செவ்வாய், 5 நவம்பர், 2013

மக்கா முதல் மதினா வரை - 9


அதன் பிறகு சுரக்கா (ரலி) அவர்கள் அந்த பாதைக்கு காவல் இருக்க, எதிரிகளின் அச்சுறுத்தல் நீங்கியவர்களாக மதினாவை நெருங்கினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதினாவுக்கு வருகை தருவது காட்டுத்தீ போல் மதினா முழுவதிலும் பரவியது. 

பெருங்கூட்டமொன்று மதினாவின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஹர்ரா எனும் பகுதியில் நபியை வரவேற்க முகாமிட்டிருந்தனர்.
ஹர்ரா பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் பனு அம்ர் பின் அவ்ஃப் கூட்டத்தார் என்று அழைக்கப்படுவர்.

ஏற்கனவே மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து சென்ற சஹாபாக்கள் ஒரு பக்கம், நபியை பற்றி கேள்விப்பட்டு அவர்கள் எடுத்து சொன்ன மார்க்கத்தை ஏற்ற மதினாவாசிகள் மறுபக்கம், என ஊரே அந்த மாமனிதரை வரவேற்க தயாரானது.

இன்னும் சொல்லப்போனால், யூதர்களில் இஸ்லாத்தின் பால் வெறுப்பு கொள்ளாது மக்களுடன் சகஜமாய் பழகி வந்தவர்கள் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை மகிழ்சியுடனேயே எதிர்கொண்டார்கள்.

ஹர்ரா பகுதியில் முகாமிட்டிருந்த மக்கள் கூட்டத்தில் குறிப்பிடதக்க நபர்
சுபைர் பின் அவ்வாம் (ரலி) ஆவார்.

அனைவரும் மக்கா இருக்கும் திசை நோக்கி பார்வையை செலுத்தியிருக்கையில், தூரத்தில், ஆற்று நீரை விலக்கி, ஒட்டகங்களுடன் நபியும் அவர்களது தோழரும் நடந்து வருவதை கண்ட கூட்டத்திலுள்ள யூதர் ஒருவர், பெரும் ஆரவாரத்துடன், "அரபு குலமே, இதோ உங்கள் நாயகர் வருகிறார்", "அரபு குலமே, இதோ உங்கள் நாயகர் வருகிறார்" என்று பெரும் அறிவிப்பொன்றை செய்ய, ஊரே மகிழ்ச்சியில் திளைத்தது.

ஹர்ரா பகுதிக்கு வருகை தந்த நபிக்கு வெண்ணிற சால்வை ஒன்றை கொடுத்து வரவேற்றார்கள் சுபைர் (ரலி) அவர்கள்.

மதினா நுழைவதற்கு முன், ஹர்ரா பகுதியிலேயே நபிகளாருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததுடன், அங்கேயே சில நாட்கள் தங்கும் நிலையும் ஏற்படுகிறது.

ஹர்ரா பகுதிக்கு அருகாமையிலுள்ள் கூபா எனும் இடத்தில் 14 நாட்கள் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள், அந்த சிறு அவகாசத்திலேயே ஒரு பள்ளிவாசல் ஒன்றை நிறுவுகிறார்கள்.

அது தான் கூபா பள்ளிவாசல் என்று இன்றும் நிலைத்து நிற்கிறது.

(இந்த செய்திகள் அனைத்தும் புஹாரி 3906 இல் பதிவாகியுள்ளது)

இதற்குடையே,மதினாவில் இருக்கும் நபியின் உறவினர்களான ந‌ஜ்ஜார்வாசிகள், நபி (ஸல்) அவர்கள் ஹர்ரா வரை வந்து விட்டதை அறிந்து யானை, குதிரைப்படைகளுடன் அணி திரண்டு ஹர்ரா நோக்கி வர துவங்கினர்.
பல மைல் தூரம் பயணப்பட்டு வந்து நபியை வரவேற்கும் அளவிற்கு நபியின் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தனர் அந்த மதினாவாசிகள்.

கிட்டத்தட்ட 500 க்கும் அதிகமாக வந்திருந்த மக்கள், மகிழ்ச்சி கோஷங்கள் எழுப்பியும், வீர விளையாட்டுகள் போன்றவற்றை நடத்திக்காட்டியும் தங்கள் அன்பை வெளிக்காட்டியதோடு, "அச்சம் தீர்ந்தவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் மதினாவிற்கு நுழையுங்கள்" என்று கூறி நபி (ஸல்) அவர்களுக்கு உயரிய மதிப்பை வழங்கி அவர்களை தங்களுடன் அழைத்து சென்றனர்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக