செவ்வாய், 5 நவம்பர், 2013

மக்கா முதல் மதினா வரை - 4



ஹிஜ்ரத் செய்ய அனுமதி
‍‍‍----------------------------------

தமது தோழர்களில் பெரும்பான்மையினோர் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு விட்டதை அடுத்து, அல்லாஹ்வின் பிரத்தியேக கட்டளைக்காக காத்திருந்த நபிகள் நாயகம் (சல்) அவர்கள், ஒரு நாள் பகல் நேரத்தில் தமது தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டுக்கு ஓடோடி வருகிறார்கள்.

எப்போதும் காலையிலோ மாலை நேரத்திலோ மட்டும் தமது தோழர் வீட்டுக்கு வரும் வழக்கத்தை கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள், அன்று சூரியன் உச்சியில் இருக்கின்ற அந்த நேரத்தில் வேகமாக‌ வருவதை கண்ட அபுபக்கர் அவர்களது புதல்விகளான அஸ்மா மற்றும் ஆயிஷா ஆகியோர், பதட்டமடைந்து, அதை தங்கள் தந்தையிடம் தெரிவிக்கிறார்கள்.

என்ன விபரம் என்று அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் வினவ, தமக்கு ஹிஜ்ரத்திற்கான அனுமதியை அல்லாஹ் அளித்து விட்டான் என்கிற செய்தியை நபி அவர்கள் சொல்கிறார்கள்.

நானும் உங்களுடன் வருகிறேன், என்று அபுபக்கர் அவர்கள் சொல்ல, நீங்கள் என்னுடன் வருவதையே நானும் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் பதலளிக்க, இருவருக்குமிடையே இருந்த அந்த நட்பின் ஆழம் அந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுகிறது.

சுருக்கமாக தரப்பட்ட மேலுள்ள செய்திகள், புஹாரி 2138 ஹதீஸில் கூடுதல் விவரங்களுடன் பதிவாகியுள்ளது.

ஹிஜ்ரத் பயணம் முடிவாகி விட்ட நிலையில் ஆயிஷா (ரலி) மற்றும் அஸ்மா (ரலி) ஆகியோர், பயணத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை தயாரிக்கிறார்கள். (பார்க்க புஹாரி 2979)

மறுபுறம், அபுபக்கர் (ரலி) அவர்கள், தமக்கு சொந்தமான இரு ஒட்டகங்களை தயார் செய்து, ஒன்றை நபிக்கு வழங்குகிறார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் அதை இலவசமாய் அளிக்க முன் வந்த போதும் கூட, அந்த சந்தர்ப்பத்தில் நபி அவர்கள் அந்த ஒட்டகத்தை தமது சொந்த செலவிலேயே பெற்றுக் கொள்கிறார்கள்.
(பார்க்க புஹாரி 2138)

பயணத்திற்கு தேவையான ஒட்டகமும், உணவுப் பொருட்களும் தயாராகி விட்ட நிலையில், எதிரிகளுக்கு எந்த சந்தேகமும் வராத வண்ணம் நாட்டை விட்டு வெளியேறி விடுவது எப்படி என்பது குறித்து நபி (சல்) அவர்கள் திட்டமிடலானார்கள்.

இதற்கிடையே, சஹாபாக்கள் பலரும் நாடு துறந்து தப்பி சென்று விட்டனர் என்பதையும் முஹம்மது நபியும் தப்பித்து செல்ல் இருக்கிறார் என்பதையும் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்ட மக்கத்து காஃபிர்கள், கேலி செய்வது, திட்டுவது, துன்புறுத்துவது இவையனைத்தையும் தாண்டி இம்முறை நபி (சல்) அவர்களை கொலை செய்வதென்றே முடிவெடுத்தனர்.

எக்காரணத்தைக் கொண்டும் நபியவர்கள் மக்கா எல்லையை கடக்க கூடாது என்பதில் உறுதியாய் இருந்தனர் எதிரிகள்.

நபியின் பயணம் துவங்குவதற்கு முன் எதிரிப்படை நபியை சூழ்ந்ததா?
நபியின் பயண வியூகம் எப்படி அமைந்திருந்தது??

தொடர்ந்து பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக