ஹிஜ்ரத் வரலாற்று சுருக்கம் :
--------------------------
இஸ்லாமிய வரலாற்றில் மைல் கல்லாக குறிப்பிடப்படுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களது சஹாபாக்களும் தங்களது பிறந்த ஊரான மக்காவிலிருந்து உயிர் பிழைப்பதற்காக நாடு துறந்து மதினாவை நோக்கி பயணம் மேற்கொண்ட அந்த நிகழ்வாகும்.
இதையே நபியின் ஹிஜ்ரத் பயணம் என்று அழைக்கிறோம்.
மக்காவில் மட்டுமே அறியப்பட்டிருந்த இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று உலகின் மூலை முடுக்கெங்கிலும் எதிரொலிக்க இந்த ஹிஜ்ரத் பயணமே காரணம் என்கிற அளவிற்கு சமுதாயத்தில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது !
மக்காவில் துவங்கி மதினா சென்றடைவது வரை நபியை சுற்றி நிகழ்ந்த சம்பவங்களை இங்கே சுருக்கமாக தருகிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 13 வருட காலம் மக்காவில் வாழ்ந்தார்கள் என்றாலும் அவர்களது வாழ்க்கை அங்கே நிம்மதியாய் கழிந்தது என்னவோ அவர்கள் நபியாக ஆவது வரை தான்.
40 ஆவது வயதில் இறைவன் அவர்களை நபியாக நியமித்ததிலிருந்து அவர்களது வாழ்வு போராட்டமாக மாறியது.
ஏகத்துவக் கொள்கையை மக்கள் மத்தியில் எத்தி வைப்பதற்கு பெரும் விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருந்தது.
தான் பிறந்து, ஓடியாடி விளையாடி, வளர்ந்த ஊரில் ஒருவருக்கு சுதந்திரம் இல்லை என்றால் அதை விடவும் கொடுமை ஒருவருக்கு வேறு இருக்க முடியாது.
தான் நபியாக ஆன பிறகு, ஊரிலுள்ள தமது உற்றார், உறவினர்கள், நண்பர்களை அழைத்த முஹம்மது நபி அவர்கள்,
"இந்த மலைக்கு பின்னாலிருந்து ஒரு எதிரிக் கூட்டம் உங்களை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் அதை பார்க்காமல் நீங்கள் நம்புவீர்களா? என்று அந்த மக்களிடம் கேட்கிறார்கள்.
ஒருவர் விடாமல் அனைவருமே "ஆமாம் முஹம்மதே, நீர் எங்களிடம் உண்மையாளர் என்று பெயரெடுத்தவர்" என்று கூறினர்.
"அப்படியானால், இதோ நான் சொல்லப்பொகிற இந்த செய்தியையும் நீங்கள் அதே போன்று நம்புங்கள் என்று, தான் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபி எனவும், அல்லாஹ் மட்டுமே வணங்கப்பட வேண்டிய ஒரே கடவுள் எனவும் அந்த மக்களை நோக்கி சொன்ன போது, சில நிமிடங்கள் முன்பு வரை யாரெல்லாம் அவரை உண்மையாளர் என புகழ்ந்தார்களோ, அவர்கள் அனைவருமே நபியை திட்டித் தீர்த்தார்கள், பைத்தியக்காரர் என்றார்கள்,
அபு லஹப் என்பவன் நபியை நோக்கி மண்ணை வாரி இறைத்தான்.
40 வயது வரை அச்சமூகத்து மக்கள் மத்தியில் நம்பிக்கையாளர் எனவும், உண்மையாளர் எனவும் பெயரெடுத்த நபி அவர்கள், எப்பொது அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கப்பட வேண்டிய ஒரே கடவுள் என்கிற பிரச்சாரத்தை கையில் எடுத்தார்களோ, அந்த நொடி முதல், தான் கொண்டிருந்த அந்த நற்சான்றிதழ் அனைத்தையும் இழந்தார்கள்.
ஒட்டு மொத்த ஊராரும் நம்மை கிறுக்கன் என்றும் பைத்தியக்காரன் என்றும் அழைப்பதும், கேலி செய்வதும், துன்புறுத்துவதும் பொறுத்துக்கொள்ள தக்க காரியமல்ல.
ஆனாலும் நபி அவர்கள் அதை சகித்துக் கொண்டார்கள்.
இவ்வாறே அவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட அவர்களது தோழர்களும் சொல்லணா துயரங்களை 13 வருடக்காலமாய் அங்கே அனுபவித்தார்கள்.
சஹாபாக்கள் பலர் கொடுமை செய்யப்பட்டனர், கொலையும் செய்யப்பட்டனர்.
மறைந்து, ஒளிந்து கொண்டு இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து வந்த அவர்கள், ஒரு கட்டத்தில் மக்காவில் உயிர் வாழவே இயலாது என்கிற நிலையை நோக்கி சென்றார்கள்..
தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக