சனி, 28 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (K)


நோய் கிருமி பிளேக் இல்லை, மிர்சா தான் !

Mirza Sahib Subject (Part 11)
---------------------------------------------------------------

மிர்சா சாஹிப் என்பவர் கடைந்தெடுத்த பொய்யர் என்பதற்கும், தன்னை நபியென காட்டிக் கொள்வதற்காக பல்வேறு போக்கிரித்தனங்களை செய்துள்ளார் என்பதற்கும் சான்றாக 13 ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தேன்.
அவைகளில், ஏழு ஆதாரங்களுக்கு மட்டும் பதில் என்கிற பெயரில் சில சமாளிப்புகளை எழுதியிருந்தீர்கள்.

மீதமுள்ள ஆறு ஆதாரங்களை கண்டு கொள்ளவேயில்லை.

நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டாலும், அந்த ஆதாரங்களை கூட அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட வேண்டும் என்கிற அடிப்படையில்,

மசீஹ் வரும் காலத்தில் பிளேக் நோய் பரவும் என்றும் அவ்வாறு குர் ஆனிலேயே இருக்கிறது எனவும் இந்த மிர்சா சாஹிப் அடித்த புருடா ஒன்றைக் குறித்து பார்ப்போம்.

இப்படி குர் ஆனில் இருப்பதாக பொய் சொல்லியிருக்கிறாரே, குர் ஆனில் எங்கே இருக்கிறது? என்று கேட்டதற்கு துவக்கத்தில் எந்த பதிலையும் சொல்லாமல், கடைசியில் 27:82 வசனத்தில் உனக்கு புரிவது என்ன? என்று கேட்டிருந்தீர்கள்.

அந்த வசனத்தில் மிர்சா என்றும் இல்லை, மசீஹ் என்றும் இல்லை, பிளேக் நோய் என்றூம் இல்லை, எனக்கு அவ்வாறு எதுவும் புரியவில்லை, அந்த கருத்தை தான் தருகிறது என்றால் அதை நீங்கள் விளக்குங்கள் என்று எனது முந்தைய வாய்ப்பின் போது கேட்டிருந்தேன்.

நீங்கள் மூச்சு விடாத ஆறு ஆதாரங்களில் இதையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டீர்கள். எனது கேள்விக்கு இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை.

இருந்தாலும், இதற்கு என்ன சமாளிப்பை நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு முன்னரே தெரியும் என்பதால் அந்த சமாளிப்பு என்ன என்பதையும் அது அறிவுக்கு உகந்த சமாளிப்பு தானா? என்பதையும், இது குறித்து மிர்சா சாஹிப் கொண்டிருந்த கொள்கை என்ன என்பது பற்றியும் விலாவாரியாக பார்ப்போம்.

அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும். (27:82)

இது தான் அந்த வசனம்.

இந்த வசனத்தில் பூமியிலிருந்து ஒரு உயிரினம் வெளிப்படும் என்று அல்லாஹ் சொல்கிறானே அந்த உயிரினம் பிளேக் கிருமியாக்கும்..

என்பது தான் உங்கள் கைவசம் இருக்கும் ஒரே சமாளிப்பு. இதை இன்னும் நீங்கள் பதிலாக சொல்லவில்லை என்ற போதிலும், நானே இதை சொல்லி இது குறித்த தெளிவான மறுப்பையும் இங்கே தருகிறேன்.

மிர்சா சாஹிபை பொறுத்தவரை தன்னை நபியென ஊரை ஏமாற்ற துவங்கிய ஆரம்ப காலத்தில், இஸ்லாமிய கொள்கைகளில் பலவற்றை மாற்றி பிரச்சாரம் செய்யவில்லை.

ஈஸா நபி இறக்கவில்லை என்று தான் அவரும் நம்பி வந்தார். அதை தனது நூலில் எழுதியும் இருக்கிறார் (பார்க்க மிர்சா சப்ஜக்ட் பாகம் 3,4)

தன்னைப் பார்த்து ஈஸா, ஈஸா என்று அல்லாஹ் அழைத்த போது கூட ஈஸா மரணிக்கவில்லை, மீண்டும் வருவார் என்று தான் நம்பினார்.

எங்கே பிரச்சனையாகியது என்றால், தன்னை நபியென மக்களிடம் பிரச்சாரம் செய்த போது, இறுதி நபி முஹம்மது (சல்) அவர்கள் தான் என அனைவரும் தெளிவாக புரிந்து வைத்திருந்த காரணத்தால் இவர் பொய்யர் என எளிதாக அடையாளம் காணத் துவங்கினர்.

அதை உடைக்க வேண்டுமானால், ஈஸா நபி வருவார் என்று ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளை தனக்கு சாதகமாக ஆக்க வேண்டும் என்பது மிர்சா சாஹிபின் திட்டம்.

அந்த திட்டத்தின் வெளிபாடு தான், மர்யம் என்றாலும் நான் தான், ஹதீஸில் சொல்லப்படும் மர்யமின் மகன் என்றாலும் நான் தான் என்கிற இவரது பினாற்றல்.

மர்யமும் நான் தான், மர்யம் பெற்ற ஈஸாவும் நான் தான் என்று சொல்கிற போது ஈஸா நபி மீண்டும் வருவார் என்று ஹதீஸ் சொல்வது தன்னைப்பற்றி தான் என்று நிறுவி விடலாம் என்கிற சபலம் இவருக்கு.

இது இவரது சபலத்தின் ஒரு வகை.

தன்னை நபியாக காட்டிக் கொள்ள இவர் கொண்ட இன்னொரு சபலப்புத்தி தான் இந்த பிளேக் நோய் விஷயம்.

எப்படியென்றால், இவர் வாழ்ந்த காலத்தில் இவரது ஊரில் பிளேக் நோய் பரவியது.
இதை எப்படி தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வது என்று கணக்குப் போட்ட மிர்சா சாஹிப், மசீஹ் வரும் போது பிளேக் நோய் பரவும் என்று குர் ஆனில் இருக்கிறது, இதோ பிளேக் நோய் வருகிறது, ஆகவே குர் ஆன் சொன்ன மசீஹ், ஈஸா நான் தான் !!

இது தான் இவரது திட்டம். குர் ஆனில் இருக்கிறது என்றோ ஹதீஸில் இருக்கிறது என்றோ விட்டடித்தால் எவரும் ஆதாரம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதை தனக்கு சாதகமாய் ஆக்கிக் கொண்டார் இந்த மனிதர்.

இது விஷயமாக இவர் எந்த அளவிற்கு தில்லு முல்லு வேலை செய்துள்ளார் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

1891 ஆம் ஆண்டு இஸாலே அவ்ஹாம் எனும் நூலொன்றை இவர் எழுதி வெளியிடுகிறார். அதில் பக்கம் 370 இல் குர் ஆனின் 27:82 வசனத்திற்கு ஒரு விளக்கமொன்றை தருகிறார்.

அது என்ன விளக்கம்?

அந்த வசனத்தில் வரக்கூடிய "தாப்பத்" என்பது உலமாக்களைக் குறிக்கும்.
மனிதர்கள் எல்லாம் மிருக வாழ்க்கை வாழத் துவங்கும் போது அந்த சமுதாயத்தை சீராக்க மார்க்கம் படித்த உலமாக்கள் தோன்றுவார்கள், அதை தான் அந்த வசனம் சொல்கிறது என்று எழுதுகிறார்.
அதே வசனத்தில் அது பேசும் என்று அல்லாஹ் சொல்வது, இந்த உலமாக்கள் மக்களிடையே செய்யும் பிரச்சாரத்தை தான்.. என்றும் அதே நூல் அதே பக்கத்தில் விளக்கம் கொடுக்கிறார்.

ஆக, 27:82 வசனத்திற்கு இந்த மிர்சா சாஹிபின் விளக்கம் "உலமாக்கள்" என்பதாகும்.

1902 ஆம் ஆண்டு இவரது ஊரில் பிளேக் நோய் பரவியிருக்கும் போல..

இதை தனக்கு எப்படி சாதகமாய் ஆக்கிக் கொள்வது என்று சிந்தித்த இந்த பொய்யர்,மசீஹ் காலத்தில் பிளேக் நோய் பரவும் என்று குர் ஆனிலேயே இருக்கிறது என்று பொய் மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டார். (கிஸ்தி நூஹ் என்கிற நூல், பக்கம் 9)

நான் ஏற்கனவே சொன்னது போல், குர் ஆனில் இருக்கிறது என்று அந்த கால மக்களிடம் சொன்னால் உடனே தேடிப்பார்த்து கேள்வியெல்லாம் கேட்டு விட மாட்டார்கள்.

நமது முந்தைய தலைமுறை வரை கூட, குர் ஆன் என்றால் அறிஞர்களுக்கு மட்டும் உரியது, நாமெல்லாம் படித்து புரிந்து கொள்ள முடியாது என்று தானே பிரச்சாரம் செய்யப்பட்டது?

அப்படியிருக்கும் போது, 120 வருடங்களுக்கு முன்னுள்ள சமுதாயம் எப்படி இருந்திருக்கும் என்று நம்மால் எளிதில் யூகிக்கலாம்.

அப்படி, குர் ஆனில் அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான் என்று இவர் சொன்ன அந்த காலகட்டத்திலும் இந்த 27:82 வசனத்திற்கு உலமாக்கள் என்பது தான் அர்த்தம் என்கிற நிலைபாட்டினை தான் கொண்டிருந்தார்.

பிளேக் பரவும் என்று குர் ஆனில் இருக்கிறது என்று இவர் சொன்ன போது கூட, அந்த வசனம் இது தான் என்று அவர் அப்போது சொல்லவில்லை.

மாறாக 1909 ஆம் ஆண்டு தான் அதை சொல்கிறார்.

அதாவது, மசீஹ் காலத்தில் பிளேக் நோய் பரவும் என்று சொல்லி விட்டோமே, அதற்கு குர் ஆனில் ஆதாரம் காட்ட வேண்டுமே, எந்த வசனத்தை காட்டலாம் என்று பல வருடங்கள் யோசித்து கடைசியில் அவருக்கு சிக்கியது அந்த 27:82 வசனம்.

பல வருடங்கள் யோசனை செய்து, எந்த வசனத்தை இத்துடன் கோர்த்து விடலாம் என்று இவர் மண்டையை குடைந்து, முன்பு எந்த வசனத்திற்கு "உலமாக்கள்" என்று அர்த்தம் வைத்தாரோ, அதே வசனத்தை தனது கூற்றிற்கு ஆதாரமாய் திரித்து பிரச்சாரம் செய்ய துவங்கினார்.

தாப்பத் என்றால் உலமாக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், தாப்பத் என்றால் பிளேக் கிருமி என்று மாற்ற ஆரம்பித்தார்.
பேசும் என்று அல்லாஹ் சொல்கிறானே? என்றால் அது உலமாக்கள் பேசுவார்களே, அதைதான் அல்லாஹ் சொல்கிறான் என்று அது நாள் வரை சொல்லி வந்தவர், அப்போது, பேசும் என்றால் அந்த கிருமி கடிக்குமே அதை தான் அல்லாஹ் சொல்கிறான் என்று மாற்ற ஆரம்பித்தார்.

பேசுவதெல்லாம் பொய், ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் என்பது இந்த வடிகட்ட புளுகர் விஷயத்தில் நிரூபணமானது இந்த பிளேக் விஷயத்தில் தான்.

தாப்பத் என்றால் அகராதி அர்த்தம் நிலத்தில் ஊர்ந்து செல்வதாகும். உலமாக்கள் என்று இதற்கு அர்த்தம் வைத்திருந்த காலத்தில் இவரது மூளை எந்த அளவிற்கு காய்ந்திருந்தது என்று நமக்கு புரிகிறது.

அல்லாஹ்வின் வசனம் என்ன சொல்கிறது என்று கூட புரியாத அளவிற்கு, அதுவும் அகராதிப்படி நிலத்தில் ஊர்ந்து செல்லும் ஒன்று எப்படி உலமாக்கள் ஆக முடியும் என்பதை கூட சிந்திக்க துப்பு கெட்டவராய் தான் பல வருடங்கள் கழித்திருக்கிறார்.

இந்த யோகியவான் நபியாம்.

ஒரு வாதத்திற்கு தாப்பத் என்றால் பிளேக் நோய் என்று வைத்துக் கொண்டால் கூட, பல வருடங்களாக , அது கிருமி இல்லை, உலமாக்களாக்கும் என்று இவர் புரிந்து வைத்திருந்தார் என்பதே இவர் நபியில்லை என்பதற்கு சான்றாக நிற்கிறது.

இன்னொரு புறம்,அது பிளேக் நோய் தான் என்று இவர் அறிவிப்பு செய்த பிறகும் அதற்கும் பிளேக் நோய்க்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பது மிகவும் எளிமையாக புரியக் கூடிய வகையில் குர் ஆன் ஆகி விட்ட இந்த காலத்தில் எல்லாருக்கும் தெரிந்து விட்டது.

பிளேக் நோய் ஊர்ந்து செல்லாது, அது பேசாது. பேசும் என்றால் கடிக்கும் என்று கூமுட்டை தான் அர்த்தம் வைப்பானே தவிர நபி இப்படி அர்த்தம் வைக்க மாட்டார்.

அத்தோடு, மசீஹ் வரும் காலத்தில் தான் அது நிகழும் என்று அந்த வசனம் சொல்லவில்லை.

மசீஹ் என்று அந்த வசனம் சொல்லவில்லை,
பிளேக் என்று அந்த வசனம் சொல்லவில்லை,
அது கடிக்கும் என்றும் அந்த வசனம் சொல்லவில்லை.

மாறாக கியாமத் நாளுக்கு சமீபமாய் உலகில் தோன்றும் ஒரு அதிசயப்பிராணியை தான் அல்லாஹ் சொல்கிறான்.

புகை மூட்டம், தஜ்ஜால், அதிசயப்பிராணி ஆகிய மூன்று விஷயங்களைப் பற்றி உங்கள் இறைவன் எச்சரிக்கை செய்கிறான் என்று நபி (சல்) அவர்கள் சொன்னதாக அபு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியில் பதிவாகியுள்ளது.

இதை அந்த வசனத்தின் முன்பின் வசனங்களே தெளிவாக விளக்குகிறது.

27:80,81 வசனங்களில், இந்த சத்தியக் கொள்கையை காது கொடுத்து கேட்காதவர்கள், செவிடர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

சொல்லி விட்டு, தனது இந்த சத்தியக்கொள்கையை ஏற்காதவர்களிடம் பேசுகிற வகையில் பூமியிலிருந்து ஒரு உயிரினத்தை நாம் வெளிப்படுத்துவோம் என்கிறான்.
அல்லாஹ்வின் வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.(27:82)

தொடர்ந்து, யாரெல்லாம் அவ்வாறு தமது வசனத்தை உறுதி கொள்ளாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் இறுதி நாளில் நாம் நிறுத்துவோம் என்று சொல்லி விட்டு,
எனது வசனங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அதைப் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு என்ன தான் செய்து கொண்டிருந்தீர்கள்?' என்று (இறைவன்) கேட்பான்.

என்றும் அல்லாஹ் தொடர்ச்சியாக சொல்கிறான்.

இதற்கும் பிளேக் நோய்க்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட புரிந்து கொள்வான். அத்தனை தெளிவு இந்த வசனங்கள்.

ஆக, அண்டப்புளுகர், ஆகாசப்புளுகர் தான் இந்த மிர்சா சாஹிப் என்பது இதன் மூலமும் வெட்ட வெளிச்சமாகிறது !

வண்டவாளம் தொடரும், இன்ஷா அல்லாஹ்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக