நபியிடம் சொல்கிறார்கள் சுரக்கா அவர்கள்.
அதன் பிறகு, அந்த இடத்திலேயே காவலிருந்த அவர்கள், அந்த வழியாக நபியை தேடி வரும் எதிரிகள் அனைவரையும் திசை மற்றி விடும் பணியை செய்தார்கள்.

மேலே உள்ள சம்பவங்கள் அனைத்தும் புஹாரி 3615 இல் பதிவாகியுள்ளது.

நபியை கொலை செய்வதற்காக புறப்பட்ட ஒரு நபர், நபியின் உயிருக்கு காவலராய் மாறிய நெகிழ்ச்சியான சம்பவம் இந்த ஹிஜ்ரத்தின் போது நிகழ்ந்தது !

தொடரும், இன்ஷா அல்லாஹ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக