ஞாயிறு, 1 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (F)


26/05/2014 நபிக்குப் பின் நபி subject,, (nashid-ன் 10.05.2014 தொடர்-1 பாகம்-2 க்கான பதில்)

அன்புள்ள nashid, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்.,

நபிக்கு பிறகு நபி வரமாட்டார்கள், என்று கூறுவது “அல்லாஹு என்றும் பேசுபவன்” என்ற அவனது பண்பை மறுப்பதாகும். 

காலம் காலமாக தன் அடியர்களிடத்து பேசிய அல்லாஹு, ஹஸ்ரத் நபி ஸல் அவர்களுக்கு பிறகு பேசமாட்டான் என்று எதனடிப்படையில் கூறமுடியும்? 
அல்லாஹு பேசமாட்டான், என்று கூறுவது அல்லாகுவின் தவ்ஹீதில் கறையை ஏற்படுத்துவதல்லவா?

அல்லாகுவின் பண்பு முழுமையானதும், என்றும் மாறாததும், எக்காலத்துக்கும் உரியவையும் ஆகும். எனவே அவனது பண்பில் மாற்றம் உள்ளது என நம்புவது தவ்ஹீதுக்கு களங்கம் கற்பிப்பதாகும்.

எனவே அல்லாஹு நேற்று பேசினான், இன்று பேசமாட்டான் என்று கூறவே முடியாது.

அல்லாகுவின் வழக்கமான இந்த பண்பை மறுத்த காரணத்தினால் தான் யூதர்களும் அல்லாகுவின் கோபத்திற்கு ஆளானார்கள்.

தவ்ராத்தை, அதாவது ஷரீயத்தை மூஸா நபி கொண்டுவந்தார்கள். அதற்கு பிறகு 1400 வருடங்களுக்கு பிறகு தவ்ராத்தின் போதனைகளை மீண்டும் எடுத்து வைப்பதர்க்காக அல்லாஹு ஈஸா நபியை அனுப்பினான். ஆனால் அந்த மக்கள் ஈஸா நபியை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களை தூற்றி, கொடுமைப் படுத்தி கொல்ல முயன்றதற்கு என்ன காரணம்?

அல்லாஹு இனிமேல் ஒரு நபியையும் அனுப்பமாட்டான் என்ற நம்பிக்கை தான்.
எனவே நபிக்கு பின் நபி வரமாட்டார்கள் என்பது யூதர்களின் கொள்கை ஆகும்.
நபி ஸல் அவர்களுக்கு முந்திய சமுதாயம் தான் யூத சமுதாயம்.

அவர்களை போன்று முஸ்லிம்களும் இனிமேல் நபி வரமாட்டார்கள் என்று கூறுவது இயல்பான ஒன்று தான்.
ஏனைய சமுதாயங்களுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பதால் முஸ்லீம் உம்மத்திடமும், தங்களை அறியாமலேயே மாற்று மதத்தவர்களின் கொள்கையும், மறைமுகமான இணைவைப்பு, பிதுஅத், தீய ஒழுக்கம் போன்றவைகள் தொற்றிக் கொள்கிறது என்பதில் ஐய்யமில்லை.

எனவே நம்முடைய முந்திய சமுதாயமாகிய யூதர்களிடம் இருந்து நபிக்கு பின் நபி வரமாட்டார்கள் என்ற கொள்கை, முழு முஸ்லிம் சமுதாயத்திலும் வந்துள்ளது என்றால் அது இயல்பாக ஏற்பட்ட கொள்கை தான் என்று புரிந்து கொள்ள முடியும்.

எனவே தான் நபி ஸல் அவர்கள், முஸ்லிம் சமுதாயத்தை எச்சரித் துள்ளார்கள், அதாவது எனது உம்மத் யூத கிறிஸ்தவர்களை சாணுக்கு சாண் பின்பற்றுவார்கள் என்று. ( புகாரி 3456).

எனவே நபி ஸல் அவர்களை பின்பற்றுவதால் ஒருவர் நபி ஆகிறார், அவரிடம் அல்லாஹு பேசினான் என்று கூறுவதால் நபி ஸல் அவர்களுக்கு எந்த களங்கமும் ஏற்பட்டுவிடாது.

மாறாக நபி ஸல் அவர்களை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே ஒருவர் நபியாக முடியும், என்பது நபி ஸல் அவர்களுக்கு த்தான் பெருமையே தவிர நபியாக வருபவருக்கு அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

காலம் காலமாக நபிமார்களை அனுப்பிய இறைவன், நபி சல் மூலமாக முழுமையான ஷரீயத்தை அருளினான்.

எல்லா நபிமார்களும் குறிப்பிட்ட போதனைகளுடன், குறிப்பிட்ட காலகட்டத்திற்காக வந்தார்கள்.

ஆனால் நபி ஸல் அவர்கள் எந்தளவுக்கு மேன்மையானவர்கள் என்றால், அவர்கள், முழு உலகுக்கும் தேவையான போதனைகளை கொண்டு வந்தார்கள், மட்டுமல்ல, வாழ்க்கையில் நடைமுறைபடுத்தியும் கட்டினார்கள்.

எனவே இனி ஒரு புதிய வழிகாட்டுதல் தேவையே இல்லை.

மேலும் நபி ஸல் அவர்கள் எந்தளவுக்கு மேன்மையானவர்கள் என்றால், அவர்களை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் நபி ஆக முடியும் என்ற மேலான அந்தஸ்த்திற்கு உரிமை உடையவர்களாக விளங்குகிறார்கள். இப்படி ஒரு மேன்மை, மற்றும் தகுதி நபி ஸல் அவர்களை தவிர உலகில் தோன்றிய வேறு எந்த நபிமார்களுக்கும் கிடையாது.

எனவே ஒரு உண்மையான நபி தோன்றுகிறார் என்றால் அவர் புதிய ஷரீயத்தையோ, புதிய வழிகாட்டுதலையோ கொண்டுவர முடியாது..

இனிமேல் ஒரு நபி வரமுடியும் என்றால் குரான் என்ற ஷரீயத்தை போதிப்பதர்க்காக மட்டுமே வரமுடியும். அதுமட்டுமல்ல நபி ஸல் அவர்களை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இனி ஒரு நபி வர முடியும் என்பதாகும்.

இன்று ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள், நபி ஸல் அவர்களை பின்பற்றி வந்த நபி ஆவார்கள்.
அவர்கள் குரான் ஷரீயத்திற்கு எதிராகவோ, நபி ஸல் அவர்களின் சுன்னத்திற்கு எதிராகவோ, ஒரு சிறிய செயலை போதித்ததாக நிரூபிக்க முடியாது.

ஆனால் உலகில் 1000 க்கணக்கான ஆலிம்கள் ஷரீயத்தையும், சுன்னத்தையும் போதித்து வருகிறார்கள் என்பதும், அந்தந்த ஆலிம்களின் பின்னால் மக்கள் அணிவகுத்து நிற்கிறார்கள் என்பதும், அந்தந்த கூட்டங்கள் , நாங்கள் தான் சுவர்க்கத்திற்கு அருகதை உடையவர்கள் என்றும், ஏனையவர்கள் காஃபிர் என்றும் கூறிக்கொள்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாக எல்லோரும் அறிந்த ஒன்று.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

----------------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு ஆலிம்களும், தனக்கு ஏற்றாற்போல் குரான் ஹதீசுகளை கூறி, தனக்கு ஏற்றாற்போல் ஒரு புதிய ஷரீயத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பதை நடுநிலைமையுடன் சிந்திதால் புரிவது ஒன்றும் கடினமில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------
ஆனால் இன்று முழு உலகில் உள்ள அஹ்மதிகள், அதாவது மிர்சா சாகிபை ஏற்றுக்கொண்டுள்ள அஹ்மதிகள், ஒரே தலைமையை பின்பற்றி, குரான் என்ற ஒரே ஷரீயத்தையும், நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதலையும், நடைமுறையையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது தான் மிர்சா சாகிபின் வருகையின் நோக்கம் ஆகும்.

முழு உலகில் உள்ள அஹ்மதிகள், எப்படி தொழவேண்டும் என்பதிலோ, எப்படி சக்காத் கொடுக்கவேண்டும் வேண்டும் என்பதிலோ, மேலும் எதை உண்ணவேண்டும், எதை உண்ணக்கூடாது ...... போன்ற எதிலும் எந்த கருத்து வேற்றுமையும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்றால்,

நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதலையும், நடைமுறையையும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டளையில் அஹ்மதிகள் உறுதியாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் தான். இதுவும் அவர்கள் உண்மையாளர் என்பதற்கான ஒரு ஆதாரம் ஆகும்.
============================================================

இப்போது உனது தொடரில், முஹம்மத் நபிக்கு பிறகு இன்னொரு நபி வர முடியாது என்று சொல்கிறாய். ஆனால் அவ்வாறு திருக்குர் ஆனில் வர முடியாது என்று எந்த வசனத்திலாவது சொல்கிறானா?

காலங்காலமாக நபிமார்களை அனுப்பிக்கொண்டே வந்த இறைவன் திடீரென அவனுடைய நடைமுறையை மாற்றிக் கொண்டான் என்றால் அல்லாஹ் குர்ஆனில் எவ்வளவு தெளிவாக சொல்லியிருக்க வேண்டும்?

முக்கியமான சப்ஜெக்ட்டான ஏகத்துவம், நுபூவ்வத், மறுமை, சொர்க்கம், நரகம், இறைவணக்கம் போன்றவைகளை அல்லாஹு மீண்டும் மீண்டு குரானில் பல கோணங்களில் கூறி உள்ளான்.

ஆனால் காலம் காலமாக நபியை அனுப்பும் இறைவன், மீண்டு மீண்டும் அனுப்புவதாகத்தான் குரானில் சொல்லுகின்றான். மாறாக நபி ஸல் அவர்களுக்கு பிறகு எந்த நபியையும் அனுபமாட்டான் என்றால், அல்லாஹு எந்த அளவுக்கு தெளிவாக சொல்லி இருப்பான், மீண்டும் மீண்டும் சொல்லி இருப்பான் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

(குரான் 35:44) “ அல்லாகுவின் சுன்னத்தில் எந்த மாற்றமும் இல்லை”

இந்த வசனத்தின் அடிப்படையிலும், முஹம்மத் நபிக்கு பின் இன்னொரு நபி வர முடியாது என்று கருதுவது தவறாகும்.

ஆனால் நீங்களோ முஹம்மத் நபிக்கு பின் ஈஸா நபி வருவார் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு நபி வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நீங்கள், முஹம்மத் நபிக்குப் பின் நபி வரமாட்டார் என்று எப்படி சொல்வீர்கள்?

இவ்வளவு பெரிய முரண்பாட்டை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு, அல்லாஹு அனுப்பிய ஒரு உண்மையான நபியை பொய்ப் படுத்துகின்ற காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் சீர்க்கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.

அல்லது அல்லாஹ்வால் அனுப்பப்பட ஒரு உண்மையான நபியை, எக்காலத்திலும் உள்ள நிராகரிப்பவர்களைப் போன்று பொய்ப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, முஹம்மத் நபிக்கு பின் நபியே வரமாட்டார் என்றும்,

ஆனால் ஈஸா நபி வருவார் என்றும் ஒரு கற்பனை கொள்கையை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.

நீ நபி வர முடியாது என்பதற்கு சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் காட்டியுள்ளாய். ஆனால் ஒரு வசனமோ ஒரு ஹதீஸோ நபிக்குப் பின் நபியே வரமாட்டார் என்ற கருத்தை சொல்லவில்லை. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நீ காட்டிஉள்ள வசனம் : “மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். (7:158)”

பதில் : இந்த வசனத்தில் முஹம்மத் நபிக்குப் பின் நபி வர மாட்டார் என்று அல்லாஹ் சொல்லவே இல்லை. முஹம்மத் நபி அவர்களை பின்பற்ற வேண்டும் என்ற கட்டளை தான் இந்த வசனத்தின் கடைசியில் உள்ளது. ஆனால் நபி ஸல் அவர்களை பின்பற்றுவதன் மூலம் ஒரு நபி வர முடியாது என்ற கருத்து இல்லை.

ஆனால் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிய ஒரே காரணத்தினால் தான் அல்லாஹ் அவர்களை நபியாக ஆக்கினான் என்பதே hazrat ahmad (அலை) அவர்களின் வாதம் ஆகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நீ காட்டியுள்ள வசனம்:
“மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. (10:57)” நபி மூலமாக தந்து விட்டதாக கூறிய பிறகு, இன்னொரு நபியையும் இன்னொரு வேதத்தையும் ஒட்டு மொத்த மனிதர்களுக்கான நேர்வழியை அல்லாஹ் முஹம்மது அனுப்ப மாட்டான், அது இந்த வசனத்தைப் பொய்ப்பிப்பதாக ஆகி விடும்.

பதில்: இந்த வசனத்திலும் நபிக்குப் பின் நபி வரமாட்டார் என்று அல்லாஹ் சொல்லவில்லை. இதில் திருக்குர்ஆனைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்

எங்களை பொறுத்தவரையில் திருக்குர்ஆன் தான் இறுதி வேதம், இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இன்னொரு வேதத்தை அல்லாஹ் அனுப்ப மாட்டான் என்பது தான் எங்கள் கொள்கை.

எனவே இறுதி வேதமான திருக்குர்ஆனை பின்பற்றுவதன் மூலம் ஒரு நபி வர முடியும் என்பது எங்கள் கொள்கை. எனவே மேலே கூறியுள்ள வசனத்தில் முஹம்மத் நபிக்கு பின் நபி வரமாட்டார் என்ற கருத்தே இல்லை.

நீ எழுதிஉள்ளது “(முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன். (10:109)”

பதில்: இந்த வசனத்திலும் நபிக்குப்பின் நபி வரமாட்டார் என்ற கருத்தே இல்லை. மாறாக இந்த வசனத்தின் அடிப்படையில் திருக்குர்ஆன் பின்பற்றி அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையோடு இருப்பது தான் எங்களின் நிலை. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

நீ எழுதிஉள்ளது ந‌பிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். (33:40)

இந்த வசனத்தின் அடிப்படையில் முஹம்மத் நபி (ஸல்) நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார். இதன் மூலம் நபிக்கு பின் நபி வரமாட்டார் என்ற கருத்து இல்லை.

நீ எழுதிஉள்ளது: முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்.(34:28) ந‌ம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம்.(4:79)

இந்த வசனத்தின் படி நபி (ஸல்) அவர்கள் மனித இனம் முழுவதிற்கும் நற்செய்தி வழங்குபவரும், எச்சரிக்கை செய்பவராகவும் இருக்கிறார். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் இந்த வசனத்தில் நபிக்குப்பின் நபி வரமாட்டார் என்ற கருத்து இல்லை.

மேலுள்ள வசனங்களிலிருந்து எக்காலமும் நபி (ஸல்) அவர்களையே பின்பற்ற வேண்டும். என்ற கருத்தே கிடைக்கிறது. ஆனால் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதன் மூலம் எந்த நபியும் வர முடியாது என்ற கருத்து இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------

ஆனால் நபிமார்கள் வந்துகொண்டே இருப்பார்கள் என்பதற்கு குரானில் பல வசனங்களை உள்ளன.

( குரான் 7.36 ) ”ஆதமின் மக்களே! என் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்ட கூடிய தூதர் உங்களிடமிருந்தே உங்களிடம் நிச்சயமாக வரும்போது இறையச்சத்தை மேற்கொண்டு திருந்தி கொள்பவருக்கு எவ்வித அச்சமும் ஏற்படாது; அவர்கள் கவலை அடையவும் மாட்டார்கள்..”

மேற்சொன்ன வசனம் மூலம் நபிமார்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்ற தெளிவான சட்டத்தை, அதாவது அல்லாகுவின் சுன்னத்தை எடுத்து கூரிஉள்ளான்.

மேலும் இறை அச்சம் உடையவர்களால் தான் ஏற்றுக்கொள்ளமுடியும் என்றும் , ஏற்றுக்கொள்பவர், அச்சமோ கவலையோ அடையமாட்டார்கள் என்றும் கூறுகின்றான்.

‘உங்களிடமிருந்தே உங்களிடம் நிச்சயமாக வரும்போது’ என்று கூறுவதிலிருந்து நபி ஸல் அவர்களின் உம்மத்தில் நபி தோன்றுவார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.

அல்லாகுவின் அருளால் நாங்கள் மிர்ஸா சாகிபை ஏற்றுக்கொண்ட காரணத்தினால், ஒரே தலைமையின் கீழ் கட்டுப்பட்டவார்களாக, ஒரே கருத்தின் அடிப்படையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஆலிம்கள் மட்டுமல்ல பெரும் பெரும் அரசாங்கங்களுடைய எதிர்ப்பையும் சவாலாக ஏற்றுக்கொண்டு, அதே நேரம் அச்சமும் கவலையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் என்றால், மிர்ஸா சாஹிப் உண்மையாளர் என்பதற்கு இதுவும் ஒரு நடைமுறை ஆதாரம் ஆகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து நீ சில ஹதீசுகளை காட்டி உள்ளாய். ஆனால் அல்லாகுவின் வசனம் நபிக்குபின் நபி வருவார்கள் என்று தெளிவாக கூறியிருக்க, நபி ஸல் அவர்களின் ஹதீசையும், குரான் வசனத்திற்கு முரணாகமல் தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஹதீஸ் : 1
“எனக்கும் எனக்கு முன்சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் இது தான். ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டினான். அதை அழகுபடுத்தினான். ஒரு மூலையில் ஒரு செங்கல் தவிர மற்ற அனைத்தையும் அழகுற அமைத்தான். மக்கள் அதைச் சுற்றிப்பார்த்து அதில் வியப்படைந்தார்கள். இந்த ஒரு செங்கல்லையும் வைத்திருக்கக் கூடாதா என்றும் அவர்கள் பேசிக்கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள் நான்தான் அந்த ஒரு செங்கல். நான்தான் நபிமார்களுக்கு முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”

என் பதில்: காலம் காலமாக, குறிப்பிட்ட ஷரீயத்துடன், குறிப்பிட்ட காலத்திர்க்காக நபிமார்கள் வந்துகொண்டிருந்தார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் மூலமாக ஷரீஅத் முழுமை அடைந்துவிட்டது. இதுவே அந்த கடைசி செங்கல் ஆகும்.

நபி ஸல் அவர்களை பின்பற்றாமல், மேலும் நபி ஸல் அவர்களின் முத்திரை எனும் certificate இல்லாமல் ஒரு நபியும் வரமுடியாது.
அடுத்த ஹதீஸ்: என்னை கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.
யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
நிலமெல்லாம் தொழுகை இடமாகவும், தூய்மை படுத்தும் பொருளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.
மனித குலம் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
நபிமார்களின் வருகை என்னால் நிறைவு படுத்தப்படுகிறது.

என் பதில்: நபிமார்களின் வருகை என்னால் நிறைவு படுத்தப்படுகிறது என்று இல்லை, மாறாக நான் நபிமார்களின் முத்திரையாக உள்ளேன்;

அதாவது என் மூலமாக நபிமார்கள் முத்திரையிடப்பட்டிருக்கின்றார்கள். என்னை பின் பற்றாமல் எந்த நபியும் வரமுடியாது.

நீ எழுதி உள்ளது:

என் உம்மாத்தில் 30 பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொரும் தான் நபி என்று வாதிப்பார்கள். நான் தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்கு பிறகு எந்த நபியும் இல்லை.

இந்த ஹதீஸிலும் நபி வரமாட்டார்கள் என்ற கருத்து இல்லை.

நபி ஸல் அவர்களுக்கு பிறகு நபியே வரமாட்டார்கள் என்றால், எனக்கு பிறகு நபிவாதம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் பொய்யர்களே என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

என்னுடைய உம்மாத்தில் 30 பொய்யர்கள் என்று எண்ணிக்கையை குறிப்பிட்டு ஏன் சொல்லவேண்டும்?

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் முஹம்மத் நபிக்குப்பின் 30 பொய் நபிமார்கள் தோன்றுவார்கள், ஆனால் அதற்குப்பின் ஒரு உண்மையான நபி வருவார். எனவே அவரை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

நானோ நபிமார்களின் முத்திரை ஆவேன். எனவே வரக்கூடியவர் என்னை பின்பற்றி த்தான் வர முடியும்.

எனது முத்திரை இல்லாமல், அதாவது எனது சர்டிபிகேட் இல்லாமல் யாரும் வரமுடியாது.
என்னை பின்பற்றமல் ஒருவர் நபி என வாதம் செய்தல் அவர் பொய்யர் ஆவார் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------

லா நபிய்ய பஆதீ

என்ற சொற்றொடரை நபி ஸல் அவர்கள் தனியாக எங்கேயும் கூறியதில்லை. முதலில் ஏதேனும் ஒரு கருத்தை கூறிய பின்பு, அதனை தொடர்ந்து தான் லா நபிய்ய பஆதீ என்று கூறி உள்ளார்கள்.

எனவே சஹாபாக்களின் சந்தேகங்களுக்கு ஏற்ப, நபி ஸல் அவர்கள் பதில் அளித்துள்ளார்கள்.

அஹ்மத் 13322 மற்றும் புகாரி 3455 போன்ற ஹதீசுகளில் சஹாபாக்களின் கவலையை போக்கும் வண்ணம் எனக்கு பிறகு நபி வரமாட்டார்கள், என்னை தொடர்ந்து கலீபாக்கள் வருவார்கள் என்றும், அது மட்டுமல்லாமல், முஸ்லீம்கள் காணும் கனவும் நற்செய்தி தான் என்றும் கூறுகிறார்கள்.

அல்லாஹு நாடும்போது நபியை அனுப்புவான் என்பது பொதுவான அடிப்படையான கருத்தாகும்.

அதாவது நபி உடனே வரவேண்டிய தேவை இல்லை என்பதும், அல்லாஹு நாடும்போது நபியை அனுப்புவான் என்பதும், ஆனால் எந்த நபியாக இருந்தாலும் அவர் என்னை பின்பற்றியே ஆகவேண்டும் என்பதும், எனது ஷரீயத்திற்கு வெளியிலிருந்து நபி வரமுடியாது என்பதும் தான், “நான் காத்தமாக இருக்கிறேன், எனக்கு பிறகு நபி இல்லை என்பதன் அடிப்படை பொருள் ஆகும்
.
ஆனால் நீங்களோ, குரானை முதுகுக்கு பின் தூக்கி எறிந்துவிட்டு ( குரான் 3:188),

பனூ இஸ்ராயீல் சமுதாயத்திற்காக வந்த ஈஸா நபி மீண்டும் வருவார் என்றும், அவர் வந்து நபி ஸல் அவர்களின் உம்மத்தை சீர்திருத்துவார் என்றும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களே.

எனவே உங்களின் இந்த நம்பிக்கை தவறு என்பதை, நபிசல் அவர்கள் சுட்டிக்காட்டும் வகையில் தான், லா நபிய்ய பஆதீ என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------
எனவே எந்த நபியும் வரமாட்டார்கள் என்று இந்த ஹதீசுக்கு நீங்கள் பொருள் கொடுக்கிறீர்கள் என்றால், ஈஸா நபி மட்டும் எதன் அடிப்படையில் வருவார்? ஈஸா நபி வருவார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதிலிருந்து “எந்த நபியும் வரமாட்டார்கள்” என்று பொருள் கொடுப்பது தவறு என்று படவில்லையா? எனவே இப்போதாவது புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------

லா நபிய்ய பஆதீ என்ற சொற்றொடருக்கு ‘எனக்கு பிறகு எந்த நபியும் இல்லை’ என்று எழுதியிருப்பது தவறு. “எந்த” என்ற வார்த்தை அந்த சொற்றொடரில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------

நான் ஏற்கனவே காட்டி உள்ள குரான் வசனம் ( 7:36), நபி வரமுடியும் என்ற கருத்தை தெளிவாக கூறிவிட்டது.

மேலும் நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள், “ அல்லாஹு நடும்வரை இந்த நுபூவ்வத் உங்களிடம் இருக்கும். பிறகு அல்லாஹு அதை எடுத்துக்கொள்வான். பிறகு நுபூவ்வத் வழியிலான கிலாபத் இருக்கும். பிறகு அல்லாஹு அதை எடுத்துக்கொள்வான். பிறகு அல்லாஹு நாடும்வரை கொடுங்கோல் ஆட்சி இருக்கும். பிறகு அல்லாஹு அதை எடுத்துக்கொள்வான். பிறகு பலவந்தமான ஆட்சி இருக்கும். பிறகு அல்லாஹு அதை எடுத்துக்கொள்வான். பிறகு நுபூவ்வத் வழியிலான கிலாபத் இருக்கும். அதன் பிறகு நபி ஸல் அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். (முஸ்னத் அஹ்மத்)

நபி ஸல் அவர்களின் மேற் சொன்ன முன்னறிவுப்புகள் மிகவும் தெளிவாக நிறைவேறிவிட்டதை பார்க்கிறோம்.
--------------------------------------------------------------------------------------

எனவே நபிக்கு பின் நபி வருவார்கள் என்று குரானின் அடிப்படையில் தெளிவாகிவிட்டதுடன், லா நபிய்ய பஆதீ என்ற ஹதீசிலிருந்து நான் கொண்டு வந்த ஷரீயத்தை பின்பற்றாத ஈஸா நபி வரவே மாட்டார் என்பதும் சந்தேகம் இல்லாமல் தெளிவாகிவிட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
உனது இந்த தொடரிலும், முன்பின்னுள்ள தொடரிலும். மிர்சா சாஹிபை பற்றி எழுதி உள்ளதற்கு, மிர்ஸா சாஹிப்-subject ல் இன்ஷா அல்லாஹ் பதில் தருவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக