வியாழன், 17 ஜூலை, 2014

வீரபாண்டிய கட்டபொம்மன் தீவிரவாதியா?


வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக, எனது தாய் நாட்டை அந்நியன் ஆள்வதா? என்று வலிய சென்று போரிடவில்லை.
(அவனது சஹோதரன் ஊமைத்துரை தான் வலிய போர் செய்த வீரன்)
நீ ஆண்டு கொள், நான் வரி மட்டும் கட்ட மாட்டேன் என்பது தான் அவனது நிலை. 

அதுவும் வீரம் தான், அதுவும் நெஞ்சுறுதி தான், நாம் குறைத்து மதிப்பிடவில்லை. காரணம், வரி கட்டாத அரசனுக்கு எதிராக படை திரட்டி சென்று போர் புரிகிற அளவிற்கு அது ஆங்கிலேயர்களை எரிச்சலூட்டியது.

ஆனால் நாம் கேட்பதெல்லாம், வீரனென்றும் சிங்கமென்றும் தியாகியென்றும் போற்றப்படும் இந்த கட்டபொம்மன் வலிய சென்று ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடவில்லை. தன்னை தாக்க வந்த போது தான் தன்னை தற்காத்துக் கொள்ள எதிர்த்து போரிட்டான்.
பல ஆங்கில ரெஜியூம்களை தாக்கினான், பலரை கொன்று குவிக்கவும் செய்தான், பெரும் வீரனாக செயல்பட்டான், இறுதியில் வீர மரணம் அடைந்தான்.

இது வீரமென்றால் இதை விடவும்..
எனது நாட்டில் நீ காலடியே வைக்கக்கூடாது என்று அன்னிய தேசப்படைகளுக்கு எதிராக போர் செய்வது அதை விடவும் தியாகமில்லையா?
அதை விடவும் வீரமில்லையா? அதை விடவும் தேசப்பற்று நிறைந்த காரியமில்லையா?

அவனுக்கு தியாகிப்பட்டம், இவர்களுக்கு தீவிரவாதப்பட்டமா?

அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால் அது இரு தரப்பிலும் பிழை தான், மறுப்பதற்கில்லை, ஆனால், இந்த சமன்பாட்டை கருத்தில் கொண்டு தான் ஊடகத்துறையினர் செயல்படுகின்றனரா?

வெள்ளையர்களிடம் கூலிக்கு வேலை செய்தார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தியர்கள் பலர் கொல்லப்படவில்லையா?

நாட்டு விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்றால் 1947 வரை இந்தியா தீவிரவாதிகளின் கூடாரமாக தான் இருந்தது என்பதை இந்த ஊடகம் ஒப்புக்கொள்ளுமா?

மருதுபாண்டியர்களும் கட்டபொம்மனும் பகத்சிங்கும் சுபாஷ் சந்திர போசும் தான் இந்தியாவை ரத்தக்களறியாக்கிய தீவிரவாத கும்பல் என்று இந்த பேனாக்கள் எழுதுமா?

என்பதை அறிய விரும்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக