புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (E)


மிர்சா சாஹிபின் புளுகு மூட்டை

Mirza Sahib Subject (Part 5)
-----------------------------------------------------------------------------------

ஈஸா நபியின் கப்ர் பாலஸ்தீனில் இருக்கிறது என்றும் காஷ்மீரில் இருக்கிறது என்றும் முரண்பட்டு பேசியது பற்றி நான் கேட்டதற்கு, அற்புதமான (?) பதிலொன்றை சொல்லியுள்ளீர்கள்.

///ஈஸா நபிக்கு 2 கபர் உள்ளது என்று எழுதி உள்ளது சரியே////

ஆஹா.. நல்ல பதில் ! எப்படி இரண்டு கப்ர்? உடலின் பாகங்கள் தனி தனி இடங்களில் அடக்கம் செய்யப்பட்டதால் இரண்டு கப்ர் ஆனதா?

அல்லது, ஈசா நபி இரண்டு மனிதராக பிரிந்து ஒருவர் அங்கே, இன்னொருவர் இங்கே என அடக்கம் ஆனார்களா?

எப்படி இரண்டு கப்ர்? சொல்லும் பதிலில் கொஞ்சமாவது அர்த்தம் வேண்டாமா?

இந்த இரண்டு கப்ர் சமாளிப்புக்கு ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளீர்கள்.

///////இறந்துவிட்டார் என எண்ணி, பலஸ்த்தீனத்தில் ஒரு கபரில் வைக்கபட்டது.
கவனிக்க வேண்டியது என்னவென்றால், அக்காலத்து வழக்கப்படி மண்ணில் அடக்கம் செய்வது கிடையாது, மாறாக கபர் என்பது ஒரு அறை போன்று இருக்கும், அதில் body ஐ வைத்து மேல் பகுதியை பெரிய கற்களால் மூடிவிடுவார்கள்.
இன்றும் கிறிஸ்தவ மக்கள் அந்த கல்லறையில் ஈஸா நபி அடங்கப்பட்டிருக்கிறார் என்று எண்ணி, தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அல்லாஹு ஈஸா நபியை காப்பாற்றினான். பிறகு அங்கிருந்து ஈஸா நபி வெளியேறினார்கள். கடைசியாக காஷ்மீர் வந்து அங்கு இயற்கை மரணம் அடைந்தார்கள்.///////

அதாவது கொள்கையை நிரூபிக்க எந்த வித கதை, கப்சாவையும் அளந்து விடுவேன் என்கிறீர்கள்.

அக்கால மக்கள் மண்ணில் புதைக்க மாட்ட்டார்கள் என்கிறீர்கள்.
இதற்கு என்ன ஆதாரம்?
அறை போன்ற ஒன்றில் தான் அடக்கம் செய்வது வழக்கம் என்கிறீர்கள். இதற்கு என்ன ஆதாரம்?
சரி, ஈஸா நபியை அதே போன்ற அறையில் அடக்கம் செய்தார்கள் என்கிறீர்கள், அதற்கு என்ன ஆதாரம்?
அல்லாஹ் அவரை அங்கிருந்து காப்பாற்றினான் என்கிறீர்கள்.
அந்த அறை போன்ற கப்ரிலிருந்து தான் அல்லாஹ் அவர்களை காப்பாற்றினான் என்பதற்கு என்ன ஆதாரம்?

பிறகு காஷ்மீர் வந்து இயற்கை மரணம் அடைந்தார்கள் என்கிறீர்கள். அவர் காஷ்மீர் வந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?
அங்கே தான் மரணித்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

எந்த ஆதாரமுமே இல்லாமல் சினிமாக்கதை கேட்பதற்கு காதுகளில் யாருக்கும் பூ சுற்றி வைக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, மிர்சா சாஹிப் இந்த ஈஸா நபியின் கப்ர் விஷயமாக என்ன சொல்லியுள்ளார் என்பதையும் பார்த்து விடுவோம்.

ஈஸா நபி மரணித்து விட்டார் என்று மிர்சா சாஹிப் சொல்லிக் கொண்டு திரிந்த போது இந்த கப்ர் விஷயத்தை அவர் சொல்லவில்லை.

ஆனால், ஈஸா நபி மரணிக்கவில்லை என்பது முஸ்லிம் சமுதாயத்தின் நம்பிக்கையாக இருக்கும் போது, ஈஸா நபி மரணிக்கவில்லை, அவர் உயிருடன் இருக்கிறார், வானத்திலிருந்து வருவார் என்பது தான் மிர்சா சாஹிபின் ஆரம்ப பிரச்சாரமாகவும் இருக்கும் போது,

திடீரென ஈஸா நபி இறந்து விட்டார் என்று அவர் சொன்ன போது அது குறித்து மக்கள் கேள்வியெழுப்ப துவங்கினர்.

இதை மறுத்து, தனது அறிவிப்புக்கு முட்டு கொடுக்கும் விதமாக தான் இந்த கபர் விஷயத்தை கையில் எடுத்தார் இந்த சாஹிப்.

இது பற்றி அவர் சொல்கிற போது,

""ஈஸா நபி இறந்து விட்டார், இதில் அல்லாஹ் செய்திருக்கும் மிகப்பெரிய கிருபை என்ன தெரியுமா? ஈஸா நபியின் கப்ர் ஷாம் நாட்டில் கலேலியா எனும் ஊரில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிக தெளிவுக்காக செய்யது மவ்லானா (இவரது சீடராக இருக்கக்கூடும் !) ஷாம் நாட்டிலிருந்து எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்..""

என்று, ஈஸா நபி தொடர்பான தனது கூற்றினை நிரூபிக்க மிர்சா சாஹிப் கொண்டு வந்த ஆதாரம் தான் ஈஸா நபியின் கப்ர் ஜெருசலத்தில் இருக்கிறது என்பது.

அதற்கு தான் தனது சீடரின் கடிதத்தையும் எடுத்துக்காட்டி எழுதியிருந்தார்.

ஈசா நபி காயங்களுடன் இருந்த போது கப்ர் போன்ற அறையில் வைக்கப்பட்டார், உண்மையில் அவர் அடக்கமெல்லாம் செய்யப்படவில்லை என்று இப்போது நீங்கள் சப்பை கட்டு கட்டுகிறீர்களே, அப்படியெல்லாம் உங்கள் மிர்சா சாஹிப் சொல்லவில்லை.

ஜெருசலத்தில் (பாலஸ்தீனத்தில்) இருப்பது ஈஸா நபியின் கப்ர் தான் என்று தெளிவாக தான் சொல்கிறார். ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற கூற்றுக்கு ஆதாரமாகவும் இதை தான் காட்டுகிறார்.

ஈஸா நபி இறந்து விட்டார் என்பதற்கு ஆதாரமாக கப்ரை மேற்கோள் காட்டுகிறார் என்றால், காயங்களுடன் வைக்கப்பட்ட இடத்தையா மேற்கோள் காட்டுவார்?
சரி, நீங்கள் அவிழ்த்து விட்ட கதைக்கே வருவோம்..

அந்த யூதர்களுக்கு, காயத்துடன் இருந்த ஈஸா மரணிக்கவில்லை என்று தெரியாது என்று வைப்போம். அவர் இறந்து விட்டார் என்று கருதி அங்கே அடக்கம் செய்து விட்டார்கள் என்றே வைப்போம்..
உண்மையில் அவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டது காஷ்மீரில் தான் என்றே வைப்போம்..

இதை பற்றி ஒரு நபி சொல்லும் போது எப்படி சொல்ல வேண்டும்?

ஈஸா நபி இறந்ததற்கு ஆதாரம் கேட்கிறீர்கள், இதோ ஆதாரம் என்று கூறி காஷ்மீரில் அவர் கப்ர் இருக்கிறது என்று மட்டுமல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
பாலஸ்தீனத்தில் அவர் அடக்கம் செய்யப்படது அவர் இறந்த பிறகு அல்ல, காயங்களுடன் இருக்கும் போதாக்கும் என்பது அந்த யூதர்களுக்கு தெரியாவிட்டாலும் ஒரு நபி என்கிற முறையில் இவருக்கு தெரியாமல் இருக்குமா?
அது தெரியாமல், தனது கொள்கையை நிரூபிக்க, இது தான் ஈசா நபியின் கப்ர் என்று அந்த இடத்தை காட்டுகிற அளவுக்கு மடையராக அல்லாஹ் ஒரு நபியை ஆக்குவானா?

இதிலிருந்தும் விளங்குகிறது, அவர் மடையராக தான் அல்லாஹ் ஆக்கியிருக்கிறான், காரணம் அவர் நபியல்ல , அவர் ஒரு பொய்யர் !

சரி, அந்த மவ்லானா என்கிற சீடர் எழுதிய கடிதத்திலாவது, கப்ர் என்றால் கப்ர் இல்லை, கப்ர் போன்ற அறை, அங்கே காயங்களுடன் தான் அவர் வைக்கப்பட்டார் என்றெல்லாம் ஏதும் குறிப்புகள் இருக்கிறதா?
என்று பார்த்தால் இல்லை.

இந்த செய்தியை சொல்லி விட்டு தனது சீடரின் கடிதத்தையும் மேற்கோள் காட்டும் மிர்சா சாஹிப், நூருல் ஹக் பக்கம் 296, 297 இல் அந்த கடிதத்திலுள்ள செய்திகளையும் காட்டுகிறார்.

அதில், """ஈஸா நபியை பற்றி கேட்டிருக்கிறீர்கள்.
நிச்ச்சயமாக அவர் பெத்லஹெமில் பிறந்தார்.
பின் பெத்லஹெமுக்கும் ஜெருசலத்திற்கும் இடைப்பட்ட, 3 மைல் கல் அளவிற்கு தொலைவிலுள்ள பல்ததுல் குதுஸ் எனும் பகுதியில் அவரது கப்ர் உள்ளது."""

என்று அந்த சீடர் எழுதிய கடிதத்தை மிர்சா சாஹிப் தனது நூலில் மேற்கோளும் காட்டுகிறார் என்றால்,...

உங்கள் சமாளிப்புகளையெல்லாம் உங்களிடனேயே வைத்துக் கொள்ளுங்கள்,
மிர்சா சாஹிப் சார்பாக, அவரே கொடுக்காத விளக்கத்தை நீங்கள் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படி தனது கொள்கையை நிலைனாட்ட வேண்டி ஜெருசலத்தில் கப்ர் இருப்பதாக சொன்ன இந்த மிர்சா சாஹிப், பின்னொரு நாளில் சொன்னது தான் ஈஸா நபியின் கப்ர் காஷ்மீரில் இருக்கிறது என்பதும்.

இதை தனது கிஷ்தி நூஹ் பக்கம் 24 இல் எழுதி தனக்கு தானே முரண்பட்டார்.

நான் பொய்யன் தான் என்று அவரே நிரூபித்து விட்டு போயிருக்கும் போது, நீங்கள் என்ன சமாளிப்பு நடத்தினாலும் அவை எடுபடாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

புளுகுமூட்டை இன்னும் அவிழும், இன்ஷா அல்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக