பெரும்பான்மையினரான ஹிந்து சகோதரர்கள் தங்கள் மத பண்டிகைகளின் போது பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.
காற்றை மாசுபடுத்தும் அத்தகைய செயல் என்பது அனைத்து மக்களின் சுகாதாரத்திற்கும் தான் கேடு.
பண்டிகை ஹிந்துக்களுக்குரியது, கொண்டாட்டங்கள் அவர்கள் மதத்தை சார்ந்தது.
ஆனால், காற்று அனைவருக்கும் பொதுவானது.
இருப்பினும், மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் யாரும் இதை கண்டித்து போராட்டம் செய்யவில்லை.
இவர்கள் வெடிக்கும் பட்டாசுகளினால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் நோயாளிகள், முதியோர்கள், தேர்வு எழுதும் மாணவர்கள் முதலானோர் பாதிக்கப்படுகிறார்கள்.
பண்டிகை ஹிந்துக்களுக்குரியது, கொண்டாட்டங்கள் அவர்கள் மதத்தை சார்ந்தது.
ஆனால், நோய் என்பதோ, தேர்வு என்பதோ வயது முதிர்வு என்பதோ அனைவருக்கும் பொதுவானது.
இருப்பினும், அண்ணன் தம்பிகளாய் பழகும் நம் சமூகத்தில் விரிசல் வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் யாரும் இதை கண்டித்து போராட்டம் செய்யவில்லை.
இன்னும், ஹிந்துக்களின் கோவில் திருவிழா போன்ற விசேஷ நிகழ்ச்சி என்றால் அந்த தெருவையே விழாக்கோலம் ஆக்கி விடுகிறார்கள்.
தோரணங்கள், சீரியல் செட்டுகள் துவங்கி, ஊர் முழுக்க மைக் செட் வைத்து, அதிக சப்தத்துடன் பக்திப்பாடல்களை நாள் முழுக்க முழங்க செய்கிறார்கள்.
விழா ஹிந்துக்களுக்குரியது என்றாலும் அந்த தெருவோ ஊரோ அனைவருக்கும் பொதுவானது !
இருப்பினும், பிற மதங்களையும் மதிக்க வேண்டும், அவர்களுடனும் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும் என்கிற காரணத்தால் இவற்றையெல்லாம் கண்டித்து எந்த முஸ்லிமும் குரலெழுப்பவில்லை.
விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால், அதை கொண்டாட ஊர் முழுக்க ஊர்வலம் என்கிற பெயரில் மேள தாளங்கள் அடித்தும், ஆட்டம் பாட்டங்களுடனும் ஆர்பரித்து செல்கின்றனர்.
இதற்கு எதிராக முஸ்லிம்கள் போராடவில்லை.
தங்கள் மத சம்பிரதாயம் என்கிற பெயரில் வினாயகர் சிலையை கடலில் கரைக்கின்றனர். இதனால் கடல் நீர் மாசடைகிறது.
வினாயகர் ஹிந்துக்கள் நம்பும் கடவுள், அந்த கொண்டாட்டமும் அவர்கள் பின்பற்றும் மதத்தை சார்ந்தது என்றாலும், கடல் என்பது அனைவருக்கும் பொதுவானது !
ஆனால் இதையெல்லாம் தடை செய்யுமாறு எவரும் ரோட்டில் இறங்கவில்லை. காரணம், நாட்டின் அமைதி கெட்டு விடக்கூடாது என்கிற நல்லெண்ணம் தான் !
ஆனால், இவையெல்லாம் பிறருக்கு செய்கிற தீங்காகவும் தொந்தரவாகவும் எண்ணாத சில கூட்டத்தார், காலை ஐந்து மணிக்கு, அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என ஐந்து நிமிடங்கள் மைக்கில் செய்யப்படும் முஸ்லிம்களுக்கான தொழுகை அறிவிப்பை மட்டும் மிகப்பெரிய தொந்தரவாக கருதுகிறார்கள் !
இதை நியாயமுள்ள எந்த உள்ளமாவது ஏற்குமா?
மத நல்லிணக்கத்தை பேணுகிற எவரது நெஞ்சமாவது இதை ஒப்புக் கொள்ளுமா?
நடுநிலை பேணுகிறோம் என்று சொல்லிக் கொள்கிற எந்த ஊடகமாவது இதை சரி காணுமா?
சிறுபான்மை நலன் நாடுகிறோம் என்று ஊர் முழுக்க முழங்கும் எந்த அரசியல் தலைவராவது இதை ஏற்றுக் கொள்வாரா?
மங்களூரில் தொழுகை அழைப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்துத்துவாக்கள் மேலே நாம் எழுப்பியிருக்கும் நியாயங்களுக்குரிய பதிலை சொல்லி விட்டு தங்கள் போராட்டத்தை தொடரட்டும் !
ஊடகத்துறையும் இதையே கேள்வியாக எழுப்பட்டும் !!
தங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்பது தான் இதன் உண்மை காரணமா அல்லது சிறுபான்மையினரின் மத வழிபாட்டை கெடுப்பது இதன் நோக்கமா??
இவர்கள் கோரிக்கையை ஏற்று அந்த ஊரில் தொழுகைக்கான அழைப்பு ரத்து செய்யப்படும் என்றால், இதே போன்ற காரணத்தை மையமாக வைத்து, தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு ஆள்வோர் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர் !
அவரவர் மத நம்பிக்கையின் படி செயல்படுவதை உறுதிப்படுத்துவது தான் மதசார்பற்ற நாட்டின் தலையாய கடமை ! அதை செய்யுமாறு பணியுங்கள், நாடு வளம் பெறும் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக