புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (F)


மிர்சா சாஹிபின் அசாத்திய துணிச்சல்

Mirza Sahib subject (Part 6)
-----------------------------------------------------------------

மிர்சா சாஹிபின் அபத்தங்கள் என நான் குறிப்பிட்டுக் காட்டியிருந்தவைகளில் மற்றுமொரு அபத்தம், மசீஹ் வரும் போது வானத்திலிருந்து ஒரு சத்தம் வருமென்றும் அது நபி என்கிற முறையில் தமக்கு கேட்கும் எனவும் நான் தான் அந்த மசீஹ் என்றும் இந்த மிர்சா சாஹிப் கதையளந்துள்ளார்.

இத்தோடு நிறுத்தினால் கூட பரவாயில்லை, இப்படி சத்தம் கேட்கும் என்கிற விஷயம் புஹாரியில் பதியப்பட்டு இருக்கிறது என்று வேறு சொல்லியுள்ளார்.

இந்த காலத்தில் தான், ஹதீஸில் இருக்கிறது, குர் ஆனில் இருக்கிறது என்று சொன்னால் எங்கே ஆதாரம் என்று ஆதாரம் கேட்கும் அளவிற்கு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது..
100 வருடங்களுக்கு முன் இது போன்ற விழிப்புணர்வொன்றும் மக்களிடையே இல்லை.

அதிலும், புஹாரி என்றால் அதை தேடி சரி பார்த்து கொள்ளும் வசதிகளும் அந்த காலத்தில் இல்லை.

ஆகவே குர் ஆனில் உள்ளது, புஹாரியில் உள்ளது என்று சொல்லி விட்டால் எவரும் ஆதாரமும் கேட்க மாட்டார், தேடிப்பார்க்கவும் மாட்டார் என்கிற தைரியத்தில் வாயில் வந்ததையெல்லாம் விட்டடிப்பவர் இந்த சாஹிப்.

(மசீஹ் வரும் காலத்தில் பிளேக் நோய் ஏற்படும் என்று குர் ஆனில் இருக்கிறது என்று இந்த அண்டப்புளுகர் விட்டடித்த புருடா கூட இந்த அடிப்படையில் தான் .. இது அடுத்தடுத்த தொடர்களில் விளக்கப்படும்)

இப்படி மசீஹ் வரும் காலத்தில் வானத்திலிருந்து சத்தம் வரும் என்று புஹாரில் எந்த ஹதீஸ் இருக்கிறது என்று கேட்டதற்கு, அவர் தவறாக சொல்லியிருக்கிறார் என்று ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.

அதாவது, பல செய்திகளையும் தத்துவங்களையும் சொல்கிற போது இது போன்ற தவறு ஏற்படுவது சகஜம் தானே என்கிற ரீதியில் பதில் சொல்லியுள்ளீர்கள்.

மனிதன் என்கிற முறையில் தவறுகள் ஏற்படத்தான் செய்யும், அதை நாம் மறுக்கவில்லை.
நபியென்றாலும் அவர்களும் மனிதர்கள் தான் என்கிற முறையில் அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், இங்கே நீங்கள் கவனிக்க தவறிய விஷயம் என்னவென்றால், இங்கே மனிதன் என்கிற முறையில் தவறு நடந்திருக்குமேயானால், சாதாரண மனிதர்களை தான் அல்லாஹ் அதே தவறில் நீடிக்க செய்வான்.
நபி என்றால், அவர் செய்த தவறை வஹீ மூலம் திருத்தி விடுவான்.

இது தான் நபிமார்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையேயிருக்கும் வேறுபாடு.

மற்ற மனிதர்கள் செய்யும் தவறு சமுதாயத்தை பாதிக்காது ; காரணம், அவர்களை பிறர் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் சொல்வதும் செய்வதும் மார்க்கமாக கருதப்படாது.

அதுவே, நபி என்றால், அவர் சொல்வதும் செய்வதும் மார்க்கம். அவரை பின்பற்றும் மக்கள் இருப்பார்கள், இருக்க வேண்டும்.

ஆகவே அவர் புறத்தில் எந்த தவறும் நிகழாது, அல்லது நிகழ்ந்த தவறு சரி செய்யப்படும்.

நூஹ் நபி முஷ்ரிக்கான தனது மகனுக்காக துஆ செய்தார்கள். அது தவறான செயல்.
அதை அல்லாஹ் கண்டித்து வஹி இறக்கினான்.
இப்ராஹிம் நபி தனது முஷ்ரிக்கான தந்தைக்காக பாவ மன்னிப்பு தேடிய போது அல்லாஹ் கண்டித்தான்.

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தேனை தனக்கு ஹராமாக்கிக் கொண்டார்கள்.
அதை அல்லாஹ் திருத்தினான்.
பார்வை தெரியாத சஹாபி ஒருவரிடம் கடுகடுத்தார்கள், அதை அல்லாஹ் கண்டித்தான்.

நபிமார்களும் மனிதர்கள் தான் என்பதை நிரூபிக்கும் பொருட்டும் தன்னை தவிர தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எவருமே கிடையாது என்பதை பதிய வைக்கும் பொருட்டும் நபிமார்களிடமும் பிழைகளை ஏற்பட செய்வான் அல்லாஹ்.

ஆனால், அவற்றை அப்போதே திருத்தியும் விடுவான். திருத்தினால் தான், அவர்களும் மனிதர்கள் தான் என்கிற உண்மை மக்களிடம் செல்வதோடு, திருத்தப்பட்ட சரியான செய்தியும் அவர்களை சென்றடையும்.

இது தான் அல்லாஹ்வின் வழக்கம்.

ஆனால், இங்கே மிர்சா சாஹிப் ஒரு தகவலை, அதாவது முன்னறிவிப்பை செய்கிறார்.

அது, புஹாரியிலேயே இருப்பதாக, அல்லாஹ்வின் வஹி செய்திகள் அடங்கிய ஒரு நூலை மேற்கோளும் காட்டுகிறார் என்றால் அந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும்.
அப்போது தான் அவர் நபி என்பதில் அர்த்தமிருக்கும்.

நபி என்று சொல்லிக் கொள்பவர் ஒன்றை அறிவிக்கிறார், இந்த நூலில் இருப்பதாகவும் சொல்கிறார், தேடிப்பார்க்கின்ற போது அந்த நூலில் அந்த செய்தி இல்லையென்றால், அவர் நபி என்பதற்கான தகுதியை இழக்கிறார் என்றாகும்.

அல்லது, சில காலம் கழித்தாவது, நான் புஹாரியில் இருப்பதாக தவறாக சொல்லி விட்டேன், அது அந்த நூலில் இல்லை முஸ்லிமில் தான் இருக்கிறது, அல்லது இப்னுமாஜாவில் தான் இருக்கிறது..
என்று தனது முந்தைய கூற்றினை அவரே சரி செய்திருக்க வேண்டும்.

செய்தாரா? அவர் நபியென்றால் இந்த தவறான அறிவிப்பை அல்லாஹ் சரி செய்யாமல், இருப்பானா?

மாட்டான் ! இதிலிருந்தே, அவர் நபியில்லை என்று தெரிகிறது !!

சரி, இப்னுமாஜா என்பதற்கு பதிலாக புஹாரி என்று வாய் தவறி சொல்லி விட்டார் என்றாவது இதை எடுத்துக் கொள்ளலாமா?

என்று பார்த்தால் அப்படியும் எடுத்துக் கொள்ள முடியாது என்பதற்கு மிர்சா சாஹிப் எழுதியுள்ள வாசகமே சான்றாக இருக்கிறது.

மசீஹ் வரும் போது வானத்திலிருந்து சத்தம் வரும், இப்படி புஹாரியில் இருக்கிறது என்று சொல்லி விட்டு அத்தோடு இவர் நிறுத்தவில்லை.

தான் சொன்னது சரி தான் என்பதை நிறுவுவதற்காக, புஹாரி நூலை வர்ணனை செய்கிறார்.

புஹாரி என்றால் எப்படிப்பட்ட நூல் தெரியுமா? குர் ஆனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நூலாக்கும் அது..

என்று மக்கள் தான் சொன்னதை நம்ப வேண்டும் என்பதற்காக புஹாரியின் நம்பகத்தன்மையையும் சேர்த்தே விளக்கி தான் அந்த செய்தியை சொல்கிறார் என்றால், இது வாய் தவறி வந்ததா?
இது அறியாமல் ஏற்பட்ட பிழையா?

நிச்சயம் இல்லை.

குர் ஆனில் இருப்பதாக சொல்லி விட்டால், அல்லது புஹாரியில் இருப்பதாக சொல்லி விட்டால் மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள், தேடிப் பார்த்து தனது வண்டவாளத்தை கண்டு கொள்ள மாட்டார்கள் என்கிற அசாத்திய துணிச்சல் இந்த பொய்யருக்கு.

அடுத்ததாக,

ஒருவர் மீது கொண்ட கோபத்தில் அவருக்கு 1000 முறை சாபமிட்ட மிர்சா சாஹிபின் செய்தியை விளக்கியிருந்தேன்.

1000 முறை சாபமிடுவது நோக்கமென்றால், 1000 முறை உன்னை சபிக்கிறேன் என்று கூறினாலே போதுமானது.
ஆனால், இந்த அறிவுச்சுடர் என்ன செய்கிறார் தெரியுமா?

ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து அதில் பக்கம் பக்கமாக..

1 சாபம் (லஃனத்)
2 சாபம்
3 சாபம்
4 சாபம்.... என்று ஆயிரம் வரை எழுதி தள்ளி தனது அற்புதமான அறிவாற்றலை வெளிககாட்டி மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார்.

இப்படி ஒரு சராசரி மனிதர் செய்வாரா? என்று நான் கேட்டதற்கு, மேற்படி புஹாரி ஹதீஸ் போல், இதுவும் தவறாக செய்து விட்டார் என்று ஒப்புக் கொண்டு செல்வதை விட்டு விட்டு,

இதற்கு கட்டுகிறீர்கள் பல உலக மகா சப்பை கட்டுகளை..
அதை படித்து சிரிக்கவா அழவா என்று நமக்கு தெரியவில்லை..!

விரிவாக அடுத்த பாகத்தில் காணலாம் இன்ஷா அல்லாஹ்..

வண்டவாளங்கள் இன்னும் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக